4 October 2016

இல்லம் சங்கீதம்...

கனவுபோலவே இருக்கிறது.. கனவிலும் வாராது கண்ணாமூச்சி காட்டிய ஒன்றுஇபோது நனவாகிக் கண்முன் நர்த்தனமாடுகிறது. காலங்காலமாய் பெயர் சொல்ல காங்கிரீட்டால் ஆனதல்லபெயருக்குக் கொஞ்சம் செங்கல், கொஞ்சம் சிமெண்ட், நிறைய மரம், அட்டைப்பலகைகள் கொண்டுஅடிக்கொரு அகண்ட கண்ணாடி சாளரம் கொண்டுகடுங்காற்றுக்கும் எதிர்நிற்கவியலாத கட்டுமானம் என்பதோடு பச்சிளம்சிசுவைப் போல பார்த்துப் பார்த்துப் பராமரிக்கப்பட வேண்டியதொன்று.. எனினும் நமக்கே நமக்கென்று ஆய்ந்து ஓய்ந்து அமர ஒரு தரை.. அடைக்கலம் தர சிறு கூரை.. கையகலமேயானாலும் கண்ணுக்கிசைவாய் குட்டித்தோட்டம்முக்கியமாய்.. ஆறுமாதங்களுக்கொரு முறை படபடப்பு கூட்டும் வீட்டுப்பரிசோதனை கிடையாது.. போதாதா வாழ்வின் மெருகு கூட?


இத்தனை வருடங்களுக்குப் பிறகு அழகாய் அம்சமாய் அந்நியமண்ணில் அமைந்திருக்கிறது சொந்தமாய் சிறுமனை. வேலியால் சிறைப்படுத்தப்படாத வீடு ஒரு சுதந்திரப் பறவையைப் போலே சிறகுவிரித்து.. கண் எட்டும்வரை காட்சிகளைப் பதிவாக்கித் தந்துகொண்டிருக்கிறது. திரையிடப்படாத சன்னல்கள் வழி வெளித்தெரியும் மழைக்காட்சி ரம்மியம்….. வருடங்களாயிற்றுஇப்படி மழையை அதன்போக்கில் ரசித்து.. பின்னணியில் சுவை சேர்க்கிறது பாடல்பன்னீர் புஷ்பங்களை விளித்து ராகம் பாடச்சொல்லி அது இறைஞ்சிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் குளிர்கால மழையில் நனையாமலேயே நனைந்தது போலொரு நடுக்கத்துடன் கையில் கடுஞ்சூடான காஃபிக்கோப்பை ஏந்தியபடி சன்னலோரம் நிற்கிறேன்...சாலையைத் திரையிட்டு மறைத்த மரஞ்செடிகளுக்கிடையில் பன்னீர் புஷ்பங்களாய் பொன்னிற வாட்டில் மலர்கள் கொத்துக்கொத்தாய் மலர்ந்து சிநேகப்புன்னகை பூத்துநிற்கின்றன. கொல்லைப்புறம் புதர்மண்டிக்கிடக்கும் சிறு கால்வாய் தாண்டி வாகனங்கள் விரையும் மேட்டுச்சாலை. சாலைக்கு மறுபுறம் நெடிதோங்கிய யூகலிப்டஸ் மரங்களில் மரப்பட்டைகள் ஆங்காங்கே உரிந்து, வெள்ளைவெளேரென்ற மேனி வெளித்தெரிய.. அரைநிர்வாண வீனஸ் சிற்பங்கள் போலே காட்சியளிக்கின்றன. உயர்மரக்கிளையொன்றில் வாலால் பற்றியபடி தலைகீழாய்த் தொங்கும் பாம்பினைப்போல காற்றிலாடித் துணுக்குறச்செய்த ஒற்றை ஈரமரப்பட்டை போதும் இன்றைய நாளை இனிதாக்க!


