26 June 2018

புதிய வேர்கள்

வாழ்க்கையெனும் வண்டி ஓடுதற்கு பெண் சக்கரங்களாக இருக்கிறாள். சில வேளைகளில் அச்சாணியாக இருக்கிறாள். காலத்துக்கேற்றபடி, சூழலுக்கேற்றபடி, தேவைகளுக்கேற்றபடி ஏர்க்கால், சக்கரம், அச்சாணி, நுகத்தடி, பூட்டாங்குச்சி, பூட்டாங்கயிறு எனத் தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கிறாள். தீராத சோதனைப் பொழுதுகளில் அவளே வண்டியாகிறாள், வண்டிமாடாகிறாள், வண்டியோட்டியுமாகிறாள். அப்பெண்மையின் பற்பல பரிணாமங்களை எழுத்தாய் எண்ணமாய் நம்முன் வைக்கிறார் புதிய வேர்கள் நூலாசிரியர் திருமதி ஞா.கலையரசி அவர்கள்.

பெண்ணுடலை, பெண்ணுணர்வுகளைப் பொருட்படுத்தாத, பெண்ணை இயந்திரமாய் எண்ணும் உடைந்துபோன சமூகக் கண்ணாடித்துண்டுகள் பிரதிபலிக்கும் பிம்பங்கள்தான் மாலினியின் கணவனும் (பெண் என்னும் இயந்திரம்), உமாவின் கணவனும் (உண்மை சுடும்). உமாவின் கணவனைப் போன்றோர்க்கு காலம் குழந்தைகளின் வடிவில் வந்து சூடிழுக்கிறது. மாலினியின் கணவனைப் போன்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பினைக் கண்ணில் காட்டாமலா போகும்?

உறவுப் பிணைப்புகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு மனம் நெகிழ்த்தும் கதைகளும், காட்சிப்படுத்தல்களும் பிரமாதம். வைராக்கியத்தை உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக வைத்துக்கொண்டு, தன் ஒருத்திக்காக மகன் பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்னும் கரிசனத்தோடு வாயை மூடிக்கொண்டு தன் வாழ்க்கையை இறுதிவரைக் கடத்துகிறார் ஒரு தாய் (அம்மாவின் ஆசை). கணவரின் மறைவுக்குப் பிறகு வீட்டைக் கூறுபோட நினைக்கும் பணத்தாசை பிடித்த மகள்களை தன் புத்திசாதுர்யத்தால் விரட்டுகிறார் ஒரு தாய் (மூன்று விரல்). தன் கணவனையும் குழந்தையையும் கொன்ற மதவெறி பீடித்தவனையும் ஒரு தாயின் மகவாய்க் கண்டு மன்னிப்பு வழங்குகிறார் ஒரு தாய், கொலைபாதகனான மகனுக்கும் கருணை பெற்றுத்தந்து கண்ணை மூடுகிறார் மற்றொரு தாய் (தண்டனை).

அன்னையர் தினத்தில் மகனின் வாழ்த்துக்காக ஏங்கித் தவிக்கிறார் ஒரு தாய் (அன்னையர் தினம்) உண்மையில் வாழ்த்துக்காகவா ஏங்குகிறது அந்தத் தாய்மனம்? மகனின் நினைவில் தான் இருக்கிறேனா என்பதை அறிந்துகொள்வதற்குதானே அத்தனை ஆவலாதியும்? இறுதிவரிகள் மனம் கனக்கச் செய்கின்றன.  அத்தாயின் உயிர் அக்கரையில் மகனோடு கட்டப்பட்டிருந்தாலும் இக்கரையில் அக்கறையோடு ஆட்டுவிக்கப்படுவது யாரால் என்ற உண்மையை நமக்கு சொல்லி, தாயிடம் மறைத்திருப்பது கதைக்கு வலு கூட்டுகிறது.

