ஆஸ்திரேலியாவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ‘நடப்பாண்டு ஆஸ்திரேலியப் பறவையைத்’ தேர்ந்தெடுக்கும் இணைய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. Guardian Australia செய்தி நிறுவனமும் இயல்பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடச் சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் Birdlife Australia என்னும் லாபநோக்கற்ற நிறுவனமும் இணைந்து 2017-ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த வாக்கெடுப்பை நடத்துகின்றன.
என் பறவை ஆல்பத்திலிருந்து சில ஆஸ்திரேலியப் பறவைகளின் தொகுப்பு:
| 1. ஆஸ்திரேலியப் பறவைகள் (1) | 
| 2. ஆஸ்திரேலியப் பறவைகள் (2) | 
| 3. ஆஸ்திரேலியப் பறவைகள் (3) | 
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 850 பறவையினங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பாதி ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு எங்கும் காணப்படாத அபூர்வப் பறவைகள். சில பறவையினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. சில அழிந்தே விட்டன. இருக்கும் பறவையினங்களையாவது அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஒரு பகுதியாக இப்போட்டி நடைபெறுகிறது.
‘2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியப் பறவை’க்கான வாக்கெடுப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. முடிவு கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
| 4. நடப்பாண்டுப் பறவையான செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை | 
சுமார் 12,000 வாக்குகள் பெற்று ‘2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியப் பறவை’ என்ற சிறப்பை செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை பெற்றுள்ளது. பெரும்பாலானோரின் விருப்பப் பறவையாகவும் இந்த ஆண்டின் சிறப்புப் பறவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
எந்தப் பறவையைத் தேர்ந்தெடுத்தாலும் அது எந்தப் பறவைக்கும் தெரியப்போவதில்லை. பிறகு எதற்கு இவ்வளவு மெனக்கெடல்?   
சுற்றுச்சூழல் அறிவை மேம்படுத்தவும், நம்மைச் சுற்றியுள்ள பறவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், பறவைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும், அழியும் தருவாயில் உள்ள பறவையினங்களை மீட்டெடுக்கவும் இத்தகு போட்டிகளும் வாக்கெடுப்பும் உதவுவதாக கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் வாக்கெடுப்பு. அதில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய மேக்பை (Australian magpie).
| 5. ஆஸ்திரேலிய மேக்பை | 
இரண்டாமிடம் குப்பைத்தொட்டிக் கோழி (Bin chicken) என்ற பட்டப்பெயர் இடப்பட்ட ஆஸ்திரேலிய வெள்ளை அன்றிலுக்கு (Australian white ibis).
| 6. ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் | 
2019-ல் முதலிடம் கருந்தொண்டைக் குருவிக்கு Black-throated finch;
இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth
| 7. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2019 | 
2021-ல் முதலிடம் சூப்பர் தேவதைச்சிட்டுக்கு Superb fairy wren;
இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth
| 8. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2021 | 
2023-ல் முதலிடம் துரிதக்கிளிக்கு Swift parrot;
இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth
| 9. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2023 | 
இவ்வாறு கடந்த மூன்று முறையும் தொடர்ச்சியாக இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்த செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையை இந்த வருடம் முதலிடம் பெற வைத்துவிட்டனர் அதன் தீவிர ஆதரவாளர்கள்.
இரண்டாமிடம் 7,600 வாக்குகள் பெற்ற பாடின் கருப்பு காக்கட்டூவுக்குக் (Baudin’s black cockatoo) கிடைத்துள்ளது.
