9 August 2020

ஆஸ்திரேலியாவின் ரசனையான உணவுவகைகள்




எந்த நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாட்டின் பிரசித்தமான உணவுவகையை ருசிபார்ப்பது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் ஆஸ்திரேலியாவின் பிரசித்தமான உணவுவகைகளை சுவைக்க நிச்சயம் விரும்புவார்கள். லாமிங்டன், வெஜிமைட், மீட் பை, பாவ்லோவா, டிம்டாம், ஆன்ஸாக் பிஸ்கட்ஸ், கங்காருவால் சூப் என ஆஸ்திரேலியாவின் உணவுரசனையை மெய்ப்பிக்கும் வகையில் நம்மிடமும் ஏராளம் உண்டு. அவற்றின் பின்னால் ஏராளமான கதைகளும் உண்டு.

ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் ஒன்றான வெஜிமைட் உருவான கதையைப் பார்ப்போம். ஆஸ்திரேலியர்களின் உணவுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போன முக்கியமான அடையாளம் வெஜிமைட். இதன் பிரத்தியேக உப்பும் கசப்பும் கலந்த சுவைக்கு அடிமையாகிப் போன ஆஸ்திரேலியர்கள் பலர். ஜாம், பட்டர் போல பிரெட்டில் தடவி சுவைக்கக்கூடிய வெஜிமைட் மது உற்பத்திக்கூடங்களில் பயன்படுத்தப்படும் brewer’s yeast எனப்படும் தேறல் நொதியையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கொண்டு தயாரிக்கப்படுவது. இதில் கொழுப்பு கிடையாது, சர்க்கரை கிடையாது. முழுக்க முழுக்க சைவ பதார்த்தம்.



இன்னும் இரண்டு வருடங்களில் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவிருக்கும் வெஜிமைட் ஏன் உருவானது தெரியுமா? முதலாம் உலகப் போர்க்காலத்தில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த Marmite சுவைத்துப் பழகிய ஆஸ்திரேலிய நாவுகளுக்கு அது இல்லாமை வெறுமையை உண்டாக்கியது. இந்த சமயத்தில் Fred Walker & Co. நிறுவனம் அதற்கு மாற்று தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. வேதியியலாளரும் உணவு தொழில்நுட்ப வல்லுநராகவும் இருந்த Cyril Percy Callister இடம் அதற்கானப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒரு சுவைக்கு பழகிய நாவுகளை மற்றொரு சுவைக்குப் பழக்கவேண்டுமே. முதலில் மக்களிடம் புதிய பொருளைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாக இந்த புதிய கண்டுபிடிப்புக்குப் பரிசுத்தொகையுடன் கூடிய பெயர் சூட்டும் போட்டியொன்று பொதுவில் நடத்தப்பட்டது. பெயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு Fred Walker-ன் மகள் Sheilah விடம் விடப்பட்டது. அவர் தேர்ந்தெடுத்தப் பெயர்தான் Vegemite.


பலதரப்பட்ட விளம்பரங்களுக்குப் பிறகும் விற்பனை சூடுபிடிக்காத காரணத்தால் ஒருவேளை பெயர்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் Parwill என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போதும் விற்பனை சரிவே. விற்பனையை அதிகப்படுத்த பெருமளவு முயற்சிகள் எடுக்கப்பட்டன. Kraft walker cheese உற்பத்திப் பொருட்களுடன் இலவச இணைப்பாக வெஜிமைட் கொடுக்கப்பட்டது. இது குறித்த கவிதைப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு அமெரிக்க Pontiac கார்கள் பரிசளிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் போது ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் ரேஷன் உணவில் வெஜிமைட் சேர்க்கப்பட்டது. இப்படியாக படிப்படியாக 1940 களின் பின்பகுதியில் பத்துக்கு ஒன்பது ஆஸ்திரேலிய வீடுகளில் வெஜிமைட் புழக்கத்துக்கு வந்தது.



