12 December 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (27)


"வேணி! நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்!"
"என்னடி?"
"வேணி! நீ முன்னாடியெல்லாம் எப்படி இருந்தே? நினைவிருக்கா?"
"வித்யா! நீ என்ன கேக்கவரியோ, நேரடியாக் கேளு! எதுக்கு சுத்தி வளைக்கிறே?"
"சரி, நேரடியாவே கேக்கறேன்! நீ எதுக்கு இப்படி நடந்துக்கறே? நல்ல புருஷன், மணிமணியா ரெண்டு ஆண்குழந்தைங்க! போதுமான வசதி இருக்கு, அப்புறம் ஏன் நீ இப்படி விட்டேத்தியா நடந்துகிட்டு உன் குடும்பத்தை பாழாக்கிறதுமில்லாம, அப்பாவையும் கஷ்டப்படுத்தறே?"
"எல்லார்க்கும் அவங்கவங்க கஷ்டம்தான் தெரியுது, என் கஷ்டம் யார்க்குத் தெரியுது?"
வேணி சட்டென்று குலுங்கி அழுதாள். வித்யா அவள் தோள்தொட்டு அணைத்துக்கொண்டாள்.
"வேணி! என்ன பிரச்சனைன்னாலும் என்கிட்ட சொல்லு! இப்படி உனக்குள்ளேயே வச்சிகிட்டு புழுங்கிறதுல என்ன லாபம்? ம்? சொல்லு!"
"என்னத்தைச் சொல்ல? ஒரு மனைவியை மனுஷியாப் பார்க்காத மனுஷனை எப்படி நல்ல புருஷன்னு சொல்றே?”
"என்ன சொல்றே?"
"வித்யா! அன்னைக்கு விக்னேஷ் அப்பாவைப் பாக்க வந்திருந்தாரில்ல... உன்கிட்ட எவ்வளவு அனுசரணையா, ஆறுதலா நடந்துகிட்டாரு? நான் கூட உன் ஆளு சூப்பர்னு சொன்னதுக்கு நீ கோவிச்சுகிட்டே!"
"ஆமாம்! அதுக்கென்ன?"
"என் புருஷன் ஒருநாள் கூட என்கிட்ட அப்படியொரு அனுசரணை காட்டினதில்லைடி. அவரைப் பொறுத்தவரைக்கும், நான் ஒரு சம்பளமில்லாத வேலைக்காரி! அவ்வளவுதான்! என்னை வெளியிடத்துக்கு அழைச்சிட்டுப் போகப் பிடிக்கலையாம், அவருக்கு அக்கா மாதிரி இருக்கேனாம். அதுக்கு நான் என்ன பண்றது? ரெண்டு சிசேரியன் என் உடம்பை பாழாக்கிட்டு! தொப்பை விழுந்திட்டு! அது என் தப்பா?  சரி, வேணாம், வீட்டுக்குள்ள அன்பா இருக்கலாமில்ல. ஒரு அடிமை மாதிரி நடத்தினா எப்படிதான் ஈடுபாடு வரும்எதைச் செஞ்சாலும் குத்தம் சொல்றது! குழந்தைங்க முன்னாடி என்னைக் கேவலமா பேசுறது! என் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்னு யோசிச்சுப்பாரு!  எத்தனை நாளைக்குதான் பொறுத்துப்போகமுடியும்நானும் பதிலுக்குப் பேச ஆரம்பிச்சிட்டேன்! இந்த விஷயமெல்லாம் அப்பப்போ வந்து சொல்லியிருந்தா உங்களுக்கு  தெரிஞ்சிருக்கும். ஆனா எல்லாத்தையும் என் மனசுக்குள்ள போட்டு புதைச்சிட்டு சும்மா பேருக்கு சந்தோஷமா இருக்கிறமாதிரி நடிச்சிட்டிருந்தேன். திடீர்னு கிளம்பிவரவும் உனக்கும் அப்பாவுக்கும் என்னை நம்பமுடியலை. என் புருஷனை நம்புறீங்க!
"எல்லாம் சரி, வேணி! ஆனா...குழந்தைகளோட எதிர்காலம் என்னாறது?"
"அதைப் பத்தி நான் இனிமே கவலைப்படப்போறதில்லை. என் வழியைப் பாத்துகிட்டு நான் போறேன்! முடிஞ்சா அதுங்களை அவங்க அப்பாகிட்ட கொண்டுபோய் விட்டுடு. அந்தாளும் நிச்சயமா வீட்டில் வச்சு வளர்க்கமாட்டார். அதுக்கு நீயே அதுங்களை ஒரு அநாதை விடுதியில சேர்த்திடு!"
"ச்சீ! ஏன் இப்படியெல்லாம் பேசுறே? அப்பா காதில் விழுந்தா அவ்வளவுதான்சும்மா இரு! எதையாவது விபரீதமா யோசிக்காதே! நான் உன்னையும், உன் குழந்தைகளையும்  எப்பவும் கைவிடமாட்டேன்! என்னை நம்பு!"
