28 October 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (23)

"என்னம்மா....எல்லாம் ரொம்ப எல்லைமீறிப்போகுது?" 
நாகலட்சுமியின் குரலே மாறியிருந்தது.
"எ...என்....என்னம்மா சொல்றீங்க?"
சுந்தரி புரியாமல் விழித்தாள். சுபா நிலைமை புரியாமல் விக்னேஷ் விட்டுப்போனதற்காக வீறிட்டுக்கொண்டிருந்தாள். அழும் குழந்தையை அமைதிப்படுத்துவதா? ஆங்காரமாய் நிற்கும் அம்மாவை ஆசுவாசப்படுத்துவதா? தவித்தபடி சுந்தரி நின்றிருந்தாள்.
"இங்க பார்! நாங்க இங்க கெளரவமா வாழ்ந்துகிட்டிருக்கோம். தயவுசெஞ்சு அதைக் கெடுத்திடாதே!"
நாகலட்சுமி சொல்லவும் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் சுந்தரி விழித்தாள். அவரை மேற்கொண்டு பேசவிடாமல் சுபாவின் அழுகை அதிகமாக, அவர் விருட்டென்று தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
சுந்தரி பதைபதைப்புடன் அதையும், இதையும் காட்டி குழந்தையின் அமளியை அடக்கினாள். அவள் நிலைக்கு வந்ததும், பாலைக் கொடுத்து தொட்டிலில் இட்டு தூங்கச் செய்துவிட்டுதிறந்திருந்த அறைவாசலில் நின்று, பதைக்கும் மனத்துடன் அம்மா!" என்றாள்.
"நீ செய்யறது உனக்கே நல்லாயிருக்கா? தெருவில என்ன கொஞ்சலும், குலாவலும்? அவன் கல்யாணம் ஆகவேண்டிய பையன். அது உனக்கு ஞாபகமிருக்கா? என்னதான் நண்பனோட மனைவின்னு சொன்னாலும் பாக்கிறவங்க நம்ப வேண்டாமா? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. புரியுதா?"
விஷம் தோய்த்த வார்த்தைகள் புறப்பட்டு வந்தன, அவர் வாயிலிருந்து.
சுந்தரிக்கு அவர் சொல்வதன் முழுப்பொருளும் புரிந்தது. அவள் எதிர்பார்த்ததுதான்.ஒரு தாய்க்கு இருக்கவேண்டிய நியாயமான கவலைதான் அது என்று நினைத்துக்கொண்டாள். எவ்வளவுதான் தான் எச்சரிக்கையாய் இருந்தாலும், சுபாக்குட்டி அதைக் கெடுத்துவிடுகிறாளே!
நாகலட்சுமி என்ன நினைக்கிறார் என்பது புரியாவிடினும், அவரது பயம் புரிந்தது. பயத்துக்கான காரணமும் புரிந்தது. அவரது அர்த்தமற்ற பயத்தைப் போக்குவதே தன் முதல் வேலை என்று அறிந்தாள்.
"அம்மா! நீங்க வயசிலயும், அனுபவத்திலயும் பெரியவங்க, உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியணும்னு இல்ல, விக்னேஷ் அண்ணனை மாதிரி ஒரு புள்ளயப் பெத்ததுக்கு நீங்க ரொம்ப பெருமப்படணும். அவரை நான் என் அண்ணனாதான் நினைக்கிறேன். அவரும் என்னை தங்கச்சியாதான் நினைக்கிறாரு. இதைத் தவிர எங்க ரெண்டுபேர் மனசிலும் வேற எந்த எண்ணமும் இல்ல. என்னை நம்புங்கம்மா!"
நாகலட்சுமிக்கு சுந்தரியின்பால் நம்பிக்கை எழவில்லை. ஆளை அசத்தும் ஆணழகனான பிரபுவின் மனதையே கவர்ந்தவள், அவனுக்கும் ஒருபடி கீழே இருக்கும் தன் மகனின் மனதில் இடம்பிடிக்க எத்தனை நாளாகப்போகிறது. கூடவே குழந்தை வேறு. இத்தனைக் காலமாய் தாயின் பாசத்தைத் தவிர வேறு உறவை அறியாதவனுக்கு பிரபு நண்பனாய் வாய்த்தான்.
