15 April 2020

ஆஸ்திரேலியப் பூர்வகுடி இசைக்கருவிகள்






ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் கலாச்சார அடையாளங்களுள் முக்கியமானவை இசையும் நடனமும். இசை என்றதுமே நம்மில் பலருக்கும் டிஜிரிடூ (Didgeridoo) நினைவுக்கு வரும். ஆம். ஆஸ்திரேலியாவின் அதிமுக்கிய அடையாளங்களுள் ஒன்று பூர்வகுடி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான டிஜிரிடூ எனப்படும் காற்றூது இசைக்கருவி. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஆண்டுக்கால தொன்மை உள்ளதாக கருதப்படும் இவ்விசைக்கருவி இன்று உலகின் பல நாடுகளிலும் அறிமுகமாகி இசைக்கப்படுகிறது. டிஜிரிடூவின் குறைந்தபட்ச நீளம் மூன்று அடி, அதிகபட்ச நீளம் பத்து அடி. பாரம்பரிய விழாக்களின்போது இசைக்கப்படும் இக்கருவியை பூர்வகுடியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இசைப்பது வழக்கம். அந்த இசைக்கு ஆண்களும் பெண்களும் நடனமாடுவர். டிஜிரிடூ பெரும்பாலும் தனி இசைக்கருவியாக வாசிக்கப்பட்டாலும் சில விழாக்களில் இசைக்கோல்களும் தாளவாத்தியக்கருவியாக சேர்ந்திசைக்கப்படுகின்றன.

பூர்வகுடி பெண்கள் டிஜிரிடூ வாசிப்பதில்லை. பெண்கள் வாசித்தால் தெய்வக்குற்றம் என்ற கருத்து இருந்தாலும் சமூக, பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறி சில பூர்வகுடிப் பெண்கள் அந்நாளில் வாசித்ததுண்டாம். தற்போது உலகநாடுகள் பலவற்றிலும் ஆண்பெண் பேதமின்றி பெண் இசைக்கலைஞர்களும் டிஜிரிடூவை வாசிக்கப் பயின்று கச்சேரிகளில் இசைக்கத் துவங்கியுள்ளனர்.

காற்றுக்கருவியான இதை நம் நாதசுரத்துக்கு ஒப்பாக சொல்லலாம். மூச்சை வெகுவாக தம் கட்டி வாசிக்கவேண்டிய காரணத்தால் நாதசுரம் பொதுவாக ஆண்கள் வாசிக்கும் இசைக்கருவி என்று பெயர் இருந்தாலும் ஆங்காங்கே பெண் இசைக்கலைஞர்களும் ஆரம்பகால எதிர்ப்புகளைக் கடந்து, முறையான பயிற்சி பெற்று நல்ல வித்வான்களாக விளங்கியிருப்பதை நாம் அறிவோம் அல்லவா?



2005-ல் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் ஆஸ்துமா, குறட்டை மற்றும் உறக்கத்தில் உயிர்பறிக்கும் சுவாசப் பிரச்சனைகளுக்கும், சீரான மூச்சுப்பயிற்சிக்கும் நல்லதொரு தீர்வாக டிஜிரிடூ இசைப்பயிற்சி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும்கூட ஆஸ்திரேலியாவின் சில குறிப்பிட்ட பூர்வகுடி இன மக்களிடையே டிஜிரிடூ குறித்த பயபக்தியுடன் கூடிய நம்பிக்கைகள் தொடர்கின்றன. பூர்வகுடி மக்கள் அல்லாத பிறர் முக்கியமாக பெண்கள், வாசிப்பது மட்டுமல்ல இந்த இசைக்கருவியைக் கையால் தொடுவது கூட பாவம் என்பதோடு கலாச்சாரத் திருட்டு என்றும் கருதுகின்றனர்.

டிஜிரிடூ என்று இதற்கு பெயர் வைத்தது யார் என்பது ஒரு பெரிய மர்மம் நிறைந்த கேள்வி. ஏனெனில் didgeridoo என்ற வார்த்தையோ அதற்கு நிகரான வார்த்தையோ எந்த பூர்வகுடி மொழியிலும் கிடையாது என்பதுதான் உண்மை. இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வார்த்தை. ஒவ்வொரு பகுதியில் வழங்கப்படும் பூர்வகுடி மொழியிலும் இதற்கு வெவ்வேறு பெயர் உண்டு. அவற்றுள் சில – mako, liddung, ngorla, morlo, wuyimbarl, mudburuja, morle, yirdaki, yigi yigi  போன்றவை.


