இயற்கையின் காதலர், பல்லுயிர் ஆய்வாளர், இயற்கை வரலாற்றாளர், சூழலியல் வல்லுநர், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் சர் டேவிட் அட்டன்பரோ 8 மே 2025-ல் அகவை 99-ஐக் கடந்து நூற்றில் நுழைந்திருக்கிறார். இந்த வயதிலும், வயதென்பது எண்ணிக்கை மட்டுமே என்பதை சிந்தனையாலும் செய்கைகளாலும் உணர்த்தி இளமைத் துடிப்போடு இன்னமும் நம்மோடு வளைய வந்துகொண்டிருக்கும் அம்மகான் நமக்கெல்லாம் வாழும் உதாரணம். அன்னாருக்கு நம் வணக்கமும் வாழ்த்தும்.
![]() |
சர் டேவிட் அட்டன்பரோ |
இயற்கை மீதான ஆர்வம் ஏற்கனவே ஓரளவு இருந்தாலும் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கூர்ந்து கவனிக்கவும் கவனித்தவற்றைப் புரிந்துகொள்ளவும் கூடுதல் தேடல்களில் ஈடுபடவும் முக்கியக் காரணம் டேவிட் அட்டன்பரோவின் ஆவணப்படங்கள்தான்.
நிலம், நீர்,
கடல், காடு, விலங்கு,
பறவை, பூச்சி, தாவரம்
என இயற்கை சார்ந்த அவரது ஆவணத்தொடர்கள் பலவற்றைத் தொலைக்காட்சியில்
பார்த்திருக்கிறேன். கஜானாவைத் திறந்து பொக்கிஷங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்
காட்டுவதுபோல இயற்கையின் அதிசயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்
எடுத்துரைக்கும்போது ஏற்படும் வியப்பும் மலைப்பும் மாற பல காலம் ஆகும்.
Green Planet நிகழ்ச்சியில் 'நடக்கும் புல்விதை' பற்றிச் சொல்லியிருந்தார். நெல் போன்ற விதையின் நுனியில் விறைப்பாக மீசை போல இரண்டு மெல்லிய குச்சிகள் உள்ளன. முதிர்ச்சி அடைந்த விதைகள் நிலத்தில் விழுந்த பிறகு நடப்பதுதான் அதிசயம். ஆம், காற்று வீசும்போது விதையோடு இணைந்திருக்கும் இரண்டு மெல்லிய குச்சிகளும் கால்களாய் மாறிவிடுகின்றன. இரு கைகளும் இல்லாத ஒரு மனிதன் தன்னிரு கால்களையும் மாற்றி மாற்றி ஊன்றி தரையில் தவழ்ந்து செல்வது போல் அவை நகர்ந்து போகின்றன. தாய்ச்செடியை விட்டு வெகுதூரம் சென்ற பிறகு இரண்டு குச்சிகளும் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்பது போல் உதிர்ந்து விழுந்துவிட, விதை அந்த இடத்தில் ஊன்றி வளரத் தொடங்குகிறது.
![]() |
நடக்கும் விதைகள் |
புல்விதை நடப்பதைப் பார்க்கவேண்டுமா? இதோ டேவிட் அட்டன்பரோவே விளக்குகிறார் பாருங்க.
https://www.youtube.com/watch?v=NlUparIDfzE
நிகழ்ச்சியைப் பார்த்த சில நாட்களிலேயே எங்களுடைய தோட்டத்தில் அதே புற்களை, அதே விதைகளை நான் பார்த்தேன். பல வருடங்களாகப் பார்த்த புல் என்றாலும் அதன் சிறப்பு, டேவிட் அட்டன்பரோ நிகழ்ச்சிக்குப் பிறகுதான் தெரிந்தது.
புல்லுருவிக் குருவி பற்றியும் டேவிட் அட்டன்பரோ நிகழ்ச்சியின் மூலமே அறிந்து வியந்தேன். டேவிட் அட்டன்பரோ நிகழ்ச்சியைப் பார்த்திராவிட்டால், தோட்டத்து மரத்தில் வந்தமர்ந்திருந்த, தையல்சிட்டை விடவும் மிகச்சிறிய புல்லுருவிக் குருவியை என்னால் அடையாளம் கண்டுகொண்டிருக்கவே இயன்றிருக்காது. புல்லுருவிக் குருவியின் தனித்துவமான விதைபரப்பல் பற்றியும் தெரிந்திருக்காது.