வித்யாவுக்கு புதிய கவலை ஒன்று பிறந்தது. நான் என் வழியைப் பார்த்துக்கொண்டு போகிறேன் என்கிறாளே! இவளை என்ன சொல்வது? எப்படி பாதுகாப்பது? நாளெல்லாம் இவள் கூட இருக்கமுடியுமா? ஏதாவது செய்துகொண்டால்....? அப்பாவும் நோயாளி! என்ன செய்வது?
"வேணி!"
"என்னடி?"
"வேணி....தப்பான முடிவெடுத்திடாதே, வேணி! உன்னை நான் இனிமேல் எந்தக் கேள்வியும் கேக்கமாட்டேன்! ப்ளீஸ்!!"
"நான் செத்திடுவேன்னு பயப்படுறியா? நான் சாவமாட்டேன்டீ!"
வேணி உறுதியாகச் சொன்னாள். வித்யா அக்காவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து நிம்மதியாய் உறங்கினாள். விடிந்ததும்தான் தெரிந்தது, வேணியின் வாக்குறுதியின் அர்த்தம்.
வேணி காணாமற் போயிருந்தாள். விளக்கம், கடிதம் எதுவுமில்லை.
"பழிகாரி! எங்கே போய்த்தொலைஞ்சான்னு தெரியலையே!" அப்பா தவித்தார்.
வீடெங்கும் தேடிக்களைத்து, கன்னத்தில் கையூன்றி அமர்ந்தவேளை, எதிர் வீட்டிலிருந்து ஓலம் கேட்டது.
"அடப்பாவி! உன்னயப் படிக்கவச்சு ஆளாக்கினதுக்கு பரிகாரமா பண்ணியிருக்கே? திமிரெடுத்த தீவட்டி! நீ நல்லா இருப்பியா? அவ நல்லாயிருப்பாளா? என் வயித்தெரிச்சல் உன்ன சும்மா விடாதுடா!"
வித்யா வாசலுக்கு ஓடினாள்.
எதிர்வீட்டு வாசலில் சிறு கூட்டம். யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
"நல்ல பையன்! இப்படிச் செய்வான்னு யாருமே எதிர்பாக்கலை. லெட்டர் எழுதிவச்சிட்டு யாரோ ஒரு பொண்ணு கூட ஓடிப்போய்ட்டானாம்! இவனுக்குக் கீழ ரெண்டு தங்கச்சிங்க இருக்கு! அதுங்கதான் பாவம்!"
வித்யாவுக்கு சொரேரென்றது. வாசலுக்கு வந்து விஷயத்தை அறிந்த அப்பா, அந்த நிமிடமே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிய.........இந்தமுறை அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.
***************************************************************
காரியம் முடிந்து அனைவரும் போய்விட்டிருந்தனர். வித்யா துக்கம் தாளாமல் விம்மிக்கொண்டிருந்தாள்.
"வித்யா! அழாதப்பா!"
"விக்கி, அப்பாவை நான் எப்படியெல்லாம் காப்பாத்தி வச்சிருந்தேன், அவளால...... அப்பா....."
"வித்யா, தைரியமா இருப்பா! ஊர் சொல்றதை நீயுமா நம்பறே? உங்கக்கா வீட்டை விட்டுப் போனதும், அந்தப்பையன் போனதும் ஒரு கோ-இன்ஸிடென்ஸா இருக்கலாமில்ல?"
"ஆனா.... எங்கப்பா நம்பிட்டாரே! நம்பி உயிரை விட்டுட்டாரே! அது உண்மையா, பொய்யான்னு இனிமே ஆராய்ஞ்சி என்னாகப்போவுது?"
"சரி, அதுக்காக உங்க அக்காவைத் தேடறதை கைவிடமுடியுமா? போலிஸ்ல சொல்லியிருக்கோம். நாமும் நமக்குத் தெரிஞ்ச வழியில தேடுவோம்!"
"தேவையில்ல விக்கி! அவ ஒரு முடிவோடதான் இருந்திருக்கா. சாக மாட்டேன்னு அன்னைக்கு அவ்வளவு தெளிவா சொன்னாளே! அவ விரும்பிதான் போயிருக்கணும்,!
"சரி, ஆனதை விடு! இனிமே ஆகவேண்டியதைப் பாப்போம்!"
"என்ன பண்றதுன்னு ஒண்ணுமே புரியலை, விக்கி! இந்தத் தெருவே சிரிச்சிப் போச்சு!"
"வீட்டை மாத்திடலாம், வித்யா!"
"எதுக்குப்பா? நான் என்ன தப்பு செஞ்சேன்? நான் வீட்டை மாத்தமாட்டேன்! இங்கேயே இருந்து வாழ்ந்துகாட்டுவேன்!"
"வித்யா! நீ எப்படி இனிமே தனியா....."
"நான் எங்க விக்கி தனியா இருக்கேன்? எனக்குதான் ரெண்டு குழந்தைங்க இருக்காங்களே!"