ஏழைமை கண்டிரங்கி, தோழமையைத் தொட்டணைத்துப் போகும் உமாவின் நல்லமனத்தைக் காட்டும் சிறுகதை கொலுசு. இறுதித் திருப்பமும் அதன் பின்னிருக்கும் காரணமும் உமாவின் எண்ணத்தை நியாயப்படுத்துகிறது.

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய்.. அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்..

என்ன அழகான வரிகள். இப்படிதான் இரு சிறுநீரகங்களும் கெட்டுப்போன நிலையில், இரத்த உறவுகளும் நம்பச்செய்து ஏமாற்றிக் கைவிட்ட பொழுதில் ஆணிவேராய் நின்று குடும்பத்தரு வீழ்ந்திடாது கைகொடுத்துக் காப்பாற்றுகிறாள் சித்ரா.

\\“பெண்கள் வீக்கர் செக்ஸுன்னு, யார் சொன்னது? இந்த மாதிரி நெருக்கடியான சமயங்கள்ல, அவங்களுக்கிருக்கிற தைரியமும், துணிச்சலும், எந்த ஆணுக்காவது இருக்குமாங்கிறது சந்தேகம்தான். பெரிய பலசாலியா இருக்கிறவன் கூட, சாவு நெருங்குதுன்னு தெரிஞ்சவுடனே, ஆடிப்போயி எவ்வளவு பெரிய கோழையாயிடுறான்?”\\
சித்ராவின் மனவோட்டங்களாய் ஆசிரியர் இங்கு வெளிப்படுத்தியிருக்கும் வரிகளே போதும், ஒரு பெண்ணாய் அவர் சொந்த வாழ்க்கையிலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிவும் தெளிவும் புரியும்.

அரசியல் இப்போது எவ்வளவு பெரிய கேலிக்கூத்தாகிவிட்டது என்று ஆதங்கத்துடன் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். திருமதி கலையரசி அவர்கள் எழுதியுள்ள அரசியல் நையாண்டி சிறுகதையான உண்ணாவிரதத்தில் அந்த ஆதங்கத்தை நகைச்சுவையினூடே வெளிப்படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளுள் நேர்மையாளர்களை விடவும், பணத்தாசை, பதவியாசை, சுயநலம், சுயலாபம், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், அடுத்தவனைக் கவிழ்க்கும் தந்திரம் போன்றவற்றின் பிடியில் சிக்கியோரே அதிகம். அதை எவ்வித பூச்சுமின்றி அழகாகக் கையாண்டு அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறார்.

அரசியலை நையாண்டி செய்யும் அதே சமயம், அதன் அருவருப்பான பக்கங்களைப் புரட்டிக்காட்டவும் தயங்கவில்லை. ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகம் விலைபோன நிலையில் மக்களாட்சி வலுவிழந்து ஆட்டங்காணும் அபாய சூழலையும் வெகு அருமையாக கதைகளினூடே எடுத்துக்காட்டியுள்ளார். ஒரு சொட்டுக் கண்ணீர் கதை தகுந்த சான்று.

இத்தொகுப்பில் என்னை அதிகம் பாதித்த கதைகளுள் இதுவும் ஒன்று. . நல்லறமாய் விளங்கியிருக்க வேண்டிய ஒரு இல்லறத்தில் ஜோதிடம் என்னும் சாத்தான் புகுந்து குடும்ப அமைப்பைச் சிதைத்துப் பாழாக்கியது ஒரு பக்கத் துயரம் என்றால் தங்கள் சுயலாபத்துக்காக ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுத்து, கற்பனைகளை அவிழ்த்து காசு பார்க்கும் ஊடக வியாபாரம் இன்னொரு பக்கத் துயரம். பெண்மையின் திடம் தளர்த்தி அழவைத்து பலவீனமாக்கி ரசிக்கும் சமூகத்தின் கோரமுகம் வெகு இயல்பாக சித்திரிக்கப்பட்டுள்ளது இக்கதையில்.