![]() |
புல்லுருவிக் குருவி |
டேவிட் அட்டன்பரோ தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு கணக்கே கிடையாது. அவருடைய குரல் உணர்வு மயமானது. அக்குரலில் ஆச்சர்யம், மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், ஆதங்கம், கோபம், ஏமாற்றம் எல்லாமும் வெளிப்படும்.
நமக்கு ஆச்சர்யம் தரும் புதுமையான தகவல்களை
அவர் பகிரும்போது அவரது குரலிலும் அதே அளவுக்கு ஆச்சர்யம் வெளிப்படும். இயற்கையின்
அதிசயங்களை அவர் குழந்தையின் குதூகலத்தோடு நம்மோடு பகிர்ந்துகொள்வார். சில
பதிவுகளில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. எந்தத் தலைக்கனமும் இல்லாத மிக மிக
எளிமையான மனிதர் டேவிட் அட்டன்பரோ.
![]() |
களத்தில் டேவிட் அட்டன்பரோ |
நேரடியாகக் களத்துக்குச் செல்வதும்
தகவல்களைச் சேகரித்துத் தொகுத்தளிப்பதும் பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில்
எளிமையாய் விவரிப்பதும், விழிப்புணர்வு ஊட்டுவதும் அவரது சிறப்புகள். அவரிடம் இந்த
பூமிப்பந்தின் மீதான உண்மையான அன்பும் அக்கறையும் தெரியும். அதன் எதிர்காலம்
குறித்த கவலையும் ஆதங்கமும் வெளிப்படும். இயற்கையைச் சீரழிக்கும் மனித குலம் மீதான ஆத்திரமும் ஏமாற்றமும்
வெளிப்படும் அதே சமயம், அதன்
மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தவறாது.
இயற்கைக்கு எதிராய் மனிதர்கள்
செயல்படும்போதெல்லாம் அதனால் விளையவிருக்கும் அபாயங்களைப் பற்றியும் பேராபத்துகளைப்
பற்றியும் எச்சரிக்கை விடுத்தவாறே இருக்கிறார்.
“ஐயோ, மனிதர்களே...
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த பூமியை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்.
இயற்கையின் சார்புச் சங்கிலியில் ஒரு கண்ணி விடுபட்டாலும் மொத்த இயற்கையும்
வலுவிழந்து ஒன்றோடொன்று தொடர்பறுந்து போய்விடும். அவ்வாறு தொடர்பறுந்து
போய்விட்டால் உங்களுடைய வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும். எனவே நீங்கள் வாழும்
இந்தப் பூமியையும் அதன் பல்லுயிர் வளத்தையும், நீர்வளத்தையும்,
நில வளத்தையும் வளிமண்டலத்தையும் சிதைவுறாமல், மாசடையாமல்
பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை” என்று அவர் கதறுவது புரியும். இவ்வளவு அற்புதங்கள்
நிறைந்த இயற்கையை அழித்தொழிக்கும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுவது சரிதானா? என்று
அவர் கேட்காமல் கேட்கும் கேள்விகள் உறைக்கும்.
மனிதர்களின் அறியாமை, அலட்சியம்,
இறுமாப்பு, பேராசை, சுயலாப
நோக்கு போன்றவற்றால் அழிவின் அபாயங்களை சந்திக்கும் இந்தப் பூமியையும் அதன்
பல்லுயிர் வளத்தையும் மீட்டுக் காப்பாற்றும் போராட்டத்தில் தன் வாழ்நாள்
முழுமையையும் அர்ப்பணித்துள்ள டேவிட் அட்டன்பரோவை சிறப்பிக்கும் விதமாக அவரது
99-ஆவது பிறந்தநாளை ஒட்டி குறிப்பிட்ட நாட்கள் மட்டும் திரையரங்குகளில் Ocean
with David Attenborough என்ற ஆவணத்திரைப்படம் திரையிடப்பட்டது.