| 10. பாடின் கருப்பு காக்கட்டூ | 
பாடின் காக்கட்டூதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்து மனம் நொந்துபோன பாடின் காக்கட்டூ ஆதரவாளர்கள் எப்படியும் அடுத்த முறை அதை முதலிடத்துக்குக் கொண்டுவருவோம் என சபதம் எடுத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு களத்தில் நின்ற கடைசிப் பத்துப் பறவைகள்:
| 11. கடைசிப் பத்துப் பறவைகள் | 
- செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை (Tawny frogmouth)
- பாடின் கருப்பு காக்கட்டூ (Baudin’s black cockatoo)
- கேங்-கேங் காக்கட்டூ (Gang-gang cockatoo)
- வில்லி வாலாட்டிக்குருவி (Willie wagtail)
- புதர் உறை கண்கிலேடி (Bush stone-curlew)
- தென்பகுதி ஈமு-குருவி (Southern Emu-wren)
- சிரிக்கும் கூக்கபரா (Laughing kookaburra)
- சிறிய பென்குயின் (Little penguin)
- புள்ளி பார்டலோட் (Spotted pardalote)
- ஆப்புவால் கழுகு (Wedge-tailed eagle)
இந்தப் பட்டியலில் சில பறவைகளை இயல் வாழிடத்தில் பார்த்திருக்கிறேன். சிலவற்றைப் புகைப்படமும் எடுத்திருக்கிறேன். மூன்றை எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்திலேயே பார்க்கலாம். ஆனால் முதலிடத்தில் இருக்கும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையை? உருமறைப்பு உத்தியில் கைதேர்ந்த அவற்றைக் காண்பது மிகவும் அரிது.
| 12. செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை இணை | 
சில வருடங்களுக்கு முன்பு அந்த அரிய வாய்ப்பும் கிடைத்தது. 2017-ஆம் ஆண்டு, சிட்னி ராயல் தாவரவியல் பூங்காவில் தற்செயலாகத்தான் பார்த்தேன். செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை இணையொன்று ஆடாமல் அசையாமல் பனை போன்றதொரு மரத்தின் நிறத்தோடு நிறமாகப் பொருந்தி வெயில் காய்ந்துகொண்டிருந்தன. தற்செயலாக அவற்றைக் கண்ணுற்றது என்னுடைய நற்பேறு என்றுதான் சொல்லவேண்டும். அதன் பிறகு வேறெங்கும் நான் அவற்றை இயல் வாழிடத்தில் பார்க்கவில்லை. கீழே உள்ள படம் உயிர்க்காட்சி சாலையில் எடுத்தது.
|  | 
| 13. செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை | 
Frogmouth என்பதற்கு தமிழில் ‘தவளைவாயன்’ என்ற பெயர் இடப்பட்டுள்ளது. எனக்கு அதில் உடன்பாடில்லை. பெண் இனத்தைக் குறிப்பிடும்போது ‘பெண் தவளைவாயன்’ என்றால் நன்றாகவா இருக்கிறது? அதனால் பொதுப்பெயராக ‘தவளைவாய்ப் பறவை’ என்று நானே வைத்துக்கொண்டேன்.
செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின்பால் அனைவரின் கவனமும் தற்போது குவிந்திருப்பதால் அவ்வினம் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனையும் கவனத்துக்கு வந்துள்ளது. எலிகளைக் கொல்ல வைக்கப்படும் எலிவிஷத்தால் எலிகள் மட்டுமல்ல, அவற்றைத் தின்னும் பறவைகளும் இரண்டாம்கட்ட நச்சுத்தாக்குதலுக்கு ஆளாகி இறக்கின்றன. எலிவிஷத்தால் பாதிக்கப்படும் பறவைகளின் வரிசையில் கழுகு, ஆந்தை இவற்றோடு செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையும் உள்ளது. எனவே கடுமையான எலிவிஷங்களை விற்பனை செய்வதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதிக்கவேண்டும் என இங்குள்ள பறவை ஆர்வலர்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை பற்றி கூடுதல் தகவல்கள் தெரிய வேண்டுமா?
பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதியிருக்கும் இப்பதிவை வாசித்து அறிந்துகொள்ளலாம்.  
சரி, நீ எந்தப் பறவைக்கு வாக்களித்தாய் என்று கேட்கிறீர்களா? சந்தேகமே வேண்டாம், தன் சிரிப்பொலியால் கேட்போரை வசீகரித்து நம்மை அறியாமலேயே நம் உதட்டில் சிறு முறுவலை எழச்செய்யும் ‘சிரிக்கும் கூக்கபரா’வுக்குதான் என் வாக்கு.
👇
|  | 
| 14. சிரிக்கும் கூக்கபரா | 
 
 
No comments:
Post a Comment
என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...
வணக்கம். வருகைக்கு நன்றி.