23 March 2016

கரப்பான்பூச்சிப் பந்தயம்


குதிரைப் பந்தயம் தெரியும். நாய்ப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் ஏன் நெருப்புக்கோழிப் பந்தயம் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன கரப்பான்பூச்சிப் பந்தயம்? அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவில் இதற்கும் இடமுண்டு. வருடாவருடம் ஆஸ்திரேலியாவின் தேசியத்திருநாள் ஒன்றில் நடைபெறும் ஒரு விறுவிறுப்பான கொண்டாட்டம்தான் இந்த கரப்பான்பூச்சிப் பந்தயம்.

(முன்குறிப்பு - கரப்பான்பூச்சி என்ற பெயரைக் கேட்டாலே ஒவ்வாதவர்கள் இப்பதிவைத் தவிர்க்கவும்.  ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம். :))))




சுமார் நான்கு மீட்டர் விட்டம் கொண்ட வட்டத்தளம்தான் பந்தயக்களம். போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கரப்பான்பூச்சியின் முதுகிலும் அடையாள எண் குறியிடப்படும். போட்டி நடத்துவதிலேயே அதுதான் மிகவும் கடினமான வேலை என்கிறது போட்டியை நடத்தும் நிறுவனம். அடையாள எண்ணிடப்பட்ட கரப்பான்பூச்சிகளை ஒரு பெரிய கண்ணாடிக்குவளையில் போட்டு எடுத்துவந்து களத்தின் மையத்தில் கவிழ்ப்பார்கள். கரப்பான்பூச்சிகள் எந்தத் திசையிலும் ஓடலாம். வட்டத்தின் சுற்றெல்லையை எது முதலில் தொடுகிறதோ அதுவே வெற்றி பெற்ற கரப்பான்பூச்சியாக அறிவிக்கப்படும். இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர்கள் முதல் மூன்று கரப்பான்பூச்சிகளைப் பிடித்து வெற்றியை உறுதிசெய்வார்கள். 

இப்போட்டியானது ஜனவரி 26ஆம் நாள் Australia Day எனப்படும் ஆஸ்திரேலியா தினக்  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் நடத்தப்படுகிறது.  இந்தப் பந்தயம் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி சமூக நல மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. 




அதென்ன ஆஸ்திரேலியா தினம்? முதன்முதலாக ஐரோப்பியர் ஆஸ்திரேலிய மண்ணில் அதிகாரபூர்வமாகக் குடியேறிய தினம்தான் அது. பதினொரு கப்பல்களில் சுமார் 1000 கைதிகளையும் அதிகாரிகளையும் பிற தொழிலாளர்களையும் அவர்களுக்குத் தேவையான சாமான்களையும் ஏற்றிக்கொண்டு ஐரோப்பாவிலிருந்து புறப்பட்ட  முதல் கப்பல் தொகுதி 1788ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றுதான் ஆஸ்திரேலியாவை வந்தடைந்தது. அந்த நாளின் நினைவைக் கொண்டாடும்  வகையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் அரசு விடுமுறையோடு ஆஸ்திரேலியா தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

சரி, இப்போது கரப்பான்பூச்சிப் பந்தயத்தின் வரலாற்றுக்கு வருவோம்.. கரப்பான்பூச்சிக்குப் பெரிய வரலாறு இருந்தாலும் கரப்பான்பூச்சிப் பந்தயத்துக்கு அப்படியொன்றும் பெரிய வரலாறு இல்லை..

1982 ஆம் வருடம். பிரிஸ்பேன் நகரத்தில் ஸ்டோரி ப்ரிட்ஜ் ஹோட்டலில் மதுவருந்தும் அறை. இரு சூதாடிகளுக்கிடையே சூடாக ஒரு வாக்குவாதம். விஷயம் வேறொன்றுமில்லை.. யாருடைய ஊர் சிறந்த ஊர் என்பதுதான் பிரச்சனை. ஒருவன் சொல்கிறான்

எங்க ஊர்தான் உங்க ஊரை விடப் பெரியது. எங்கள் மக்கள்தான் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள்.

