வசந்தகாலம் முடிவடைவதற்கு முன்பாகவே கொளுத்தத் தொடங்கிய வெக்கையின் தாக்கத்தை எழுதிய புலம்பல் பதிவோடு போனவளுக்கு, கோடை முடிந்து இதம் தரும் இலையுதிர்காலமும் தொடங்கிய பிறகுதான் வலையில் தலை காட்ட மனம் வாய்த்திருக்கிறது.
கோடையின் கடுந்தாக்கம், பிரியத்துக்குரிய தாய்மாமனின் இழப்பு, புத்தாண்டின் தொடக்கத்திலேயே கவித்தோழி உமா மோகன் அவர்களின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சி போன்ற சில காரணங்களால் எழுதுவதில் ஒரு வித அயர்ச்சியும் சுணக்கமும் ஏற்பட்டுவிட்டது. எழுத்தில்தான் மந்தமே தவிர வாழ்க்கை என்னவோ தன் போக்கில் படுவேகமாகவும் சுவாரசியமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.
நெடும்பயணத்தில் சிறு இளைப்பாறல் |
முதன்முதலாக தோழிகளோடு, சுமார் 2,000 கி.மீ. நீள சாலைவழி சாகசப் பயணம், மகளின் புதிய காரில் புதுப்புது இடங்களுக்கு சந்தோஷப் பயணம், மகளின் வளர்ப்புச் செல்லங்களும் அவற்றின் சேட்டைகளும், புதிய youtube சானல், புதிய கைத்தொழில், தோட்டச் சீரமைப்பு, தோட்டத்தின் புதுவரவுகள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களுக்குக் குறைவில்லாமல் கழிகின்றன நாட்கள்.
பயணத்தில் சுவாரசியம் கூட்டிய இடங்களுள் ஒன்று |
பச்சைப் புல்வெளியும் கரிய மாடுகளும் |
இந்த
வருடம் எதிர்பாராத மகிழ்ச்சியாக Australian native bees – Family planner-ல் நான் எடுத்த புகைப்படமும் சிறு இடத்தைப்
பிடித்துள்ளது. ஆஸ்திரேலியத் தேனீக்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவியற்
தகவல்களையும் அறியத்
தரும் Bee Aware of Your Native Bees என்ற ஃபேஸ்புக் குழுமம் அதில்
பதியப்பட்ட பல்லாயிரக்கணக்கான படங்களுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து இந்த planner-ஐ உருவாக்கியுள்ளது.
நாட்காட்டியின் முன் பக்கம் |
நாட்காட்டியின் கடைசிப்பக்கம் |
வித்தியாசமானவை, அரியவை, தரைவாழ் தேனீக்கள், தேன் கூடு, தேனடை, தேன் சேகரிப்பு, உறக்கம், குமிழ் விடுதல், மகரந்தச் சேர்க்கை என ஒவ்வொரு மாதத்திற்குமான பிரத்தியேகத் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியத் தேனீக்கள் படங்களுள் குமிழ் விடுதல் தலைப்பில் என்னுடைய ஒளிப்படம் தேர்வானது. காலண்டரா ப்ளானரா என்ற ஆலோசனையின்போது பலரும் ப்ளானர் என்று பரிந்துரைக்க, இறுதி வடிவம் ப்ளானர் (சரியான தமிழ்வார்த்தை இன்னும் பிடிபடவில்லை) என்று முடிவானது.
தகவல் பக்கம் |
வழுவழுப்பான தாள்கள். ஒரு அடி நீளம், ஒரு அடி அகலத்தோடு பெரிய அளவிலான திட்டமிடலுடன் கூடிய நாட்காட்டி ஆஸ்திரேலியத் தேனீக்கள் மற்றும் சிறப்புத் தகவல்களோடு அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. தனி விலை 25 ஆஸ்திரேலிய டாலர்கள். மொத்தமாக வாங்கினால் குறையும். நிறைய பேர் ஐம்பது, நூறு என்று வாங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டுள்ள இவ்வாண்டின் நாட்காட்டியில் என்னுடைய ஒளிப்படமும் இடம்பெற்றிருக்கிறது என்பது மகிழ்வும் பெருமிதமும் அளிக்கிறது.
