23 April 2015

மரங்கள் என்னும் வரங்கள்


உயிர்கோதிஉறவாடும் மரங்களை அழித்தபின்னே
வயிறுநிறைக்கஉதவுமா வாங்கிவந்த வரங்களெல்லாம்?
இயந்திரஇரைச்சல் ஓய்ந்திருக்கும் இடைவேளையில்
இரண்டிலொருசெவியேனும் திறந்துவைத்துப் பாருங்கள்
சலனமற்றக்காற்றிலும் சலம்பித்திரிந்தவாறிருக்கும்
வனந்துறந்தலையும்வனப்பேச்சிகளின் வெஞ்சாபங்கள்!





 காய்ந்துதிர் பூஞ்சன ஆடைபோர்த்திய
கரட்டுடல் காட்டுமரமும் வெகுநேர்த்தி!

Norfolk pine tree


ஒதுங்கிநில்லென்னும் உபதேசத்தோடு
ஒட்டும் பசை சுரக்குமொரு மரமிங்கு!

Black wattle


விலகிநில்லென்னும் எச்சரிப்போடு
விருட்சமொன்று முட்கவசத்தோடு!

Pochote tree

பாசிபடர்தண்டின் வளமையோடு
பசுமரமொன்றுஎன்றும்மாறா இளமையோடு!

Ash tree

மரவுரி உரித்தொரு மரமொன்று
முற்றும் துறக்கும் உத்தேசத்தோடு!

Eucalyptus tree

தொய்ந்தகொடியைத் தோளில்தாங்கும்
தாய்மை கொண்ட தருவொன்று.




வந்தென்னுள் வாழென்று உயிர்களை
வாசம் செய்ய அழைக்கும் பாசமரம்.




இலைக்கடலில் அலையெனக்
கிளைவிட்டதொரு அழகு மரம்!




திரைச்சீலையென காட்சிமறைத்து
இலைச்சரங்கள் காற்றாடுமழகு!

willow tree

சட்டிக்குள்ளுமொரு சாம்ராஜ்யம் காணும்
குட்டிமரத்தின் சாமர்த்தியம் அபாரம்!




குறுமரம் கண்டபோதும் குறுகுறுக்கா மனமதிலே
அறுமரம் கண்டபோதெழும் ஆதங்கம் என் சொல்ல? 



12 comments:

  1. அடடா ! ஆர்வமுடன் போட்டிருந்த கருத்துகள் காற்றோடு போய்விட்டனவா? தன்னைப்பற்றியவை என்றறிந்து, மரங்கள் செய்த சலசலப்பு எழுப்பிய காற்றாயிருக்கும். நேற்றிரவு முழுதும் மரத்துக்கு மரம் மனசு தாவிக்கொண்டிருந்தது.

    ஜாய்ஸ் கில்மோர் எழுதிய சில கவிதைகளை கல்லூரி நாட்களில் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தேன் . அவற்றைத் தேட வேண்டும்.
    "Poems are made by fools like me,
    But only God can make a tree." என்று முடியும் அழகான கவிதை.

    மரங்களின் பெரிய காதலன் நான். சில மரங்களை நான் அவ்வப்போது சந்திப்பதும் உண்டு. அடாபுடா என்று பேசிக் கொள்வோம்...
    பல மரங்களின் வளைவுகள், வேர்முண்டுகள், முடிச்சுகள் என அடையாளங்களுடன் நினைவினிலும் உண்டு.

    உங்களின் பதிவும் படங்களும் மரங்களைத் பற்றிய நினைவுகளை தூண்டிவிட்டன. இலக்கியத்தில் வந்த மரங்களை நினைவுப் படுத்தி பார்க்கின்றேன். 

    ReplyDelete
  2. இதற்கும் முன் இடப்பட்ட தங்களது கருத்துரைகள் காணாமற்போனதில் எனக்கும் வருத்தமே.. ஆனாலும் மரங்களின் காதலரான தங்களிடமிருந்து கருத்து வாங்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன போலும் இம்மரங்கள்.

    ஜாய்ஸ் கில்மோர் கவிதை வரிகள் அபாரம். தமிழில் மொழியாக்கம் செய்தவற்றைத் தேட ஆரம்பியுங்கள். வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    வருகைக்கும் மரங்களை ரசித்து இட்ட அழகான கருத்துகளுக்கும் நன்றி மோகன்ஜி.

    ReplyDelete
  3. ’மரங்கள் என்னும் வரங்கள்’ என்ற தலைப்பும், அதற்கேற்ற பல படங்களும், அவற்றிற்காக தாங்கள் எழுதியுள்ள குறள் வடிவ பயனுள்ள செய்திகளும் சிந்திக்க வைக்கும் சிறப்பாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. படங்களையும் தகவல்களையும் ரசித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
  4. உள்ளத்தை வருடும்
    மரங்களும் செய்திகளும்

    மழை வளம் பெருக
    மரங்களை வளர்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. வணக்கம்
    இயற்க்கை வளம் பற்றிஅருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  6. மரங்களின் பயன் பாட்டை அறிய மறுக்கிறோம் ஒரு விதைவிதைத்து அது செடியாகி மரமாகப் பல ஆண்டுகள் ஆகலாம் ஆனால் அவற்றை வெட்டிவிட சிலமணித் துளிகளே போதும் வெட்டும் அளவுக்கு விதைத்தாலாவது பரவாயில்லை, நாம் காங்கிரீட் காடுகளில் வசிக்கவே தகுதி ஆனவர்கள். உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு. ஏப்ரல் மூன்றாவது வாரப்பதிவு....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. மரங்களை வெட்டி விட்டு வீடுகள் கட்டுவோரைப் பார்த்தால் உள்ளுக்குள் அவர்களுடைய அறியாமையை எண்ணி வருத்தமும் வேதனையும்தான் வெளிப்படுகிறது. என்றுதான் சூழல் பற்றிய விழிப்புணர்வு உண்டாகுமோ அவர்களுக்கு? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. எத்தனை அழகு இம்மரங்களில் தான். இயற்கையை நேசிக்க ஆரம்பித்து விட்டால் நேரம் போவதே தெரிவதில்லை...... ஆனால் நேசிக்காது வெறுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.....

    ReplyDelete
    Replies
    1. இயற்கையை ரசிப்பதைவிடவும் பணம் பெருக்குவதில் குறியாய் இருக்கிறார்கள் பலர். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் விரக்தி வெளிப்படும்போதுதான் இயற்கையின் அருமை புரிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.