ஊடகத்தின் அதர்மமும் அரசியல் நரித்தனமும் அப்பட்டமாய்த் தோலுரித்துக் காட்டப்படும் மற்றொரு சிறுகதை புதைக்கப்படும் உண்மைகள். கஞ்சிக்கும் வழியற்ற ஒரு கடைக்கோடி கிராமத்தானின் வாழ்க்கை, ஆட்சியையே புரட்டிப்போடவிருக்கும் தருவாயில் அரசியல்வாதிகள் அவனது வாழ்வைப் பந்தாடுவதை எளிய வரிகளில் எழுதி மனம் துளைக்கிறார். அரசியல் பகடை விளையாட்டில் சிக்கி சின்னாபின்னப்படுத்தப்படும் அப்பாவிகளின் வாழ்க்கையை இதைவிடவும் அழுத்தமாய் சொல்லிவிடமுடியாது.

எல்லா வகை உணர்வுகளுக்கும் ஆட்பட்டதுதானே மனித மனம். மிகவும் சீரியஸான கதைக்களங்களுக்கு நடுவே சிரிக்கவைக்கவும் தவறவில்லை ஆசிரியர். ஒரு பல்லின் கதை, சாதுர்யம், நாய்க்கடி, பெண் பார்க்கும் படலம் என சரவெடியென சிரிப்புப்பட்டாசுகளைப் பத்தவைக்கிறார். உடைந்த பல் படும் பாடு கதையின் நாயகிக்குப் பெரும்பாடாய் இருந்தாலும் வாசகர்க்கு சுவாரசிய விருந்து. நாய்மாமா பெயர்க்காரணம் நினைக்கும்போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கிறது. பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணுக்கு ஆடத்தெரியுமா பாடத்தெரியுமா என்ற பையன் வீட்டாரின் வழக்கமான கேள்விக்கு பெண்ணின் அப்பா தரும் பதில் அதிர்வெடி.

வாழ்க்கையில் பாடங்கற்றுத் தரும் ஆசான்கள் எவராகவும் இருக்கலாம். எங்குவேண்டுமானாலும் இருக்கலாம். பெரிய ஷோரூம் வாசலில் முணுக் முணுக்கென்ற விளக்கை வைத்துக்கொண்டு நாட்டுக்கொய்யாப் பழங்களை கூறுகட்டி விற்கும் கிழவியாக இருந்து உத்வேகம் தரலாம் (நம்பிக்கை). அதிகார மிதப்பில் உறவுகளை அலட்சியம் செய்யும் மாமாவாக இருந்து அடுத்தவர் உதவியின்றி சொந்தக்காலில் நிற்கும் உறுதியைத் தரலாம் (திருப்புமுனை).

நூலின் தலைப்புக்கதையான புதிய வேர்கள் வாசித்து முடித்தபின்னும் நெஞ்சத்தில் நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கிறது. திருமணமாகி வெள்ளிவிழா முடிந்த என்னையும் என் தாய்வீட்டுப் பிரிவை எண்ணி ஏங்கச் செய்கிறது எனில் ஆசிரியரின் எழுத்தின் வல்லமையை என்னவென்று சொல்வது?

\\ திருமணம் முடிந்தவுடன் நான் வேற்று மனுஷியாகிவிட்டது போல ஓர் உணர்வு. எனக்கும் இந்த வீட்டிற்கும் இருந்த பந்தம் முறிந்துவிட்டது. உரிமை பறிபோய்விட்டது. இந்த வீட்டைச் சுற்றி, உறவுகளைச் சுற்றியிருந்த என் ஆணிவேர் அறுபட்டு விட்டது என்று சொல்வதை விட பலவந்தமாகப் பிடுங்கப்பட்டுவிட்டது என்று சொல்வது பொருத்தமாயிருக்கும்.\\

கண்கலங்காமல் இந்த இடத்தை எவரும் எளிதில் கடந்துவிட முடியாது. சூழலுக்கேற்றபடி தன்னைப் பொருத்திக்கொள்ளும் பெண்ணியல்பும் அன்புருவான கணவனுமாக ஒரு இனிய இல்லறத்தின் துவக்கம் இக்கதையில் ஒரு கவிதை போல காட்டப்பட்டுள்ளது.

