10 February 2017

கச்சா எண்ணெய்க் கசிவும் வாழ்வாதார நசிவும்


இந்தப் பூவுலகின் அழகைபுவிவாழ் உயிர்களைஇயற்கையின் அதிசயத்தக்கப் படைப்புகளைதனது பொறுப்பின்மையாலும் ஆணவத்தாலும் சுயலாப நோக்காலும் அலங்கோலப்படுத்திவிடுகிறான் மனிதன். இறுதியில் அது அவனுக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை அறிந்துணரும் அறிவுமின்றி... அலட்சியமாய்க் கடந்துபோகிறான். இயற்கை தன்னால் இயன்றவரை ஒவ்வொரு முறையும் அழிவிலிருந்து தன்னைத்தானே மீட்டெடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்த சுய மீட்புகள் யாவும் அத்தனை சுலபமாய் அமைவதில்லை. இதோ.. சுற்றுச்சூழலை மாசுபடுத்தியபடி கடல்வாழ் உயிர்கள் மட்டுமல்லாது கடல்சார், நிலம்வாழ், நிலம்சார் உயிர்களின் வாழ்வையும் காவு வாங்கியபடிசென்னைக் கடற்புறத்தில் படிந்துகிடக்கிறது கச்சா எண்ணெய்க் கழிவு.
  பொதுமக்கள் போதுமான பயிற்சியும் பாதுகாப்பும் இன்றியும் இந்தக் கச்சா எண்ணெயின் ஆபத்து குறித்த விழிப்புணர்வின்றியும் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கியிருப்பது வேதனையை அதிகரிக்கிறது. உலகில் இதுவரை எத்தனையோ எண்ணெய்க் கப்பல்களால் கடல்நீரில் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றனகடல்நீர் சேதமாகியிருக்கிறதுஆனால் எந்த நாடும் பொதுமக்களை இப்படி வாளியும் வெற்றுக்கையுமாக கச்சா எண்ணெய் வண்டலை அள்ளவிட்டு வேடிக்கை பார்த்ததில்லை

 டன் கணக்கில் கொட்டப்பட்டிருக்கும் கச்சா எண்ணெய்ப்படிவை…. கடல்நீரும் எண்ணெயும் சேறுமாய்க் கலந்துவிட்ட கசடை…  கைவாளிகள் கொண்டு முகர்ந்து வெளியேற்றும் களப்பணி முற்றிலுமாய் முடிவது எக்காலம்? இதுவரை பாதிப் பணியே முடிந்திருப்பதாகவும் மீதி முடிய இன்னும் பத்துநாட்களாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருவொற்றியூர், எண்ணூர் கடலோரப் பகுதிகளில் வழுக்கிவிடும் பாறைகளினூடே போதிய உடை, பாதுகாப்புக் கவசங்களின்றி, கரிய எண்ணெய் சகதிக்குள்ளிறங்கி கழிவகற்றப் போராடும் ஒரு சாமான்யனின் ஆரோக்கியம் குறித்த அக்கறையோ கவலையோ உயர்மட்டத்திலிருக்கும் எவருக்கும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவியலா நிதர்சனம். வளர்ந்த நாடு என்று பெருமை பேசும் நாம் இப்படியான ஒரு இக்கட்டான சூழலை சரிவரக் கையாளும் திறமையற்றவர்களாககையாலாகாதவர்களாக இருப்பது மிகக் கொடுமை.கச்சா எண்ணெய்ப்படிவினால் கடல்வாழ் மீன்கள், ஆமைகள், நண்டுகள் போன்றவை இறந்து கரையொதுங்கும் அவலம் தொடர்ந்துகொண்டிருக்கஎண்ணெய்ச்சகதியில் சிக்கிய பறவைகளின் கதி சொல்லவொணாது. அத்தகு பறவைகளின் படங்களைக் காணும்போதெல்லாம் சொல்லமுடியாத வேதனை அடிவயிற்றைப் பிசைகிறது