இன்று பில்லியன் ஜார்கள் விற்பனையைக் கடந்து இன்னமும் அதிரடியாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது வெஜிமைட். காலத்தோடு இணைந்த விளம்பரம்தான் அதற்கு முக்கியக் காரணம் எனலாம். பன்னாட்டு கலாச்சாரம் பரவத்தொடங்கிய காலத்தில் 1983 வாக்கில் வெஜிமைட் என்ற பெயருக்குப் பதிலாக Multicultural என்ற பெயரைத் தாங்கி கீழே spread it around என்ற வாசகத்துடன் பன்னாட்டு மக்களையும் கவர்ந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது. 


சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் விளையாட்டுத் தொடரின்போது ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை Ash Barty –க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவரை சிறப்பிக்கும் வகையிலும் Bartymite என்ற பெயர் தாங்கி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜார்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தன. விற்றும் தீர்ந்தன.  

ஆஸ்திரேலியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடும் அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு பிரமாதமில்லை என்கிறார்கள் grease போன்ற இதன் நிறமும், வாடையும் பிரத்தியேக கடுஞ்சுவையும் பிடிக்காமல் போன அயல் நாட்டவர்கள். உங்களுக்கெல்லாம் அது ஒரு உணவுப்பொருள் மட்டுமே, எங்களுக்கோ அது உணர்வின் பொருள் என்கிறார்கள் இவர்கள். உண்மைதானே.



அடுத்தது Fairy bread. பெயரைச் சொன்னவுடனேயே ஆஸ்திரேலியக் குழந்தைகள் சப்புக்கொட்டும். இதுவும் ஆஸ்திரேலியக் கண்டுபிடிப்புதான். வழக்கமான white bread-ன் இருபுறமும் வெண்ணெய் அல்லது மார்கரின் தடவி அதன் மேல் hundreds and thousands எனப்படும் சர்க்கரைப்பாகில் செய்யப்பட்ட கடுகளவிலான குட்டிக்குட்டி வண்ண மணிகளைத் தூவினால் அதுதான் fairy bread.

அடுத்தது பாவ்லோவா. ரஷ்யாவின் பிரபல பாலே நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 1881 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த அன்னா பாவ்லோவா Imperial Russian Ballet நிறுவனத்தின் முதன்மைக் கலைஞராக இருந்தவர். அவர் தனித்து ஆடும் The Dying Swan என்னும் நடனத்தை சுமார் 4000 தடவைக்கு மேல் மேடையேற்றியிருக்கிறார் என்பதும் தென்னமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்று உலகம் முழுதும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல் பாலே நடனக் கலைஞர் என்பதும் அவரது பெருமைகளுக்குச் சான்று. பிரசித்தமான பாலே நடனக்கலைஞரான அன்னா பாவ்லோவாவுக்கும் ஆஸ்திரேலியாவின் பிரசித்த கேக்கான பாவ்லோவாவுக்கும் என்ன தொடர்பு? அப்படிப்பட்ட அற்புதமான கலைஞரை சிறப்பிக்கும் பொருட்டு இந்த கேக்குக்கு பாவ்லோவா என்று பெயரிடப்பட்டதாம். 


முட்டையின் வெள்ளைக்கரு, கார்ன்ஃப்ளார், கேஸ்டர் ஷூகர், வினிகர் வனிலா எஸன்ஸ் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கேக் போன்ற இனிப்பு வகையான இதற்கு மேலே க்ரீமும் பழங்களும் வைத்து அலங்கரிக்கப்படுகிறது. 1935 -ல் The Advocate பத்திரிகையிலும் தொடர்ந்து 1937-ல் The Australian Women’s Weekly இலும் பாவ்லோவா கேக் என்ற பெயர் குறிப்பிடப்பட்டது. நியூசிலாந்தோ பாவ்லோவா கேக் தங்களுடைய கண்டுபிடிப்பு என்றும் அது தாங்கள் வைத்த பெயர் என்றும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறது.

நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தங்களுடையவை என்று உரிமை கோரும் பட்டியலில் அடுத்து வருவது லாமிங்டன். ஸ்பான்ஞ் கேக் அல்லது பட்டர் கேக் துண்டுகளை உருக்கிய சாக்லேட் திரவத்தில் முக்கியெடுத்து உலர்தேங்காய்த்தூளில் புரட்டியெடுத்தால் அதுதான் லாமிங்க்டன். இதற்கு பின்னாலிருக்கும் கதை வெகு சுவாரசியம்.


1896 முதல் 1901 வரை குவீன்ஸ்லாந்தின் கவர்னராக இருந்தவர் லார்ட் லாமிங்க்டன். அவருடைய முதன்மை சமையல் பணியாளராக இருந்தவர் Armand Galland என்பவர். ஒருமுறை லார்ட் லாமிங்க்டனை சந்திக்க வந்திருந்த எதிர்பாரா விருந்தினர்களுக்குப் பரிமாற வேண்டிய சூழலில் முதல்நாள் செய்த வனிலா ஸ்பான்ஞ் கேக்கைத் துண்டுகளாக்கி சாக்லேட் திரவத்தில் முக்கியெடுத்து மேலே உலர்தேங்காய்த்தூள் தூவி அலங்கரித்துப் பரிமாறினார் என்றும் விருந்தினர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போய் செய்முறை வாங்கிச் சென்றார்கள் என்றும் அதனாலேயே லார்ட் லாமிங்க்டன் பெயரால் இது லாமிங்க்டன் என்று குறிப்பிடப்படுவதாகவும் ஒரு கதை உள்ளது. அதெல்லாம் இல்லை, வெலிங்க்டன் என்று எங்கள் தலைநகரின் பெயரால் நாங்கள் உருவாக்கிய இனிப்பை ஆஸ்திரேலியர்கள் லாமிங்க்டன் என்று பெயர் மாற்றி தங்களுடையது என மார்தட்டுகிறார்கள் என்று மறுக்கிறார்கள் நியுசிலாந்துக்காரர்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் லாமிங்க்டனைக் கொண்டாடுவோம் என்று சொல்லி ஜூலை 21 ஆம் நாளை தேசிய லாமிங்க்டன் தினமாக அறிவித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டோம் நாம். கூடவே lammo என்ற செல்லப்பெயரையும் சூட்டிவிட்டோம். 


 
இவை தவிர ஆன்ஸாக் பிஸ்கட்டுகள் குறித்த வரலாற்றை முந்தைய பதிவிலேயே பார்த்தோம். ஓட்ஸ் அவல், மாவு, தேங்காய்த்துருவல், சர்க்கரை, வெண்ணெய், தேன், சமையல் சோடா இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் ANZAC பிஸ்கட்கள், உணவுப்பொருள் என்பதையும் மீறி அதற்குள் பொதிந்திருக்கும் நாட்டுப்பற்றும் தேசிய ஒருமைப்பாடும் போர்வீரர்களுக்கான நினைவஞ்சலியும் என்றென்றும் தனித்துப் பிரித்தெடுக்க இயலாதவை.

ஒவ்வொரு நாடும் தமக்கென தனித்த உணவுக்கலாச்சாரத்தைப் பேணும்போது பன்னாட்டு கலாச்சாரத்தை மையமாய்க் கொண்ட ஆஸ்திரேலியா, பன்னாட்டு கலாச்சார உணவுவகைகளோடு காலங்காலமாய் தம் உணர்வுகளோடு பின்னிவரும் தனித்த உணவுக்கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாப்பது போற்றத்தக்க ஒன்றல்லவா?  




8-6-20 அன்று SBS Tamil  வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. ஒலிவடிவத்தைக் கேட்க இங்கு சொடுக்கவும். 