நானும் ஒரு மூலையில்... |
நான் பிறந்த ஏப்ரல் மாதத்தில் என் ஒளிப்படம் இடம்பெற்றிருப்பது தற்செயல் என்றாலும் பிறந்தநாள் பரிசாகப் பெற்றது போல் கூடுதல் மகிழ்ச்சி.
![]() |
நத்துவும் மித்துவும் |
கடந்த 2022-ஆம் ஆண்டு அமேசானில் வெளியான என்னுடைய சிறுவர் நாவல் ‘நத்துவும் மித்துவும்’ தற்போது ஒலிவடிவம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வாழ்வுநல மேம்பாட்டுக்காகச் செயல்படும் ‘மெய்ப்பொருள்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சென்ற பிப்ரவரி 14-ஆம் தேதியிலிருந்து தினமொரு கதையை பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒலி வடிவில் ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த வரிசையில் பத்தாவது கதையாக என்னுடைய ‘நத்துவும் மித்துவும்’ சிறுவர் நாவல் இடம்பெற்றிருக்கிறது. சுமார் 40 நிமிட அவகாசம் எடுக்கும் இக்கதையை Spotify-இல் கேட்கலாம்.
நத்துவும் மித்துவும் ஒலி வடிவம்
‘நத்துவும் மித்துவும்’ கதையை எளிய மொழியில் மிக அழகாகச் சொல்லியிருக்கும் அபிநயா ஸ்ரீகாந்த் அவர்கள், இந்தக் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
![]() |
இணையப் படம் 1 |
1969-ஆம் ஆண்டு எரிக் கார்ல் என்ற அமெரிக்க சிறார் எழுத்தாளர்
மற்றும் ஓவியரால் எழுதி வடிவமைக்கப்பட்டதுதான் The very hungry caterpillar என்ற உலகப் பிரசித்தி
பெற்ற சிறார் படப் புத்தகம். புத்தகம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை சுமார் ஐம்பது
மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. 66 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு
செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான புத்தக வடிவமைப்புக்காக எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளது.
பல தொலைக்காட்சிகளில் கார்ட்டூன்களாக வெளியாகியுள்ளது. ‘உலகச் சிறார் இலக்கியத்தில்
மிக முக்கியமான நூல்களுள் ஒன்று’ என்ற சிறப்பைப் பெற்றது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனின் வெப்பத்தால் முட்டையிலிருந்து பொரிந்து வருகிறது ஒரு குட்டிக் கம்பளிப்புழு. திங்கள் அன்று ஒரு ஆப்பிள் தின்கிறது. ஆனாலும் பசி அடங்கவில்லை. செவ்வாய்க் கிழமை இரண்டு பேரிக்காய் தின்கிறது. அப்போதும் பசியடங்கவில்லை. புதன் கிழமை மூன்று ப்ளம் பழங்களைத் தின்கிறது. அப்போதும் பசி அடங்கவில்லை. வியாழக்கிழமை நான்கு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களையும் வெள்ளிக்கிழமை ஐந்து ஆரஞ்சுப் பழங்களையும் தின்கிறது. ஆனாலும் அடங்காப் பசியுடனேயே இருக்கிறது.
![]() |
இணையப் படம் 2 |
சனிக்கிழமையன்று அது சாக்லேட் கேக், ஒரு ஐஸ்க்ரீம், ஊறுகாய், பாலாடைக்கட்டி, சலாமி (பன்றிக்கறியால் ஆனது), லாலிபாப், செர்ரிப்பழக் கேக், சாஸேஜ் (இறைச்சி), கப் கேக் எல்லாவற்றையும் தின்றுவிட்டு கடைசியாக ஒரு துண்டு தர்ப்பூசணியும் தின்கிறது. அன்று இரவு கடுமையான வயிற்றுவலி வந்து துடிக்கிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒரே ஒரு இலையை மட்டும் தின்கிறது. இப்போது அது குட்டிக் கம்பளிப்புழு இல்லை. குண்டுக் கம்பளிப்புழுவாக மாறியிருக்கிறது. அது தன்னைச் சுற்றி ஒரு கூட்டைப் பின்னி கூட்டுப்புழுவாக மாறுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதிலிருந்து வெளியேறி அழகிய வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கிறது. இதுதான் கதை.
