3 February 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 3



ஆஸ்திரேலியா ஒரே நாடு என்றபோதிலும் மாநிலங்களுக்கிடையிலான செயல்பாடுகளில் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுபோல் நாடு முழுவதும் பொதுவானக் கல்விமுறை பின்பற்றப்பட்டாலும், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் வயது வரம்பு, பள்ளிகளில் கற்பிக்கும் முறை, தேர்வு நடவடிக்கைகள், பயிற்சி வகுப்புகள் போன்றவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. அதனால் சில குழப்பங்களும் சிக்கல்களும் உண்டாவதை மறுப்பதற்கில்லை. 

உதாரணத்துக்கு, குவீன்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா, வட மண்டலம் ஆகிய மூன்று மாகாணத்திலும் ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க, அந்த வருடம் ஜூன் 30 ஆம் தேதி அதற்கு ஐந்து வயது முடிந்திருக்கவேண்டும். விக்டோரியா மாநிலத்திலும் ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசத்திலும் ஏப்ரல் 30 இல் ஐந்து வயது நிறைவடைந்திருக்கவேண்டும். நியூ சௌத் வேல்ஸ் எனில் ஜூலை 30. டாஸ்மேனியா எனில் ஜனவரி 1. இதுவே தெற்கு ஆஸ்திரேலிய மாகாணம் என்றால் எந்த மாதம் ஐந்து வயது நிறைவடைகிறதோ அந்தக் காலாண்டில் பள்ளியில் சேர்த்தால் போதுமானது 

என் மகன் மே மாதம் பிறந்ததாலும், என் கணவரின் வேலை நிமித்தம் நாங்கள் குவீன்ஸ்லாந்திலிருந்து விக்டோரியா மாறிய காரணத்தாலும் அவன் மீண்டும் நான்காம் வகுப்பு படிக்கவேண்டிய சூழல் உருவானது. அங்கும் இங்கும் இருந்த விதிகளின் மாறுபாட்டால் பன்னிரண்டு நாட்கள் கணக்கில் உதைத்தது. மனதளவில் அவன் மிகவும் உடைந்துபோனான். காரணம் இந்தியாவில் மூன்றாம் வகுப்பு முடித்தவனை இங்குக் கொண்டுவந்தபோது, குவீன்ஸ்லாந்து விதிமுறைகளின்படி அவன் மறுபடியும் மூன்றாம் வகுப்பு படிக்க நேர்ந்தது. அங்கு மூன்றாம், நான்காம் வகுப்பு முடித்தப்பின் விக்டோரியா மாநிலத்துக்கு மாறியபோது, மீண்டும் நான்காம் வகுப்பு படிக்கவேண்டும் என்றால் மனம் வெறுத்துப்போகாதா 

நல்லவேளையாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பெரியமனது வைத்து நிலைமையைப் புரிந்துகொண்டு அவனுக்கு ஐந்தாம் வகுப்பில் சேர அனுமதி அளித்தார். ஒரே மாநிலத்தில் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்காது 

ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு பிள்ளைகளை மாற்றும்போது TC எனப்படும் Transfer Certificate  தேவையில்லை என்பது ஒரு ஆறுதல். முன் படித்தப் பள்ளியில் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டே போதுமானது. 

ஆஸ்திரேலியக் கல்வித் திட்டப்படி ஒவ்வொரு குழந்தையும் முதல் வகுப்புக்கு முன் Pre-primary என்று இரண்டு வருடங்கள் படிக்கவேண்டும். அது நம் ஊரில் உள்ள kindergarten (LKG, UKG) வகுப்புகளுக்கு நிகரானது. ஆனால் பாடங்களுக்குப் பதிலாக செயல்முறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தினமும் புதிது புதிதாய் எதையாவது செய்யக் கற்றுக்கொண்டு வந்து வீட்டில் காட்டும்போது அவர்கள் முகத்தில் தென்படும் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே. என் கணவரின் தம்பி குடும்பமும் நாங்களும் ஒன்றாக வசித்ததால் அவர்களுடைய சின்னஞ்சிறு பிள்ளைகள் மூலம் அந்த வகுப்புகள் பற்றியும் அறிய முடிந்தது. 

ஆஸ்திரேலியாவில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி இம்மூன்று மாதங்கள் கோடைக்காலம் என்பதால் பள்ளிகள் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்குகின்றன. ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் இரண்டு வார குறுகிய கால விடுமுறை விடப்படுகிறது. டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து ஐந்து அல்லது ஆறு வாரங்கள் கோடை விடுமுறை விடப்படுகிறது. 