(படங்கள் உதவி இணையம்)

23 July 2020

தொய்வு போக்கும் தோட்டத்துக் காட்சிகள்

தோட்டத்துப் பிரதாபம் - 16

pic 1. டேன்டலியன் விதைகள் (Dandelion seeds)
 
pic 2.  வண்ணத்துப்பூச்சி (Butterfly on banana leaf)

pic 3. தோட்டத்து அரணை (Garden skink)

pic 4. பொன்வால் எறும்பு (Golden tailed spiny ant)

pic 5. வெண்முக நாரை (White faced heron)

pic 6. ஆஸ்திரேலிய காகம் (Australian Raven)

pic 7. தேவதைச்சிட்டு (Superb fairy wren - male)

pic 8. பாகல் பிணைப்பு (bitter gourd flower - female)

pic 9. மணிப்புறா (Spotted dove)

pic 10. வெங்காய மொட்டுகள் (Onion flower buds)

புதினா பூ
pic 11. புதினா பூ (mint flowers)


pic 12.  கசாப்புக்காரப்பறவை (Grey butcher bird)

pic 13. Hoverflies on dandelion


pic 14. ஆஸ்திரேலிய மேக்பை

pic 15.  அதிகாலை பனித்துளி


28 June 2020

கைகொடுக்கும் காய்கறித்தோட்டம்

தோட்டத்துப் பிரதாபம் - 15




  சென்ற வருடம்தான் தோட்டவளர்ப்பில் மும்முரமாக இறங்கினேன். முதல் முயற்சியிலேயே பலன் எக்கச்சக்கம். கற்றவையும் பெற்றவையும் ஏராளம். 

குட்டித்தோட்டம் என்றாலும் வீட்டுத்தோட்டத்தின் அருமை இப்போது அதிகமாகவே தெரிகிறது. இதிலிருந்து கிடைக்கும் காய்கறிகீரைகள் தயவால் ஊரடங்கு காலத்தில் வெளியில் போகாமல் வீட்டிலேயே ஓரளவு சமாளித்துக்கொள்ள முடிகிறது என்பதும் சிக்கனமாக இருக்கமுடிகிறது என்பதும் மிகப்பெரிய நிம்மதியும் சந்தோஷமும்.

கத்தரிக்காய்கள் இப்போதும் காய்த்துக்கொண்டிருக்கின்றன. பெரிய காய் என்பதால் ஒரு காய் சமைத்தாலே ஒரு பொழுது ஓடிவிடும். தேவைப்படும்போது ஒரு காயை செடியிலிருந்து பறித்து சமைத்துக் கொள்கிறேன். சென்ற வருடம் கத்தரிக்காய்கள் எக்கச்சக்கமாக காய்த்தபோது வற்றல் போட்டு வைத்துக்கொண்டதால் இப்போது நினைத்தவுடன் சட்டென்று ஒரு வத்தக்குழம்பு வைத்துவிடமுடிகிறது. 



  பயித்தங்காய்கள் கிட்டத்தட்ட காய்த்து முடியும் பருவத்தில் இருக்கின்றன. ஏற்கனவே காய்த்தவற்றை ஆசை தீரும்வரை சாப்பிட்டு அனுபவித்தாச்சு. அதிகப்படியாக காய்த்தவற்றை கொடியிலேயே முற்றவிட்டுப் பறித்து உரித்து விதைகளைக் காயவைத்து எடுத்துவைத்திருக்கிறேன். ஊறவைத்து தட்டைப்பயறு காரக்குழம்பு, சுண்டல் என பயன்படுத்தலாம். அடைக்கு ஊறப்போடும்போது கைப்பிடி சேர்த்து ஊறப்போட்டு அரைக்கலாம்.