சும்மா சொல்லிக்கொண்டே இருக்காதே.. நிரூபி

நிரூபிக்க என்ன இருக்கிறது? அதுதான் உண்மை.  எல்லாவற்றிலும் நாங்கள்தான் சிறந்தவர்கள். உங்கள் ஊர் கரப்பான் பூச்சி கூட எங்கள் ஊர் கரப்பான்பூச்சிக்கு முன்னால் நிற்கமுடியாது.  தெரியுமா?”  

அப்படியா சொல்றே? பந்தயம் வைத்துப் பார்க்கலாமா?”

உனக்கும் எனக்குமா?”

இல்லை இல்லை உங்க ஊர்க் கரப்பான்பூச்சிக்கும் எங்க ஊர்க் கரப்பான்பூச்சிக்கும்

வைத்துக்கொள்வோமே.. எங்கே? எப்போது?”

நாளை இதே நேரம் இதே இடம். நீ உன்  ஊர்க் கரப்பான்பூச்சியைக் கொண்டுவா.. நான் என் ஊர்க் கரப்பான்பூச்சியைக் கொண்டுவரேன். ஒரு கை பார்த்திடலாம்.

இப்படிதான் இரு குடிகாரர்களுக்கிடையே ஆரம்பித்தது அன்றைய கரப்பான்பூச்சிப் பந்தயம். கிட்டத்தட்ட 35 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊர்களுக்கிடையில் ஆரம்பித்தப் போட்டி இப்போது தனிநபர்களுக்கிடையிலானப் போட்டியாகிவிட்டது. பந்தயத்துக்கான ஒழுங்கும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டுஅதே ஹோட்டலில் இப்பந்தயமானது தங்கக்கோப்பைக்கான பந்தயமாக  மிக விமரிசையாக  விழா போல  ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.  அது மட்டுமா? ஆஸ்திரேலியாவின் இந்த கரப்பான்பூச்சி பந்தயம் அமெரிக்காவில் பல சூதாட்டவிடுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு பெருமளவில் பணயப்பணம் விளையாடும் களமாகவும் திகழ்கிறது.




ஆஸ்திரேலியா தினத்தன்று ஸ்டோரி ப்ரிட்ஜ் ஹோட்டல் வளாகம் காலையிலிருந்தே களைகட்ட ஆரம்பித்துவிடும். பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் குடியும் கும்மாளமுமாக குழுமிவிடுவார்கள். காலை பதினொரு மணியளவில் ஆரம்பித்து மாலை வரை பதினான்கு பந்தயங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். பந்தயங்களில் பங்கேற்கும் கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டுமாம்.

ஒரு கரப்பான்பூச்சி ஒரு பந்தயத்தில் மட்டும்தான் கலந்துகொள்ளவேண்டும். அதில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, வெளியேறிவிடவேண்டும். அடுத்தடுத்தப் பந்தயங்களில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. பந்தயத்தில் கலந்துகொள்ளும் கரப்பான்பூச்சி ஊர்ந்தோடிதான் எல்லைக்கோட்டை அடையவேண்டும். பறந்துபோய் எல்லையைத் தொடுவது போட்டிவிதிகளுக்குப் புறம்பாகும். பந்தய விதிமுறைகளைப் பின்பற்றாமல் பறக்கும் முயற்சியில் ஈடுபடும் கரப்பான்பூச்சிகள் போட்டியிலிருந்து விலக்கப்படும். 

தங்கள் வீட்டுக் கரப்பான்பூச்சிகளின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள் அவற்றையே போட்டிக்குக் கொண்டுவரலாம். அப்படி நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது கரப்பான்பூச்சி கிடைக்காதவர்கள் போட்டியை நடத்தும் நிறுவனத்திடமிருந்து கரப்பான்பூச்சிகளை விலைகொடுத்து வாங்கலாம். பந்தயத்துக்காகவே உருவாக்கப்பட்டு வளர்க்கப்படும் திறமைவாய்ந்த கரப்பான்பூச்சிகளும் விற்பனைக்கு உண்டு. ஒரு கரப்பான்பூச்சியின் விலை அதிகமில்லை ஜென்டில்மென் ஐந்தே ஐந்து டாலர்கள்தான். போட்டியில் கலந்துகொள்ள கட்டணம் ஒரு ஐந்து டாலர்கள்.. மொத்தமாய் பத்து டாலர்கள் செலவழித்தால் போதும்.. நம்மூர் மதிப்பில் கணக்குப் போட்டால் சுமார் ஐநூறு ரூபாய்தான்.