கோடைக்காலத்திலும் இலையுதிர் காலத்திலும் பல ஆரம்பப்பள்ளிகள் நீச்சலைக் கட்டாயப் பாடமாகக் கற்றுத்தந்துகொண்டிருந்தன. ஆனால் பெருகிவரும் குடியேறிகளில் பலரது கலாச்சாரம் நீச்சலுடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாலும்,  பல பெற்றோர்,  பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதரப் பாடங்களுக்கு ஆதரவுகாட்டும் அளவு, நீச்சலுக்கு ஆதரவு அளிக்காதக் காரணத்தாலும் பல பள்ளிகள் நீச்சல் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துவங்கிவிட்டன. 

இந்த வருடம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் 50 மீ. தூரம் கூட நீந்திக் கடக்கத் தெரியா நிலையில் தங்கள் ஆரம்பப்பள்ளிக்கல்வியை முடித்துச் செல்கின்றனர் என்ற தகவலைச் சொல்லி வருத்தம் தெரிவித்துள்ளது, Royal  Life Saving Society.  

வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொடுப்பதில் பள்ளிகள் தீவிரமாயிருந்தாலும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட மக்களின் மனம் அதற்கு உடன்படமறுத்தால் அவை என்ன செய்ய முடியும்?  சென்ற வருடத்தில் மூன்றில் இரண்டு பள்ளிகள் நீச்சல் வகுப்புகளைக் கைவிட்டுவிட்டதாகவும் உயிர் காக்கும் நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.  

கடலால் சூழப்பட்ட இப்பெருந்தீவில் நீர் விளையாட்டுகளின் பங்கு அலாதி. கோடையின் தகிப்பை ஆற்றிக்கொள்ள, ஆழ்கடல் நீந்துதல், படகோட்டுதல், நீர்ச்சறுக்கு போன்ற பல விளையாட்டுகளில் பொழுதைக்கழிக்கும் மக்களுக்கு உயிர்காக்கும் நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது மிக அவசியமானது.  முறையான நீச்சல் அறியாமல், அசட்டுத்துணிச்சலால் பல குழந்தைகளின் மரணம் நேர்வது மிகவும் வேதனைக்குரிய செய்தி! வாழும் சூழலுக்கேற்ப நம் பிள்ளைகளை வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடமையும் அல்லவா? 

உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆஸ்திரேலியா என்பதால் கோடைக்காலங்களில் பள்ளிகள் மிகுந்த கட்டுப்ப்பாடுகளை குழந்தைகளுக்கு விதிக்கின்றன. தொப்பி (பள்ளிச்சீருடைகளில் ஒன்று)  அணியாத எந்தக் குழந்தையும் விளையாட்டுத்திடலில் ஓடி விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளரங்கில் அல்லது நிழற்குடையின் கீழ் விளையாட்டு வகுப்பு முடியும்வரை அமர்ந்திருக்கவேண்டும். இன்னும் சில பள்ளிகளில் குளிர்கண்ணாடிகளும் அணிய வற்புறுத்தப்படுகிறது. வெயில் படும் உடற்பகுதிகளில் சன்ஸ்கிரீன் லோஷனும் கட்டாயம் தடவியிருக்கவேண்டும். பள்ளியிலேயே அதற்கான வசதியும் இருக்கும் 

மூன்றாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வாரமொரு முறை show and tell என்றொரு வகுப்பு உண்டு. பிள்ளைகள் வகுப்பு முன், தங்களிடம் உள்ள ஒரு பொருளைக்காட்டி, அதைப்பற்றி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் பேச வேண்டும். அது குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத எந்தப் பொருளாகவேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் பொம்மைகள் அல்லது விளையாட்டுப்பொருட்கள் அல்லது ஏதேனும் பரிசுப்பொருட்கள் இவற்றையே எடுத்துச் செல்ல விரும்புவர் 

அந்த வகுப்பின் அடிப்படை நோக்கம் பிள்ளைகளின் மேடைப்பயம், தயக்கம், கூச்ச சுபாவம் போன்றவற்றை நீக்குதலும், பேச்சுத்திறனை வளர்ப்பதும் ஆகும். ஆஸ்திரேலியர்களிடம் பொதுவாகவே பேச்சுத்திறன் அதிகம். இப்படி பள்ளியில் சிறுவயது முதலே வளர்க்கப்படும் பேச்சுத்திறன் பலர் முன் தயங்காமல், தன் கருத்தை முன்வைக்கும் துணிவைத் தருகிறது என்றால் மிகையில்லை 