இணையம் இல்லா வாழ்க்கை அசுவாரசியம் என்று யார் சொன்னது.. இந்த வாழ்க்கைதான் எவ்வளவு சுவாரசியங்களைத் தன்னுள் பொதிந்துவைத்திருக்கிறது.. புறக்கணிக்கப்பட்ட பொக்கிஷங்களைத் திறந்துகாட்டி அசத்துகிறது.. எவ்வளவு மணித்துளிகளைத் தீரத்தீர பரிசளித்துக்கொண்டே இருக்கிறது.. எத்தனை அற்புதங்களை அவதானிக்கச் சொல்லித்தருகிறது.. சின்னக்குழந்தையைப் போலே வண்ணங்கள் தீட்டி குதூகலிக்கச்செய்கிறது. புத்தக அலமாரியை அடுக்கியபோதுதான் எத்தனைப் புத்தகங்களை இன்னும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பது புரிந்தது. குற்றவுணர்வோடு எடுத்த கமலாம்பாள் சரித்திரமும் இப்போது அரைகுறையாய் நிற்கிறது. முடிக்குமுன்தான் மழை அழைத்துவிட்டதே.


தெருமுனையில் வரவிருக்கும் பிரமாண்டமான முதியோர் காப்பகத்துக்கான கட்டுமானப்பணிகள் மழையிலும் வெகு மும்முரமாய் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நமக்குப் பிரச்சனையில்லை.. முதுமையில் கம்பூன்றி நடந்தே போய் காப்பகம் சேர்ந்துவிடலாம், அலைச்சல் மிச்சம்என்கிறார் கணவர்.. :)))

தெருவை அடைத்தபடி ஏராளமாய் இலகுரக.. கனரக வாகனங்கள்.. பளீர் பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பணியாடைகளுடனும் பணிக்குரிய தலைக்கவசங்களுடனும் ஆட்கள் நடமாட்டம். மழையின் ஈரம் பொருட்படுத்தாது, எதிர்வீட்டு வேலியோரம் தனியே அமர்ந்து மதிய உணவை உண்டுகொண்டிருக்கும் பணியாளரைப் பார்க்கும்போது என்னவோ போல் உள்ளது. அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறது வேலிக்குள்ளிருந்து ஓநாய் போன்ற நாய். குரைக்கவும் இல்லை.. வாலாட்டிக்குழையவும் இல்லை. இரவுப்பொழுதுகளில் அழும் நாயும் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.


பணிமுடித்து ஆட்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.. பணியிடத்தில் நிறுத்த இடமில்லாமல் கொல்லைப்புற மேட்டுச்சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் தங்கள் கார்களை நோக்கி கால்வாயைக் குறுக்கில் கடக்கின்றனர் சில இளைஞர்கள். மழை ஈரத்தில் சேறும் சகதியுமாக இருக்கும் அக்கால்வாயின் செங்குத்துச்சரிவில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் தடுமாறியபடி அவர்கள் ஏறுவது சற்றே கலக்கமூட்டுகிறது. ஏறி முடித்தபின் ஒருவருக்கொருவர் வெற்றிப்புன்னகை புரிந்து கைகுலுக்கிப் பிரிகின்றனர். அழுக்கும் சேறும் படிந்த பணியுடுப்பையும் பாதணியையும் கழற்றி, தன் விலையுயர்ந்த காரின் பூட்டில்(boot) போட்டுவிட்டு மாற்றுடுப்பும் மாற்றுப்பாதணியும் அணிந்து புறப்படும் இளைஞனை அவனொரு கட்டுமானத்தொழிலாளி என்று சத்தியம் செய்தாலும் நம்பமுடியாது.


கோடிவீட்டின் வாசல் கூண்டில் எந்நேரமும் அடைபட்டுக் கிடக்கும் மூன்று வெள்ளை வாத்துகளை இப்போது காணவில்லை. மழைக்காக இடம் மாற்றப்பட்டிருக்கலாம். ஆனாலும் கூண்டு காலியாக இல்லை.. வாத்துக்கு இறைக்கப்பட்ட தீவனத்துக்காய் எப்போதும் பறவைகள் முறைவைத்து உள்ளே சென்றுவந்துகொண்டிருக்கின்றன..