பந்தயத்தின்போது வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் மேடையிலிருந்து புறப்பட்டு பார்வையாளர்களை நோக்கிப் பாயும் கரப்பான்பூச்சிகளைக் கண்டு வீறிட்டு அலறிக் குதூகலித்துக் கொண்டாடுகிறது கூட்டம். வெற்றி பெற்ற கரப்பான்பூச்சி(யாளரு)க்கு முதல் பரிசாக வெற்றிக்கோப்பையும் 200 டாலருக்கான வவுச்சரும்! இரண்டாம் பரிசாக 25 டாலர்கள்! மூன்றாம் பரிசு 15 டாலர்கள்! 

கரப்பான்பூச்சிகளுக்கு மக்கள் வைக்கும் சில விசித்திரப் பெயர்கள் நகைப்பை வரவழைக்கும். இதுவரையிலான பந்தயங்களில் வெற்றிக்கோப்பையை வென்ற சில கரப்பான்பூச்சிகளின் வேடிக்கையான பெயர்கள்  Alfred Hitchcocky (2013), Lord of the Drains (2003), www.hardcocky.com (2000), Drain Lover (1992), Desert Storm (1991), Millenium Bug (1999),    Captain Cockroach (1988), Not A Problem (1984).




இந்தக் கொண்டாட்டத்தின் இன்னொரு அம்சமாக அழகிப்போட்டியும் நடைபெறுவதுண்டு. வெற்றி பெற்ற அழகிக்கு miss cocky என்ற பட்டம் சூட்டப்பட்டு பரிசளிக்கப்படும். ஒரு வருடத்துக்கு இப்போட்டிக்கான அதிகாரபூர்வப் பிரதிநிதியாக அவர் செயல்படுவார்.

சரி, பந்தயம் முடிந்தபின் அவ்வளவு கரப்பான்பூச்சிகளும் எங்கே போகும்? வேறெங்கு? நேராக பரலோகப் பயணம்தான். பந்தயம் முடிந்த கையோடு எல்லா இடங்களிலும் பூச்சிமருந்து அடிக்கப்பட்டுவிடும். இண்டு இடுக்கில் ஒளிந்திருப்பவற்றையும் மருந்தின் வீரியம் மரணிக்கச்செய்துவிடும். இந்த சம்பவத்துக்கு வெற்றிபெற்ற கரப்பான்பூச்சியும் விதிவிலக்கல்ல என்பதுதான் உச்சபட்ச வேடிக்கை.

&&&
(படங்கள் உதவி - இணையம்)


20 comments:

  1. ஆண்டுதோறும் இந்தியக் குடியரசு தினத்தில் ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகளுக்கு இவ்வாறு மோட்சம் அளிக்கப்படுகிறது, அங்கே. கேட்க கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது. என்ன செய்ய?

    மிகவும் விசித்திரமான ஆச்சர்யமான ஆஸ்திரேலியத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கரப்பான் பூச்சி என்றாலே அலறும் பலருக்கு மத்தியில் அவற்றுக்காக இரங்கும் தங்கள் இளகிய உள்ளம் கண்டு வியந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார்.

      Delete
  2. கேள்விப்பட்டதேயில்லை இப்படியொரு பந்தயத்தை. வியப்பூட்டும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் தோன்றியிருக்கிறதே அந்த குடிகாரர்களுக்கு! அதை வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டது அந்த ஹோட்டல் நிறுவனம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  3. நானும் இன்றுதான் கேள்விபடுகிறேன்...பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தற்செயலாய் அறியநேர்ந்தது.. நான் அறிந்து வியந்ததை இங்கு அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன். ஒரு சிறு விண்ணப்பம்.. உங்கள் பெயரை சொடுக்கினால் உங்கள் தளம் பார்வையில் படும்படி செட்டிங்க்ஸ்- இல் திருத்தம் செய்தால் நான் உட்பட பலருக்கும் அது உதவும். தங்கள் தளத்துக்கு வர இயலாமையால் தங்கள் பதிவுகளை வாசிக்க இயலவில்லை..

