பெருவாத்தினங்களில் இப்படியொரு இனம் இருப்பதே உலகுக்குத் தெரியவராத நிலையில் ஆரம்பகாலத்தில் ஐரோப்பியர் இவற்றை கருப்பு அன்னங்களின் முதிராத இளம்பருவக் குஞ்சுகள் என்றே எண்ணியிருந்திருக்கின்றனர். பிறகுதான் இவை தனியினம் என்று அறியவர, முதன்முதலாகக் கண்டறிந்த இடத்தின் பெயரையே இப்பறவைக்குச் சூட்டி கேப் பாரென் பெருவாத்து (cape barren goose) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். பன்றி போன்ற அகன்ற வாய்ப்புறத்தைக் கொண்டிருப்பதால் பன்றிவாத்து என்ற பட்டப்பெயரும் உண்டு. ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் கேப் பாரென் பெருவாத்தினம் பற்றி இப்போது பார்ப்போம்.
அலகின் நுனியிலிருந்து வால் நுனிவரையிலான இதன் நீளம் 75 செ.மீ முதல் 1 மீ. வரை இருக்கலாம். எடை மூன்று முதல் ஏழு கிலோ வரையிலும் சிறகுவிரி நீளம் 1.5மீ முதல் 2மீ வரையிலும் இருக்கும். இதன் உடலோடு ஒப்பிடுகையில் தலையின் அளவு சிறியது. வெளிர்சாம்பல் நிற உடல், சிறகுப்பகுதியில் மட்டும் காணப்படும் சற்றே அடர்சாம்பல் நிறப்புள்ளிகள், இளஞ்சிவப்பு நிறக்கால்கள், கருமையான பாதங்கள் மற்றும் அலகின் மேற்புறத்தைப் போர்த்தியிருக்கும் வெளிர்பச்சை நிற தோல்சவ்வு இவற்றைக்கொண்டு இதை எளிதில் அடையாளம் காணமுடியும். பெரும்பாலான சமயம் அமைதியாக இருந்தாலும் ஆபத்து வருவதாக உணர்ந்தால் கொம்பூதுவது போன்று கர்ணகடூரக் குரலெடுத்து எச்சரிக்கும்.
இவை வாத்தினம் என்றாலும் நீரை விடவும் நிலத்தையே பெரிதும் சார்ந்து வாழ்கின்றன. கால்நடைகளைப் போல புல்மேயும் இப்பெருவாத்துகளுக்கு விருப்ப உணவு கோரைப்புற்கள், புல்பூண்டுகள், இலைகள், விதைகள், சதைப்பற்றான தாவரங்கள் போன்றவை. இவற்றோடு உணவுப்பயிர், தீவனப்பயிர் போன்றவை கிடைத்தால் இன்னும் கொண்டாட்டம்தான். உவர்நீரையும் அருந்தக்கூடிய தன்மை இருப்பதால் இந்தப் பெருவாத்துகள் தீவுகளின் கரையோரங்களில் பெருமளவு காணப்படுகின்றன. இனப்பெருக்கக் காலம் அல்லாத சமயத்தில் ஊருக்குள் விளைநிலம் சார்ந்த பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன.
கேப் பாரென் பெருவாத்துகள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் கோரைப்புல்வெளியின் திறந்தவெளியில் கூடுகட்டி முட்டையிடுகின்றன. கூடுகட்டுவது ஆண்பறவையின் வேலை. குச்சிகளையும் கோரைப்புற்களையும் கொண்டு தரையில் கிண்ணிபோன்ற ஒரு பெரிய கூடு கட்டி அதனுள் மென்பஞ்சு இறகுகளால் மெத்தை அமைக்கும். பெண்பறவை ஒரு ஈட்டுக்கு நான்கு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். முட்டைகளை அடைகாப்பது பெண்பறவையின் வேலை. கூடு கட்டும் காலத்தில் ஒவ்வொரு இணையும் தமக்கென்று எல்லை வகுத்துக்கொண்டு அதைப் பாதுகாப்பதில் மூர்க்கமாய் செயல்படும். கூடிருக்கும் பகுதியில் நுழைய முற்படும் நாய், நரிகளை மட்டுமல்ல மனிதர்களையும் மூர்க்கமாய்த் துரத்திவெளியேற்றும்.