மழை கொஞ்சம் விட்டபோது மைனாக்கள் வந்து வணக்கம் சொல்லிச் சென்றன.. புதிராய்ப் பார்த்துச்சென்றது ஒரு மேக்பை. தவிர ஒரு நாய்சி மைனர் குடும்பம், ஒரு அன்றில், கொண்டைப்புறா சோடி, ஒரு பட்சர்பேர்ட், ஒரு வெண்முக நாரை மற்றும் ஒரு வெட்டுக்கிளி. இவர்கள் மட்டும்தான் இதுவரையிலான என் வீட்டு விருந்தினர்கள். ஒன்றோ இரண்டோ.. பூனைகள் முந்தைய இரவில் கொல்லைப்புற கண்ணாடிக்கதவை முகர்ந்து மனிதவாடையை அறிந்து சென்றுள்ளன என்பதை முற்றத்தில் சேறுபடிந்த புள்ளிப்பாதச் சுவடுகள் தெரிவிக்கின்றன.


தோட்டத்துக்கென இன்னும் பண்படுத்தப்படாத மண்ணில் செழித்து வளர்ந்துகிடக்கும் காட்டுக்கடுகுச்செடிகள் ஓரடி உயரக்காம்பில் நாலிதழ் மஞ்சள் பூக்களை அள்ளி இறைத்திருக்கின்றன. மழையிலும் தேன்சேகரிக்க வட்டமிடுகின்றன தேனீக்கள்.. காற்றிலும் மழையிலும் ஓரிடம் நில்லாமல் இங்குமங்கும் ஆடிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பூக்களில் தேன் எடுக்கும் தேனீயின் சாமர்த்தியம் கண்டு வியப்பேற்படுகிறது. அமரும் தேனீயின் பாரம் தாங்காது தழைந்து நிமிரும் தண்டுகள் அழகு. வீட்டுத்தோட்டம் போடும்வரை காட்டுப்பூக்கள் ரசிக்கத் தடையில்லை.. கண்ணாடி சன்னலை உரசிக்கொண்டு கீச் கீச்சென்று சத்தமெழுப்பி என்னை அழைக்கும் முட்செடிக்குதான் என்னைக் கண்டால் எத்தனைக் கொண்டாட்டம்கண்டங்கத்திரி போன்ற வெளிர்நீல மலர்களோடு வசீகரிக்கும் அச்செடியின் ஆயுள் சொற்பம்.. அறிவேன்..புகைப்பட புத்தி போகுமா.. நினைவாய் சில படங்கள்.. நாளைய புதிய வாழ்வில் நேற்றைய சில பழைய நினைவுகளை மீட்ட..


கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட வானம் மீண்டும் மேகங்களைப் பிழியத் தொடங்குகிறது.. தேன் சிந்துதே வானம் என்று நேரடி வர்ணனையாய் இசைத்துக்கொண்டிருக்கிறது என் பாட்டுப்பெட்டகம்.


(பி.கு. கடந்த இரு மாதங்களாய் என்னைக் காணாமல் தேடிய மற்றும் நினைவில் மீட்டிய அனைத்து நட்புகளுக்கும் அன்பார்ந்த நன்றி.)


31 comments:

 1. இல்லம் சங்கீதம்... என்ற பதிவைபடிக்கும் போது ஒரு இனிமையான சங்கீதத்தை கேட்பது போலவே இருக்கிறது. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 2. கடந்த இரு மாதங்களாய் தங்களைக் காணாமல் தேடினோம் என்பது ஒருபக்கம் உண்மையோ உண்மையாயினும் ....

  அந்த இரண்டு மாதங்களில் தாங்கள், தங்களைச் சுற்றி ரஸித்து மகிழ்ந்துள்ளவற்றைத் தங்களுக்கே உரிய தனிப் பாணியில் வெகு அழகாகவும் எழுதி, பொருத்தமான படங்களுடங்களைத் தேடித் தேடி இணைத்து, ஓர் மிகப்பெரிய சுவையான பதிவாக இங்கு கொடுத்திருப்பதைப் பார்த்து, அசந்து போய் ஆச்சர்யப்பட்டு மகிழ்ந்தேன். :)

  இதுபோல யாரால், தன்னைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் ஒன்றையும் விடாமல் நேரேட் செய்து எழுதிவிட முடியும்?

  கைதவறிக் காணாமல்போன புதையல் ஒன்று திரும்பக் கிடைத்தது போல மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உணர முடிகிறது.

  இல்லம் சங்கீதம்... தலைப்பும் அழகோ அழகு !

  மனம் நிறைந்த பாராட்டுகள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பின்னூட்டம் இல்லாமல் எந்தப் பதிவும் நிறைவை எட்டாது.. பதிவின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்தும் சிலாகித்தும் விவரமாக தாங்கள் இடும் பின்னூட்ட வரிகள் மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரவல்லவை.. மிகவும் நன்றி கோபு சார்.

