5 August 2019

பூனைமூஞ்சி தக்காளி


தோட்டத்துப் பிரதாபம் - 5




இதையெல்லாம் தக்காளின்னு சொன்னால் அந்த தக்காளியே நம்பாது என்று பிள்ளைகள் கேலி செய்கிறார்கள். ஆனால் நீங்க நம்பிதான் ஆகணும். இது ஒரு வகையான நாட்டுத்தக்காளி இனம். பெயர் Costoluto Fiorentino. என்னடா இது எதுவும் ஒரு வடிவத்தில் இல்லாமல் இஷ்டத்துக்கு இருக்கேன்னு நினைக்கிறீங்களா? ஆரம்பத்தில் நானும் இவற்றின் வடிவத்தைப் பார்த்து ஏதோ நோய் தாக்கியதால்தான் இப்படி காய்க்கிறதென எண்ணி பயந்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது இது ஒரு குறைபாடு என்பது. இந்த மாதிரியான குறைபாடுள்ள தக்காளிகளுக்கு பூனைமூஞ்சி தக்காளி (cat-faced tomatoes) என்று பெயர். வேடிக்கையாக இருக்கிறதல்லவா




எனக்கென்னவோ இதற்கு நாய்மூஞ்சி தக்காளி என்று பெயர் வைக்கலாம் போலத் தோன்றுகிறது. உற்றுப்பார்த்தால் puggy மாதிரியே இல்லை? 😂

இந்தக் குறைபாடு நாட்டுத்தக்காளி இனத்தில்தான் காணப்படுமாம். அதுவும் பெரும்பாலும் முதல் விளைச்சலின்போது நேர்வதுண்டாம். சரிதான். அப்போதுதானே போதுமான அனுபவ அறிவில்லாமல் ஏகப்பட்ட ஆர்வக்கோளாறுடன் எக்கச்சக்கமாக என்னென்னவோ செய்துவைப்போம்.


வடிவான தக்காளிகள்

பூனைமூஞ்சி தக்காளிகள்

என் தோட்டத்துத் தக்காளிகளில் சரிபாதி பூனைமூஞ்சி தக்காளிகள்தான். தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்பது போல இந்த பூனைமூஞ்சி தக்காளிகளின் உருவத்தில் குறைபாடு இருந்தாலும் சுவையில் ஒரு குறையும் இல்லை. இம்மாதிரியான தக்காளிகள் சந்தைக்குப் போகும் வாய்ப்புக்கே வழியில்லை. போனாலும் நிச்சயம் செல்லுபடியாகாது. எப்போதும் உருவத்துக்குதானே மதிப்பு அதிகம்.




இந்த பூனைமூஞ்சிகள் ஏன் உருவாகின்றன என்று பார்த்தால்அடுக்கடுக்கானக் காரணங்களை அடுக்குகிறார்கள் வல்லுநர்கள். குழந்தையின் குறைபாடு கருவிலிருந்தே உருவாவது போல பழத்தின் குறைபாடு பூவிலிருந்தே துவங்குகிறதாம்.




பூக்கள் உருவாகும்போது ஏற்படும் திடீர் காலநிலை மாற்றம், அதீத வெப்பம், அதீத குளிர், அடர்மழை, அளவுக்கதிகமான உரம், மண்ணின் அமிலத்தன்மை, மகரந்தச்சேர்க்கை, கிருமித்தொற்று என பல காரணிகள் தக்காளியின் வடிவத்தோடு விளையாடக்கூடியவையாம். இவற்றுள் ஏதாவது ஒன்று என்றாலும் தக்காளிகள் இப்படி விநோத வடிவத்தில் காய்க்குமாம். 



  
சாதாரணமாக தக்காளிப்பூக்களுக்கு அல்லிவட்டமும் (sepals) புல்லிவட்டமும் (petals)  ஐந்து அல்லது ஆறு என்ற கணக்கில்தான் பார்த்திருக்கிறேன். இந்தச் செடிகளிலோ பத்துப் பன்னிரண்டு உள்ளன. இந்த வகை நாட்டுத்தக்காளியினத்தின் பூக்கள் இப்படிதான் இருக்குமாம். புதிதாய் அறிந்துகொண்டேன்.