மேலும் பள்ளியின் பல நடவடிக்கைகளில் பெற்றோர், மற்றும் முதியவர்களின் பங்களிப்பையும் உட்படுத்துகிறது பள்ளி நிர்வாகம். வாரத்தில் ஒருநாள் பள்ளியின் அருகிலிருக்கும் முதியவர்கள், குறிப்பிட்டக் குழந்தைகளின் வகுப்புகளுக்கு வந்திருந்து  அவர்களுடன் தங்கள் நேரத்தை செலவிடுவதையும் தங்களுக்குத் தெரிந்த க்ராஃப்ட் வேலைகளைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவும் பள்ளி ஊக்குவிக்கிறது. அதனால், தனித்து வாழும் முதியவர்களுக்கு ஒருநாள் மகிழ்வாகக் கழிகிறது. குழந்தைகளுக்கு முதியவர்களுடன் பழகும் உன்னதவாய்ப்பும், அவர்களிடமிருந்து புதிய கலைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் சேர்ந்தே அமைகிறது.   

பள்ளி உணவகங்களில் பெரும்பாலும் பெற்றோரே வாலண்டியராக வந்து வேலை செய்கின்றனர். பள்ளி விழாக்களில் பெற்றோரின் பங்கு அலாதியானது. இதனால் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் நேரடித் தொடர்பு எப்போதும் உள்ளது 

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நட்புறவு பெரிதும் வரவேற்கப்படவேண்டிய ஒரு அம்சம். ஆசிரியர் என்றாலே நாலடி தொலைவில் நின்று பவ்யமாகப் பேசிப்பழகிய என் பிள்ளைகளும் சரி, நானும் சரி, இங்கு வந்த புதிதில் ஆசிரியரைப் பெயர் சொல்லி அழைக்க மிகவும் தடுமாறினோம். 

ஆனால் ஐந்து வயது சிறுவன் கூட அழகாக மிஸ்டர் க்ரீன்ஹில், மிஸஸ் லாசன் என்று அழைப்பதைக் கண்டு வியந்தேன். ஆசிரியர்கள் மாணவர்களை டார்லிங், ஸ்வீட்ஹார்ட், ஹனி, டியர்போன்ற அடைமொழிகள்  இல்லாமல் பேசுவதே இல்லை. நம் ஊரிலும் சில ஆசிரியர்கள் இப்படி குழந்தைகளிடம் பாசமாக இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் மிகவும் சொற்பமே. 

பள்ளி வளாகத்தில் நான் கண்ட ஒரு சம்பவம். ஒரு ஆசிரியர் புல்தரையினூடே ஓடிய ஒரு மாணவனைப் பார்த்து, “Could you please use the proper walkway, darling?” என்கிறார். அவன் “I am Sorry ms. martin” என்று கூறி நடைபாதைக்கு வருகிறான். அதுவரையில் நடந்தவை சரி. அதன்பிறகு அந்த ஆசிரியை அவனிடம் சொன்னதுதான் என்னை வியப்பின் உச்சம் கொண்டு சென்றது.  “Thank you, sweetheart” என்று புன்னகை மாறாமல் சொல்லிச் சென்றார். ஈரப்புல் வழுக்கிவிட்டுவிடும் என்பதால் புல்வெளியில் நடக்கக்கூடாது என்பது பள்ளி விதிகளுள் ஒன்று. அதை மீறி ஓடிய மாணவனை கண்டிக்காமல் தன்மையாக உரைத்தது ஒரு ஆச்சரியம். அவன் சரியான பாதைக்கு வந்ததும் அவனைப் பாராட்டியது மற்றொரு ஆச்சரியம்.  

நாம் நம் குழந்தைகள் தவறு செய்தால் தவறாமல் கண்டிக்கிறோம். ஆனால் அதே சமயம் அவர்கள் நல்ல விஷயம் செய்தால் மனதுக்குள் மகிழ்ந்தாலும் வாய்விட்டுப் பாராட்டுவதில்லை. கொஞ்சம் இடம் கொடுத்தால் தலையில் ஏறிக்கொள்வார்கள் என்று சர்வ ஜாக்கிரதையாய் இருக்கிறோம். பெற்றோரே இப்படி இருக்கும்போது ஆசிரியர்களும் அப்படி நினைப்பதில் ஆச்சர்யமில்லையே. அந்த எண்ணத்தை முறியடித்து நம் வாய் திறந்து பாராட்டுவதன் மூலம் தான் செய்யும் நல்ல செயல்கள் பற்றிய சிந்தனை அவர்கள் கவனத்துக்கு வரும். மேலும் பல நல்ல செயல்களுக்கு அவை தூண்டுகோலாகும்.  