யூகலிப்டஸ் மரத்தண்டிலிருந்தும் பருத்த கிளைகளிலிருந்தும் இக்கருவிகள் தயாரிக்கப்பட்டன. இதற்கான மரத்தைத் தேர்ந்தெடுப்பதே ஒரு கலை. மரம் உயிரோடும் இருக்கவேண்டும், கரையான் அரித்து உள்ளே கூடாகவும் இருக்கவேண்டும். ஏன் கரையான் அரித்த மரமாக இருக்கவேண்டும்?

கரையான்கள் அரித்திருப்பதால் உள்ளே ஏற்பட்டிருக்கும் காற்றறைகள்தாம் டிஜிரிடூவில் சரியான இசையை எழுப்ப உதவுகின்றன. அதனால் அப்படிப்பட்ட மரத்தைத் தேர்ந்தெடுத்து கூரான கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, சரியான அளவுக்கு வெட்டி பட்டைகளை அகற்றி உள்ளே சுத்தம் செய்து உபயோகித்தார்கள். டிஜிரிடூவின் மீது மிருகக்கொழுப்பு அல்லது எண்ணெய் தடவப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. டிஜிரிடூவில் வாய் வைத்து ஊதும் பக்கம் உதடுகளில் உறுத்தாமல் இருக்கவும் ஊதும் காற்று வெளியேறாமல் இருக்கவும் தேன்மெழுகு தடவப்பட்டது. வாய்வைத்து இசைக்கும் பகுதி குறுகலாக ஆரம்பித்து போகப்போக விரிந்து மறுமுனை சற்றுப் பெரியதாக இருக்கும். 

டிஜிரிடூ நேராகவும் இருக்கலாம் கோணல்மாணலாக வளைந்தும் இருக்கலாம். வடிவம் எப்படி இருக்கிறதென்பது பிரச்சனையில்லை.. அதிலிருந்து வெளிப்படும் கணீரென்ற இசையே பிரதானம்.

மூங்கில் காட்டில் வண்டுகள் துளைத்த ஓட்டைகள் வழியாக நுழைந்து வெளியேறிய காற்று இசையாக மாறி புல்லாங்குழல் உருவாகக் காரணமானது போல… யூகலிப்டஸ் மரக்காட்டில் கரையான் அரித்த மரக்கூடுகள் வழியாக நுழைந்து வெளியேறிய காற்றே இந்த டிஜிரிடூ உருவாகக் காரணமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகிறது.

மற்ற காற்றூது கருவிகளை இசைப்பதற்கும் டிஜிரிடுவை இசைப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைக்கும்போது ஊதுகுழல் ஊதுபவரின் வாய்க்குள் இருக்கும். புல்லாங்குழல் போன்றவற்றில் துளையின் மீது வாயை வைத்து ஊதுவர். ஆனால் இந்த டிஜிரிடுவை இசைக்கையில் வாய் முற்றிலுமாய் இசைக்கருவியின் ஊதுதுவாரத்தின் உள்ளே பொருந்தி இருக்கும். மூச்சினை உள்ளிழுத்து நிறுத்தி உதடு, நாக்கு, குரல்வளை இவற்றில் அதிர்வுகளை உண்டாக்கி வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுடன் காற்றை வெளியேற்றுவதன் மூலம் இசை வெளிப்படுகிறது. 

இக்காலத்தில் டிஜிரிடூக்களைத் தயாரிக்க நூதனக் கருவிகள் வந்துவிட்டன. அதோடு கரையான் அரித்த மரங்களின் அவசியமற்றுப்போய் அலுமினியம் போன்ற உலோகங்கள், யூகலிப்டஸ் அல்லாத வேறு மரங்கள், மூங்கில், ப்ளாஸ்டிக், மண் போன்ற பல்வேறு பொருட்களாலும் உலோகங்களாலும் டிஜிரிடூக்கள் தயாரிக்கப்படுகின்றன. டிஜிரிடூவோடு ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் பயன்படுத்திய வேறு சில இசைக்கருவிகள் bull roarer, clapstick, gum leaf போன்றவை.

