5 May 2011

தீ அணைத்தபோது....


நல்ல உறக்கத்தின் மத்தியில் சட்டென்று விழித்துக்கொண்டேன். ஏதோ இனந்தெரியாத திகிலுணர்வு அடிவயிற்றைக் கவ்வியது. சிறுதுளி பெருவெள்ளமென வியர்வைத் துளிகள் திரண்டு ஓடின. அளவுகடந்த வெப்பத்தால் உடல் முழுவதும் தகித்தது. என்னவாயிற்று திடீரென?

அப்போதுதான் கவனித்தேன். மேற்கூரையில் தீப ஒளி! திருவண்ணாமலை தீபத்தை என் வீட்டுக்கூரையில் ஏற்றி வைத்தது யார்? சிதறிய தீப்பொறிகள் என் பொறியைத் தட்டி எழுப்பின. இல்லை....இல்லை..... அது தீப ஒளியில்லை... நெருப்பூ....பூவா? இல்லையில்லை.....தீ.......

ஐயோ! என் வீடு பற்றி எரிகிறது. எப்படியானது? புகை எச்சரிக்கைமணி என்னாயிற்று? ஊதுபத்தி கொளுத்தி வைத்தாலே ஊரைக்கூட்டுமே? பாட்டரி தீர்ந்திருக்குமோ? என் குழந்தைகள் அகிலும், ஆர்த்தியும் எங்கே? கெளதம் எங்கே?

அருகில் எவரையும் காணோம். எப்படி இது சாத்தியம்? என்னைத் தனியே தீத்தீவுக்குள் விட்டுவிட்டு அவர்கள் எல்லாரும் வெளியேறிவிட்டார்களா? ஏன் என்னை எவருமே எச்சரிக்கவில்லை?

நேற்றிரவு எனக்கும் கெளதமுக்கும் சிறு சச்சரவு வந்தது உண்மைதான். அதற்காக நான் செத்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்துவிட்டாரா? இருக்காது. அவசரத்தில் குழந்தைகளை வாரிக்கொண்டு வெளியில் ஓடியிருந்திருப்பார். என்னை மீட்பதற்குள் தீ பரவியிருக்கும். அப்படிதானிருக்கும்.

சரி, இப்போது நான் எப்படி வெளியேறுவது? மரத்தாலான வீடு இது. தீ தன் செங்கரங்களால் வீட்டை முழுவதுமாய் வளைத்து ஆக்கிரமித்திருந்தது. பார்ப்பதற்கு அது மிகுந்த தாபத்துடன் தன் காதலியைத் தழுவிக்கொண்டிருப்பது போலிருந்தது. காற்று மேலும் மேலும் வீசி அதைத் தீண்டியும் தூண்டியும் விளையாடிக்கொண்டிருந்தது. தீ காதலன் என்றால் காதலி காற்றா? வீடா?

தீயின் ஆக்ரோஷ அணைப்புக்குப் பிறகு இன்னும் கொஞ்சநேரத்தில் அந்த இடத்தில் எதுவுமே மிஞ்சப்போவதில்லை. அப்படியாயின் வீடு காதலியாய் இருக்கமுடியாது. தீயைக் காமுகனாகவும் வீட்டை ஒரு அபலைப்பெண்ணாகவும் நினைத்தால் என்ன? பெண்ணின் வாழ்வைச் சூறையாடும் கயவனாய் தீயை உருவகப்படுத்தலாம்.

மோகத்தைத் தீ என்கிறோம். தீக்கே மோகம் வந்தால்......? சிந்தனை வியப்பைத் தந்தது. சரிதான். இந்தக் காமவெறி என்றுமே அடங்கப்போவதில்லை. ஏன் முடியாது? நீரென்னும் மோகினியின் முன் தீயின் ஆட்டம் அடங்கிவிடுமே!

அடச்சே! இந்தப் பாழாய்ப்போன எழுத்தாள புத்தி, தீயின் பிடிக்குள் அகப்பட்டபோதும் எழுதுவதற்கு கருவைத் தேடுகிறதே! என்னவென்று சொல்வது? காணுமிடமெல்லாம் கரும்புகை படர்ந்து கண்களை கசியச்செய்தது. இதுவரை தூரநின்று குசலம் விசாரித்துக்கொண்டிருந்த நெருப்பு, இப்போது நெருங்கி வந்து கைகுலுக்கத் தயாராய் நின்றது. ம்ஹும்! எனக்கு அதில் உடன்பாடில்லை.அவசரமாய் சுய உணர்வுக்கு வந்து உதவி கேட்டு குரலை உயர்த்தினேன்.

உதவிக்காக உயர்ந்த என் குரல் ஓலமாகவே எதிரொலித்தது. இன்னும் ...இன்னும்.... என் தொண்டையிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் எல்லாம் காற்றோடு கலந்து கண்ணாமூச்சியாடின. இனியும் உதவியை எதிர்பார்ப்பது மடத்தனம். பேசாமல் தீயிடமே தஞ்சமடைந்துவிட வேண்டியதுதான்.

