8 March 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 4 (மைனாக்கள்)

ஒண்டவந்த பிடாரிகள் - பகுதி மூன்றில் பறக்கும் கரும்புத்தேரைகளைப் பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அவை வேறு எதுவும் அல்ல. நம் நாட்டு மைனாக்கள்தாம்.  கரும்புத்தேரைகளின் அளவுக்கு உள்நாட்டு உயிரினங்களிடத்தில் பாதிப்பை உண்டாக்குவதால் பறக்கும் தேரைகள் எனப்படுகின்றனவாம். 



 இந்திய மைனாக்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படும் மைனாக்களை 1862 -ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு அறிமுகப்படுத்தினராம். இவற்றால் உதவிக்கு பதில் உபத்திரவமே மிஞ்சியிருக்கிறது என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் இப்போது. 

உபத்திரவம் என்றால் என்ன மாதிரியான உபத்திரவம்? மரப்பொந்துகளை ஆக்கிரமித்துக் கொண்டு மண்ணின் சொந்தப்பறவைகளை கண்ணில் காணவொட்டாமல் விரட்டுவதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு மைனா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க ஒரு பொந்து மட்டுமே தேவை என்றபோதும் சுற்றுப்புறத்தில் உள்ள மற்றப் பொந்துகளையும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன

மைனாக்களின்  புத்திசாலித்தனத்துக்கும் மூர்க்கத்தனத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் மண்ணின் சொந்தப்பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் இருப்பிடங்களை இவற்றுக்கு தாரைவார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

பறவைகளை மட்டுமல்லாமல் பொந்துகளில் வாழும் சிறிய மார்சுபியல் விலங்குகளையும் விரட்டிவிடுகின்றன. அடுத்ததாய் மைனாக்கள் என்ன செய்கின்றன தெரியுமா? குப்பைக்கூளங்களைக் கொண்டுவந்து அந்தப் பொந்துகளை அடைக்கின்றனவாம். எவ்வளவு கெட்ட எண்ணம்? இவ்வளவும் போதாதென்று மரக்கிளைகளில் கூடு கட்டியிருக்கும் பறவைகளின் குஞ்சுகளையும் கீழே தள்ளிக் கொல்லுகின்றன என்று கண்ணால் பார்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

International Union for Conservation of Nature (IUCN) பட்டியலிட்டுள்ள உலகிலுள்ள மிக மோசமான ஆக்கிரமிப்பு இனங்களில் முதல் நூறிடத்தில் இந்த மைனாவும் வருகிறது என்பதிலிருந்தே இதன் குணத்தை நம்மால் அறிந்துகொள்ளமுடியும். நில அபகரிப்புக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியப் பறவைகளுக்கு ஆபத்து விளைவிப்பவை இந்த மைனாக்களாகத்தான் இருக்கக்கூடும் என்கின்றன ஆய்வுகள்.

மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பயமில்லாமல் புழங்கும் இவை குடியிருப்புப் பகுதிகளில் ஒரு சதுரகிலோ மீட்டருக்கு இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் 1970 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மைனாக்களின் எண்ணிக்கை 110. ஆனால் 2006 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அங்கு அவற்றின் எண்ணிக்கை 93,000. 

அவசரமாய் விழித்துக்கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மைனாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. 1300 க்கும் மேற்பட்டவர்கள் பொறியமைத்து மைனாக்களைப் பிடிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். கான்பெராவில் இப்போதைய நிலவரப்படி அங்கிருக்கும் மைனாக்களின் எண்ணிக்கை சுமார் 42,000. கட்டுப்படுத்தும் முயற்சி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இப்பறவைகளைப் பிடிக்கவோ கொல்லவோ வைக்கப்படும் பொறிகளை மிகச்சரியாக அடையாளங்கண்டுகொண்டு தவிர்த்துவிடுகின்றனவாம். அப்படியே தவறிப்போய் சிக்கிக்கொண்டாலும் உடனடியாக மற்ற மைனாக்களை எச்சரித்து தப்பிக்க வைத்துவிடுகின்றனவாம். மைனாக்களைப் பிடிக்க எந்த மாதிரி பொறி தயாரிப்பது, எப்படி பொறி வைப்பவர்களுக்குப் பயிற்சியளிப்பது என்று ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலியாவில்.