புல்ரோரர்

புல்ரோரர் (bullroarer) என்பது பின்னாளில் ஐரோப்பியர் வைத்த பெயர். இது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆதிகாலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. நீளமான கயிற்றின் ஒரு நுனியில் அரை அடி முதல் இரண்டு அடி நீளமும் அரை அங்குலம் முதல் இரண்டு அங்குலம் அகலமும் கொண்ட தட்டையான மரப்பலகை இணைக்கப்பட்டிருக்கும். கயிற்றின் மறு நுனியைக் கையில் பிடித்து தலைக்கு மேலே கவண்கல் சுழற்றுவது போல வேகவேகமாகச் சுழற்றும்போது விர்ர்ர் விர்ரெரென்று ஒலி உருவாகும்.

பல மைல்களுக்கு அப்பாலும் கேட்கும் அளவிலான பேரொலி அது. பூர்வகுடிகளின் ஆன்மீக வழிபாடுகளிலும் ஈமச் சடங்குகளின்போதும் தவறாமல் இடம்பெறும் ஒலிக்கருவியாகும். துர்தேவதைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இக்கருவியை பூர்வகுடி ஆண்கள் மட்டுமே கையாளுவர். பெண்கள், குழந்தைகள், பூர்வகுடியைச் சாராத வேற்று ஆண்கள் தொடுவது பாவம் என்ற நம்பிக்கையோடு அதன் ஒலியை வெளியாட்கள் செவிமடுப்பதும் கூட இழுக்கு என்னும் நம்பிக்கை பூர்வகுடிகளிடத்தில் உள்ளது.  

தட்டுக்கோல்கள்

Clapsticks எனப்படும் தட்டுக்கோல்கள் கோலாட்டக் கோல்களை ஒத்து ஆனால் அளவில் பருத்திருக்கும். இவையும் யூகலிப்டஸ் மரத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன. இக்கோல்களை ஒன்றோடொன்று தட்டுவதன் மூலம் பெரும் ஒலி உண்டாகும். டிஜிரிடூவுடன் இசைக்கப்படும் தாளவாத்தியக் கருவி இதுவே ஆகும். பூர்வகுடி மக்கள் இவற்றை பிம்லி அல்லது பில்மா என்று குறிப்பிடுகின்றனர்.

யூகலிப்டஸ் இலை 

யூகலிப்டஸ் இலைகூட அந்நாளில் ஒரு இசைக்கருவியாக இருந்திருக்கிறது. நாம் பூவரச இலையைச் சுருட்டி பீப்பீ வாசிப்பது போல.. அக்காலத்து பூர்வகுடி மக்கள் யூகலிப்டஸ் இலையை படுக்கைவாக்கில் உதடுகளுக்கிடையில் வைத்து ஊதுவதன்மூலம் இசையுண்டாக்கி ரசித்து மகிழ்ந்திருக்கின்றனர். 

யூகலிப்டஸ் காடுகளை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த பூர்வகுடி மக்கள் அதன் மரம், கிளை, பட்டை, இலை மட்டுமல்லாது கரையான் அரித்த கட்டைகளையும் தங்கள் இசை ரசனையோடு பிணைத்து வாழ்ந்த அழகிய வாழ்வியல் ரசனை வியக்கவைக்கிறதல்லவா?

(1 மார்ச் 20 அன்று SBS Tamil வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்வில் ஒலிபரப்பானது.)