இந்த தக்காளியைப் பாருங்களேன். ஒட்டிப் பிறந்த இரட்டையர் மாதிரி இருக்கிறதல்லவா? மெதுவாக சர்ஜரி செய்து இரண்டையும் பிரித்தேன். ஒரே கருவில் இரண்டு குழந்தைகள் போல ஒரே பூவில் இரண்டு தக்காளிகள்.






பொதுவாக தக்காளிப்பூக்கள் தன் மகரந்தச்சேர்க்கை மூலமே காயாகக்கூடியவை. காற்றின் துணை போதும் அவை கருவுற. ஆனால் எங்கள் தோட்டத்தில் தேனீக்களுக்கா பஞ்சம்




தேனெடுக்க வரும் தேனீக்கள் பதிலுபகாரமாக இங்கும் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்திப்போக தக்காளிச்செடிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஏராளமாய் காய்பிடித்து என்னை மகிழ்வெள்ளத்தில் ஆழ்த்தின.




அதெல்லாம் இருக்கட்டும், தக்காளி பழுப்பதற்குள் என்ன அவசரம்? ஏன் எல்லாவற்றையும் பச்சையாகவே பறித்துவைத்திருக்கிறாய் என்று கேட்கலாம். மூன்று காரணங்கள். முதலாவது சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் செடிகள் எல்லாம் சாய்ந்தும் ஒடிந்தும் தரையில் விழுந்துவிட்டன. இவ்வளவுக்கும் நிறைய முட்டுக்கொடுத்திருந்தேன். பாரம் அதிகம் என்பதால்  தாங்கவில்லை

இரண்டாவது slugs தொல்லை. ஒரு காயையும் பழுக்கும்வரை விட்டுவைப்பதில்லை. அதனால் வேறு வழியில்லாமல் பறிக்கவேண்டியதாயிற்று. காய்கள் எல்லாம் மெல்ல மெல்ல பழுத்துவருகின்றன. பழுக்கப் பழுக்க சட்னியாகிக் கொண்டிருக்கின்றன.




மூன்றாவது காரணம் ரொம்ப முக்கியமானது. எனக்கு தக்காளிக்காய்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். கூட்டு, சாம்பார், குழம்பு என்று எந்த வடிவத்தில் இருந்தாலும் (வடிவமெல்லாம் குழைந்துபோய் இருந்தாலும்) பிடிக்கும்

தக்காளிக்காய் கூட்டு

என் அம்மா எனக்காகவே மீன் குழம்பில் தக்காளிக்காய்களை சேர்ப்பாங்க. குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போதே ஓடிப்போய் செடியிலிருந்து இரண்டு மூன்று தக்காளிக்காய் பறித்துவந்து நறுக்கி குழம்பில் போடுவாங்க. நானோ தக்காளிக்காய்க்காவே மீன் வாங்கிவந்து மீன்குழம்பு வைக்கிறேன். 😂😂



இதுவரை காய்த்த தக்காளிகளின் எடை சுமார் பன்னிரண்டு கிலோ இருக்கலாம். மூன்று செடிகளுக்கு இது ரொம்பவே அதிகம். தக்காளிச்செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அடுத்த முறை செயல்படுத்திப் பார்ப்போம். அடுத்த முறையாவது பூனை மூஞ்சிகள் உருவாகாமல் எல்லா தக்காளிகளுமே நல்ல தக்காளிகளாகக் காய்க்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.


கொசுறு - கீழே இருப்பது என் தோட்ட அனுபவத்தைக் கேலி செய்து மகள் வாட்சப்பில் அனுப்பியது. 100% உண்மை என்பதால் சத்தமில்லாமல் சிரித்துக் கொள்கிறேன். 😄😄










(பிரதாபங்கள் தொடரும்)

முந்தைய பிரதாபங்கள்



21 comments:

  1. தக்காளி - இங்கே இந்த மாதிரி வேறுபட்ட வடிவங்களில் ஷிம்லா மிர்ச் எனச் சொல்லப்படும் குடைமிளகாய் கிடைக்கிறது! அதிலும் இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம் என இந்தப் பதிவு படித்த பிறகு தோன்றுகிறது.

    அடுத்த முறை இன்னும் சிறப்பான தக்காளி மகசூல் கிடைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. \\இங்கே இந்த மாதிரி வேறுபட்ட வடிவங்களில் ஷிம்லா மிர்ச் எனச் சொல்லப்படும் குடைமிளகாய் கிடைக்கிறது! அதிலும் இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம் என இந்தப் பதிவு படித்த பிறகு தோன்றுகிறது. \\ இருக்கலாம் வெங்கட். தேடும்போதுதான் சில விடைகள் கிடைக்கின்றன.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. ஓ... தேனீக்கள் செய்யும் வேலை அருமையாகத்தான் இருக்கு...