இதுவே அவரது இறுதி ஆவணப்படமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
![]() |
திரைப்பட போஸ்டர் |
தலைப்பைப்
பார்த்ததும் மீண்டுமொரு ஆழ்கடல் அதிசயத்தைப் பற்றிய ஆவணப்படமாக இருக்கும் என்று ஆவலும் எதிர்பார்ப்புமாய்ச் சென்ற எனக்கு இது ஒரு துன்பியல் படம் என்பது சற்று நேரத்திலேயே
புரிந்துவிட்டது. ஒரு சாமான்யனின் வாழ்வில் பேரிடியாய் வந்திறங்கும் வில்லன்களின்
அராஜக அட்டூழியத்துக்கு நிகராக, அழகு, அமைதி, வளமை என அதனதன் இயல்பில்
பிறந்து வளர்ந்து வாழ்ந்து இனம்பெருக்கி மடிந்து மக்கிப்போவதோடு அல்லாமல் இந்த
பூமிக்கும் பூமிவாழ் மனிதர்க்கும் கூட பற்பல நன்மைகளை நல்கும் கடலுயிரிகளின்
அற்புதத்தைக் காட்ட ஆரம்பித்து நம்மை ஆச்சர்யத்தின் உச்சியில் நிறுத்தி, அப்படியே
கொஞ்சம் கொஞ்சமாக தற்போதைய அவலநிலையை பொட்டில் அடித்தாற்போலக் காட்டி படம் முடியும்போது
அந்த அவலநிலைக்கு மனிதர்களாகிய நாமே காரணம் என்னும் குற்றவுணர்வும் இயற்கையைச் சீரழிப்பதில்
மனிதகுலத்தின் பங்கு எவ்வளவு கொடூரமாக உள்ளது என்னும் உண்மையும் மனம் சுடுகிறது.
![]() |
மாசடையும் கடலை வேதனையோடு பார்த்திருக்கும் டேவிட் அட்டன்பரோ |
ஆவணப்படத்தின் இறுதியில் அதன்
நான்காண்டு கால உருவாக்கம் பற்றிக் காட்டப்படுகிறது. பின்னணியில் எவ்வளவு உழைப்பு!
எவ்வளவு அர்ப்பணிப்பு! எவ்வளவு தொழில்நுட்பம்! ஒவ்வொரு காட்சியையும் படமாக்க
எவ்வளவு சிரத்தை! எவ்வளவு மெனக்கெடல்!
பிரமாண்டமான இயந்திர மீன்பிடிக் கப்பல்களால் ஆழ்கடல் படுகைக்கு விளைவிக்கப்படும் பெரும் சேதத்தைப் பார்க்கும்போது அடிவயிறு கலங்குகிறது. ஒரு மீன் வகைக்காக ஒட்டுமொத்த ஆழ்கடல் படுகைப் பரப்பையும் தோண்டியெடுப்பது கலங்கடிக்கும் உண்மை. யாராவது ஒரு பூவைப் பறிக்க ஒட்டுமொத்தத் தோட்டத்தையே ஜேசிபி வைத்துத் தோண்டி எடுப்பார்களா? அதுவும் ஒரு முறை இருமுறை அல்ல, காயத்தை ஆறவிடாமல் கீறிக்கொண்டே இருப்பதைப் போல இடைவிடாத தொடர் மீன்பிடிப்பு. கனத்த இரும்புச்சங்கிலிகளில் கோர்க்கப்பட்ட இரும்பு ஆணிகளால் கடற்பரப்பைச் சுரண்டி, சேதப்படுத்தி, பவளப்பாறைகளை அழித்து, பற்பல கடலுயிரிகளைக் கொன்று, காசு பார்க்கின்றன பெருந்தனக்கார வியாபார முதலைகள். அவர்களுக்கு எந்த அரசாங்கமும் தடை விதிப்பதில்லை. மாறாக ஊக்கத்தொகை அளித்து உத்வேகம் அளிக்கின்றன என்பதைச் சொல்லும்போது டேவிட் அட்டன்பரோவின் குரலில் வெளிப்படும் இயலாமையும் ஆத்திரமும் ஆதங்கமும் மனம் பிசைகிறது. சூப்பர் மார்க்கெட்களில் ஒரு டாலருக்கும் இரண்டு டாலருக்கும் டின்களில் அடைக்கப்பட்ட ட்யூனா, சார்டைன்ஸ் போன்ற விதவிதமான மீன்களைப் பார்க்கும்போது இனி சேதமுற்ற கடற்படுகையும் அநாவசியமாய்க் காவு வாங்கப்பட்ட கடலுயிரிகளும் நினைவுக்கு வருவதை இனி தவிர்க்க முடியாது.
