5 June 2012

சின்ன நிலாவின் சேட்டைகள் - 3



ஞானசம்பந்தம் சொல்
யான
இல்லம்மா, ஞான.. சொல்..
யான..
ஞ்ஞா.. ஞ்ஞாசொல்.
ய்யா.. ய்யா
ப்ச்!
அலுத்துப் போய் கைவிடப்பட்டது
அன்றொருநாள் கற்பித்தல் வகுப்பு.

பின்னொருநாள் யாரிடமோ
பெருமையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறாள் நிலா.
எனக்கு ரெண்டு தாத்தா.
ஒருத்தர் ஜேபால் தாத்தா.
இன்னொருத்தர் மறைமலை தாத்தா.

என்ன மறைமலை தாத்தாவா?

ஆமாம், அப்படிதான் நான் அவருக்குப் பேர் வச்சிருக்கேன்.

சிக்கலுக்கு வெகுவிரைவில் தீர்வு கண்டுவிட்டாள்.
மறைமலைநகரில் வசித்த தாத்தாவை
மறைமலை தாத்தாவாக்கிவிட்டாள்.
தமிழுக்குச் சேவை செய்யும் தாத்தாவுக்கு
சாலப் பொருந்திப் போனது பேத்திவைத்தப் பெயர்.

ஞகரம் வந்தபின்னும் ஞானம் வந்தபின்னும்
தனக்குரித்தானத் தாத்தாவின் பெயரை
மாற்றிச்சொல்வதில் உடன்பாடில்லை
நிலாவுக்கு இன்றுவரையிலும் கூட!
***************************** 


அஜய், காலையில் ஏண்டா அழுதே? 
ஒரு பையன் என்னை அடிச்சிட்டான், நிலா. 
எந்த க்ளாஸ்டா? 
என் க்ளாஸ்தான். 
நான் சொன்னேன்னு சொல்லி 
நாளைக்கு நீ போய்
ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டிலே உக்காந்துக்கோ! 
ம்!

விளையாட்டா? வினையா?
விளையாட்டினூடே விளைந்த பேச்சு கேட்டு
விதுக் என்றது மனம்.

அன்றுதான் எல்கேஜியில் சேர்ந்த
அரைநாள் அனுபவக்காரி,
அடுத்தவீட்டுப் பையன் அழுகை போக்க,
அடுத்த வகுப்புக்கனுப்பும் தெனாவெட்டுக் கண்டு
திடுக்கிடாமல் வேறென்ன செய்வது?

************************************
படங்கள் உதவி: இணையம்

52 comments:

  1. / ஞானம் வந்தபின்னும்
    தனக்குரித்தானத் தாத்தாவின் பெயரை
    மாற்றிச்சொல்வதில் உடன்பாடில்லை/


    குழந்தைகளால் குழந்தைப் பருவத்தில் வைக்கப்பட்ட பெயரே நிலைத்துப் போயிருக்கிறது பல பேருக்கு:)!
    ----------------------

    /தெனாவெட்டு/ தேன்:)!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராமலக்ஷ்மி, பல பாட்டி தாத்தாக்களுக்கு பேரக்குழந்தைகள் பெயர் வைத்து புதுப்பிறப்பு அளித்துவிடுகிறார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. தமிழ் விரும்பிய தாத்தாவுக்கு மறைமலை தாத்தா என்று அழகுப் பேர் வைத்த நிலா சூப்பர் பேபிதான். பெரும்பாலான சமயங்களில் பெற்றோரின் நடத்தைகள்தான் பிள்ளைகளை தவறாக வழிநடத்துகிறது என்பதை உணர்த்தியது குழந்தையை வகுப்பு மாறச் சொன்ன விஷயம். அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி கணேஷ். பெற்றோரை விடவும் திரைப்படங்களும் ஊடகங்களும் அல்லவா அவர்களுக்குப் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

      Delete
  3. குழந்தைகள் நடமாடும் தெய்வங்கள்.
    அவர்கள் என்ன பேசினாலும் தெய்வத்தின் குரலாகத்
    தான் ஒலிக்கிறது கீதமஞ்சரி அக்கா.
    அழகான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திட்டு வாழ்த்தியதற்கும் நன்றி அருணாசெல்வம்.

