24 May 2011

உனக்கென இருப்பேன்"அனி!"

"ம்!"

"ஏன் என்னவோ போலிருக்கே?"

"ப்ச்! இனிமேல் நீ எனக்கு போன் பண்ணாதே! எல்லாருக்கும் சந்தேகம் வந்திடுச்சி!"

"நான் யாருக்கும் தெரியாமதானே போன் பண்றேன், எப்படி கண்டுபிடிச்சாங்க?"

"எப்படியோ தெரியலை. நீ எனக்கு அடிக்கடி போன்  பண்றது அவருக்குத் தெரிஞ்சுடுச்சி. அதனால் என்னைக் கொண்டுவந்து அம்மாவீட்டில் விட்டுட்டுப் போயிட்டாரு. சீக்கிரமா விவாகரத்து பண்ணப்போறாராம்."

"நிஜமாவா? அப்படின்னா கூடிய சீக்கிரம் நம்ம கல்யாணம்தான்"

"ரொம்ப ஆசைதான்!"

"ஆமாம், உன்மேல ரொம்ப ஆசைதான்!"

"பின்னே எதுக்கு அப்போ என்னைக் கழட்டிவிட்டியாம்?"

"எப்போ?"

"தெரியாதமாதிரி கேளு! காலேஜ்ல படிக்கும்போது ஒருநாள் துணிஞ்சு வந்து உங்கிட்ட என் காதலைச் சொன்னேனே, அப்போ!"

"அப்போ உன் அருமை தெரியலை. இப்பதான் தெரிஞ்சது."

"என் அருமை உணர உனக்கு மூணு வருஷம் எடுத்திருக்கு. அப்பவே வந்திருந்தா நம்ம கல்யாணம் எவ்வளவு அழகா ஈஸியா நடந்திருக்கும்? ஹும்!"

"பெருமூச்சு விடாதடி, இன்னும் கொஞ்சநாள்தான், உனக்கு டைவர்ஸ் ஆகட்டும், அடுத்த முகூர்த்தத்திலேயே நமக்குக் கல்யாணம்தான். விவாகரத்து கிடைச்சிடும்தானே?”

"நிச்சயமாக் கிடைக்கும். அவருக்கா காரணம் இல்லை? குழந்தை இல்லைம்பார்; எவனோடயோ கள்ளத்தொடர்பு இருக்கும்பார். டைவர்ஸ் கிடைக்காதா என்ன?"

"நம்ம காதலை கள்ளம்னு சொன்னால் அவன் நாக்கை இழுத்துவச்சி அறுத்திடுவேன்"

"விடு, அவர் பார்வை அது!  நமக்கு கல்யாணம் ஆகிட்டா அப்ப இது நல்ல காதலாகிடும்"

"அப்படித்தான் நானும் ஆசைப்படறேன், ஆனா……அம்மா அப்பா சம்மதம் வேணாமா?"

"மண்ணங்கட்டி, அவங்க பாத்த மாப்பிள்ளையோட லட்சணம்தான் தெரிஞ்சிடுச்சே! சம்மதிச்சா அவங்க கண்முன்னாடி கல்யாணம், இல்லைனா.... என்ன சொல்ல.....? அவங்களுக்குக் குடுத்துவைக்கலை, அவ்வளவுதான்!"

"நீ எப்ப வருவே, மதன்? எனக்கு உன்னைப் பார்க்கணும்போல இருக்குப்பா!"

"எனக்கும்தான் அனி. திடீர்னு வந்து உன் முன்னாடி நிக்கப்போறேன் பாரு!"

"ஐயையோ.... அப்படியெல்லாம் செஞ்சிடாதப்பா... என்னை எல்லாரும் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க!"

சரி...சரி... பயப்படாத. தூங்கு, எல்லாம் நல்லபடியா நடக்கும்! நான் காலையில் பேசறேன்.”

" லவ் யூ மதன்!!"

" லவ் யூ டூ... குட்டி!"

மதனுடன் பேசியதில் மனம் ஓரளவு சமாதானமாகி இருந்தது. சரியான கிராதகன்! சொன்னதுபோல் என்றாவது திடுமென வந்துவிடுவானோவென்று பயமாகவும் இருந்தது.

மதன்! நினைவே சுகமாயிருந்தது. பெயருக்கேற்றாற்போல் மன்மதன்தான். கல்லூரியில் அன்று அவனைச் சுற்றாத பெண்களே இல்லை. எல்லாப் பெண்களும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தங்கள் காதலை அவனிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் எதற்கும் மசியாத அவன் மனம் இந்தப்பேதைக்கு மசிந்திருக்கிறது, ஆனால் காலம் தாழ்த்தி!