![]() |
நத்துவும் மித்துவும் - கதைக் காட்சி |
இந்தக் கதையை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டும் கீரைகள், மூலிகைகள் இவற்றின் நன்மைகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் சொல்ல விரும்பியும் எழுதியதுதான் நத்துவும் மித்துவும் கதை. இதில் நத்து என்கிற நத்தையும் மித்து என்கிற கம்பளிப்புழுவும் ஒரு தோட்டத்து நண்பர்கள். முட்டையிலிருந்து பொரிந்துவரும் கம்பளிப்புழுவுக்கு எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக்கூடாது, எது எந்த ருசி, எது ஆபத்து, எங்கே, யாரிடம், எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத்தருகிறது நத்தை. மெதுவாக நகரும் காரணத்தால் தோட்டத்தின் மற்ற ஜீவராசிகளால் கேலி செய்யப்படும் நத்தை பிறகு எப்படி அவற்றின் ஆருயிர் நண்பனாக மாறுகிறது என்பதைச் சொல்லி கதையை முடித்திருக்கிறேன்.
![]() |
இணையப் படம் 3 |
ஜகரண்டா மரத்தில் காலா பறவைகள் |
தோட்டத்தின் புதுவரவுகள் என்று குறிப்பிட்டேன் அல்லவா? 2025 முதல்நாள் தோழிகளோடும் புதிய பூக்கன்றுகளோடும் சிறப்பாகத் தொடங்கியது.
புதிய வரவாக நானும் இருக்கிறேன் என்று தலைகாட்டிப் போனார் பாம்பார் ஒருவர். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு சட்டையை மட்டும் கழற்றிவைத்துவிட்டுப் போனவர் இப்போது தானே என் கண்முன் வந்து தன்னிருப்பை உறுதி செய்துவிட்டுப் போனார். கொல்லைப்புறக் கண்ணாடி வழியாக தோட்டத்தை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இவர் விருட்டென்று கடந்துபோனதைப் பார்த்தேன். பாம்பு போல் இருக்கிறதே, என்ன பாம்பாக இருக்கும் என்ற ஆர்வம் உந்த, கேமராவைத் தயார் செய்து கையில் எடுத்துக்கொண்டு கண்ணாடிக் கதவைத் திறந்து வெளியில் சென்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் படம் எடுக்கும் ஆசை (அவர் படம் எடுக்காமல் இருக்கணுமே!) உந்த, போர்டிகோவில் நின்றபடி அவர் சென்ற திசையில் தேடினேன். இல்லை. வேறெங்கோ போய்விட்டார் போலும், என்று நினைத்து திரும்பி கதவை மூடப்போகும் வேளையில் போன வழியிலேயே அவர் திரும்பி வருகிறார். அடித்தது அதிர்ஷ்டம் என்று க்ளிக்கினேன். ஆனால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. படபடப்பு வேறு. அவரோ விருட்டென்று செடிகளுக்குள் சென்று மறைந்துவிட்டார்.
வால் மட்டும்தான் பிடிபட்டது |
கன்னங்கரேல் என்ற உடலைப் பார்த்தபோதே இது red-bellied black snake-ஆகத்தான் இருக்கவேண்டும் என்று கணித்தேன். படத்தை வைத்து இணையத்தில் தேடியபோது என் கணிப்பு உறுதியானது. ஆக, புழு, பூச்சிகள், சிலந்திகள், பறவைகள், தோட்டப்பல்லிகள், நீல நாக்கு அரணை, நத்தை, சுண்டெலி, பெருச்சாளி, பூனை இவற்றோடு தோட்டத்தின் வருகையாளராக இப்போது இவரும் இணைந்துவிட்டார். :)))