      Delete
  4. அழகா சொன்னீங்க!

    உலகம் தெரியாத குழந்தை-
    என சொல்வாங்க!

    நமக்குதான் [பெரியவங்களுக்கு]
    குழந்தைங்க உலகம் தெரியாதுங்க...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி சீனி.

      Delete
  5. அருமை.....

    குழந்தைகளின் உலகமும், அவர்கள் மொழியும் அலாதியானது....

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளின் உலகத்தில் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்கள் இல்லையா வெங்கட்? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. நிலாவின் புத்திசாலித்தனமும் குறும்புத்தனமும் ரசிக்க வைக்கின்றன.
    அரை நாள் அனுபவத்தில் ’நான்’ சொன்னேன்னு சொல்லி’ என்பதில் தன்னை ஒரு பெரிய மனுஷியாகவும் தனக்கு அவ்வளவு செல்வாக்கு இருபபது போலவும் அவள் நடந்து கொண்ட பாங்கு வியக்க வைக்கின்றது. அதைத் தெனாவட்டு என்று என்னால் நினைக்க முடியவில்லை. தன் மீதும் தன் செல்வாக்கின் மீதும் முளைக்கும் போதே அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை!

    அடி வாங்கிக் கொண்டு அழும் பிள்ளைக்கு முன் இவளது பேச்சும் தைரியமும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. குட்டி நிலாவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிலாவின் செய்கைகளை ரசித்து மெச்சும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அக்கா.

      Delete
  7. i am the 20,000.. nice poems..

    ReplyDelete
    Replies
    1. இருபதாயிரமாவது பார்வையாளர் என்று நீங்கள் குறிப்பிட்டபின்தான் கவனிக்கிறேன்.அட, ஆமாம், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

      Delete
  8. நிலா .., அருமையான பெயர் .. :)

    குறும்புகளும் சேஷ்டைகளும் இன்னும் அதிகமாகட்டும் ..,ஒரு வீட்டில் குழந்தை இருப்பது பிறருக்கு தெரிவது அது செய்யும் சேட்டைகளில் தானே ..!

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க. அப்புறம் குழந்தை இருக்கிற வீடு என்று எப்படி மற்றவர்களுக்குத் தெரியும்? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரலாற்று சுவடுகள்.

      Delete
  9. குழந்தைகள் பெரியவர்களான பின்னும் இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லி மகிழ்வதே ஒரு சுகம்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய ஆழ்ந்த அனுபவத்தை பின்னூட்டம் வாயிலாய் அறிகிறேன். ஆம். நிலா இப்போது சின்ன நிலா இல்லை, பெரியவளாகிவிட்டாள். அவளுடைய சிறுவயது நிகழ்வுகளே இவை. தாயென்னும் பெருமையில் சொல்லிப் பூரிக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சென்னைப் பித்தன் ஐயா.

      Delete
  10. குழந்தையாவே இருந்திருக்கலாம்.ஞ...ஞாஆஆஆஆஆ ஞானம் !

    ReplyDelete
    Replies
    1. ஹூம்... குழந்தைகள் பெரியவர்களாக ஆசைப்படுகிறார்கள். நாம் குழந்தைகளாக ஆசைப்படுகிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

      Delete
  11. Anonymous6/6/12 04:01

    ரொம்ப அயகா ஈக்குது அக்கா நிலா குட்டி பேசுறது ....

    நிலா வினர சேட்டை இன்னும் இன்னும் அதிகமாட்டும் ...