அன்றே சம்மதம் சொல்லியிருந்தால் இந்த பாழாய்ப்போன திருமணம் நடந்திருக்காது, அப்பாவுக்கும் செலவு மிச்சம்! எத்தனை சீர் செய்து, எத்தனை செலவு செய்து ஊரைக்கூட்டி, விருந்து வைத்து.... ஏகப்பட்ட கடனாளியாகி நிற்கிறார். இதில் விவாகரத்து வேறு. அது நடந்துவிட்டால் ஜீவனாம்சம் கிடைக்குமாம். அதை வாங்கப்போவதில்லை.

அவனிடம் கையேந்துவதை விடவும் பிச்சை எடுக்கலாம். ஆனால் ஏன் பிச்சை எடுக்கவேண்டும்? இப்போதுதான் மதன் வந்துவிட்டானே! காதல் கொப்பளிக்கும் அவன் கண்களைப் பார்த்தால் பசி கூட பறந்துவிடுகிறதே!

பட்டுப்போய் விட்டதென்று நினைத்த காதல் மரத்துக்கு ரகசியமாய் தண்ணீர் ஊற்றுகிறான். துளிர்க்க ஆரம்பித்துவிட்டது. விரைவில் பூத்துக்குலுங்கவும் செய்யும். அதைப் பார்த்து ரத்து பெற்றவன் மனம் ரத்தக்கண்ணீர் வடிக்கப்போகிறது.

இப்போதெல்லாம் சரிவர தூங்க முடிவதில்லை. என்னென்னவோ மனப்போராட்டம்! வாழ்க்கை விடியுமா விடியாதாவென்ற மன உளைச்சல்!

கொஞ்சநாளாகத் தலைவலி வேறு பாடாய்ப் படுத்துகிறது. அம்மாவிடம் சொல்ல, டாக்டரிடம் அழைத்துப்போனாள். கலர்கலராய் மாத்திரைகளுடன் அதிகமாய் யோசிக்காதே என்று அறிவுரையும் தந்து அனுப்பிவிட்டார்.

யோசிக்காமல் எப்படி இருப்பது? வீட்டில் அனைவருக்குமே என்மேல் கோபம். ஒழுங்காக வாழத் தெரியவில்லை என்று. வாழ்க்கை வீணாகிவிட்டதே என்று வருத்தம். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது, என் வாழ்க்கை இனிமேல்தான் சிறப்புறும் என்பது. சிந்தனையை தூக்கம் எப்போது வீழ்த்தியது என்று தெரியவில்லை.

காலையில் கண்ணைத் திறந்தால் எதிரில் மதன்!

அடப்பாவி! எப்போ…… எப்படி…… வந்தே?” என்றால்…. சிரிக்கிறான்.

"மதன்! இப்ப எதுக்கு வந்தே?"

"எதுக்கா? உன்னைப் பாக்கதான்!"

"ஐயோ, யாராவது பாத்தா அவ்வளவுதான், தயவுசெஞ்சு போயிடுடா"

"என்னடி அநியாயம் இது? ஆசையோடு உன்னைப் பாக்கவந்தா இப்படித் துரத்துறியே? இதுக்காகவா இப்படி யாருக்கும் தெரியாம   உன் வீட்டுக்கு வந்திருக்கேன்?"

"நல்ல சாமர்த்தியக்காரன்தான்."

"பின்னே? சாமர்த்தியம் இல்லைன்னா இப்படி இஷ்டம்போல உன்னைப் பாக்க வரமுடியுமா?”

"உனக்கு வேற வேலையே இல்லையா?"

"ம்ஹும், உன்னைக் காதலிக்கிறதைத் தவிர வேற வேலை இல்லை!"

என் புருஷன் எப்பவும் வேலையைதான் காதலிப்பார்.”

அதையெல்லாம் மறந்திடு! இனிமே உன்னை ராணி மாதிரி பாத்துப்பேன்.”

அவனுடைய புறங்கையில் என் காதல் முத்திரையைப் பதித்து எழுவதற்குள் ஆனந்தக்கண்ணீர் அதை அழித்துவிட, அவன் சிரித்தான்.

நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தான். நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை.

அம்மாவுக்கு அடுப்படி! விட்டால் கோயில்! அப்பாவுக்கு செய்தித்தாளும், கோடிவீட்டு ராமச்சந்திரன் மாமாவும்!