&&&
(டிஜிரிடூ தவிர்த்த பிற படங்கள்  இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

28 March 2020

மலரே மலரே உல்லாசம்

தோட்டத்துப் பிரதாபம் - 12
தோட்டத்துப் பூக்களின் அணிவகுப்பு


1. ரோஜா


2.  மலை அரளி

3. கிளாடியோலஸ்


4. கிளாடியோலஸ்


5. மலை அரளி


6. மல்லிகை

7. பயத்தங்காய் பூ

8. கேலண்டுலா

9. ரோஜா

10. ரோஜா

11. ரோஜா

12. ஃப்யூஷியா

13. பாப்பி

14. ரோஜா

15. மல்லிகை

16. ரோஜாக்கூட்டம்

17. கேலண்டுலா

18. ரோஜா
 
19. சால்வியா

20. கிளாடியோலஸ்
(பிரதாபங்கள் தொடரும்)

10 March 2020

அணில்வரிக் கொடுங்காய்


 தோட்டத்துப் பிரதாபம் - 11



கோடையின் வெம்மை தணிக்கும் வெள்ளரியை விரும்பாதவர் யாருண்டு? இளம்பிஞ்சாய் கடித்துத் தின்னவும், பருத்து வெடித்துப் பழமானபின் வெல்லத்துடன் குழைத்துக் குடிக்கவும் எந்த வயதானாலும் மனம் ஏங்குவது உண்மை.

கவிஞர்களுக்கும் புலவர்களுக்கும் இந்த வெள்ளரிக்காய் எவ்வளவு ரசனையைத் தந்திருக்கிறது.

வெள்ளரிக்காய் பிளந்தது போல் 
வெண்ணிலவே நீ சிரிக்காயோ 

என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

வெள்ளரிக்காயை நீளவாக்கில் பிளந்துவைத்த மாதிரி வானத்தில் காட்சியளிக்கும் அந்த பிறைநிலா சிரிப்பதைப் போலிருக்கிறதாம். என்னவொரு அழகான உவமை.


நான் வெட்டிய வெள்ளரிக்காயும் உள்ளே விதைப் பற்களைக் காட்டி தானும் சிரிக்கிறதைப் பாருங்களேன்.

வெள்ளரிவிதை என்றதும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. ஆண் குழந்தைகளுக்கு காது குத்தும்போது அதிகம் கனமில்லாத காதணி ஒன்று அணிவித்து கொஞ்ச நாளில் கழற்றிவிடுவார்கள். குணுக்கு மாதிரி சின்னதாய் ஆடிக்கொண்டிருக்கும் அதற்கு வெள்ளரிவிதை என்று பெயர்.  

நல்ல நெய் என்பதற்கு மணல்மணலா இருக்கும் என்று விளம்பரங்கள் உவமை சொல்லி கேட்டிருக்கிறோம். இளம் வெள்ளரிவிதைகளை உவமை சொல்கிறது பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாடிய புறநானூற்றுப் பாடலொன்று.

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட
காழ்போனல்விளர் நறுநெய்

அணிலின் உடலில் ஓடும் வரிகளைப் போல வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் உள்ளே காணப்படும் விதைகளைப் போன்ற நல்ல வெண்ணிற மணமிகு நெய் என்று பொருள்.

அணில் வரிக் கொடுங்காய் - வெள்ளரிக்காய்க்கு என்ன அழகான பெயர். அணிலின் முதுகில் காணப்படுவதைப் போன்ற வரிகளை உடைய வளைந்த காய் என்று பொருள். 



எங்கள் தோட்டத்தில் காய்த்த வெள்ளரிக்கு அழகான கோடுகளும் கூடவே ஆங்காங்கே வியர்க்குரு போல முட்டுமுட்டாக கொஞ்சம் துருத்தினாற்போல் முட்களும் இருந்தன. கவனமில்லாமல் பற்றினால் சுரீரென்று கையில் தைத்தன. என்ன வெள்ளரியில் முள்ளா என்று ஆச்சர்யமாக உள்ளதல்லவா? எனக்கும் அப்படிதான் இருந்தது. சாண் உயரக் கன்றாக நர்சரியில் வாங்கி வைத்தது என்பதால் என்ன வகை என்றும் தெரியவில்லை.


மறுபடியும் தேடல் துவங்கியது. சில வெள்ளரி வகையின் காய்களின் மேல் இதுபோல் சொரசொரப்பான முட்கள் இருக்கும் என்றும் அது விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் உத்தி என்றும் அறிந்து வியந்தேன். காயைக் கவனமாகப் பறித்த பிறகு பேப்பர் டவல் அல்லது மெல்லிய துணி கொண்டு துடைத்தால் வியர்க்குரு போன்று துருத்திக்கொண்டிருக்கும் முட்கள் உதிர்ந்துவிடுகின்றன. பிறகு கழுவி விட்டு அப்படியே கடித்து உண்ணலாம். சுவை அபாரம். காய் ஒவ்வொன்றும் ஒரு அடிக்கும் அதிகமான நீளத்துக்கு கை மொத்தத்தில் கொடி தாங்காத பாரம்.