    ReplyDelete
    Replies
    1. நிலாவுக்கு ஞா சொல்லிக்கொடுத்தது போல் கலைக்கு ழ சொல்லித் தரணும் போலிருக்கே... கலை சொல்லுங்க ழ... அழகு... அழகா இருக்குது. (கலைக்கு சின்னதாய் ஒரு கலாய்ப்பு :) கோபிக்க மாட்டீங்கதானே!)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை.

      Delete
  12. அன்றுதான் எல்கேஜியில் சேர்ந்த
    அரைநாள் அனுபவக்காரி,
    அடுத்தவீட்டுப் பையன் அழுகை போக்க,
    அடுத்த வகுப்புக்கனுப்பும் தெனாவெட்டுக் கண்டு
    திடுக்கிடாமல் வேறென்ன செய்வது? //

    அது குழந்தைகள் உலகம்
    அங்கு எதுவும் சாத்தியம்
    அதை அப்படியே உணரும் விதம் சொன்னவிதம் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகான புரிதலுடனான கருத்துரைக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

      Delete
  13. குழந்தைகள் எப்போதும் பெரியவர்களை கவலைகளிலிருந்து விடுபெற செய்கின்றன. குழந்தைகளே ஆறதல் தரும் அழுதநிலாக்களாக ஒளிர்கின்றன. பல வேளைகளில் அவர்களிடமிருந்து நாம் பாடம் படிக்க வேண்டி இருப்பதை உணர முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீபிகா. அழுத நிலா - அமுத நிலா?

      Delete
  14. சின்ன நிலாவின் சேட்டைகள் சிந்திக்கவும் வைக்கின்றன !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  15. நிலாச் சேட்டையில் நிகழ்வுகள் இனிக்கின்றன . நிலாவைக் காணும் ஆவலில் நானும் ...
    THA.MA.3

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் தமிழ்மண வாக்கிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சசிகலா.

      Delete
  16. ம்ம்ம்....
    நிலா குறும்புச் சேட்டை
    கரும்பு சுவை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கரும்பின் சுவையென ரசித்தமைக்கும் நன்றி செய்தாலி.

      Delete
  17. குழந்தைகளின் குறும்புகள்

    ரசனைக்குரியவை.... ம்ம் அழகான வரிகள் அக்கா....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி எஸ்தர்.

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. கீதா...

    வணக்கம். என்னுடைய சிறுவயது அனுபவத்திற்கு இறக்கிவிட்டீர்கள். எனக்கு விதவிதமான தாத்தாக்கனை என்னுடைய படிப்பறிவும் எழுத்தறிவுமற்ற அம்மா கற்றுக்கொடுத்த பெயர்கள் ஏராளம். என்னுடைய சிறுகதைகளிலும் அப்பா நாவலிலும் அதனை வெளிப்படுத்தியிருக்கிறேன். நிலா போலவே.

    பட்டாணி தாத்தா (எப்போதும் பட்டாணி வாங்கிவருவார்)
    கரும்பு தாத்தா (பொங்கலுக்குத் தவறாமல் கரும்புக்கட்டு சீர் கொண்டுவரும் தாத்தா )
    பைக் தாத்தா (முதன் முதலில் பைக் வாங்கிய தாத்தா)
    திருவையாறு தாத்தா (ஊர் அடையாளம்)
    படவா தாத்தா (எப்போதும் படவா என்று திட்டுபவர்)
    ஐயனார் தாத்தா (ஐயனார் சாமி மீசை வைத்திருப்பவர்)
    கறிக்கடை தாத்தா (கறிக்கடையில் வேலை பாரத்தவர்)
    வண்டிக்கார தாத்தா (ஒற்றை மாட்டு வண்டி ஓட்டியவர்)
    இதுபோலவே
    சுளுக் அமமாச்சி
    பைக் அம்மாச்சி
    டீச்சர் அம்மாச்சி
    கொழுக்கட்டை அம்மாச்சி
    உப்புக்கல்லை அம்மாச்சி
    முள்ளங்கி அம்மாச்சி


    எத்தனை அற்புதமான மரபு இவை.