‘தீயே! உனக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? என்னை இப்படி வாட்டலாமா? உன்னைத் தினமும் விளக்கிலேற்றிக் கும்பிடும் என்னை தண்டிக்கலாமா? எனக்கு நான்கு வயதிலும் ஏழு வயதிலுமாக இரு குழந்தைகள் இருக்கின்றனர், அவர்களை வளர்த்து ஆளக்க வேண்டாமா? கணவர் இருக்கிறாரே, அவர் பார்த்துக்கொள்ளமாட்டாரா என்கிறாயா? அவரை நம்ப முடியாது. பார், நேற்று ஒன்றுமில்லாத விஷயத்துக்காக என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு சாப்பிடவும் இல்லை. நான் எப்படியெல்லாம் வருந்தினேன், தெரியுமா? அழுதுகொண்டே தூங்கிவிட்டேன். கண்விழித்தால் நீதான் என்னெதிரில் நிற்கிறாய்!

என்னை இவ்வளவு சீக்கிரம் அழிக்கத்தான் வேண்டுமா? யோசித்துப்பார்! இந்த வீட்டை அழித்துவிட்டாய், வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அழித்துவிட்டாய்!அது போதாதா? என்னதான் காப்பீட்டுத்தொகை கைக்கு வந்தாலும் இது போல் இன்னொரு வீடு உருவாக எனக்கு இன்னும் இரண்டு வருடம் பிடிக்குமே! என் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படுவார்களே? இத்தனைப் பேசுகிறாரே, கெளதம், அவருக்கு ஒருநாள் நான் இல்லையென்றாலும் கை உடைந்ததுபோலாகிவிடுமே? என்னை விட்டுவிடேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்.’

தீ எதற்கும் இசைவதாயில்லை. புண்ணியம் தேவையில்லை என்று எண்ணிவிட்டது போலும். காப்பாற்றுபவர்களை எதிர்பார்த்து தீயிடம் கேட்ட காலக்கெடுவை அது தனக்குச் சாதகமாக்கிகொண்டது. என்னிடம் நின்று கைகளைக் கட்டி உபதேசம் கேட்பதுபோல் பாவலா காட்டிக்கொண்டு பின்புறம் கண்ணசைத்து தன் உபகரங்களை அனுப்பி உரிய வேலையை செய்துகொண்டுதானிருந்தது.

நானோ எதையும் கவனியாதவள் போல் அதன் காலடி பற்றிக் கெஞ்ச முற்பட்டேன். தீ வெகு சாமர்த்தியமாய் தன் கால்களை எனக்குக் காட்டாமல் மறைத்துக்கொண்டு தடமின்றி நடந்து தன் மனம்போனபோக்கில் சென்றாது.

இனிப் பேசிப் பயனில்லை. தண்ணீருக்கு இரங்குவது கண்ணீருக்கு இரங்காதா? கடைசி அஸ்திரத்தைக் கையிலெடுத்தேன், இல்லையில்லை, கண்ணிலெடுத்தேன். என்னென்னவோ சொல்லிப் புலம்பி அழுதேன். கண்ணீர் விட்டுக் கதறி அரற்றினேன். படபடவெனச் சத்தத்துடன் எரிவது என்னைப் பார்த்து அது எக்காளமிட்டுக் கொக்கரிப்பது போலிருந்தது.

‘உனக்காக யாருமில்லை, உன்னைக் காக்க எவரும் முன்வரவில்லை, உனக்காக உயிர்கொடுக்க எவரும் தயாராய் இல்லை, ஆக மொத்தம், நீ எவருக்கும் தேவையில்லை. நீ பொய் சொல்லி என்னை எமாற்றப் பார்க்கிறாய்’ என்று சொல்லியபடியே என்னை நோக்கி முன்னேறிய தீயை வெறுங்கையால் புறந்தள்ளிவிட்டு ஓட முனைகிறேன்.

இப்போது தீக்காமுகன் என்னிடமே தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டான். கண்களில் மின்னும் வெறியுடன், தன் வெங்கரங்களால் என் சேலையைப் பற்றிவிட்டான். பதறியபடியே அவனிடமிருந்து என்னை விடுவிக்கப் போராடித் தோற்கிறேன். கத்திக் கதறிக் கையெடுத்துக் கும்பிட்டுக் கூப்பாடு போடும்போது........

"அம்மா..."

"பானூ...."

"அம்மா...."

என்ன இது? என்னை வெளியிலிருந்து அழைப்பது யார்? கெளதமும், குழந்தைகளுமா? நான் இப்போது தீயுடன் போராடிக்கொண்டிருக்கிறேனே, நான் எப்படி பதில் சொல்வது? என் சேலையும் உருவப்பட்டுவிட்டதே.......கடவுளே.....என்னைக் காப்பாற்றுவாரில்லையா.......