கச்சா எண்ணெய்க் கசிவின் ஆபத்திலிருந்து பறவைகளையும் விலங்குகளையும் மீட்டு வாழ்விக்கவென்றே உலகளவில் பயிற்சிபெற்ற தன்னார்வலர்களும் விலங்கியல் மருத்துவர்களும் உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டவற்றின் உடலிலிருந்து எண்ணெயை நீக்கி சுத்தம் செய்து சிகிச்சை அளித்து, அதிர்ச்சியிலிருந்து மீட்டுப் பாதுகாத்து மீண்டும் அவற்றை வாழ்விக்கின்றனர். பாதுகாப்பற்ற பல பறவைகள் தங்கள் இறகுகளை அலகால் கோதி எண்ணெயை எடுக்கும் முயற்சியில் எண்ணெயின் நச்சுத்தன்மை உட்கொள்ளப்பட்டு மடிகின்றனவாம். இன்னும் சில பதற்றத்தாலும் பயத்தாலும் எண்ணெய்ப்படலத்தினின்று மீளவியலாமல் உணவுண்ண வழியில்லாமல் உயிரிழக்கின்றனவாம்.சாவினும் கொடியது சித்திரவதையோடு உயிர்க்காக்கப் போராடும் அவலம். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தங்கள் சுயலாபத்துக்காக ஆறாம் அறிவை அடகுவைத்துவிட்ட தேசத்தில் சக உயிர்களைப் பற்றியும் நம்மைச் சார்ந்திருக்கும் ஐந்தறிவு ஜீவன்கள் பற்றியுமான அக்கறை யாருக்குளது?
இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படங்களை எடுத்தவர் திரு. இக்வான் அமீர் அவர்கள். அவரைப் பற்றி வலைப்பக்கத்திலும் ஃபேஸ்புக்கிலும் பலர் அறிந்திருக்கக்கூடும். வடசென்னைவாசியான அவர் மீனவ மற்றும் இதர உழைக்கும் மக்களின் வாழ்வியல் யதார்த்தத்தை தன்னுடைய ஒளிப்படங்கள் மூலம் நம்மை உணரச்செய்யும் வல்லமை கொண்டவர். இயற்கையோடு இயைந்த வாழ்வு அவரது. புகைப்படக்கலையின் நுணுக்கங்களை தமிழில் மிக எளிமையாகவும் தெளிவாகவும் Clicks & Colours  குழுமத்தில் பகிர்ந்துவருகிறார். இதுவரை 29 பதிவுகளை வெளியிட்டுள்ளார்.  சென்னைக் கடற்கரையோரம்  படிந்துள்ள கச்சா எண்ணெய்க் கசிவை வெறுங்கையால் வாளி கொண்டு அகற்றும் பணியின் ஆபத்து குறித்து ஃபேஸ்புக்கில் படங்களாகவும் பதிவாகவும் வெளியிட்டுள்ளார். அவர் எடுத்தப் படங்கள் சிலவற்றை அவருடைய அனுமதி பெற்று இங்கு பகிர்ந்துள்ளேன்.

17 comments:

 1. Replies
  1. உண்மை ஐயா.. பாமர மக்களின் அறியாமை கண்டு மனம் பதைக்கிறது.

   Delete
 2. ஒவ்வொன்றையும் மிகவும் உணர்ந்து வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  உலகளவில் இது போன்ற மிகப்பெரிய பாதிப்புகளுக்கு எவ்வளவோ லேடஸ்ட் தொழில்நுட்பங்கள் நிச்சயமாக இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு, விரைவாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளை இவ்வாறு சாதாரண மனிதர்களின் கையில் வாளிகளைக் கொடுத்து செய்துகொண்டிருப்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.

  இது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பின்மை + அறியாமையைத் தான் காட்டுகிறது.

  நேரம் + பணம் + சாதாரண மனிதர்களின் கடும் உழைப்பு + சுற்றுச்சூழல் அனைத்துமே விரயம் ஆகி வீணாகிப்போய்க்கொண்டு இருப்பதை நினைத்தால் மிகவும் வேதனையாகத்தான் உள்ளது.

