வருடந்தோறும் மே, ஜூன் மாதங்களில் மூன்று வாரங்களுக்கு சிட்னி நகரம் முழுவதும் ஒளி ஒலிக் கொண்டாட்டம் களைகட்டிவிடும். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் vivid எனப்படும் சிட்னியின் ஒளித் திருவிழாவுக்கு இன்று வயது 10. இவ்வொளித்திருவிழாவைக் காண்பதற்கென்றே மற்ற மாநிலங்களிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் சிட்னிக்கு வருகை தருகின்றனர்.
குளிர்காலம் என்பதால் சூரியன் ஐந்து மணிக்கே பணிமுடித்து முடங்கிவிட, மையிருட்டு கவ்வும் மாலைப்பொழுதில் சட்டென்று சொடுக்கு போட்டாற்போல சிட்னி நகரம் முழுவதும் வண்ணங்களை வாரியிறைத்து ஹோலி கொண்டாடத் தொடங்கிவிடும்.
ஹார்பர்
பாலம், ஓபரா மாளிகை, வடக்கு சிட்னி, டார்லிங் ஹார்பர், தரோங்கா உயிர்க்காட்சி சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களும் வண்ண ஒளிவெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும். ஆவென வாய்பிளந்து வந்த சனம் அத்தனையும் அண்ணாந்து பார்த்திருக்கும். பொழியும் ஒளிமழையில் முழுக்க நனைந்திருக்கும். வழியும் வண்ணங்களின் அழகை அள்ளிக்கொள்ள விழியிரண்டு போதாது. வர்ணித்தெழுத வார்த்தைகளும் போதாது.
விவித்
எனப்படும் இவ்வொளித்திருவிழாவைக் காண்பதற்கென்றே மற்ற மாநிலங்களிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் சிட்னிக்கு வருகை தருகின்றனர். ஒளிக் கொண்டாட்டத்தோடு, இசை, உணவு, மது, கேளிக்கை நிகழ்வுகள், வேடிக்கை விளையாட்டுகள் என 23 நாட்களுக்கும் குளிர் பற்றிய பிரக்ஞையற்று உல்லாசமாய் உலாவருவர் மக்கள். விவித்தின் சென்ற வருடப் பார்வையாளர் எண்ணிக்கை சுமார் 23,30,000 பேர் என்றும் அரசுக்குக் கிடைத்த வருமானம் சுமார் 143 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் அறிவிக்கிறது ஒரு தகவல்.
இந்த
வருடம் குழந்தைகளைக் கவரும் வகையில் விவித்தின் முக்கிய அங்கமாக இடம்பிடித்திருந்தனர் Snugglepot, cuddlepie இருவரும். இவர்களை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, குழந்தைகளாயிருந்து வளர்ந்த பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இவர்கள் இருவரும் சாதா குழந்தைகள் அல்ல.. குட்டியிலும் குட்டிக் குழந்தைகள். எவ்வளவு குட்டி என்றால் விரல் நுனிக்குக்கூட பொருந்தாத குட்டிக் குமிழ் வடிவ யூகலிப்டஸ் விதைகள்தான் அக்குழந்தைகள். அக்குழந்தைகளின் பெயரே gumnut babies. இவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு, பார்வைக்குக் கரடுமுரடான பாங்ஸியா விதைக்கூம்புகளை வில்லனாக சித்தரித்து காட்டில் அவர்கள் படும் பாட்டையும் சாகசங்களையும் விவரிக்கும் கதைத்தொடர்கள் பல எழுதிக்குவித்துள்ளார் ஆஸ்திரேலிய எழுத்தாளர் திருமதி செசிலியா மே கிப்ஸ். இவர் குழந்தை எழுத்தாளர் மட்டுமல்லாது, ஓவியர் மற்றும் கேலிச்சித்திரம் வரைபவரும் கூட. இவரது காலம் 1877 – 1969.
Snugglepot,
cuddlepie கதைகளை
முதன்முதலாக அவர் வெளியிட்டது 1918-ல் என்பதால் 2018-ல் அதன் நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக இவ்வருட விவித் ஒளி-ஒலித் திருவிழாவின் மையக்கருவாக இக்கதைகளின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. கதையம்சத்தோடு கூடிய திகில் பின்னணிக் காட்சிகளும் திடுக்கிடச் செய்கின்றன. எப்போதும் ஒளிமழையோடு வான்மழையும் கொஞ்சம் போட்டிபோடும். இம்முறையும் தவறவில்லை. இருந்தும்
கொண்டாட்டத்துக்குக்
குறைவில்லை.
இவ்வருடம் நான் எடுத்த சில ஒளிப்படங்கள் நீங்களும் ரசிக்க..
மிக மிக அற்புதமான புகைப்படங்களுடன்
ReplyDeleteவிளக்கிய விதம் மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்
ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deleteஒளித்திருவிழா மிக அருமை.
ReplyDeleteஅழகான படங்கள்.
விவரங்கள் அருமை.
ரசித்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி மேம்.
Deleteவா..வ்.. சூப்பர்ப் கீதா. எல்லாமே மிக மிக அழகா இருக்கு. தகவல்களும் தந்து எங்களையும் பார்க்க வைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteரசித்து மகிழ்ந்தமைக்கு அன்பும் நன்றியும் ப்ரியா.
Deleteவாவ் படங்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்களுடைய பாராட்டு பெரும் உற்சாகம் தருகிறது. நன்றி வெங்கட்.
Deleteமிக அழகிய காட்சிகள்...
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அனுராதா.
Deleteபிரகாசிக்கும் ஒளி ஓவியங்கள்!! கண்ணெடுக்க முடியாப் பேரழகு!!!
ReplyDeleteபிரமாண்டத்தை கொஞ்சமாய் சிறைபிடித்து வந்தேன். நீங்கள் ரசித்தது கண்டு மகிழ்ச்சி. நன்றி நிலாமகள்.
Delete