சிறுவர்கள் இருவரும் கேரம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதிர்ச்சியிலிருந்து அவர்களை ஓரளவு மீட்ட பெருமை விக்னேஷையே சாரும். அவன் தான் அவர்களைத் தேற்றி சகஜநிலைக்கு வரச் செய்தான்.
அம்மாவிடம் வித்யாவைப் பற்றிப் பேசவேண்டும், இனியும் தாமதம் கூடாது என்று விக்னேஷ்  நினைத்தான். வித்யாவிடம் சொல்ல, அவள் சிரித்தாள்.
"விக்கி! புரிஞ்சுதான் பேசறீங்களா? எங்க அக்கா, தான் பெத்த குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு எங்கேயோ போய்த் தொலைஞ்சிட்டா! இந்த சூழ்நிலையில என்னை மருமகளா ஏத்துக்க உங்கம்மா முன்வருவாங்களா? உங்கம்மா ஒரு புரட்சிப்பெண்மணி இல்லைன்னு எனக்குத் தெரியும், விக்கி!"
"வித்யா! உன்னை இப்படியே விட எனக்கு மனசு வரலைப்பா....!"
வித்யா மெளனமாய் அமர்ந்திருந்தாள். விக்னேஷின் தாயார் என்னதான் நல்ல மனநிலையில் இருந்தாலும், ஓடிப்போன ஒருத்தியின் தங்கையை மருமகளாய் ஏற்கும் மனத்துணிவு கொண்டவராய் இருப்பாரா என்பது சந்தேகமே! அப்படியே ஏற்றுக்கொண்டாலும், இந்தக் குழந்தைகளை என்ன செய்வது? அக்கா அவள் பாட்டுக்கு சொல்லிவிட்டாள், அவர்கள் அப்பாவிடம் விடு அல்லது அநாதை விடுதியில் விடு என்று.
அப்பாவின் சாவுக்குச் சொல்லியும்  அத்தான் வரவில்லை. அக்கா வீட்டைவிட்டு வெளியேறியதால் அத்தானுக்கு தலைக்குனிவுண்டாகிவிட்டதாம். அவருக்கு தன் பிள்ளைகள் மேலும் பாசம் இருப்பதாய் தெரியவில்லை. அவரும் கையை விரித்துவிட்டால்....? பெற்ற தாயே கவலைப்படாதபோது இவர் மட்டும் என்ன கவலைப்படப்போகிறார்? வழக்குத் தொடுக்கலாம். ஆனால் யார் அலைவது? அப்பாவும்  இல்லை. இவளும் அலுவலகம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். 
வித்யா குழம்பிக்கிடந்தாள். விக்னேஷைப் பார்த்தாலும் பரிதாபமாய் இருந்தது.இத்தனை நாள் கழித்து இன்றுதான் இவனுக்குத் துணிவு வந்திருக்கிறது. ஆனால்.... அதை மறுக்கவேண்டிய நிலையில் நான்!' வித்யா கலங்கினாள்.
"விக்கி! நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா?"
"என்னப்பா?"
"இனிமே  காத்திருக்காதீங்க, விக்கி! உங்கம்மா ஆசைப்படி வேற பெண்ணைப்பாத்து..."
இடையிலேயே விக்னேஷ் வெட்டினான்.
"வித்யா... அன்னைக்கு நீ சொன்னதையே நானும் சொல்றேன்! முயற்சி செய்யாமலேயே முடியாதுன்னு நாமே முடிவு செய்யக்கூடாது! நீ தைரியமா இரு! இனி இந்தக் குழந்தைகளும் என் பொறுப்பு!"
"விக்கி!"
வித்யா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள். இத்தனைப் பெரியமனம் படைத்தவன் எனக்குக் கணவனாய் வருவது எத்தனைப் பெருமை! விக்கியை நான் அடைந்தே தீரவேண்டும். இனி அதற்காக மனம் தளராமல் போராடுவேன்!"
வித்யா விக்னேஷை தன் மென் கரங்களால் அணைத்துக்கொண்டாள். விக்னேஷ் அவளைத் தேற்றிக் கண்ணீரைத் துடைத்தான்.
 (தொடரும்...)
 ######################################
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
மு.வ உரை:
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.
--------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