ஒண்டவந்த பிடாரிகளின் வரிசையில் அடுத்து நாம் பார்க்கவிருப்பது இந்தியர்களான நாம் மிகவும் அறிந்ததும், நமக்கு மிகவும் பயனுள்ளதுமான விலங்கு. ஆனால் நமக்குப் பிடிக்காத ஒருவரை நேரடியாகத் திட்டவும் இந்த விலங்கின் பெயரைப் பயன்படுத்துகிறோம். என்னவாக இருக்கும்?  யூகித்துவைத்திருங்கள் சொல்கிறேன்.

(தொடரும்)
முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 3 (கரும்புத் தேரைகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 5 (எருமைகள்)

25 comments:

  1. மைனாக்கள் அப்படி ஆக்கிரமிப்புச் செய்யுமா என்ன! இந்திய மைனாக்கள் என்று சொல்லி விட்டதால் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது!!!!!!!!

    அடுத்த விலங்கு.... நாய் இல்லையே? குரங்கு?

    ReplyDelete
    Replies
    1. மைனாக்களை இங்கு குறிப்பிடும்போது Indian myna என்றுதான் குறிப்பிடுகிறார்கள். மைனா போலவே ஒரு பறவை கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசத்துடன் இங்குள்ளது. ஆஸியின் சொந்தப்பறவை. அதன் பெயர் noisy miner. இதை வாழவிடாமல் விரட்டியடிப்பதால் மைனாவின் மேல் எரிச்சலுறுகிறார்கள்.

      நாய், குரங்கு இல்லாமல் இன்னொன்று. எருமை.. அதைதான் அடுத்த பதிவில் போட்டிருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. மைனா இப்படி எல்லாம் செய்கிறதா...?

    ReplyDelete
    Replies
    1. ஆம் தனபாலன். தன் இனத்தைத் தக்கவைக்கும் முயற்சி அது. அதைக் குறைசொல்லி என்ன பயன்? மனிதர்கள் செய்த தவறு அது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  3. நம் இந்திய ’மைனா’க்கள் அங்கு ’மைனா’ரிட்டியாக இல்லாமல் மெஜாரிட்டியாக உள்ளது கேட்கவும், அவற்றின் குணாதிசயங்களை அறியவும் மிகவும் வியப்பாக உள்ளது.

    தலைப்புக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான பல தகவல்கள் தருகிறீர்கள்.

    பாராட்டுக்கள். தொடருங்கோ !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபு சார். மைனா... மைனாரிட்டி - வார்த்தை விளையாட்டை ரசித்தேன்..

      Delete
  4. மைனாக்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்வு இருக்கும் போல் தெரிகிறது
    மனிதனின் குணாதிசயங்களை அப்படியே கொண்டுள்ளதே
    நன்றி சகோதரியாரே
    தம 3

    ReplyDelete
    Replies
    1. இப்படி தான் மட்டுமே வாழவேண்டும் தன் இனம் மட்டுமே தழைக்கவேண்டும் என்று எண்ணும் ஐந்தறிவுகளின் குணத்தைத்தான் ஆறறிவுகளாகிய நாமும் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. மனிதர்களைப் போலவே பறவைகளிலும் இப்படிப்பட்ட மோசமானவை உண்டு போலிருக்கிறது. கூட்டை அபகரிப்பது மட்டுமின்றி மற்ற பொந்துகளிலும் குப்பைகளை வைத்து அடைப்பது, மற்ற குஞ்சுகளைக் கூட்டிலிருந்து தள்ளிவிடுவது போன்ற செயல்கள் மைனா மேல் வெறுப்பை உண்டு பண்ணுகின்றன. கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல கெட்ட எண்ணத்தினால் தாமே தம் அழிவைத் தேடிக்கொண்டிருக்கின்றன. வியப்பளிக்கும் செய்திகளைத் தொடர்ந்து கொடுப்பதற்கு நன்றி. சுவையான பதிவுக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. புதிய இடத்தில் தங்கள் இனத்தைத் தக்கவைக்கும் முயற்சியென்று நினைக்கிறேன். தக்கன தழைக்கும் என்பதுதானே வாழ்வியல் சூத்திரம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  6. இங்கே பெங்களூருவில் மைனாக்களைக்காண்பதே அரிதாகி வருகிறது.இங்கு ஏற்பட்டு வரும் சுற்றுச் சூழல் மைனாக்களுக்குப் பிடிக்க வில்லையோ என்னவோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா, அதிசயமாக சென்ற ஆண்டு பெங்களூருவில் இருந்தபொழுது எங்கள் வீட்டின் அருகே மைனாக்கள் இருந்தன. அதற்கு முன்பு இருந்ததில்லை.