ஐந்து வாரங்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரிந்து வெளிவரும். குஞ்சுகள் தாய்தந்தையைப் போல் இல்லாமல் கருப்பு வெள்ளைக்கோடுகளுடன் காட்சியளிக்கும். தாய், தந்தை இரண்டும் இணைந்து அவற்றை வளர்க்கும். கோழிக்குஞ்சுகளைப் போல முட்டையிலிருந்து பொரிந்து வந்தநாளிலிருந்தே குஞ்சுகள் தாமாக மேயக்கற்றுக்கொள்கின்றன. பத்து வாரங்களில் பறக்கக் கற்றுக்கொள்கின்றன. 17-ஆவது வாரத்தில் தாய்தந்தையைப் பிரிந்து தன்னிச்சையாய் வாழத்தொடங்குகின்றன. மூன்று வருடத்தில் முழுமுதிர்ச்சி அடைந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகின்றன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள்.
ஆரம்பகாலத்தில் உணவுக்காகப் பெரிதும் வேட்டையாடப்பட்டுவந்த காரணத்தால், இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் இவ்வினமே அழியும் நிலைக்கு வந்துவிட்டது. நல்லவேளையாக 1950 ஆம் ஆண்டின் பறவைக்கணக்கெடுப்பு, அபாயமணி அடித்து ஆபத்தைத் தெரியப்படுத்த, அதன்பின் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவின் கரையோரத்தீவுகள் பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் காரணமாக, இன்று ஓரளவுக்கு இவற்றின் எண்ணிக்கை பெருகியிருந்தாலும் இப்போதும் இவை அரிய உயிரினங்களின் பட்டியலில்தான் உள்ளன என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்.
என்ன அழகாக இந்தப்பறவைகள் ஒற்றுமையாக குடும்பம் நடத்துகின்றன! மனிதர்கள் இவற்றிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்! அருமையான தகவல்கள்!!
ReplyDeleteஉடனடி வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி மேடம்.
Deleteஅழகான படங்களுடன் கூடிய அருமையானதோர் பதிவு.
ReplyDeleteவழக்கம்போல ஆச்சர்யம் அளிக்கும் பல்வேறு செய்திகள்.
//கேப் பாரென் பெருவாத்துகள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றன.//
ஆஹா ..... அவற்றின் வாழ்க்கையில் விவாகரத்து பிரச்சனைகளோ, அதற்கான வழக்கோ, அதனை நடத்தித்தரும் கோர்ட்டுகளோ ஏதும் கிடையாது போலிருக்கிறது.
மனிதர்களில் பலருக்கும் இது ஒரு பாடம் ஆகும்.
பகிர்வுக்கு நன்றிகள்.
\\ஆஹா ..... அவற்றின் வாழ்க்கையில் விவாகரத்து பிரச்சனைகளோ, அதற்கான வழக்கோ, அதனை நடத்தித்தரும் கோர்ட்டுகளோ ஏதும் கிடையாது போலிருக்கிறது.
Deleteமனிதர்களில் பலருக்கும் இது ஒரு பாடம் ஆகும். \\
அழகாக சொன்னீர்கள் கோபு சார்.. ஆறாவது அறிவு இல்லாமைதான் இந்த இணக்கத்துக்குக் காரணமாக இருக்குமோ... :)))
தங்கள் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்.
எத்தனை எத்தனை உயிரினங்கள்.... அவற்றில் எப்படியெல்லாம் வித்தியாசம்.....
ReplyDeleteஇறைவன் படைப்பில் எத்தனை அதிசயங்கள்.... வியக்க வைக்கின்றன!
நன்றி வெங்கட். இன்னும் நாமறியாத உயிர்கள் எத்தனை இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவோ.. அறிய அறிய வியப்புதான்.
Deleteஅருமையான கண்ணோட்டம்
ReplyDeleteதொடருங்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteமனிதர்கள் இப்பறவைகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
ReplyDeleteஇயற்கையில் ஒவ்வொன்றும் நமக்குப் பாடம் கற்றுத்தந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றைக் கவனித்து நடைமுறையில் கடைப்பிடிப்போர்தான் அரிது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteமுகநூலில் படித்தேன். அரிதாகி வரும் அரிய உயிரினம் பற்றிய பகிர்வுக்கு நன்றி கீதமஞ்சரி. படங்கள் அழகு.
ReplyDeleteஅங்கும் இங்கும் வாசித்துக்கருத்திட்டு ஊக்கமளிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோமதி மேடம்.
Deleteஇறைவன்/இயற்கையின் படைப்புகள் எல்லாமே அதிசயம்தான் மனிதனைத் தவிர என்று நினைக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் இந்த இயற்கையின் அதிசயத்தைப் பற்றி வாசித்து அதிசயித்தேன்.