![]() |
மீன்பிடி கப்பல் |
ஆழ்கடல் நடுவே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் பென்னம்பெரிய கப்பல்கள் கடல்நீரை வடிகட்டி டன் டன்னாக இறால்களைப் பிடிக்கின்றன. அக்கப்பல்களுக்குள்ளேயே அவற்றைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இறால்கள் உடனுக்குடன் தோல் நீக்கி, சுத்தப்படுத்தப்பட்டு, அரைவாசி வெந்த நிலையில் பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைக்கப்படுகின்றன. நிரந்தரத் தொழிற்சாலையாக ஆழ்கடல் நீரில் மிதந்தவண்ணம் அக்கப்பல்கள் செயல்பட, மற்ற சரக்குக் கப்பல்கள் பதப்படுத்தப்பட்ட டின்களை டன் டன்னாக ஏற்றிக்கொண்டு கரை திரும்பி வியாபாரச்சந்தையில் இறக்குகின்றன. இறால்கள் முதிர்ச்சி அடையவும் கால அவகாசம் தரப்படாமல் தொடர்ச்சியாக கடல்நீரை வடிகட்டி வடிகட்டி ஒட்டுமொத்த இறால்களையும் பிடிப்பதொரு பக்கம், சுத்தப்படுத்தப்பட்ட பிறகான இறால் கழிவுகள் சாக்கடை போல அக்கடலிலேயே கொட்டப்படுவதொரு பக்கம் என காட்சிகள் மனிதப் பேராசையால் ஏற்படும் சமுத்திரச் சீர்கேட்டுக்கு மற்றுமொரு உதாரணம்.
கரியமில வாயு வெளியீடு, காலநிலைச்
சீர்கேடு, பனிப்பாறை உருக்கம், கழிவுகளைக் கடலில் கலத்தல், இயந்திர மீன்பிடிப்
படகுகளால் நிகழும் படுகைச் சேதம், அதீத மீன்பிடிப்பால் கடலுயிரிகளுக்கு ஏற்படும்
உணவுத் தட்டுப்பாடு, இயற்கைச் சமநிலை பாதிப்பு என மனிதர்களால் கடல் மற்றும்
கடலுயிரிகளுக்கு உண்டாகும் அழிவைத் தடுக்கவும், அழிந்துவரும் கடல் வளத்தை
மீட்டெடுக்கவும் பாதுகாப்பான கடற்பகுதிகளை (marine reserves)
அமைப்பதொன்றே ஒரே வழி என்பதை மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். இப்போது மொத்தக்
கடற்பரப்பில் சுமார் 3%-க்கும் குறைவான கடற்பரப்பே ‘பாதுகாக்கப்பட்டப் பகுதி’
என்றிருக்கும் நிலையில் அடுத்த மாதம் (ஜூன் 2025) பிரான்சில் நடைபெற உள்ள மூன்றாவது
ஐக்கிய நாடுகள் மகாசமுத்திர உச்சிமாநாட்டில் மொத்தக் கடற்பரப்பில் சுமார் 30%
பகுதிகள் பாதுகாக்கப்பட்டப் பகுதிகளாக அறிவிக்கப்பட உள்ளன என்ற நம்பிக்கை தரும்
தகவலோடு திரைப்படம் முடிகிறது.
இந்தப் பதிவை எழுதி வைத்ததோடு சரி, வெளியிட
மறந்தே போனேன். இப்போது அந்த மூன்றாவது மகாசமுத்திர உச்சிமாநாடும் நடந்து முடிந்துவிட்டதால்
அதைப் பற்றியும் எழுதலாம் என்று தோன்றுகிறது.
![]() |
மூன்றாவது மகாசமுத்திர உச்சிமாநாடு லோகோ |
கடந்த ஜூன் (2025) மாதம் நைஸ் மாநகரில் கோஸ்டா ரிகாவுடன் இணைந்து பிரான்ஸ் நடத்தி முடித்த ஐந்துநாள் மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். விஞ்ஞானிகளும், கடலியல் ஆய்வாளர்களும், கடற்பாதுகாவலர்களும், சூழலியல் ஆர்வலர்களுமாக சுமார் 15,000 பேர் பங்கேற்ற அம்மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
கடற்பாதுகாப்பை
விரிவுபடுத்துதல், கடல் மாசைக் கட்டுப்படுத்துதல், ஆழ்கடல் மீன்பிடி செயல்பாடுகளைக்
கண்காணித்து ஒழுங்கமைத்தல், சர்வதேச நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடலோரத்தீவுகளுக்கான
நிதியுதவியை மேம்படுத்துதல் போன்றவை குறித்து மாநாட்டில் பேசப்பட்டன.
பால்டிக் மற்றும் வட கடல்களில் இருந்து
நீருக்கடியில் வெடிமருந்துகளை அகற்ற ஜெர்மனி 100 மில்லியன் யூரோ திட்டத்தைத் தொடங்கியது.