  தேவைக்கு மேல் காய்க்கும் பயத்தங்காய்களைப் பதப்படுத்திவைக்க வேறு என்ன செய்யலாம் என்று தேடியதில் Blanching & Freezing முறை பற்றி அறிந்தேன். இது காய்கறியில் உள்ள நொதியங்களை (enzymes) செயல்படவிடாமல் தடுக்கும் முறை. இம்முறையில் பதப்படுத்தப்படும் காய்கறிகளை ஒரு வருடம் வரை ஃப்ரீஸரில் வைத்திருந்து பயன்படுத்தமுடியும். மிகவும் எளிய முறைதான்.

1. காய்களைக் கழுவித் துண்டுகளாக்கவேண்டும். 
2. கொதிக்கும் நீரில் மூன்று நிமிடம் போட்டு எடுக்கவேண்டும். 
3. உடனேயே குளிர்ந்த நீரில் இரண்டு மூன்று தடவை அலசி வடிகட்டவேண்டும். 
4. பேப்பர் டவலில் நன்கு துடைத்துவிட்டு காற்று புகாதபடி ziplock கவர்களில் தேவைக்கேற்ற அளவுகளில் போட்டு Freezer-ல் பத்திரப்படுத்தவேண்டும். அவ்வளவுதான். 

முதல்முறை செய்திருக்கிறேன். இனிதான் பார்க்கவேண்டும் எப்படி இருக்கிறதென்று. 



  பரங்கிக்காய் கொடி (இது முன்பிருந்த Kent pumpkin வகை இல்லை. Queensland Blue pumpkin என்னும் வேறு வகை) போன தடவை எக்கச்சக்கமாய்க் காய்த்தவற்றை (20-25 இருக்கலாம்) அக்கம்பக்கத்திலும் நட்புகளுக்கும் கொடுத்துத் தீர்த்தேன். அதற்கு மேலும் காய்த்தவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பரங்கிக்காய்களை வெட்டாமல் ஈரப்பதமற்ற உலர்வான இடத்தில் பத்திரப்படுத்தினால் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குக் கெடாமல் இருக்குமாம். இனி அதிகமாகக் காய்த்தால் கவலையில்லை. பத்திரப்படுத்திவைத்துக் கொள்ளலாம்.

புதினா அதிகமாக விளைந்திருந்தபோது பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்திருக்கிறேன். துவையல், ரசம், புலவு, குருமா, பிரியாணி என முடிந்தவரை உணவில் சேர்த்துக்கொள்கிறேன். வல்லாரைக்கீரை பறித்து நிழலில் காயவைத்து எடுத்து வைத்திருக்கிறேன். சூப், துவையல், பொடி என பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் லேகியம் கூட செய்துவைத்துக் கொள்ளலாம்.




  பச்சை மிளகாய் அதிகமாய்க் காய்த்தபோது பறித்துக் கழுவி காம்பைக் கிள்ளிவிட்டு ziplock கவரில் போட்டு freezer-ல் வைத்துவிட்டேன். கொஞ்சத்தை மோர்மிளகாய் போட்டுவைத்திருக்கிறேன். அதற்கும் மேல் காய்த்த மிளகாய்களை பழுக்கவிட்டுப் பறித்து காயவைத்து மிளகாய் வற்றலாக்கினேன். பிறகு வறுத்து, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள பூண்டுமிளகாய்ப்பொடி செய்து வைத்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு மேல் வரும். 



  எலுமிச்சை மரத்தில் முதல் காய்ப்பாக எண்ணி பத்துப் பழங்கள். மொத்தம் 2 கிலோ இருக்கின்றன. பாதியை ஊறுகாய் போட்டுவைத்திருக்கிறேன். பெரிய பழங்கள் என்பதால் இதுவே ஒரு வருடத்துக்கு வரும். மீதியை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி பத்திரப்படுத்த எண்ணியுள்ளேன். தேவைப்படும்போது தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கலந்தால் போதும், எலுமிச்சை ஜூஸ் தயார். 

தோட்டத்தில் எதிர்பார்த்த விளைச்சலைக் கொடுக்காதவை வெங்காயமும், உருளையும்தான். முதலில் சுணக்கமாக இருந்த முள்ளங்கி கூட இப்போது பலன் தர ஆரம்பித்துவிட்டது. 