17 comments:

  1. கதை சுவாரஸ்யமாகப் போகிறது என்றாலும்
    நிகழ்வுகள் மனத்தை பாதித்துப் போவதை
    தவிர்க்க இயலவில்லை
    காரணம் நிகழ்வுகள் இயல்பாக இருப்பதுவும்
    நீங்கள் அழகாகச் சொல்லிச் செல்லும் விதமும்தான்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. ஃஃஃஃ"ஆனா.... எங்கப்பா நம்பிட்டாரே! நம்பி உயிரை விட்டுட்டாரே! அது உண்மையா, பொய்யான்னு இனிமே ஆராய்ஞ்சி என்னாகப்போவுது?"
    ஃஃஃஃ

    உறவின் உணர்வை விதைக்கும் ஒரு ஆழமான பகிர்வு...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

    ReplyDelete
  3. போன அத்தியாயத்தில சீக்கிரம் முடிஞ்சுடுமோன்னு தோணுச்சு. இப்ப வந்த ட்விஸ்டுல, ம்ம்ம்... இன்னும் சிக்கல் கூடுது போலவே!!

    ReplyDelete
  4. நன்றாக கதை சொல்ல வருகிறது. இன்னும் செறிவாக்குங்கள் கீதா. சுருக்கென்று உரையாடல் கதையின் பொருண்மையைச் சுடரச்செய்யும்.

    ReplyDelete
  5. அருமையாக நகர்கிறது கதை !