கடல் நிர்வாகத்தை வலுப்படுத்த நியுசிலாந்து 52 மில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்தது.
ஸ்பெயின் ஐந்து புதிய கடற்பாதுகாப்புப் பகுதிகளை அறிவித்தது. பனாமா மற்றும் கனடா தலைமையிலான
37 நாடுகள் கடலுக்கடியில் ஒலிமாசுபாட்டைக் கையாண்டு அமைதியான மகாசமுத்திரத்தை உருவாக்கும்
உயர் இலட்சியக் கூட்டமைப்பை உருவாக்கின. இந்தோனேஷியாவும் உலகவங்கியும் பவளப்பாறைப்
பாதுகாப்புக்கு நிதியுதவி செய்யும் ‘பவளப்பாறை ஒப்பந்தப் பத்திரத்தை’ அறிவித்தன.
![]() |
மகாசமுத்திர உச்சிமாநாட்டில் ஒரு கருத்தரங்கம் |
இம்மாநாட்டின் கருத்தரங்குகளில் வல்லரசு நாடான அமெரிக்காவின் பிரமுகர்களோ அரசுப் பிரதிநிதிகளோ கலந்துகொள்ளவில்லை. வெறும் பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். ‘பல சிறிய நாடுகளும் பெரிய முடிவுகளை எடுக்கும்போது பெரிய நாடுகள் சிறிய முயற்சி கூட எடுக்காமலிருப்பது துரதிர்ஷ்டமானது’ என்று மாநாட்டின்போது தனது வருத்தத்தைத் தெரிவித்தார் ஃபிஜி தீவின் பிரமுகர் ஒருவர்.
டேவிட் அட்டன்பரோ குறிப்பிட்டதுபோல் மாநாட்டில்
கடற்பரப்புப் பாதுகாப்பு குறித்தத் தீர்மானமும் இயற்றப்பட்டது.
2020-ஆம் ஆண்டின் இறுதியில் 10% கடற்பரப்பு
பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பாக இருக்கும் என்று இயற்றப்பட்ட தீர்மானம் தோல்வியுற்றிருந்தாலும்
2030-ஆம் ஆண்டுக்குள் 30% கடற்பரப்பு பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பாக இருக்கும் என்றும்
அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தற்போது நிர்ணயிக்கப்பட்ட புதிய
இலக்குடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
![]() |
கடற்பின்னணியில் டேவிட் அட்டன்பரோ |
பூமியின் காதலர் டேவிட் அட்டன்பரோவின் வாழ்நாளிலேயே அந்தத் தீர்மானம் செயலாக்கம் பெற்று வெற்றி பெறும் என்று நம்புவோம்.
(புல், புல்லுருவிக் குருவி தவிர்த்த ஏனைய படங்கள் யாவும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)
கீதா! முழுவதும் யுரியுப் படத்துடனும் பார்த்தேன்.
ReplyDeleteமிக நன்று எத்தனை பேர் பார்ப்பார்களோ நாமறியோம்.
இப்படித்தான் நானும் ஆய்ந்து ஆயந்து எழுதுவதுண்டு.
வாழ்த்துகள்....வாழ்த்துகள்!!!!....25-9-2025
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வேதாம்மா.
Deleteநடக்கிற புல் எத்தனை அதிசயம்! முன் பின் அறிந்திராத செய்தி!
ReplyDeleteமக்கள் எப்படி இயற்கையை; கடல்வாழ் உயிரிகளை நடத்துகிறார்கள் என்பது திகிலான செய்தி கீதா. இவற்றை நாம் அறியாதிருப்பதும் முடிந்தவரை நாம் ஏதும் தீங்குகளைச் செய்யாதிருப்பதும் தான் நாம் அமைதியாய் வாழ ஒரு வழி கீதா.....
மனிதர்கள் இயற்கைக்கு விளைவிக்கும் கேடு அவர்களுக்கே திரும்பி வரும் என்னும் உண்மையை உணராதவரை யாவும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யசோ.
Deleteவிழிப்புணர்வைத் தரும் விரிவான பதிவு. நடக்கும் புல்.. சுவாரஸ்யமான தகவல்.
ReplyDeleteசர் டேவிட் அட்டன்பரோ பற்றிய பகிர்வுக்கு நன்றி. அவரது காணொளிகளையும் ஆவணப் படத்தையும் நேரம் கிடைக்கும்போது பார்க்க முயன்றிடுகிறேன். பிரான்ஸில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் வெற்றி பெறட்டுமாக!