   Delete
 3. அனைத்துப்படங்களுமே அழகோ அழகென்றாலும், அந்த மேலிருந்து கீழ் ஐந்தாம் படம் என்னை மிகவும் கவர்ந்தது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. எல்லாப் படங்களுமே எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து நான் எடுத்தப் படங்கள்தாம் என்பதை தெரிவிப்பதில் மகிழ்கிறேன் கோபு சார்.. அந்த மழைத்துளி வட்டங்கள் மனம் வசீகரிப்பது உண்மைதான்.

   Delete
 4. அதிகமாக ரஸித்தவற்றில் ஒரு சில வரிகள் .... உதாரணமாக:-
  ====================================================================

  **பூனைகள் முந்தைய இரவில் கொல்லைப்புற கண்ணாடிக்கதவை முகர்ந்து *மனிதவாடையை அறிந்து சென்றுள்ளன* என்பதை முற்றத்தில் சேறுபடிந்த புள்ளிப்பாதச் சுவடுகள் தெரிவிக்கின்றன.**

  ”மனித வாடையை அறிந்து சென்றன” :)))))

  **‘நமக்குப் பிரச்சனையில்லை.. முதுமையில் கம்பூன்றி நடந்தே போய் காப்பகம் சேர்ந்துவிடலாம், அலைச்சல் மிச்சம்’ என்கிறார் கணவர்.. :)))**

  இத்தனை வியாபகங்களிலும் இந்த நகைச்சுவை மிகவும் இரசிக்கும்படியாக அமைந்துள்ளன. :)

  ReplyDelete
  Replies
  1. ரசித்த இடங்களை மேற்கோளிட்டுப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கோபு சார். :)))

   Delete
 5. தினமும் சுவையான காஃபி டே! உங்களைச் சுற்றி ஒரு பசுமையான உலகம். வாழ்த்துகள்! சொந்த வீடு ஒன்றை கட்டியவுடன் ஏற்படும் சந்தோஷத்தை சொல்லவும் வேண்டுமோ? அந்த ஒரு கணத்தில் காண்ட்ராக்டர், மேஸ்திரி, வேலையாட்கள் செய்த தவறுகளால் ஏற்பட்டு இருந்த எல்லா வருத்தமும் கோபமும் போய் விடும்.

  (தங்களது இந்த கட்டுரையை ஃபேஸ் புக்கிலும் படித்து, நான் பின்னூட்டம் ஒன்றினையும் எழுதியதாக நினைவு)

  ReplyDelete
  Replies
  1. ஃபேஸ்புக்கிலும் வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். இங்கும் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி ஐயா.

   ஈன்றபின் சிசுவின் முகம்பார்த்து வலிமறக்கும் தாயின் அகமலர்ச்சி போலவே வீடு உருவான பின் வீட்டுக்காய் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய் மகிழ்ச்சி மட்டுமே எஞ்சிநிற்கிறது.

   Delete
 6. எலி வளையானாலும் தனிவளை வேண்டும் என்பார்கள். நமக்கே நமக்கான வீட்டில் முதன்முதல் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியான தருணங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இனி வாடகை என்றபெயரில் கப்பம் கட்ட வேண்டியதில்லை; சோதனைக்கு வரும் நாட்களில் பயந்து பயந்து சுத்தம் பண்ண வேண்டியதில்லை. சுற்றுப்புறம் பற்றிய வர்ணனைகள் அழகு! படங்களும் மிக அழகு! புது இல்ல அனுபவம் இனிமையாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி! இனிமை என்றும் தொடர வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா. உங்களது அடுத்த வெளிநாட்டுப் பயணம் ஆஸ்திரேலியாவாக இருக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன். :)))

   Delete
 7. எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து தளும்பட்டும் .புதுமனை பொலிவுற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த அன்பும் நன்றியும் உமா..

   Delete

 8. அருமையான, சுவை நிறைந்த பதிவு

  ReplyDelete
 9. முதலில் வாழ்த்துகள்! அதுவும் இப்படியொரு இனிமையான சங்கீதமான இல்லம்!!! உங்கள் வர்ணனை அற்புதம்!!!