    மகளுக்கு பாராட்டுகள்... (ஹிஹி)

    சரி தான் உள்ளத்திற்கு ஏது மதிப்பு...?

    ReplyDelete
    Replies
    1. \\மகளுக்கு பாராட்டுகள்... (ஹிஹி)\\ நீங்களுமா? :))))

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  3. கலக்குறீங்க கீதா தோட்டசெய்கையில்.....வா..வ் தக்காளி பார்க்க சூப்பரா இருக்கு. பார்சல் அனுப்புங்கப்பா..இந்த தக்காளி இங்கு மார்கெட்டில் கிடைக்கும். எனக்கு ஆரம்பத்தில் பிடிக்கல. நீங்க சொன்னமாதிரி ஒருவேளை வடிவு காரணமோ தெரில. ஆனா பக்கத்து ஜேர்மனிய பெண் சொன்னார் இது நல்ல ருசியாக இருக்கும் ஒருதடவை சமைத்துபார் என. அதன் பின் கிடைத்தால் விடுவதில்லை.
    ஒரு கருவில் இரண்டு குழந்தைகளை அழகாக பிரித்திருக்கிறீங்க. போட்டோஸ் அத்தனையும் சூப்பரா அழகாக இருக்கு.
    மெசேஜ் நான் வாய்விட்டே சிரித்தேன். சூப்பர். வாழ்த்துக்கள் கீதா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் நன்றி ப்ரியா. இந்தத் தக்காளிகள் நாட்டுத்தக்காளி போல ஜூஸியாகவும் சுவையாகவும் உள்ளன. பார்சல் அனுப்பலாம். ஆனால் அங்கே வந்துசேரும்போது ஜூஸ்தான் கிடைக்கும் உங்களுக்கு. :)))

      Delete
  4. தக்காளி வளர்ப்பும், அதன் பெயர்களும் , அதன் வடிவத்தை ஒப்பிடுவதும் அருமை கீதமஞ்சரி.
    //மகள் வாட்சப்பில் அனுப்பியது. 100% உண்மை என்பதால் சத்தமில்லாமல் சிரித்துக் கொள்கிறேன். 😄😄//
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.

      Delete
  5. கீதா தக்காளி பார்க்க ரொம்பவே அழகாக இருக்கிறது. நீங்கள் சொல்லிருப்பது போல் பக் தக்காளி என்று சொல்லலாம்.

    முதலில் இதை குடைமிளகாய் என்று நினைத்துவிட்டேன் ஆனால் உங்கள் தலைப்பு தக்காளி என்று இருப்பதால் தக்காளியேதான்..ஹா ஹா ஹா...அதுவும் உங்கள் வீட்டுத் தோட்டத்து விளைச்சல்! அதுவே எத்தனை சந்தோஷம் இல்லையா!

    குடை மிளகாய்களும் இப்படித்தான் வித வித வடிவங்களில் வருகின்றன. மிக மிக குட்டியாகவும் வருகின்றன ஸ்டஃப்ட் குடைமிளகாய் செய்யலாம் என்பது போல.

    எனக்கும் தக்காளிக்காய் மிகவும் பிடிக்கும். நம் வீட்டிலும் தக்காளிக்காய் சாம்பார், கூட்டு என்று செய்வதுண்டு.

    படங்கள் எல்லாம் வழக்கம் போல் அருமை!! அழகு!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. குடைமிளகாய் பற்றி வெங்கட்டும் சொல்லியிருக்கிறார். நான் பார்த்ததில்லை. உங்களுக்கும் தக்காளிக்காய் பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ச்சி.

      வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி தோழி.

      Delete
  6. இது நாட்டுத்தக்காளி முன்பெல்லாம் எங்கள் கிராமங்களில் இந்த இனம்தான் இருந்தது.சிறுவர்களாக இருந்தபோது கோடையில் சிறியதாக வெட்டி சீனிசேர்த்து சாப்பிடுவோம் சுவையாக இருக்கும். கிராமங்களிலேயே இப்பொழுது இவ் இனத்தை காண்பது அரிது.இங்கு தலைநகரில் இயற்கை பசளையில் விளைந்த பொருட்கள் விற்கும் சந்தையில் இந்த தக்காளி விற்பார்கள் விலை கூடக்கொடுத்து வாங்கிகொள்கிறோம்.

