27 May 2019

அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ


வல்லமை படக்கவிதைப் போட்டியில் வெகு நாட்களுக்குப் பிறகு கலந்துகொண்டேன். சில படக்காட்சிகள் பார்த்தவுடனேயே உள்ளத்தை ஊடுருவி உலுக்கிவிடும். அப்படியான ஒரு படம்தான் படக்கவிதைப்போட்டி – 213-ல் இடம்பெற்றது. புகைப்படக்கலைஞர் நித்தி ஆனந்த் அவர்கள் எடுத்துள்ள இப்படத்தை தோழி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவு செய்திருந்தார்.

ஒரு முதியவளின் தனிமை, யாரையோ எதிர்பார்த்து ஏமாற்றமும் துளி நம்பிக்கையுமாய் வாசல் அமர்ந்திருக்கும் கோலம் என பார்த்தவுடனேயே மனம் பிசைந்துவிட்டது. அக்காட்சிக்கான அத்தனைக் கவிதைகளிலும் அந்த உணர்வைக் காண முடிந்தது. பங்குபெற்ற கவிதைகளுள் என்னுடைய கவிதை சென்ற வாரத்தின் சிறப்புக்கவிதையாக வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் வல்லமை குழுவினர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

சிறகு முளைத்து நகரம் பறந்த செல்லப்பறவைகள்
இவ்வருடப் பண்டிகைக்கேனும்
கூடு திரும்புமென்னும் நம்பிக்கையோடு
குந்திக் கிடக்கிறது தாய்ப்பறவை!

உள்ளும் புறமும் நடையாய் நடந்து
நோகும் கால்கள் நீவி,
வரவெதிர்பார்த்துப் பார்த்துப்
புரையோடிய கண்கள் பூத்து,
புன்னகை மறந்த உதட்டில் துடிக்கும்
சிறுவிம்மல் மறைத்து
பஞ்சப்பராரியெனக் காத்திருக்கும்
நெஞ்சத்தின் தவிப்பு யாருக்குத் தெரியும்?
உடையின் கிழிசல் பார்வைக்குத் தெரியும்
இந்த உள்ளத்தின் கிழிசல் யாருக்குப் புரியும்?

துணையிலா முதுமை துயரம்
உறவிலாத் தனிமை பெருந்துயரம்
அடக்கிவைக்கும் கேவல் வெடிக்குமுன்னே
அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ?
முடக்கிவைக்கும் ஆவி விடுபடுமுன்னே
முன்னால் வந்து முகங்காட்டிப் போகுமோ?

********

கவிதை குறித்து மேகலா ராமமூர்த்தி அவர்களின் வரிகள்.

துணையிலா முதுமை துயரம் நிறைந்தது. அதனினும் பெருந்துயரம் தருவது உறவிலாத் தனிமை. பிள்ளையின் வரவை எதிர்பார்த்து, விழிபூத்துக் காத்துக்கிடக்கும் இந்த முதியோளின் ஆவி விடுபடுமுன் அம்மா எனும் விளிப்பு இவள் காதில் விழுமோ?” என்ற கூரிய சொற்கள்மூலம் நம் விழிகளை ஈரமாக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. கீதமஞ்சரியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.


11 comments:

 1. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
  கவிதை படித்து முடித்ததும் விழிகளை ஈரமாக்குவது உண்மை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். இன்று பல முதியவர்களின் நிலை இப்படிதானே உள்ளது.

   Delete
 2. எங்கள் ப்ளாகில் ஒரு முதியவரின் படம் போட்டு அதற்காக பல சிறுகதைகள் வந்தனகொடிது கொடிது தனிமை கொடிது என்றே தோன்றியது

  ReplyDelete
  Replies
  1. சிலகாலமாக வலைப்பக்கம் அவ்வளவாக வரவில்லை. அதனால் எங்கள் ப்ளாக்கில் வந்த பதிவைக் கவனிக்கவில்லை.

   தனிமையை நாமாக தேடிக்கொண்டால் இனிக்கும். தானே அமைந்தால் துயரம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 3. நெகிழ்ச்சியான கவிதை. சிறந்த கவிஞர் எனப் பாராட்டு பெற்றமைக்கு வாழ்த்துகள் கீதா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா.

   Delete
 4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 5. மனதை நெகிழ்த்திய கவிதை! ரசித்தேன்.

  நீங்கள் சிறந்தக் கவிஞர் ! படைப்பாளி என்பதில் ஐயமே இல்லை..

  வாழ்த்துகள்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் தோழி.

   Delete
 6. படத்தைப் பார்த்ததும் ஏற்படுகிற சோக உணர்வை, தங்கள் வரிகளால் மேலும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சிறப்புக் கவிதையாக தேர்வானதற்கு நல்வாழ்த்துகள். புகைப்படக் கலைஞருக்கும் வல்லமை குழுவினருக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. வல்லமை தளம் வாசிக்க முடிகிறது. கருத்திட இயலவில்லையே. ஒரு வாரமாகவே இந்தப் பிரச்சனை இருக்கிறது. எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.