    அனுபவிக்கலாம் நினைக்கும்போதே.

    அனுபவித்தேன் உங்கள் பதிவை. நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய சிறு வயது அனுபவத்திலிருந்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக மிக நன்றி ஹரணி சார். தாத்தா, அம்மாச்சிகளின் பெயரை வாசிக்கும்போதே அவர்களுடன் ஒரு உணர்வுபூர்வ ஒட்டுதல் உண்டாகிறது உள்ளத்தினுள். எத்தனை உறவுகள்! உறவுகளை இனம்காட்ட எத்தனை பட்டப்பெயர்கள். இன்றைய குழந்தைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு பெரும்பாலும் அமைவதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

      Delete
  20. Anonymous9/6/12 22:45

    குழந்தைகள் குறும்பு, புத்திசாலித்தனம் எப்போதுமே ரசித்து மகிழலாம். நிலா புத்திசாலி. நல்ல இடுகை .நல் வாழ்த்து.
    சமீபத்தில் நாம் ரசித்தது.
    (எமது பேரன் அழுதார். ரப்பர் சூப்பானை வாயில் திணித்தார்கள். மிக வேகமாகச் சூப்பினார். அற்குள்ளால் எதுவுமே வரவில்லை அது பம்மாத்து என புரிந்திட்டார்.(வயது ஒன்றரை மாதம்) உடனே தூதூ...ஊஊஊ....என்று சத்தமான ஒலியோடு தண்ணீர் பூவாணமாக மேலே போய கீழே விழுமே அப்படித் துப்பினார்...சூப்பானும் மேலே போய்க் கீழே விழுந்தது..எங்களிற்கு ஒரே சிரிப்பு....இப்போதும் நினைத்து நினைத்துச் சிரிப்போம்.)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பேரன் செய்கையை நினைக்கும்போதே வியப்பும் சிரிப்பும் வருகிறது. ஒன்றரை மாதத்திலேயே எவ்வளவு உஷாராய் இருக்கிறார். அவர்களுக்கு எத்தனை வயது ஆனாலும் இதுபோன்ற குழந்தை செய்கைகளை நம்மால் மறக்கவே இயலாது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேதா.

      Delete
  21. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/06/7.html

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி முரளிதரன். அழகாய் தொகுத்தளித்து பல புதியவர்களையும் அறிமுகம் செய்துவைத்த விதத்தைப் பாராட்டுகிறேன்.

      Delete
  22. தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி யுவராணி. விருதினை பெரும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete
  23. இது நிலா சேட்டை தானா?

    அல்லது நிலா பேரில்
    கீதாவின் சிறுவயது சேட்டைகளா?

    அருமை.

    ReplyDelete
    Replies
    1. கீதாவின் வார்ப்பும் வளர்ப்பும்தான் நிலா. குழப்பம் தெளிந்ததா? :)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்.

      Delete
  24. நான் உடனே சின்ன நிலாவைப் பார்க்க வேண்டுமே!

    ReplyDelete
    Replies
    1. மோகன்ஜி, அது கஷ்டம். சின்ன நிலா இப்போது பெரிய நிலா. விரைவில் அவள் பற்றியும் எழுதுவேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்ஜி.

      Delete
  25. தவறாமல் தமிழ்மண வாக்கிட்டு உற்சாகமளிக்கும் தங்களுக்கு கூடுதல் நன்றி சார்.

    ReplyDelete
  26. //சின்ன நிலா இப்போது பெரிய நிலா//

    அப்போ இது மலரும் நினைவுகளா? :-)))

    எங்களையும் மலர வைக்கும் நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. என்னில் மலர்ந்த நினைவுகளை ரசித்து மலர்ந்தமைக்கு நன்றி ஹூஸைனம்மா.

      Delete
  27. அச்சச்சோ வசீகரிக்கும் எழுத்துக்கள்

    விரும்பியே உங்கள் எழுத்துக்களில் விழுகிறேன் தோழர்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.