    தொடரட்டும் தோட்டக்கலை.வாழ்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தக்காளியில் சீனி சேர்த்து சாப்பிடுவீங்களா? புளிப்பும் இனிப்புமாய் இருக்குமல்லவா? வித்தியாசமான ரசனை.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மாதேவி.

      Delete
  7. பூனைமூஞ்சி தக்காளி...ஆஹா ..


    ரொம்ப சுவாரஸ்யமா எழுதுறீங்க சகோ ...

    ரசிச்சு ரசிச்சு படிக்குறேன் ..

    -நாய்மூஞ்சி தக்காளி

    -மெதுவாக சர்ஜரி செய்து இரண்டையும் பிரித்தேன்.

    -பழுக்கப் பழுக்க சட்னியாகிக் கொண்டிருக்கின்றன

    -தக்காளிக்காய்க்காவே மீன் வாங்கிவந்து மீன்குழம்பு வைக்கிறேன். 😂😂

    ரொம்ப ரசித்த இடங்கள் ...


    சின்னவர் 5 ம் வகுப்பும் பெரியவர் 8 ம் வகுப்பிலும் உள்ளனர் ..இருவருக்குமே pollination பாடம் உள்ளது ...அப்பொழுது ...பரங்கி பதிவில் உள்ள manual pollination ன்னும் ..இந்த பதிவில் உள்ள படங்களையும் காட்டினேன் ...

    அசோ அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம் ....படிக்கும் போது ஈட்டிய அறிவை விட பார்க்கும் போது மனதில் இன்னும் அழகாக பதியும் அல்லவா அது தான் நடந்தது ...

    உங்களின் படங்களின் தரம் அப்படி ...

    மிக மகிழ்ச்சி ...மற்றும் நன்றியும் கூட கீதா அக்கா அருமையான படங்களுக்கு ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி அனு.

      பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்க படங்களும் பதிவும் உதவுகின்றன என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சிமா. பிள்ளைகளுக்கு என் வாழ்த்துகள்.

      Delete
  8. உங்கல் தோட்டத்துப் பிரதாபங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன் கீதா. நல்லதொரு அனுபவப் பகிர்வு. நிச்சயம் புதுத் தோட்டக்காரர்களுக்கு நல்ல பயனை அது தரும் என்பது உறுதி. தொடரட்டும் உங்கள் பிரதாபங்கள்.
    பிரதாபங்கள் பிரமாதம்!:)

    ReplyDelete
    Replies
    1. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல என் குட்டித்தோட்டத்துப் பிரதாபங்களைப் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். அதையும் உங்களைப் போன்றோர் ரசித்து ஊக்குவிக்கும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. நன்றி தோழி.

      Delete
  9. தக்காளிக்காய் கூட்டு உன்மையிலேயே சுவையாக இருக்கும். அதிலும் மனைவி நல்ல மூடில் இருக்கும்போது செய்தால் இன்னும் சுவை கூடும்...

    ReplyDelete
    Replies
    1. தக்காளிக்காய் கூட்டின் சுவை பற்றி சொன்னது சரி. ஆனால் பின்னால் வரும் வரி... ஹா.. ஹா... அனுபவத்தின் சுவை.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  10. ரசித்து வாசித்தேன்:). ஆம், பங் போலவும் உள்ளது இந்தத் தக்காளிகள். சில பூசணிக்காய் வடிவில், அதே நேரம் ஆரோக்கியமாகப் பளபளவென்றே உள்ளன. குறைப்பாடுள்ளவை என்பது ஆச்சரியம்தான். அதற்கான காரணங்களை அழகாக விளக்கியுள்ளீர்கள். தேனீக்களின் படங்கள் நல்ல டைமிங். தக்காளிக் காய் கூட்டு எனக்கும் பிடிக்கும்.

    பிரதாபங்கள் தொடரட்டும்:)!

    ReplyDelete
    Replies
    1. தக்காளிக்காய் கூட்டுப் பிரியர்கள் வரிசையில் நீங்களும் இருப்பதறிந்து மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  11. பூனைமூஞ்சி தக்காளியா ? .... இப்படி ஒரு தக்காளியை இன்றுதான் பார்கிறேன் ... சுவாரஸ்யம்...

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.