ReplyDeleteஇணை பிரியாது ஆஹா...என்ன ஒரு விந்தை. அதுவும் குழந்தை வளர்ப்பு இணைகள் இணைந்து வளர்த்தல்....கூட்டின் அருகே யாரும் வராது தடுத்தல் என்று ஒவ்வொரு இணைகளும் தங்கள் பகுதியைப் பிரித்தல்....அனைத்துமே விந்தைதான் நேச்சுரல் இன்ஸ்டிங்க்ட்...
குஞ்சுகள் பிறக்கும் போது தாய் தந்தை போல் அல்லாமல் கருப்பு வெள்ளைக் கோடுகளுடன் என்றால் வளரும் போது தாய் தந்தையைப் போல் ஆகுமோ...
மிக மிக அருமையான பதிவு. இயற்கை எப்போதுமே அதிசயம்தான் ரகசியங்கள் பல தன்னுள் அடக்கிக் கொண்டு மனித அறிவுக்குப் புலப்படாதவை இன்னும் எவ்வளவு இருக்கிறதோ...
கீதா
இயற்கையை ஆராதிக்கும் உங்களைப் போன்றவர்களின் நட்பு கிடைத்தது என் பாக்கியமென்றே நினைக்கிறேன்.. மிக அழகாக பதிவினை ரசித்துக் கருத்திட்டு ஊக்கமளிக்கும் உங்களுக்கு அன்பான நன்றி கீதா.
Deleteஉங்களுக்காக கேப் பாரென் பெருவாத்துக்குஞ்சு படத்தினை இப்போது பதிவில் இணைத்துள்ளேன். ஈமு, காசோவரி, கேப் பாரென் பெருவாத்து போன்ற பெரிய பறவைகளின் குஞ்சுகள் கருப்புவெள்ளைக் கோடுகளுடன்தான் பொரிந்து வளர்கின்றன. camouflage எனப்படும் உடல்மறைப்பு உத்திக்கானதாய் இருக்கலாம். தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளும் பருவம் வரும்போதுதான் தாய் தந்தை போல நிறமாற்றம் அடைகின்றன. இதுவும் இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று. :))
Deleteஅருமையான ஒரு பதிவு .....பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteஅருமையான ஒரு பதிவு .....பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteவருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி புத்தன்.
Deleteவிதவிதமான பறவைகளை நானும் பார்க்கிறேன் இங்கு தினமும். எனக்கும் சிறகுகள் இருக்கக் கூடாதா என ஒவ்வொரு நாளும் ஏங்குகிறேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
மனப்பறவையைப் பறக்கவிட்டுக் களிப்போம்.. அதுவொன்றே நாம் செய்யமுடிந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்.
Deleteகேப் பாரென் வாத்து பற்றிய அரிய தகவல்கள். படங்களும் அழகு! இதுவும் அழியும் பட்டியலில் இருக்கிறது என்பது வருந்தத் தக்கச்செய்தி. சுவையான பதிவுக்கு நன்றி கீதா!
ReplyDeleteஅயல்நாட்டுப் பறவைகள் விலங்குகள் அறிமுகத்தால் உள்ளூர் பறவை விலங்குகள் பாதிப்படைவது நமக்கு மிகவும் வருத்தம் தரும் விஷயம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.
Deleteவணக்கம்.
ReplyDeleteஅவுஸ்திரேலிய உயிர்த்தொகுதிகளைத் தமிழில் அறிமுகப்படுத்தும் பணி தொடரட்டும்.
ஐரோப்பியர்களால் இந்தியாவிற்குக் கிடைத்த கொடைகளில் ஒன்று இந்த தாவர பறவை விலங்கு பற்றிய தகவல் சேகரம்.
நீங்கள் செய்வதுபோன்றே அவர்கள் தம் தாய்மொழியில் இந்தியப்பெருநிலத்தின் உயிரினங்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துப் பதிந்தனர்.
இதுபோன்ற செயல்கள் மட்டுமே தமிழுக்குச் செய்யும் சேவை.
எங்கள் தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கடந்தோம்.
தகத்ததாய தமிழைத் தாபிக்கும் தங்களின் பணிக்கென் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
நன்றி
தங்கள் மேன்மையான கருத்துரைக்கு மிகவும் நன்றி சகோ.. தமிழுக்கு என்னாலான சிறுதுளிப் பங்களிப்பு இது.. தங்கள் பாராட்டு மேலும் உத்வேகம் தருகிறது. மிக்க நன்றி.
Delete