என் அறையில் என்ன நடக்கிறது என்று கவனிக்க இவர்களுக்கெங்கே நேரம் இருக்கிறது? இவர்களிடம் போய் என் குறையை எப்படிச் சொல்வது? மதன் ஒருவன் தான் பொறுமையாக என் புலம்பல்கள் அனைத்துக்கும் காதுகொடுத்துக் கேட்கிறான். என் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்கிறான்.

"எனக்குத் தூக்கம் வருது."

"நீ தூங்கு, நான் பாட்டுப் பாடுறேன்."

"உனக்கென இருப்பேன் பாடேன்"

அவனது மடியில் தலைவைத்துக்கொண்டேன்.

மதன், எனக்கு இப்படியே உன் மடியில தலைவச்சுப் படுத்திருக்கணும்போல இருக்குடா"

என் கலைந்த கேசத்தை விரல்களால் கோதியபடியே பாடத்தொடங்கினான்.

உனக்கென இருப்பேன்….
உயிரையும் கொடுப்பேன்…..
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன் .
கண்மணியே, கண்மணியே…….

அவன் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் இனிமையாய்ப் பாடினான். இரண்டடி பாடுவதற்குள் தூக்கம் கண்களைச் சுழற்றியது. 


"அனிதா.... அனிதா…..!"

அம்மா அழைக்கும் சத்தம் கேட்டு உஷாரானேன். வெடுக்கென்று அவனை விலக்கி எழுந்துகொண்டேன். அவனை எப்படி எங்கு மறைப்பது என்று புரியவில்லை.  வசமாய் மாட்டிக்கொள்ளப்  போகிறான் என்று நினைக்கும்போதே தட்டில் இரண்டு இட்டலிகளுடன் அம்மா அறைக்குள் வந்துவிட்டாள்.

அனிதா..... காலையிலிருந்து சாப்பிடவே இல்லையே! எப்பக் கேட்டாலும் பசியில்லைங்கறே! மாத்திரை சாப்பிடணுமே, அதுக்காகவாவது கொஞ்சமா சாப்பிடும்மா!"

அம்மா கெஞ்சிக்கொண்டிருந்தாள். எனக்கு சாப்பிடவே மனம் இல்லை. மதன் எங்கே?

"அனிதா, என் கண்ணில்லே...கொஞ்சமாவது சாப்பிடும்மா...."

எங்கே போயிருப்பான்? ஒருவேளை சிலந்தி மனிதனைப் போல் உத்தரத்தைப் பற்றிக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறானோ? அண்ணாந்து பார்க்க... அம்மாவும் மேலே பார்த்தாள்.

"என்னம்மா..... என்ன தேடுறே?"

மீண்டும் கண்களைச் சுழலவிட்டேன். அதற்குள் எங்கே போனான்? சட்டென எழுந்தேன். எழுந்த வேகத்தில் அம்மாவின் கையிலிருந்த தட்டைத் தட்டிவிட்டுவிட, அது இட்டலிகளோடும் பெரும் சத்தத்தோடும் கீழே விழுந்தது.

அப்பா அவசரமாக ஓடிவந்தார். அதிர்ந்து நின்ற அம்மாவிடம்,

"என்ன ராஜி...என்னாச்சி?" எனவும், அம்மா பதில் சொல்லாமல் விழித்தாள்.

நான் அவரைக் கவனியாதவளாய் அவனைத் தேடுவதிலேயே மும்முரமாக இருந்தேன். கதவிடுக்கில், கட்டிலுக்கடியில், அலமாரியில் எங்குமே காணவில்லை.

"என்ன அனிதா... என்னம்மா வேணும்?"

சொல்லிவிடலாமா? என்றைக்காவது ஒருநாள் சொல்லித்தானே ஆகவேண்டும்! அதை இன்றே சொல்லிவிட்டால் என்ன?

"அம்மா.... அது வந்து.... அது வந்து...."

"சொல்லும்மா...."

"வந்து..... மதன் வந்திருந்தான்மா.... இவ்வளவு நேரம் என்கூட பேசிட்டிருந்தாம்மா... நீங்க வரவும் எங்க போனான்னு தெரியல... அதான்..."

"யாருமா அது?"

"தெரியாதாம்மா உங்களுக்கு? என்கூடப் படிச்சானே!"

"என்...என்னது?"

"எனக்கு டைவர்ஸ் ஆனதும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றாம்மா... என் புருஷன் மாதிரி விட்டேத்தியா இருக்கமாட்டான்மா.... என்மேல ரொம்ப அன்பா இருப்பான், நான்னா அவனுக்கு உயிர். நான் இல்லாம அவனால் வாழவே முடியாதும்மா.... அவ்வளவுதூரம் என்னைக் காதலிக்கிறான். மறுக்காதீங்கம்மா, அப்பா... ப்ளீஸ்....ப்ளீஸ்...."