  கீதா: இனிய சங்கீதம் ஒலிக்கட்டும் தங்களுடைய இனிய புது வீட்டில்! வாழ்த்துகள் தோழி! ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து எழுதுயுள்ளீர்கள். நானும் இப்படித்தான் ஒவ்வொன்றையும் ரசித்து, புகைப்படம் எடுத்து என்று...உங்கள் இனிய இல்லத்தைச் சுற்றி இத்தனை இயற்கை இருக்க அதன் வர்ணனைகள் சொல்லுவது பல கதைகளை!! அருமை!
  இங்கள் புகைப்படங்கள் அழகோ அழகு! அதிலேயே உங்கள் ரசனை தெரிகிறது!!! . மிக மிக ரசித்தோம் பதிவையும் புகைப்படங்களையும். அதுவும் அந்தத் தண்ணீர் திவலைகள் எழுப்பும் வடிவம்!!!!ஆஹா!!!வாழ்த்துகள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி துளசி சார் & கீதா. என்ன ரசனையான பின்னூட்டம்.. ஒத்த ரசனை கண்டு மகிழ்ச்சி பரவுகிறது. மீண்டும் நன்றி தோழி.

   Delete
 10. கீதா,

  சொந்த வீட்டுடனான உங்கள் சந்தோஷ வர்ணனையை நானும் ரசித்தேன், முக்கியமாக அடிக்கடி வந்து அசைபோட வைக்கும் முதியோர் இல்லம் & வீட்டுப்பரிசோதனை :)

  இனி உங்கள் வீட்டு புது விருந்தாளிகள் இங்கே நிறைய உலா வருவார்கள் என எதிர்பார்க்கலாம் ! படங்கள் அனைத்தும் அழகாய் உள்ளன !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் நன்றி சித்ரா. விருந்தாளிகளின் உலா விரைவிலேயே.. :)))

   Delete
 11. அடடா.... கலைக்கண்கள்.....

  கலைக்கண்களுக்கு வாய்த்த இல்லம் சங்கீதமாய் இருப்பதில் வியப்பென்ன என் தோழி?

  வாழ்த்துப் பூக்கள் சொரிந்து மகிழ்கிறேன் பேரன்போடு...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துப் பூக்களை நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு பெற்றுக்கொண்டேன். நன்றி தோழி.

   Delete
 12. மனம் நிறைந்த வாழ்த்துகள். புதிய வீடு - ரசனையுடன் சொல்லிய விஷயங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தந்தது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி வெங்கட்.

   Delete
 13. கவிதை கைவரும் எழுத்து - வரம்.

  வீடு பேறென்பது எவ்விடத்தும் இனிதானதுதான் . :)

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வீடுபேறு.. ஆஹா.. என்னவொரு அழகான சொல்லாட்சி.. நன்றி சகோ.

   Delete
 14. கவிதையாய் சொல்லிக் கொண்டே போகிறீர்கள். கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றன தங்கள் எழுத்துக்கள்.
  தாங்கள் அனுபவித்த அந்த இனிய சூழலை எங்கள் கண்களுக்கும் இதயத்துக்கும் கடத்துவதில் பெருவெற்றி தங்களுக்கு.
  நன்றி

  ReplyDelete
 15. கவிதையாய் சொல்லிக் கொண்டே போகிறீர்கள். கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றன தங்கள் எழுத்துக்கள்.
  தாங்கள் அனுபவித்த அந்த இனிய சூழலை எங்கள் கண்களுக்கும் இதயத்துக்கும் கடத்துவதில் பெருவெற்றி தங்களுக்கு.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நான் ரசித்ததை அப்படியே எழுத்தில் கொண்டுவர இயலாவிட்டாலும் ஏதோ என் மனத்தின் குதூகலிப்பை எழுத்தில் கொட்டிவிட்டேன். ரசித்தமைக்கு மிகவும் நன்றி சிவகுமாரன்.

   Delete
 16. இணையம் இல்லா வாழ்க்கை அசுவாரசியம் என்று யார் சொன்னது.//
  இதை நானும் அனுபவித்தென் சகோதரி.
  இனிமை... அருமை...

  ReplyDelete
  Replies
  1. அனுபவிக்கும்போதுதானே அந்த இனிமை புரிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.