இப்படி அரசியல், சமூகம், தனிமனித வாழ்க்கைப் பிரச்சனைகளை மற்றும் உணர்வுகளை மையமாய் கொண்டு எழுதப்பட்ட இக்கதைகள் வல்லமை, தமிழ்மன்றம், நிலாச்சாரல், உயிரோசை போன்ற இணைய இதழ்களிலும், தினமணிக்கதிர் போன்ற வெகுஜனப் பத்திரிகையிலும் வெளிவந்தவை. மாறுபட்ட கதைக்களங்களும், மனித குணாதிசயங்களும், முன்வைக்கும் பாங்கும், சரளமான எழுத்தோட்டமும் கதைகளை ஆரம்பம் முதல் இறுதிவரை தொடர்ந்து வாசிக்கச் செய்கின்றன. நூலின் தலைப்புக்கேற்ற அட்டகாசமான அட்டைப்படம். இதுவே கோ பதிப்பகத்தின் முதல் வெளியீடு என்பதால் அச்சிலேற்றும்போது ஏற்பட்டுள்ள சில பிழைகளைப் பெரிதுபடுத்தாமல் கடந்துபோகலாம். இனிவரும் நாட்களில் பதிப்பகத்தார் சிரத்தை எடுத்து சீராக்குவார்கள் என்று நம்புவோம்.

நூலாசிரியர் திருமதி கலையரசி அவர்கள், தன்னுரையில், கதைகள் கூடுமானவரை, எளிய நடையில், நடைமுறை வாழ்வைப் பிரதிபலிக்கும் யதார்த்தத்துடனும் உயிரோட்டத்துடனும் இருக்கவேண்டும் என்பது என் நோக்கம். வாசகர்கள், கதை நிகழ்வுகளையும் மாந்தர்களையும் மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தால் அதுவே என் எழுத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கொள்வேன் என்கிறார். அவர் எழுத்துக்கு வெற்றி கிட்டிவிட்டது என்றே சொல்வேன்

தொடர்ந்து எழுதிட அன்பு வாழ்த்துகள் அக்கா. 


12 comments:

 1. நல்லதொரு விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 2. Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. அச்சு நூலின் முதல் விமர்சனம் உன்னுடையது தான் கீதா! அதற்கு என் முதல் நன்றி. விரிவாகவும், ஆழமாகவும் அமைந்த விமர்சனம் கண்டு மனம் நெகிழ்ந்தேன். வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி! ஆறு மாதங்களாக எந்தப் பதிவுமில்லாததிருந்த என் வலைப்பூவில் இதற்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன். மீண்டும் என் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அச்சுநூலின் முதல் விமர்சனம் என்னுடையதுதான் என்றறிய மகிழ்வாக உள்ளது அக்கா. தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும், வலைப்பூவில் இணைப்பு கொடுத்திருப்பதற்கும் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 4. வாழ்த்துகளும் பாராட்டுகளும். கதைகளை ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லி சிலாகித்திருப்பதிலிருந்து கதைகளின் சிறப்பை உணர முடிகிறது. நல்லதொரு விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கூட சிலாகிக்கலாம். பதிவு நீண்டுவிடுமே என்றஞ்சி தவிர்த்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. உங்க விமர்சனம் கதைகளை வாசிக்க ஆவலை ஏற்படுத்தியிருக்கு. அருமையாக விமர்சித்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் ப்ரியா.

   Delete
 6. நல்லதொரு விமர்சனம். நன்றாக ஒவ்வொரு கதையாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். பாராட்டுகள்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. விமர்சனத்தை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.