ஒரு
ரொட்டித்துண்டுக்காக
ஒரு
மிடறு தண்ணீருக்காக
குழந்தைகளின்
கைகளை
ஏந்திப்
பிடித்திருப்பது எந்தக் கடவுள்?
அவர்களின்
பிஞ்சுக் கைகளில்
கஞ்சிக் குவளைகளைத் திணித்து
கலவரத்தோடு அலையவிட்டு
களிப்புடனே பார்த்திருப்பது எந்தக் கடவுள்?
மயானக்
குழிகளின் மத்தியில்
மருளும்
விழிகளோடு
மழலைகளை
உலவ விட்டு ரசிப்பது எந்தக் கடவுள்?
நேற்றுவரை தூக்கிக்கொஞ்சிய அம்மையும்
அப்பனும்
விளையாட்டு காட்டிய அக்காளும் அண்ணனும்
இன்று போன இடம் தெரியாமல்
விக்கித்து அழச்செய்து
வேடிக்கை பார்த்திருப்பது எந்தக்
கடவுள்?
சிதைக்கப்பட்ட
கனவுகளின் பெருவலியை
குருதியும்
கண்ணீருமாய்க் கடக்குமாறு
கடுஞ்சாபமிட்டது
எந்தக் கடவுள்?
வீசியெறியப்பட்ட
வாழ்வின் மிச்சத்தை
விரக்தியோடு
பார்த்திருக்கும்
சின்னஞ்சிறு
இதயங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு
எந்த நீக்குப்போக்கான
பதில்களைத் தர
நித்தமும்
ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்
உலகின்
ஒட்டுமொத்தக் கடவுளர்களும்?
***
No comments:
Post a Comment
என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...
வணக்கம். வருகைக்கு நன்றி.