11 October 2011

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்? (20)மூன்று மாதத்தில் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள், சுபா. சுந்தரியின் வற்புறுத்தலின் பேரில் வித்யா தான் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாள். சுந்தரியிலிருந்தும் பிரபுவின் முழுப்பெயரான பிரபாகரிலிருந்தும் இரு எழுத்துகளைத் தொகுத்து சுபா என்று பெயரிட்டாள். சுந்தரிக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

சுபா இப்போது விக்னேஷையும், வித்யாவையும் நன்றாக அடையாளம் கண்டுகொண்டு சிரிக்கிறாள். தூக்கச் சொல்லி உடலை நெம்பிக் கொடுக்கிறாள். தூக்கவில்லை என்றால் பொய்யாய் அழுது ஏமாற்றுகிறாள்.

சுபாவின் அத்தனைச் செயல்களும் விக்னேஷ், வித்யாவுக்கு அத்துப்படி. சுந்தரியும் தன் இறந்தகால துயரங்களையும் எதிர்காலக் கவலைகளையும்  ஓரங்கட்டி வைத்துவிட்டு நிகழ்கால இன்பத்தில் திளைத்திருந்தாள்.

அப்போதுதான் கோமதியம்மா அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவித்தார். அவருடைய இரண்டாவது மருமகளுக்கு கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்கவிருப்பதாகவும், உதவிக்கு எவருமில்லாததால் கோமதியம்மாவையும், அவர் கணவரையும் உடனே அமெரிக்கா கிளம்பிவரச் சொல்லி அதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் அவர் மகன் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

இன்னும் பத்து நாட்களில் புறப்படவேண்டியிருக்கும் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார். ஆறுமாதகால விசாவில் செல்வதாகவும், அதுவரை சுந்தரி, இந்த வீட்டில் குழந்தையுடன் தனியாய் இருப்பது உசிதமில்லை என்றும் கவலை தெரிவித்தார்.

ஒரு இளம் விதவைப் பெண் கைக்குழந்தையுடன் தனியே வாழ்வதென்பது கயிற்றின்மேல் நடப்பதற்குச் சமம் என்று அனைவருமே அறிந்திருந்தபோதும், அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தனர். அப்போது, விக்னேஷ் இதுபற்றி அம்மாவிடம் பேசி ஒரு முடிவெடுப்பதாய்க் கூறினான். அவன் குரலில் தெரிந்த உறுதி கண்டு வித்யா நம்பிக்கையும், மகிழ்வும் ஒருசேரப் பெற்றாள்."விக்னேஷ்! அந்த மாத்திரை பாட்டிலை கொஞ்சம் எடுத்துக் கொடுப்பா!"

"இந்தாங்கம்மா!"

"ஏன்ப்பா, என்னவோ போலயிருக்கே?"

"சுந்தரியை நினைச்சுகிட்டேன், அம்மா!"

"ஏன்? அவளுக்கென்ன?

"இன்னும் பத்து நாளில வீட்டுக்காரம்மாவும், ஐயாவும், அமெரிக்கா போறாங்களாம், அங்க அவங்க மருமகளுக்கு உடம்பு முடியலையாம். உதவிக்குப் போறாங்க! திரும்பி வர ஆறுமாசமாகுமாம். அதுவரைக்கும், சுந்தரியை எப்படி தனியா விடறதுன்னு யோசிக்கிறாங்க. எனக்கும் அதே யோசனைதான்!"

"அதுக்கு நாம் என்னப்பா செய்ய முடியும்?"

"அம்மா....வந்து...."

"சொல்லுப்பா!"

"வந்து...உங்களுக்கும் உதவிக்கு ஆள் தேவைப்படுது. வேலைக்காரப்பொண்ணும் சரியா வரதில்லைன்னு சொல்லிட்டிருந்தீங்க! சுந்தரி நம்ம வீட்டில் இருந்தா உங்களுக்கும் உதவியா இருக்கும், அந்தப்பெண்ணுக்கும் பாதுகாப்பா இருக்கும், நீங்க என்ன சொல்றீங்க?"

நாகலட்சுமி திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

"என்னப்பா சொல்ற? ஊர் உலகத்தைப் பத்தி நினைச்சுப் பாத்தியா? உனக்கு நாளைக்கு கல்யாணம் ஆகவேண்டாமா? எதையுமே யோசிக்காம...."

விக்னேஷ் வெறுத்துப்போனான். எந்த உறவுமில்லாத கோமதியம்மா செய்த உதவிகளை நினைத்துப்பார்த்தான். சுந்தரியை சும்மா அழைக்காமல் ஒரு வேலைக்காரியின் போர்வை போர்த்தியாவது தன் வீட்டுக்குள் அழைத்துவரலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் அதற்கும் தடை போடும் அம்மாவை எண்ணி எரிச்சல் வந்தது.

இந்த விஷயத்தில் அம்மா என்ன சொன்னாலும் சரி, சுந்தரியை நிர்க்கதியாய் விடப்போவதில்லை என்று முடிவெடுத்தான்.

"ஊர் உலகத்தைப் பத்தி எனக்குக் கவலையில்லை, நீங்க என்ன சொல்றீங்க?"

அவனது கேள்வியில் லேசான கோபம் எட்டிப்பார்ப்பதை நாகலட்சுமி உணர்ந்தார்.

இப்போதெல்லாம் விக்னேஷ் முடிவுகளை எடுத்தபின்புதான் அம்மாவிடம் அறிவிக்கிறான். கார் வாங்கியதும் அப்படிதான். வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு வந்து பார்க்கச் சொன்னான். அவளிடம் கார் வாங்கப்போவதைப் பற்றி மூச்சுவிடவும் இல்லை. 