சொன்னதுதான் தாமதம், அம்மா தலையிலடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

"ராஜி, அவ முன்னாடி அழுவாத, எழுந்து வா!" அப்பா அம்மாவின் தோள் பற்றி அழைத்தார்.

"பாவி நல்லாயிருப்பானா....? என் பொண்ணை இந்தக்கதியாக்கி வச்சிருக்கானே..... வேல...வேலன்னு வேலயக் கட்டிகிட்டு அழுதானே... என் பொண்ணை இப்படிப் பைத்தியமாக்கி அலயவுட்டுட்டானே.... அவன் நாசமாப் போக...."

மதனைக் காணாத குழப்பத்திலும் எனக்கு அம்மாவின் நடவடிக்கை பார்த்து சிரிப்புதான் வந்தது. நான் என்ன சொல்கிறேன், இவள் என்ன சொல்கிறாள்? அவளுக்குதான் பைத்தியம் பிடித்திருக்கிறது! அவள் என்னடாவென்றால் என்னைப் பைத்தியம் என்கிறாள்!

அடக்கமுடியாமல் சிரித்த என்னை அறையில் வைத்து வழக்கம்போலவே வெளியில் தாழிட்டுச் செல்ல…..இருளில் பதுங்கியிருந்த நிழல், வெளிச்சம் கண்டு வெளியில் வந்ததுபோல் என்முன் பிரசன்னமாகி என்னை வியப்பில் ஆழ்த்தினான் மதன்!

"ஏய், எங்கே போயிருந்தே?"

என் ஆச்சரியக் கேள்விக்கு பதிலளிக்காமல் என்னைப் பார்த்து குறுநகை புரிந்தவனைக் கட்டிக்கொண்டு பேசத்தொடங்கினேன், விட்ட இடத்திலிருந்து!

7 comments:

 1. எதிர்பாராத திருப்பம் முடிவில்.
  கதைக் கருவும் நடையும் சுவாரசியம். (நடுவில் பெயர்கள் குழப்புகின்றன)

  மிகவும் ரசித்தேன்; வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கீதா24/5/11 22:43

  @ அப்பாதுரை

  வருகைக்கு நன்றிங்க. பெயரைத் திருத்திவிட்டேன்.

  ReplyDelete
 3. சிறுகதை நல்ல முயற்சி கீதா.இடையிலேயே கதை எப்படிப்போகுமென விளங்குகிறது !

  அப்பாஜி...நல்லதொரு சிறுகதை எழுத்தாளர்.
  என்ன....கொஞ்சம் விளங்காது.இது நடுவில விளங்காத மொழி வேற !

  ReplyDelete
 4. வாழ்த்துகள் கீதா!!!

  கதை மிக நன்றாக உள்ளது... தெளிவான நடை...

  ம்ம்ம்ம்.... கதை முடிவு தெரிந்தாலும் நன்றாக உள்ளது...

  ReplyDelete
 5. நன்றி ஹேமா. கதாபாத்திரத்தின் பெயரில் சிறு குழப்பம் இருந்தது.மாற்றிவிட்டேன்.

  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிங்க நல்லவன்.

  கணவனுடைய அன்பு கிடைத்திராத ஒரு பெண் மனச் சிதிலமடைந்து கற்பனையில் ஒரு காதலனை உருவாக்கி மனதளவில் அவனுடன் வாழ்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். இதுவே கதையின் சாராம்சம். இனி படிப்பவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. ஹாமா! i mean.. ஹேமா.. 'கொஞ்சம் விளங்காதா?' ஹா! ... போகுது விடுங்க. முழுதும் விளங்காதுனு சொல்றவங்க நடுவுல நீங்க எவ்வளவோ பரவாயில்லை.. :)

  கதையின் முடிவை
  என்னால் கணிக்க முடியவில்லை என்பதே உண்மை கீதா. நிறைய எழுதுங்கள். உங்கள் பழைய கதைகளையும் இன்னொரு முறை படித்தேன். nice.

  ReplyDelete
 7. பழைய கதைகளையும் புரட்டியதற்கு நன்றிங்க அப்பாதுரை. நான்கைந்து நாளாக பின்னூட்டப் பெட்டி காணாமல் போய் இப்போதுதான் திரும்பி வந்திருக்கு. அதான் பதில் இட தாமதமாகிவிட்டது.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.