    ReplyDelete
  6. மனக்குமுறலை நடக்கும் நடந்த சம்பவங்களை
    கோர்வையாய் எழுதி இருக்கீங்க சகோதரி..
    ஒரு உயிர் போனவுடன் ..
    அவரை பற்றிய நினைவுகளுடன் உறவுகள் அழுவதை அப்படியே
    படம் போட்டு காட்டியிருக்கீங்க.

    சில சமயங்களில் இதுபோல மனம் பொறுக்க முடியாமல்
    உயிர் பிரிந்து விடுகையில், அதற்கு காரணம் என்று நாம் பாவித்திருக்கும்
    ஒருவரின் மேல் வரும் கோபத்தை ஆதங்கமாய் எப்படி தெரிவிப்போமோ
    அதை அப்படியே கொஞ்சமும் பிசகாமல் சொல்லியிருகீங்க..

    தொடருங்கள்
    அருமை.. அருமை..

    ReplyDelete
  7. தொடருங்கள். எழுத்து நடை, அழகாய் சொல்லி செல்கிறது .மிகவும் அருமை

    ReplyDelete
  8. அருமை! தொடருங்கள் சகோ!
    பகிர்விற்கு நன்றி!
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete
  9. மிகவும் அருமை....எழுத்து நடை....

    please read my blog www.rishvan.com and join as follower of my blog.

    ReplyDelete
  10. மிக அற்புதமான கதை
    முதன் முதலாக நான் அதுவும் இணையத்தில் கதை படித்தேன்
    எதிர் வீட்டு பையனோடு ஓடவிட்டது வித்தியாசமான ட்விஸ்ட்
    சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் அடர்வான வரிகளை
    நினைவுறுத்தும் வகையில் பிற்பகுதியும் அழகு , தொடருங்கள்...
    -இயற்கைசிவம், வெயில்நதி வலைப்பூ

    ReplyDelete
  11. ரொம்ப லேட்டா வந்துட்டேன் போலருக்கு. சுவாரஸ்யமாகச் செல்கிறது கதை. சின்னச் சின்ன வசனங்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  12. இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாகிறது.முடிவைத் தெரிந்துகொள்ள மிக ஆவலாகிவிட்டது.கதை சொல்லும் எழுத்து நடையும் அருமை.

    ReplyDelete
  13. சம்பவப் பின்னல்களில் சிக்கித் தவிக்கிறது மனசு

    ReplyDelete
  14. @ Ramani,
    முதல் பின்னூட்டமிட்டுக் கருத்துரைத்ததற்கும் தமிழ்மண வாக்குக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    @ மதிசுதா
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மதிசுதா.

    @ ஹூஸைனம்மா,
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஹூஸைனம்மா, இன்னும் ஐந்தாறு பகுதிகளில் முடிந்துவிடும்.

    ReplyDelete
  15. @ ஹரணி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரணி சார். உங்கள் கருத்தை மனத்தில் பதித்துக்கொள்கிறேன்.

    @ஹேமா,
    தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

    @ மகேந்திரன்,
    உங்கள் விமர்சனம் அளவிலா மகிழ்வைத் தருகிறது. வருகைக்கும் அழுத்தமான விமர்சனத்துக்கும் மிக்க நன்றி.

    @ angelin,
    உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  16. @திண்டுக்கல் தனபாலன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

    @ Rishvan,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷ்வன். உங்கள் தளத்துக்கு விரைவில் வருகிறேன்.

    @இயற்கைசிவம்,
    வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி இயற்கைசிவம்.

    ReplyDelete
  17. @கணேஷ்,
    ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி கணேஷ் சார்.

    @ thirumathi bs Sridhar,
    உங்கள் ஆர்வம் எனக்கு அளவிலா மகிழ்வைத் தருகிறது ஆச்சி. தொடர்ந்து வருவதற்கு மிகவும் நன்றி.

    @ரிஷபன்,
    அழகானப் பின்னூட்டத்துக்கு நன்றி ரிஷபன் சார்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.