அதேபோல் சுந்தரியையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டுவந்து நின்றிருந்தால் தன் மதிப்பு என்னாயிருக்கும்? சுந்தரிமுன் அவமானப்படவேண்டியிருக்குமே! அவ்வாறு செய்யாமல் அவளிடம் முன் அனுமதி கேட்கிறான். நல்லதனமாய் ஒத்துக்கொள்வதுதான் ஒரே வழி.

அதுவுமில்லாமல் இந்தக் காலத்தில் சம்பளமற்ற வேலைக்காரி, அதுவும் வீட்டோடு கிடைக்கிறாள் என்றாள் மறுக்காமல் ஏற்றுக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்?

சரிப்பட்டு வரவில்லையென்றால் பிறகு ஏதாவது காரணம் சொல்லி அனுப்பிவிடலாம்.

சுந்தரியை மறுப்பதன்மூலம் தன்னை ஒரு ஈவு இரக்கமற்ற ராட்சஸியாய் மகன் நினைத்துவிடுவானோ என்ற பயமும் எழுந்தது.

"என்னம்மா, யோசிக்கிறீங்க?"

"சரிப்பா, உன்னிஷ்டம் போல அவளைக் கூட்டிட்டு வா!"

"அம்மா, இதில் என்னிஷ்டம்னு எதுவுமே இல்லைம்மா... ஆதரவில்லாம நிக்கிற ஒரு பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க நினைக்கிறேன், அவ்வளவுதான்! உலகத்தில எத்தனையோ பெண்கள் இருக்காங்க, இப்படியே ஒவ்வொருத்தியா அழைச்சிட்டு வருவியான்னு கேக்காதீங்க, இவள் என் நண்பனோட மனைவி. இதை நான் என்னோட நட்புக்கு செய்யற மரியாதையா நினைக்கிறேன். கொஞ்சநாள் போகட்டும், பிரபு இறந்த துக்கம் மறையட்டும், அவளுக்கு ஒரு மறுவாழ்வு அமைச்சிக்கொடுத்திட்டேன்னா என் பாரம் இறங்கிடும். அதுவரைக்கும் நீங்க எனக்கு உதவி செய்யணும், அம்மா!"

விக்னேஷ் இவ்வளவு தீர்க்கமாக இதுவரை பேசியதில்லை. அவனிடம் தெரியும் மாற்றம் கண்டு கலங்கினார், நாகலட்சுமி. மகன் பேசுவதைப் பார்த்தால்...இவனே அவளுக்கு மறுவாழ்வு கொடுத்துவிடுவான் போலிருக்கிறதே! கூடாது....அப்படி எதுவும் நடக்கக் கூடாது.

பிரபு இறந்தபிறகு இவன் அடிக்கடி போய் சுந்தரியையும், குழந்தையையும் பார்த்துவருவது தெரியும் என்றாலும், இந்த நாட்களில் இருவருக்கும் என்ன மாதிரியான பிணைப்பு உண்டாகியிருக்கிறது என்று தெரியவில்லையே!

சுந்தரியை வீட்டுக்கு வரவழைப்பதன் மூலம் இருவரின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஏதுவாக இருக்கும். ஏதேனும் வரம்பு மீறுவதுபோல் தெரிந்தால் முளையிலேயே கிள்ளிவிடலாம். விக்னேஷை அல்ல, சுந்தரியை!

நாகலட்சுமியின் மூளை தாறுமாறாய் சிந்திக்கத் தொடங்கியது.  அதன் பயனாய் அவர் சொன்னதாவது,

"விக்னேஷ்! சுந்தரி இங்க வந்து தங்கறதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நீ அவளை தாராளமா அழைச்சிட்டு வாப்பா!"

விக்னேஷ் அம்மாவுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னான். அம்மா இவ்வளவு சீக்கிரம் உடன்படுவார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

பிரபு காதல் திருமணம் செய்ததிலிருந்து அவன் மீது வெறுப்பில் இருந்தார் என்பது விக்னேஷுக்குத் தெரியும். அதனால் சுந்தரி இங்கு வருவதை அவர் முற்றிலும் விரும்ப மாட்டார் என்று எண்ணியிருந்தான். அதனால் அம்மாவை எதிர்த்து வாக்குவாதம் செய்யவும் தயாராக இருந்தான். எதற்கும் இடங்கொடாமல் அம்மா சம்மதித்ததில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

*********************************************************************

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

மு. உரை:
அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
----------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு6 comments:

 1. தாய், சுந்தரியைக் குறிவைத்து, வித்யாவை மிஸ் பண்ணப்போகிறார்!! இல்லியா? விறுவிறுப்பு கூடுகிறது.

  ReplyDelete
 2. எதிர் பாராத திருப்பங்கள்
  கதையில் எதிர்பார்ப்புகளை மிகப படுத்துகிறது
  தொடரட்டும்!
  முதல் ஓட்டு போட வாய்ப்பு கிடைத்தது

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 3. 19 வது பகுதியை படித்துவிட்டுதான் இங்கு வந்தேன். விக்னேஷ் அம்மா நினைப்பது போலதான் எனக்கும் தோனுது?வித்யாவிற்குதான் விக்னேசானு டவுட் வந்திட்டு

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

  வருகைக்கும் வாக்குப்பதிவுக்கும் நன்றி ஐயா.

  தொடர் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஆச்சி.

  ReplyDelete
 5. கதை சிறப்பாகத் தொடர்கிறது
  சுந்தரி இடம் மாறுவது கதையை இன்னும் சுவரஸ்யமாக்கும்
  என நினைக்கிறேன்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 4

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் வாக்குப் பதிவுக்கும் நன்றி ரமணி சார்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.