வீடடைந்துகிடக்கும் இந்த நாட்களில் தோட்ட வளர்ப்பும் அதில் செலவழிக்கும் நேரமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகுந்த பயனைத் தருவதை அனுபவபூர்வமாய் உணர்கிறேன். தற்போது குளிர்காலம் என்பதால் குளிரில் முடங்கியபடி காத்திருக்கிறோம் வசந்தம் மற்றும் கோடையின் வரவுக்காக நானும் என் தோட்டமும். 

(பிரதாபங்கள் தொடரும்)

23 June 2020

பூச்சிகள் கூர்நோக்கல்

தோட்டத்துப் பிரதாபம் - 14

இந்த கொரோனா கால ஊரடங்கு நாட்களில் வீட்டுத்தோட்டமே கதியென்று இருந்த காரணத்தால் தோட்டத்தில் வாழும் பற்பல சிற்றுயிர்களையும் உற்றுநோக்கும் அற்புத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  பறவை கூர்நோக்கல் (Bird watching) மாதிரி பூச்சிகள் கூர்நோக்கலும் (Insect watching) மிகுந்த சுவாரசியமுள்ளதாகத்தான் உள்ளது. முடிந்தவரை சிலவற்றைப் படம் எடுத்திருக்கிறேன். பூச்சிகளை சாதாரணக் கண்களால் காண்பதற்கும் மேக்ரோ அல்லது க்ளோசப் ஷாட்டில் படம்பிடித்துப் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள். இதுவரை அறிந்திராத பல சிற்றுயிர்கள் குறித்த ஆய்வும் தேடலும் ஓரளவு அவற்றைப் பற்றிய அறிவைத் தந்திருக்கின்றன. ஆச்சர்யங்களையும் அள்ளி வழங்கியிருக்கின்றன. நாள் ஒவ்வொன்றும் புதியதாய், அழகாய், அற்புதம் தருவதாய் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஊரடங்கு காலம் மட்டுமல்லாது வாழுங்காலம் முழுவதும் வகுக்கப்பட்ட சுவரெல்லைக்குள் வாழ்ந்திருந்து வாழ்ந்திருந்து மூச்சுமுட்டத் தொடங்கியிருக்கும் இந்நாட்களில் உயிர்மூச்சும் உத்வேகமும் தந்து வாழ்விக்கும் என் சின்னஞ்சிறு தோட்டத்துக்கு நன்றி சொல்லி இப்படங்களைப் பகிர்கிறேன். 

  
Blue skipper - நீலப் பட்டாம்பூச்சி (pic 1) 


Green stink bug - 3rd instar (pic 2)

Fiddler beetle - பிடில் வண்டு  (pic 3)

Green stink bug - 4th instar (pic 4)

Green shield bug nymph (pic 5)

Crusader bug nymph  - சிலுவை வண்டு இளம்பருவம் (pic 6)

Black tipped orange Ichneumon wasp - ஒட்டுண்ணிக் குளவி (pic 7)

Grasshopper - வெட்டுக்கிளி (pic 8)

Green bush cricket (pic 9)

Green grass dart skipper (pic 10)

Torpedo bug (pic 11)

Punctuate flower chafer beetle - புள்ளிப் பூவண்டு  (pic 12)

Lady bug - பொறிவண்டு  (pic 13)

Brown flower beetle - பழுப்பு பூவண்டு (pic 14)

Green stink bug  (pic 15)



Tiger moth - அந்துப்பூச்சி (pic 16)

Wasp mimic fly - குளவித்தோற்ற ஈ  (pic 17)

Ladybug - பொறிவண்டு (pic 18)

Honeybee  -தேனீ (pic 19)

Fiery skimmer - சிவப்புத் தட்டான் (pic 20)


பிரதாபங்கள் தொடரும்