27 June 2015

ஒண்டவந்த பிடாரிகள் – 17 (யானைப்புல் & காம்பா புல்)


காம்பா புற்கள்


தற்போதுள்ள ஆஸ்திரேலியாவின் quarantine system மிக பலமானது.  அதை மீறி ஒரு பூவோ, காயோ, பழமோ, விதையோ உள்ளே வந்துவிடமுடியாது. அப்புறமும் எப்படி இப்படி? பரவியிருக்கும் தாவர வகைகளில் பெரும்பாலானவை இந்த க்வாரண்டைன் சிஸ்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இறக்குமதியானவை என்கிறார்கள். அப்போது இந்த அளவுக்கு இவற்றின் ஆக்கிரமிப்பு இருக்கும் என்பதோ மற்றத் தாவரங்கள் பாதிக்கப்படும் என்ற விழிப்புணர்வோ புத்திக்கு எட்டாத காலம். ஆனால் இப்போது.. கூடுமானவரை  அந்நிய தாவர வகைகள் எதுவும் நாட்டுக்குள் வரவிடாமல் கடுமையான கட்டுப்பாடுகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தெருக்கதவைத் தாழ் போட்டு பூட்டி காவலும் வைத்தாயிற்று. ஆனால் பாருங்கள்கொல்லைப்புறக் கதவில் இருக்கும் பெரிய ஓட்டை அசட்டையாய் விட்டுவைக்கப்பட்டிருக்கிறது.  தடை செய்யப்பட்ட பின்பும் எப்படி இந்திய ஆசிய சீன லெபனியக் கடைகளில் அந்தந்த மண்ணின் காய்களும் பழங்களும் தாராளமாகக் கிடைக்கின்றன? இவற்றின் பின்விளைவுகள் என்னாகும்? உதாரணத்துக்கு பத்துநாள் குழம்புக்கு புளி கரைத்தால் போதும்.. பல்லாங்குழி விளையாடுமளவுக்கு புளியங்கொட்டைகள் தேறிவிடும். குப்பைகளோடு எறியப்படும் இந்தப் புளியங்கொட்டைகள் எல்லாம் என்னவாகும்? யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

யானைப்புற்கள்


ஆரம்பத்தில் அசட்டையாய் இருந்துவிட்டு  நிலைமை பூதாகர வடிவெடுக்கும்போது அவசர அவசரமாக ஓட்டையை அடைக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். அப்போது இனிமேலும் வெளியிலிருந்து வருவதற்கு எதுவும் மிச்சம் இருக்காது. எல்லாம் உள்ளே வந்திறங்கி முடிந்திருக்கும். கண்கெட்ட பின்னே சூர்ய நமஸ்காரம் என்பது எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்போலும்.

ஆனால் சிலருக்கு பட்டாலும் புத்தி வராது என்பதும் உண்மை. ஆப்பிரிக்க சவான்னா புல்வெளியைச் சார்ந்த யானைப்புல் (Pennisetum purpureum) மற்றும் காம்பா புல் (Andropogon gayanus) போன்றவை கால்நடைகளின் தீவனப்புல்லாக ஆஸ்திரேலியாவுக்கு  இறக்குமதி செய்யப்பட்டன. நான்கு முதல் பத்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அப்புற்கள் நிலப்பரப்புகளை அழகுசெய்யவும் காற்றுத்தடுப்பானாகவும் பயன்படுத்தப்பட்டன. கடுங்கோடையில் காட்டுத்தீ பரவ பெரும்காரணியாகவும் அவை செயல்படுகின்றன என்பதை சொல்லவும் வேண்டுமா?

காம்பா புல்வெளியில் காட்டுத்தீ

ஆஸ்திரேலிய பொருளாதாரத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் ஆட்டங்காணச்செய்யும் இயற்கைச் சீரழிவுகளுள் bushfire எனப்படும் காட்டுத்தீக்கு முக்கியப்பங்குண்டு. ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தை அச்சுறுத்தியபடியே கடக்கச்செய்யும் காட்டுத்தீயால் இதுவரை அழிந்த கால்நடைகளும் பிற உயிரினங்களும் வீடுகளும் மனிதர்களும் நிலப்பரப்பும் அநேகம். கடந்த 2009 ஆம் ஆண்டில் விக்டோரியா மாநிலத்தில் உண்டான காட்டுத்தீயால் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. 173 பேர் தீக்கு பலியாயினர். 414 பேர் காயமுற்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்துபோயின. இதுவரை ஏற்பட்ட ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிகழ்வுகளுள் அதிக அளவில் உயிர்ப்பலி கொண்ட அந்நாள் black Saturday என்று குறிப்பிடப்படுகிறது.

அச்சுறுத்தும் இத்தகு காட்டுத்தீயைப் பரப்ப வறண்டு காய்ந்துகிடக்கும் புற்கள் முக்கியக்காரணம். அவற்றுள் மேலே குறிப்பிட்ட அசுரப் புற்களின் பங்கு அலாதி. அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் டாஸ்மேனிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சூழலியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருக்கும் ஆலோசனையைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.


அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? "இந்த அசுரப் புற்களை அழிக்க இங்கிருக்கும் சாதாரண ஆடு மாடு எருமைகளால் முடியாது. அதற்கு இணையான எதிரியைத்தான் கொண்டுவரவேண்டும். இந்த யானைப்புற்களை ஒழிக்க ஆப்பிரிக்க யானைகளையும் காண்டாமிருகங்களையும் இறக்குமதி செய்வதுதான் புத்திசாலித்தனம். அதனால் புற்களின் வளர்ச்சி வெகு எளிதில் கட்டுப்படுத்தப்பட்டுவிடும்" என்கிறார். 

அறிந்தோ அறியாமலோ ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இன்று அதீத தொல்லைகளாய் மாறிவிட்ட விலங்குகள் பறவைகள் தாவரங்கள் குறித்து அரசும் மக்களும் நொந்துபோயிருக்கும் வேளையில் புதிய விலங்குகளின் அறிமுகத்துக்கு வழி சொல்கிறாரே… இப்படிப்பட்டவர்களை என்னவென்று சொல்வது? பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள் என்பதைத் தவிர!


(அடுத்த பகுதியுடன் நிறைவடையும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி 

14 comments:

  1. 4-10 மீட்டர் புற்கள்...! வியக்க வைக்கிறது...

    அசுர யோசனை...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். பட்டாலும் புத்தி வரவில்லையே... என்ன செய்வது? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. வணக்கம்மா,
    நல்ல கதையா தான் இருக்கு,
    உள்ளதை எப்படி களைவது என்று இருக்கும் போது,
    வேறு ஒன்றா?
    தங்களின் பதிவு அருமையாக செல்கிறது, வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பாலமகி.

      Delete
  3. படத்தில் பார்க்கும் ஒரு யானையே பயமுறுத்துவதாக உள்ளது. இதில் சில ஜோடி யானைகளை அதுவும் ஆப்ரிக்க முரட்டு யானைகளை இறக்குமதிசெய்து விட்டால், அவையும் நாளடைவில் ஆயிரக் கணக்காகப் பெருகிப்போய் விடுமே.

    //காம்பா புல்வெளியில் காட்டுத்தீ//

    கோடை காலங்களில் இது மிகவும் கொடுமை தான்.

    யானைப்புற்களின் மிக உயரமான வளர்ச்சி மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அன்னாந்து பார்த்தால் நம் கழுத்தே சுளிக்கிக்கொள்ளும் 10 மீட்டர் உயரமா !!

    மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பகுதியுடன் முடிய உள்ளதே என கொஞ்சம் வருத்தமாக இருப்பினும், தங்களின் தகவல் சேகரிப்பும், அதனைப் பகிர்ந்த விதமும், இதற்கான தங்களின் கடும் உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கதே. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. யானை குறித்த தங்கள் பயம் நியாயமானதே. வாசிக்கும் நமக்கே தெரிகிறது. அனுபவிப்பர்களுக்குத் தெரியவில்லையே... தங்கள் வருகைக்கும் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
  4. நல்ல கட்டுரை. பல விசயங்களை ஆராய்ந்துள்ளீர்கள். அந்நிய விதைகள் ஊடுரவ பல சாத்தியக்கூறுகள் உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே நிறைய வந்திருக்கும். அவற்றின் பின்விளைவுகள் தெரிய சில ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விச்சு.

      Delete
  5. யானைகள், காண்டாமிருகங்கள் ஆகிய இரண்டுமே விரும்பி சாப்பிடும் உணவு இந்த யானைப்புல். அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா முழுவதுமே இப்புற்களின் ராஜ்ஜியம் தான். மழைக்காலம் முடிந்ததும் நிறையவே முளைக்கின்றன. காய்ந்த புற்களை கொஞ்சம் கொஞ்சமாக வனத்துறையினர் எரித்து விட, மீண்டும் முளைத்துவிடுகிறது.

    எதுவுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்து தான்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். யானைப்புற்களை அழிப்பது சிரமம்தான். ஆனால் யானைகளும் காண்டாமிருகங்களும் அறிமுகப்படுத்துவதென்பது அதற்கான தீர்வு இல்லையே.. உள்ளூர் விலங்குகள் இன்னும் பாதிப்புக்குள்ளாகும். சிக்கலான தீர்வால் யாருக்கு நன்மை?

      Delete
  6. புற்களை அழிக்க யானைகளையும் காண்டாமிருகங்களையும் அறிமுகப்படுத்தச் சொல்லும் யோசனையைக் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. ஏற்கெனவே பட்டும் புத்தி வராது போலிருக்கிறதே! சுவையான தொடர் அடுத்த வாரம் நிறைவடையும் என்பதைக் கேட்க வருத்தமாயுள்ளது. சுவை குன்றாமல் இத்தனை வாரங்கள் கொண்டு சென்றமைக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய தொடர்வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் அன்பான நன்றி அக்கா.

      Delete
  7. நல்லதற்கு என்று புகுத்தப்படும் ஒவ்வொன்றாலும் ஏற்படும் எதிர்விளைவுகளை நோக்க, இயற்கையை அப்படியே விட்டுவிடுங்கள்.
    தன்னை அது பார்த்து உங்களையும் காத்துக் கொள்ளும்.
    என்று சொல்லத் தோன்றுகிறது.

    நன்றி.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதுவேதான்... இயற்கையைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று இயற்கைக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தினாலே போதும்.. உலகம் செழிக்கும். உயிர்கள் தழைக்கும். வருகைக்கும் தொடர் கருத்துகளிட்டு ஊக்கமளிப்பதற்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.