      Delete
    2. பெங்களூருவில் மைனாக்கள் இல்லையென்பது வியப்பாக உள்ளது. ஒருவேளை வாழும் சூழலும் பருவநிலையும் அவற்றுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. ஆஹா...மைனாக்கள் இப்படியெல்லாம் செய்கின்றனவே ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உமையாள். எனக்கும் இவற்றைப் பற்றி அறிந்தபோது வியப்புதான். நம்மூரில் சாதுப்பறவைகளைப் போல காட்சியளிக்கும் இவற்றுக்குள் இப்படியொரு மூர்க்கமா என்று. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள்.

      Delete
  8. மைனா இப்படியெல்லாம் செய்யுமா? பாவம் மைனா அழிகிறது என்று நினைத்தால், அங்கு அளவுக்கு அதிகமாகவா? மைனாவைப் பற்றிய செய்திகள் ஆச்சரியமளிக்கின்றன..
    அரிய தகவல்களுக்கு நன்றி கீதமஞ்சரி

    ReplyDelete
    Replies
    1. மைனா அழிகிறது என்பது எனக்குப் புதிய தகவல். புதிய நாட்டில் புதிய சூழலிலேயே வாழவழி செய்துகொண்ட மைனாக்களுக்கு பழகிய நாட்டில் பழகிய சூழலில் வாழமுடியாமல் போவது ஆச்சர்யம்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.

      Delete
  9. Anonymous13/3/15 19:58

    மைனா மனித நைனாக்கள் போல உள்ளதே...
    3 முன்பே வாசித்து கருத்திட்டுள்ளேன்
    இன்று 4வது...
    வாழ்த்து கீதா.

    ReplyDelete
  10. ஆஸ்திரேலியப் பறவைகளுக்கு ஆபத்து விளைவிப்பவை இந்த மைனாக்களாகத்தான் இருக்கக்கூடும் என்கின்றன ஆய்வுகள்.//
    படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மனிதர்களின் பேராசைக்கு அப்பாவி ஜீவன்கள் பலியாவது இன்னும் வேதனை தரும் செயல். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  11. மனிதர்களில் தன்னலம் , பிறர் வாழச் சகியாமை , தீங்கிழைப்பதில் மகிழ்ச்சி ( sadism ) முதலான கயமைப் பண்பு கொண்டார் இருப்பதுபோல் விலங்கு ,, பறவைகளிலும் உள்ளன என்பது புரிகிறது . கடுமையாய் உழைத்து அரிய தகவல் திரட்டித் தருவது பாராட்டுக்குரியது . வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் சிறப்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      Delete
  12. இந்த மைனாவிற்கு இப்படி கெட்ட குணங்களும் உண்டா என்ன! ஆச்சரியமான விஷயம். ஆனாலும் இக்கெட்ட குணமே, ஆஸ்திரேலியாவில் அதன் அழிவிற்கு காரணமாக ஆகிவிடப் போகிறது.

    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் மற்றப் பறவைகளை வாழவைக்கும் முயற்சியாக மைனாக்களை கொல்கிறது அரசு. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.