எந்த ஆசிரியரும் யாரிடமும் கடுமையாக நடந்துகொள்வதே இல்லை என்பதுதான் என் பிள்ளைகள் இன்றுவரை என்னிடம் சொல்லிச் சொல்லி வியக்கும் ஒரு விஷயம். இந்தியாவில் அவர்கள் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தில் சில வருடங்களும்,  மத்திய அரசுக் கல்வித்திட்டத்தில் (CBSE) சில வருடங்களும் படித்து வந்தவர்கள். பல ஆசிரியர்களிடம் பயின்று வந்தவர்கள். பிடித்த ஆசிரியர்கள் யார் என்று கேட்டால் சிலரை மட்டுமே சொல்லமுடிகிறது. ஆனால் இங்கு பெரும்பாலும் எல்லா ஆசிரியர்களையுமே குறிப்பிடுகிறார்கள்.  

நான்  படித்தக் காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். ஆசிரியர்களிடம் கொண்டிருந்த மரியாதையையும் மீறி நமக்குள் இருந்த பாசமும் பக்தியும் நம் நாட்டில் இந்தக்காலத்துப் பிள்ளைகளிடம் தென்படாததன் காரணம் என்ன? ஆசிரியர்களின் அதிகாரப் போக்கா? பிள்ளைகளின் அலட்சியப் போக்கா? பள்ளிகள் தரும் அழுத்தமா? பாடப்புத்தகங்களின் சுமையா? காரணம் எதுவாக இருப்பினும் போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்வதால் உண்டான பெரும் இழப்பு குழந்தைகளின் குழந்தைமை.   

இன்னும் சொல்வேன்


23 comments:

  1. ஆஸ்திரேலியாவை பற்றிய அருமை பதிவு

    ReplyDelete
  2. வாழும் சூழலுக்கேற்ப நம் பிள்ளைகளை வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடமையும் அல்லவா?//

    மாணவனை கண்டிக்காமல் தன்மையாக உரைத்தது ஒரு ஆச்சரியம். அவன் சரியான பாதைக்கு வந்ததும் அவனைப் பாராட்டியது மற்றொரு ஆச்சரியம்.//

    ஆசிரியர்களின் அதிகாரப் போக்கா? பிள்ளைகளின் அலட்சியப் போக்கா? பள்ளிகள் தரும் அழுத்தமா? பாடப்புத்தகங்களின் சுமையா? காரணம் எதுவாக இருப்பினும் போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்வதால் உண்டான பெரும் இழப்பு குழந்தைகளின் குழந்தைமை//

    மிக‌ ந‌ன்றாக‌வே ப‌ய‌ணிக்கிற‌து க‌ட்டுரைப் போக்கு. தொட‌ருங்க‌ள் தோழி...

    ReplyDelete
  3. //விதிகளுள் ஒன்று. அதை மீறி ஓடிய மாணவனை கண்டிக்காமல் தன்மையாக உரைத்தது ஒரு ஆச்சரியம். அவன் சரியான பாதைக்கு வந்ததும் அவனைப் பாராட்டியது மற்றொரு ஆச்சரியம். //

    சரியான பாதைக்கு இட்டுச்செல்லும் சிறப்பான வழிகாட்டிகள். ;))))

    //காரணம் எதுவாக இருப்பினும் போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்வதால் உண்டான பெரும் இழப்பு குழந்தைகளின் குழந்தைமை. //

    சரியான கூற்று. நன்றிகள்.

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு. ஆசிரியர்கள் அன்பாக நடந்து கொள்வதை தான் மாணவர்கள் விரும்புவார்கள். அப்படி நடந்து கொள்ளும் எல்லா ஆசிரியரையுமே மாணவர்களுக்கு பிடிக்கும்....

    ReplyDelete
  5. தங்களின் பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆஸ்திரேலியாவில் உள்ள கல்வி முறைகளைப்பற்றி நிறைய அறிந்து கொண்டேன். இதனைப்பற்றி என்னுடன் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொண்டு வருகிறேன். மேலும் தகவல்கள் இருந்தால் அடுத்த பதிவு போடவும்.