பிரபுவுக்கும் அவனுக்கும் இடையில் இருந்த நட்பு, பல சமயங்களில் நாகலட்சுமியை விக்னேஷிடமிருந்து விலக்கிவைத்திருக்கிறது. இப்போது, குழந்தையின் கள்ளமற்ற அன்பில் திளைத்துக்கிடக்கிறான். இதை இப்படியே வளரச்செய்தால் குழந்தையைக் காரணம் காட்டி சுந்தரியை நிரந்தரமாய் இங்கேயே தங்கவைத்துவிடுவான். அம்மாவிடம் செய்த சத்தியத்தை மீறமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே, திருமணம் செய்துகொள்ளாமல் இவளுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டால்.....
"இங்கே பார்! நீ என்ன சொன்னாலும் சரி! என் மகன் விஷயத்தில் நான் கடுமையாய்தான் நடந்துக்குவேன். நீ இப்படி அவனுக்கு முன்னால நடமாடுறது எனக்குப் பிடிக்கல. சொல்லப்போனா....நீ இந்த வீட்டுக்கு வந்ததே பிடிக்கலை. அவன் இப்பவெல்லாம் என் பேச்சையே கேக்கறதில்ல. ஒப்புக்கு என்கிட்ட அனுமதி கேட்டான். நானும் என் மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்காக உன்னை வரச்சொன்னேன். உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணணும்னு சொல்லிட்டிருக்கான். அவனுக்கு வேலை வைக்காம நீயா தேடிகிட்டாலும் எனக்கு சந்தோஷம்தான். தயவுசெஞ்சி அவனை விட்டுடு. உனக்கு புண்ணியமாப் போகட்டும்."
நாகலட்சுமிக்கென சுந்தரி தன் உள்ளத்தில் உருவாக்கி வைத்திருந்த கோயிலை அவரது கடும் வார்த்தைகளே கடப்பாரை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கின.ச்சே! இவரும் ஒரு தாயா? தன்னை நம்பவேண்டாம், தன் மகனை நம்பலாம் அல்லவா? விக்னேஷ் அண்ணன் இவர்மேல் எத்தனை மரியாதையும், மதிப்பும், பாசமும் வைத்திருக்கிறார்! அவருக்குத் தெரிந்தால் என்னாகும்? தன் தாயின் போக்கு அவருக்குத் தெரிந்திருக்கலாம், அதனால்தான் இங்கு வருவதற்கு முன் என்னிடம் அப்படி யொரு எச்சரிக்கை செய்தாரோ?
சுந்தரி தன் நிலையை எண்ணி வேதனையும், விரக்தியும் அடைந்தாள். தனக்கு வேறொரு கல்யாணம் செய்யப்போவதாய் அண்ணன் சொன்னாராமே! உண்மைதானா? அது எப்படி என் சம்மதமில்லாமல் முடியும்? என் கணவர்தானே என்னை விட்டுப் பிரிந்தார்? நான் அவரை விட்டு எப்போது பிரிந்தேன்? என்னை இன்றும் உயிருடன் வைத்திருப்பவை அவரது நினைவுகளும், இந்தக் குழந்தையும்தானே! என் கனவெல்லாம் இந்தக் குழந்தையை நல்லமுறையில் வளர்த்து நாலுபேர் போற்ற ஆளாக்குவதுதானே தவிர இன்னுமொரு கல்யாணம் செய்துகொண்டு சுகப்படுவதிலா இருக்கிறது?
அப்படியே என் பாதுகாப்புக்காகவும், குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் செய்வதாக இருந்தாலும் அது எனக்கு எப்படி இன்பத்தைத் தரும்? என் குற்ற உணர்வே என்னைக் கொன்றுவிடாதா? இப்படியொரு எண்ணம் அண்ணனுக்கு இருப்பது எனக்குத் தெரியாதே! அவரிடம் இதுபற்றிக் கட்டாயமாக பேசவேண்டும். மனதுக்குள் முடிவெடுத்தவளுக்கு அப்போதுதான் நிகழ்காலம் நினைவுக்கு வந்தது.