"அம்மா......அம்மா......"

"பானூ......"

நான் பலமாக உலுக்கி எழுப்பப்பட்டேன். மிகுந்த சிரமத்துடன் கண்களைத் திறந்தால்........எதிரில் கெளதமும், குழந்தைகளும்!  சரேலென என் போர்வையை வாரி என்னுடலைப் போர்த்துக்கொண்டேன். மலங்க மலங்க விழித்தபடி இருந்த என் கண்களிலிருந்து வழிந்துகொண்டிருந்த நீரை என் குழந்தைகளின் தளிர்க்கரங்கள் துடைத்தன.

கெளதம் என்னை தன் மார்போடு சேர்த்தணைத்தபடியே, "என்னம்மா.....ஏதாவது பயங்கர கனவா?" என்றார்.

"க...க...கனவா......? கனவா அது? கனவுதானா? "

மெல்ல என்னைச் சுற்றிப்பார்க்கிறேன். என் வீடு, உடமைகள் எல்லாம் அப்படியே அதனதன் இடத்தில்! என் போர்வைக்குள் குனித்து நோக்கினேன். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.
அப்படியென்றால்....அத்தனையும் கனவுதானா?

கெளதம் தண்ணீர் எடுத்துக்கொடுக்கிறார். படபடப்பு சற்றே அடங்க, பலத்த பிரயாசைக்கிடையில் நடந்தவற்றைச் சொல்லிமுடிக்கிறேன்.

"அம்மா.....அதுக்குதான் அப்பா  'அதை’   வாங்கி வச்சிருக்காரில்ல.....’அதை’ யூஸ் பண்ணியிருக்கலாமில்ல.....?"

அகிலின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறியபடியே அவரைப் பார்க்கிறேன்.  அவரோ ஒரு கள்ளச்சிரிப்புடன் என்னைப் பார்க்க..... நேற்றிரவு அவர் வாங்கிவந்த தீயணைப்பானின் விலையைப் பார்த்துவிட்டு, இப்போது இது தேவையா என்று நான் அவரைக் கடிந்துகொண்டதும், பதிலுக்கு அவர், மனித உயிர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் அதிகமில்லை என்று வாதிட்டதும், கடைசியில் வாக்குவாதம் முற்றி இருவருமே கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் உறங்கப்போனதும் நினைவுக்கு வர.....அசட்டுச் சிரிப்பைச் சிந்தியபடியே தலைகுனிந்துகொள்கிறேன்.

8 comments:

 1. //தீ காதலன் என்றால் காதலி காற்றா? வீடா?//

  நல்லா கேக்குறாங்கப்பா டீட்டைலு....கதை நல்லாருக்குங்க...

  ReplyDelete
 2. இடையில் தீயை காதலாய் விவரித்தபோது சீரியலில் முகியமான நேரத்தில் விளம்பரம் வருவது போல இருந்தாலும்,தீபிடிப்பு கனவாய் போனதில் மனம் லேசானது.

  அசத்தல்ங்க,வாழ்த்துகள் .

  ReplyDelete
 3. கணவன் மனைவி பஞ்சாயத்தை தீர்க்க தீயே நாட்டாமை செய்ததா? தன்னை அழிக்கும் ஒரு பொருளுக்கான நியாயத்தை சொல்லிய தீ ஹீரோதான். எப்படியோ தீர்த்து வைத்தால் சரி.

  ReplyDelete
 4. கீதா... 2/3 பதிவுகள் இப்போதான் வாசித்தேன்.எப்போதும்போல அருமை.
  இந்தக் கதை வித்தியாசமா இருக்கே !

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி கலாநேசன்.

  உண்மையில் இந்தக் கதையே என் கனவின் அடிப்படையில் உருவானதுதான்.நன்றி ஆச்சி.

  நான் தீயை வில்லனாக்கினால் நீங்கள் அதை ஹீரோவாக்கிவிட்டீர்களே :) கருத்துப்பதிவுக்கு நன்றி சாகம்பரி.

  உங்கள் தொடர் ஊக்கத்துக்கு நன்றி ஹேமா.

  ReplyDelete
 6. அத்தனையும் கனவுதானா?
  கதை நல்லாருக்கு.வாழ்த்துகள் .

  ReplyDelete
 7. பிரமாதம்!
  தீ விவரமும் நல்லாயிருக்கு; போர்வைக்குள் தேடிய விவரமும் நல்லாயிருக்கு. எழுத்தாள புத்தியா? அப்படின்னா?

  ReplyDelete
 8. @ இராஜராஜேஸ்வரி

  வாழ்த்துக்கு நன்றி.

  @அப்பாதுரை

  பாராட்டுக்கு நன்றி. எழுத்தாள புத்தி? புரியவில்லையா? கனவிலும் கதைக்கு கரு தேடுகிறதே.... :)

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.