      Delete
  4. நானும் இன்றுதான் கேள்விபடுகிறேன்...பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. புதிய தகவல். முடிவு எதிர்பார்த்தேன்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகாதேவன். காரியம் முடிந்தபின் கழுத்தை நெறிப்பதுதானே நம் மானிட இயல்பு. :)))

      Delete
  6. பந்தயத்தில் கலந்து கொள்ளும் கரப்பான் பூச்சிகளுக்கு ஊக்கமருந்து கொடுப்பார்களோ. தெரியாத நிகழ்வு இண்டெரெஸ்டிங்

    ReplyDelete
    Replies
    1. கொடுத்தாலும் கொடுக்கலாம்.. ஏனெனில் பந்தயத்துக்கென பிரத்தியேகமாக வளர்ப்பதாக குறிப்பிடுகிறார்களே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. வித்தியாசமான, அறிந்திராத செய்தியைப் பற்றிய அழகான பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வியப்பாக இருந்தமையால் அனைவரோடும் பகிரத்தோன்றியது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  8. மிகவும் விந்தையான பந்தயம் சகோதரியாரே
    வியந்தேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. இப்படியும் சில வேடிக்கை நிகழ்வுகள்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  9. வித்தியாசமான விளையாட்டு. அறியாத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ்நாட்டிலும் ’ஈ’ விளையாட்டு என்று ஒன்று விளையாடுவார்கள்.( அப்போது நான் பள்ளிச் சிறுவன் ) விளையாட்டின் போது , பங்கு பெறுபவர்கள் , ஐந்து அல்லது பத்துகாசுகளை, நிலத்தில் அடையாளம் செய்து கொண்டு வைப்பார்கள். (அப்போது இவற்றிற்கு மதிப்பு உண்டு. 5 பைசாவுக்கு டவுன்பஸ்சில் டிக்கெட் எடுத்தது ஒரு காலம்.) யார் காசில் அங்கு வரும் ‘ஈ’ முதலில் உட்காருகிறதோ , அவர் மற்ற எல்லா காசுகளையும் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் ஒரு சூதாட்டம்தான். மார்க்கெட் பகுதியில் சுமை தூக்குபவர்கள், ரெயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர்கள் என்று இவர்கள் மத்தியில் இது பிரபலம்.

    ReplyDelete
    Replies
    1. அட, ஈக்களைக் கொண்டு இப்படியும் ஒரு விளையாட்டு இருந்திருக்கிறதா? மிகவும் சுவாரசியமாக உள்ளது. இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன். வருகைக்கும் புதியதொரு தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. புதிய தகவல். வித்தியாசமான விளையாட்டாக இருக்கிறதே. முதலில் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆஹா கரப்பான் பூச்சியும் "பூச்சி" என்ற வசைச் சொல் இல்லாமல் மதிக்கப்படுகின்றதே என்று நினைத்தால் இறுதியில் எல்லாமே கொல்லப்படுகின்றன என்று அறிந்ததும் வேதனையாக இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழி. இங்கு pest control மிகத்தீவிரமாக கடைபிடிக்கப்படும்போதும் இப்படியொரு விளையாட்டு இருப்பதை அறிந்து எனக்கு அளவிலாத வியப்பு.. இப்போதும் அது வருடந்தவறாமல் தொடர்ந்து நடைபெறுவதும் அதற்குப் பலத்த வரவேற்பு இருப்பதும் அறிந்து கூடுதல் வியப்பு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  11. அன்புள்ள

    வணக்கம். மாறுதலான போட்டி என்றாலும் அவை கடைசியில் கொல்லப்படுவது வருத்தமே. தங்களின் எண்ணங்களை வெளியிடமுடியாத பூச்சிகளின்மேலாக இப்படியொரு மனிதனின் அடக்குமுறை பொழுதுபோக்கிற்கு மரணம்தான் பரிசு எனும்போது கரப்புகள் பாவம்தான்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.