தன் பிரச்சனை கிடக்கட்டும், முதலில் அண்ணனுக்குப் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி பித்துப்பிடித்தவர் மாதிரி இந்தம்மா பேசுவதைக் கேட்டால் எனக்கே நெஞ்சம் படபடக்கிறதே! விக்னேஷ் அண்ணன் கேட்கநேர்ந்தால் எத்தனை துயரப்படுவார்? அவர் காதுகளில் இதுபோன்ற நாராசமான வார்த்தைகள், அதுவும் அவர் தெய்வமாய் மதிக்கும் தாயின் வாயிலிருந்து வந்து விழவே கூடாது.
தகிக்கும் நெருப்பை அணைக்கும் குளிர்நீர் போல் தன்னால் இவரது கொதிப்பை அடக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? ஏன் முடியாது? அன்பு வார்த்தைகளைப் போல ஒரு குளிர்நீர் உண்டா, எதிராளியின் கொந்தளிக்கும் கோபத்தை கட்டுப்படுத்த?
சுந்தரி தன்னைப் பற்றிய உணர்வுகளைத் துறந்தாள். தன் எதிரில் நிற்கும் நாகலட்சுமியின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுக்க விழைந்தாள். மிகவும் தண்மையாய் அவரிடம் பேசத்தொடங்கினாள்.
"அம்மா! நான் உங்களை அம்மான்னு கூப்புடறது அப்படியே சத்தியமான வார்த்தை. அதை நீங்க முழுசா நம்பலாம். நீங்க எந்தக்கடவுள்மேல சத்தியம் செய்யச்சொன்னாலும் செய்யறேன். உங்களுக்கும், அண்ணனுக்கும் நடுவில குழப்பம் பண்ண வந்தவளா என்ன நினைக்காதீங்கம்மா! எனக்கு அடைக்கலம் குடுத்த உங்க மனசு நோகுறமாதிரி நான் என்னைக்கும் நடந்துக்கமாட்டேன், இது சத்தியம்!"
நாகலட்சுமிக்கு சத்தியத்தின்மேலிருக்கும் நம்பிக்கையை அறிந்த சுந்தரி, தானும் அவர் வழியிலேயே சென்று அவரை தன் வழிக்குக் கொண்டுவர விரும்பினாள். அதில் ஓரளவு பலனும் கண்டாள்.
குழம்பிக்கிடந்த நாகலட்சுமிக்கு சுந்தரியின் பேச்சு ஆறுதலைத் தந்தது. கொஞ்சநஞ்சமிருந்த சந்தேகத்தையும் சுந்தரி செய்த சத்தியம் தகர்த்தது. நாகலட்சுமி அமைதியாய் இருப்பதன்மூலம், தன் பேச்சுக்கு செவிமடுக்கிறார் என்பது புரிய, சுந்தரி மேலும் தொடர்ந்தாள்.
"அம்மா! நீங்க என்னை உங்க மகளா நினைக்கவேண்டாம். வேலைக்காரியாவே நினைச்சுக்கங்க! நான் இங்க இருக்கிறவரைக்கும் உங்களுக்கு உழைச்சு, என் நன்றிக்கடன தீர்த்துக்கறேன். அண்ணன் மேல அநாவசியமா சந்தேகப்படாதீங்கம்மா, அவரு மாதிரியானவங்க இல்லைனா....என் மாதிரி அநாதைகளோட கதி என்னவாகும்னு நினைச்சுப்பாருங்கம்மா.....அண்ணன் ஏழேழு தலைமுறைக்கும் புண்ணியம் சேத்துகிட்டாரு..."
சுந்தரி நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். எப்படியாவது நாகலட்சுமியின் மனநிலையை மாற்றிவிடவேண்டும் என்பதைக் குறியாய்க் கொண்டு பேசினாலும், உண்மையிலேயே விக்னேஷ்மீது அவள் வைத்திருந்த நன்மதிப்பை வெளிப்படுத்த இதைவிட சந்தர்ப்பம் வாய்க்காது என்பதுபோல் பேசினாள்.
நாகலட்சுமியின் மனதில் இருந்த இறுக்கம் சற்றே தளரத் தொடங்கியது. சுந்தரியின் தெளிவான பேச்சு அவரை அசரவைத்தது. தான் மிரட்டினால் பயந்துகொண்டு பணிந்துநடப்பாள் என்று எதிர்பார்த்ததுபோக, துணிவுடன் அவருக்கே அவள் எடுத்துச் சொல்கிறாள். இதற்குமேலும் அவளை நம்பாததுபோல் நடிப்பது சிரமம் என்று உணர்ந்தார்.