  தங்களின் இந்த விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் குறிப்பிடுவது மிகச்சரியே... உலகளவில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால் அரசு எந்திரம் எந்த முயற்சியும் எடுக்காததோடு பொதுமக்கள் இப்படி அவதிப்படுவதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார்.

   Delete
 3. //சாவினும் கொடியது சித்திரவதையோடு உயிர்க்காக்கப் போராடும் அவலம். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தங்கள் சுயலாபத்துக்காக ஆறாம் அறிவை அடகுவைத்துவிட்ட தேசத்தில் சக உயிர்களைப் பற்றியும் நம்மைச் சார்ந்திருக்கும் ஐந்தறிவு ஜீவன்கள் பற்றியுமான அக்கறை யாருக்குளது?//

  நன்றாக சொன்னீர்கள் தோழி... கழிவகற்றும் சகோதரரின் சட்டைக் கிழிசல் நமக்கு சொல்லிவிடுகிறது பலவற்றை. கிடைத்த, கிடைக்கவிருக்கும் ஓட்டுக்காக நம்மிடம் இலவசத்தோடு இளித்துக் கொண்டு வரும் சமயம் திருப்பியடிக்கத் தயாராக வேண்டும் இவ் அவலங்களை மனதில் நிறுத்தி.படித்தவன் சூதுவாது செய்தால் ஐயோவென்று போவான் என்று அறம் பாடிப் போனவனின் வாக்கு பலிக்கும். நின்று கொல்லும் தெய்வம் இக்கலியிலும் எஞ்சி இருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. இதுபோன்ற படங்களைப் பார்க்கும்போது நமக்கே மனம் பதறுகிறதே... உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவருக்குக்கூடவா அந்த உணர்வு இருக்காது.. தூங்குபவர்களை எழுப்பமுடியும்.. ஆனால் தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை? வருத்தமும் வேதனையுமே மிஞ்சுகிறது தோழி.

   Delete
 4. மிகவும் வருத்தமாக உள்ளது சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. படங்களைப் பார்த்தாலே பரிதாபமாக உள்ளது. வரப்போகும் ஆபத்துகளை உணராமல் களமிறங்கியுள்ளார்கள்.

   Delete
 5. மனித மலங்களையே கைகளால் அள்ளும் பரம்பரையினர்தானே நம்மவர்கள்

  ReplyDelete
  Replies
  1. அது இன்னுமொரு கொடுமை ஐயா... எத்தனையோ தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கிறார்கள்.. ஆனால் கடைமனிதனின் உழைப்புக்கு மட்டும் மாற்று கண்டுபிடிக்கப்படாமல்.. அல்லது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவது அவலம்.

   Delete
 6. துயரமான செய்தி
  முகம் கொடுக்க வேண்டியிருக்கே

  ReplyDelete
 7. கடற்கரையோரம் படிந்துள்ள கச்சா எண்ணெய்க் கசிவை வெறுங்கையால் வாளி கொண்டு அகற்றும் பணியின் ஆபத்து குறித்து ஃபேஸ்புக்கில் படங்களாகவும் பதிவாகவும் வெளியிட்டுள்ளார்.//
  மக்களின் நலன் கருதி அரசாங்கம் மாற்று வழியை கண்டுபிடித்து கச்சா எண்ணெய் படலத்தை அப்புறபடுத்த வேண்டும். படங்க்களும் செய்திகளும் வேதனை தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை உள்ள அரசினால்தான் இதுபோன்ற சமயங்களில் அவசரகட்ட நடவடிக்கைகளை எடுத்து ஆபத்திலிருந்து பாதுகாக்கமுடியும். ஆரம்பகட்டப் பரபரப்பு அடங்கிவிட்டால் எதுவுமே கண்டுகொள்ளப்படாத காலமாகிவிட்டது.

   Delete
 8. டிஜிட்டல் என்கிறோம், தொழில்நுட்பம் என்கிறோம். இதை எந்தப் பட்டியலில் சேர்ப்பது. வேதனை.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா. நம் சக மனிதர்களை இச்சூழலில் பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது..

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.