வெள்ளரியிலும் ஆண் பூக்கள் பெண் பூக்கள் என்று தனித்தனியாகப் பூக்கின்றன. தேனீக்களின் உதவியோடு மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பூக்கும் அத்தனைப் பெண் பூவும் பழுதில்லாமல் காயாகிப் பலன் கொடுத்தன. சிலவற்றைப் பழுக்க விட்டுப் பார்த்தேன். பயனில்லை. பழத்துக்கு ஏற்ற வகையில்லை என்பது புரிந்தது.



வெள்ளரிக்காய் காய்க்க ஆரம்பித்த பிறகுதான் வெள்ளரிக்காயில் இத்தனை வகை சமையல் செய்ய முடியும் என்று தெரிந்துகொண்டேன். வெள்ளரி சாலட், வெள்ளரிக்கூட்டு, வெள்ளரி சாம்பார், வெள்ளரி பொரியல், வெள்ளரி அவியல், வெள்ளரி பச்சடி, வெள்ளரி மோர், வெள்ளரி அடை என்று நித்தம் நித்தம் வெள்ளரி சமையல்தான். அக்கம்பக்கத்திலும் நட்புகளுக்கும் கொடுத்தது போகவும் ஏராளமாய் மிஞ்சின. சுவையும் ஆரோக்கியமும் மிக்க வெள்ளரியை எந்தெந்த வகையில் முடியுமோ அத்தனை வகையிலும் உட்கொண்டோம்.


வைத்திய நூல்களான பதார்த்த சூடாமணியும் பதார்த்த குணசிந்தாமணியும் வெள்ளரியின் பயன்களைப் பாடல்களின் மூலம் விளக்குகின்றன. 


வித்துத்தான் சலவடைப்பை விலக்குங்காய் வாதமாக்கும்
மெத்திய பழத்தாற்பித்தம் வீடிடுந் நீரும்போகும்
உத்தம மானபிஞ்சா லோங்கிடுஞ் சிறுநீர்போகும்
வைத்திடிக் குணங்கடாமே வளரும்வெள் ளரியின்றன்மை

  -    பதார்த்த சூடாமணி

பொருள் – வெள்ளரிவித்து சல அடைப்பைக் குணமாக்கும். வெள்ளரிக்காய் வாதத்தை உண்டாக்கும். வெள்ளரிப்பழம் பித்தத்தைப் போக்கும். சிறுநீரை வெளியேற்றும். வெள்ளரிப்பிஞ்சு சிறுநீர் கழிவதை ஊக்குவிக்கும்.

பிஞ்சு வெள்ளரிக் காய்க்குப் பேசுதிரி தோஷம்போம்
வஞ்சியரே முற்றியகாய் வாதமாம் – நைஞ்சகனி
உண்டாற் சத்தியமாம் உள்ளிருக்கும் அவ்விதையைக்
கண்டாலும் நீரிறங்கும் காண்

   -    பதார்த்த குணசிந்தாமணி

பொருள் – வெள்ளரிப்பிஞ்சு வாதம் பித்தம் கபம் என்னும் மூன்று தோஷங்களையும் போக்கும். காய் வாதத்தை உண்டாக்கும். வெள்ளரிப்பழத்தின் உள்ளே இருக்கும் விதை சிறுநீரை வெளியேற்றும்.
(உசாத்துணை https://tamilauthors.com/Medicine/049.html)




ஆசை தீருமட்டும் உண்டு முடித்து காய்ப்பு முடிந்த நாளொன்றில் மனசில்லா மனசோடு கொடியை வேரறுத்து நீக்கினேன். மறுபடியும் அப்படியொரு அபாரமான காய்ப்பு கிட்டுமா என்று தெரியவில்லை, கிட்டியதை வெகுவாக அனுபவித்திருக்கிறோம் என்பதே அளவில்லாத சந்தோஷம்.   

&&&&&