இத்தனைத் துயரத்திலும், அவள் தெளிந்த மனநிலையில் இருப்பதோடு, அடுத்தவரைத் தெளிவிப்பதிலும் கெட்டிக்காரியாய் விளங்குகிறாள். இவளை முழுமையாய் நம்பலாம்.
நாகலட்சுமி இளகிய குரலில் பேசத்தொடங்கினார்.
"சுந்தரி! நான் கொடுமைக்காரி இல்லைம்மா. எனக்கு இந்த உலகத்தில என் மகனை விட்டால் வேற யாருமில்ல. அவனுக்கொரு கல்யாணம் செய்துபார்க்கக் கூட பயப்படுறேன்னா....எந்த அளவுக்கு அவன்மேல பாசம் வச்சிருப்பேன்னு நினைச்சுப்பாரு. நான் சாகுறவரைக்கும் என் மகனோட நிழலிலேயே வாழணும்னு ஆசைப்படறேன். அது தப்பா? சொல்லும்மா!"
சுந்தரிக்கு அவரின் நிலை பரிதாபத்தையே தந்தது. முழுமையான சுயநலம் அவர்பேச்சில் பிரதிபலித்தது. மகனுக்குத் திருமணம் செய்து மருமகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் வாழும் இன்பத்தைத் தொலைத்துவிட்டு மகன் தனிமரமாய் வாழ்வதில் என்ன இன்பத்தைக் காண்பார்? இவர் மனதை கொஞ்சம் கொஞ்சமாய்தான் மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
"அம்மா! நீங்க சொல்றதில் எந்தத் தப்பும் இல்ல...அதனால்தான் சொல்றேன், உங்க ஆசைக்கு குறுக்கவந்தவளா என்னை நினைக்காதீங்க. குழந்தைக்கு புரியல. அதனால் கொஞ்சம் அதிகமா உரிமை எடுத்துக்கறா. விவரம் தெரிஞ்சதும் விலகிடுவா. நானும் குழந்தையும் தற்காலிகமாத் தங்கவந்தவங்கதான். நிரந்தரமாத் தங்க வேற ஒருத்தி வருவா.உங்களுக்கும் அண்ணனுக்கும் பிடிச்சமாதிரி ஒரு தங்கமான பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வருவா...அதுவரைக்கும் நீங்க எதைப்பத்தியும் கவலப்படாம நிம்மதியா இருங்க!"
நாகலட்சுமிக்கு இதமாய் இதயத்தை யாரோ வருடுவதுபோல் இருந்தது. இப்படியான ஆறுதல் மொழிகளை முன்பெல்லாம் விக்னேஷ்தான் சொல்லிக்கொண்டிருந்தான். சமீபகாலமாய் அவனும் தன்னைவிட்டு விலகிப்போவதாய்த் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதன்பின் இப்போது சுந்தரியின் அன்பான பேச்சு ஆறுதலைத் தந்தது.
"சுந்தரி! என்னத் தவறா நினைச்சுக்காதேம்மா! நான் பேசினது எதுவும் விக்னேஷுக்கு  தெரியவேணாம்மா!"
அவர் கெஞ்சுவதுபோல் கேட்க, சுந்தரி ஆதரவாய் அவர் கைகளைப் பற்றினாள்.
"அம்மா! நீங்க அநாவசியமா கவலப்பட்டுதான் உங்க உடம்பக் கெடுத்துக்கறீங்க!"
நாகலட்சுமியின் முகத்தில் முதன்முறையாக புன்னகை அரும்பிற்று. பிரபுவுக்கு சுந்தரிமேல் ஈர்ப்பு ஏற்பட்டதன் காரணம் நாகலட்சுமிக்கு இப்போது புரிந்தது. நல்ல பெண்தான், சந்தேகமே இல்லை.
தொடரும்...
*******************************************************************
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் 
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

மு. உரை:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
---------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

18 comments:

  1. நல்ல கதை.. அன்புதான் இந்த உலகத்தில் முக்கியம். வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. சுந்த்ரியின் முதிர்ச்சி பிரமிக்கவைக்கிறது
    புயலுக்குப்பின் வரும் அமைதி போல
    மிகப் பெரும் இழப்புக்குப் பின் வரும்
    நிதானம் இப்படித்தான் இருக்கும்
    கதாபாத்திரங்களை மிக நகர்த்திப் போகிறீர்கள்
    தாங்கள் சதுரங்கம் மிக அழகாக ஆடுவீர்கள் என
    நினைக்கிறேன் இல்லையெனில் இத்தனை துல்லியமாக
    கதாபாத்திரங்களை நகர்த்துதல் சிரமமே
    அருமையாகப் போகிறது கதை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  3. ஒருபக்கம் தாயின் அன்பு மிகுதியாகத் தெரிந்தாலும், மகன் வாழவேண்டிய காலம் தவறிக்கொண்டுபோவதை நினைக்கத் தவறும் அம்மாவை எனக்குப் பிடிக்கவில்லை !

    ReplyDelete
  4. ஒருவராவது தெளிவாக இருந்தால்தான் இருவர் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான சூழ்நிலையினை சிறப்பாக கையாள முடியும். கதை சிறப்பாக செல்கிறது.

    ReplyDelete
  5. துயரத்தில் பக்குவப்பட்ட சுந்தரியின் பேச்சு நாகலட்சுமியை இளகவைத்ததில் ஐயமில்லை.

    கதையை, மிக அருமையாக நகர்த்திச்செல்லும் பாங்கு பாராட்டுக்குரியது கீதா.

    ReplyDelete
  6. அருமையான தொடர்

    ReplyDelete
  7. அருமையான கதை

    ReplyDelete
  8. //நான் சாகுறவரைக்கும் என் மகனோட நிழலிலேயே வாழணும்னு ஆசைப்படறேன்//

    கீதா,

    அம்மாக்(பெண்)களின் இந்த எண்ணம் தான், குடும்பத்தில் ”மாமியார் மருமகள்” சண்டைக்கான முதல் காரணமே.

    நாயகி சுந்தரி... நல்லவள் தான்! கதை மிகவும் இயல்பாக இருக்கிறது.

    ReplyDelete
  9. @விச்சு

    முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. @ Ramani

    தொடர்ந்து தரும் பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி சார். எனக்கு சதுரங்கத்தில் அத்தனைப் பரிச்சயம் இல்லை. இந்தத் தொடர்கதை என் முதல் தொடர்கதை முயற்சி. உங்கள் கருத்துக்கள் எனக்கு இன்னும் ஊக்கமளிக்கின்றன. வாழ்த்துக்கும் வாக்குக்கும் மனமார்ந்த நன்றி சார்.

    ReplyDelete
  11. @ ஹேமா

    உண்மைதான் ஹேமா. நல்ல தாய்க்கான அடையாளமே தான் துன்புற்றாலும் தன் மக்களை இன்புறவைப்பதுதானே! கருத்துக்கு நன்றி ஹேமா .

    ReplyDelete
  12. @ சாகம்பரி

    தொடர்ந்து வந்து கருத்துப் பதிவிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  13. @ சுந்தரா

    வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தரா. தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  14. @ "என் ராஜபாட்டை"- ராஜா

    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி. உங்கள் ராஜபாட்டை வசீகரிக்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  15. @ சத்ரியன்,

    சரியாச் சொன்னீங்க. அதீத அன்பின் ஆளுமையால் உண்டாகும் பிணக்குகள்தான் பல குடும்பங்களைப் பிரித்திருக்கின்றன. யாராவது ஒருவர் மனம் மாறினாலும் போதும், பிரச்சனை பாதியாகிவிடும். கருத்திட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  16. அருமையாக நடத்திச் செல்லும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது.
    வார்த்தைகளின் லாவண்யம் பிரமிக்க வைக்கிறது.

    அன்பு எப்படியெல்லாம் எல்லோரையும் ஆட்டி வைக்கிறது.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. சுந்தரியின் பொறுமையும்,அனுகுமுறையும் கண்டு வியக்கிறேன்.அந்த அம்மா மனம் இளகியதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. @ வல்லிசிம்ஹன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @ thirumathi bs sridhar

    ஆர்வத்துடன் தொடர்ந்துவருவதற்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.