    ReplyDelete
  6. அழகாகத் தொகுக்கிறீர்கள் கீதா.முக்கியமாக இங்கு பாடசாலைகளில் மாணவர்களுக்குச் சீருடை இல்லை என்பதும்.இதிலேயே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான பேதமின்மையைச் சொல்கிறார்கள் !

    ReplyDelete
  7. அறிய வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  8. அவுஸ்ரேலியா பற்றி சிறந்த பதிவு. இப்படியான முன்னேறிய நாடுகளின் வழிமுறைகளையே இதர நாடுகளும் பின்பற்ற வேண்டும்.
    மாணவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் ஒரு சிறு குறை இங்கிலாந்து, இந்தியா,இலங்கை மாதிரி பள்ளிச்சீருடை உள்ளது. USA, கனடா போன்ற முன்னேறிய நாடுகளில் அது கிடையாது.

    ReplyDelete
  9. நம்ம ஊருக்கெல்லாம் எப்போ வரப்போகுதோ!? வெளிநாட்டவரிடமிருந்து கெட்ட விஷயங்களை மட்டுமே கத்துக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டோம் போல.

    ReplyDelete
  10. இடையில கொஞ்ச நாளா உங்க ப்ளாக் பக்கம் வராம பல பதிவுகளை மிஸ் பண்ணிட்டேன். இந்தியப் பள்ளிகள்ல மட்டுமில்ல, பொதுவாவே ஸார்ன்னு கூப்பிடாம, மிஸ்டர் போட்டுக் கூப்பிட்டா அவமரியாதைன்னு நினைக்கிற மனப்பான்மை தான் இருக்கு. நடைபாதைக்கு வரச் சொல்லி, கோபமாத் திட்டாம, கனிவா திருத்தற ஆசிரியர்கள்... நெனைச்சா நமக்கு கிடைக்கலையேங்கற பெருமூச்சும், அந்தக் குழந்தைகளுக்கு வாழ்த்தும் சொல்லத் தோணுது. தோல் புற்று நோய் ஆஸ்திரேலியாவில் அதிகம் என்ற ஆச்சரியத் தகவலைத் தெரிஞ்சுக்கிட்டேன். அருமைங்க கீதா... இனி தவறாமல் தொடர்கிறேன் தங்களை. நன்றி!

    ReplyDelete
  11. ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறை மிகவும் சிறப்பானதாக இருப்பது ஏங்க வைக்கிறது. ஆனால், எனக்கென்னவோ, அங்கு ப்தினெட்டு வயதானதும் பெற்றோரைப் பிரிந்து தனியே செல்ல வேண்டும் என்பதுதான் பிடிக்கவில்லை.

    மேலும், அவர்கள் தனியே செல்லும்போது படிப்பும் தடைபடுகீறது, அல்லது சிரமப்படவேண்டியிருக்கீறது, இதுவே இந்தியா போல என்றால், பெற்றோர் பொறுப்பில் படிப்பு நடந்துவிடும். படிக்கும் காலத்தில் படிப்பு மட்டும் இருந்தால்தான் சிறக்க முடியும் என்பது என் கருத்து. பொறுப்புகளோடு படிப்பு சேர்ந்தால், சிரமம்தானே?

    இந்தியாவிலும், சம்பாதித்துக் கொண்டே படிக்கவும் செய்கிறார்கள். என்றாலும், பெற்றோரோடு இருப்பதால், போஷாக்கான உணவு, உறைவிடம் ஆகியவை பெற்றோரின் பொறுப்பாகீறது அல்லவா.

    பள்ளிகளில் சீருடை கிடையாதா? ஏன்?

    ReplyDelete
  12. Anonymous6/2/12 15:26

    நீச்சல் , கிராப்ட் , ஷோ & டெல் என்று எthதனை ஆரோக்கியமான
    வாழ்க்கைக் கல்விமுறை அங்கே. ஏக்கப்பெருமூச்சு தான் வெளிப்படுகிறது .
    அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  13. @ dhanasekaran .S

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @ நிலாமகள்,

    தங்கள் வருகைக்கும் ஆர்வமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

    @ வை.கோபாலகிருஷ்ணன்,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.

    @ கோவை2தில்லி

    வாங்க. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி.

    @ விச்சு,

    தங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி. கல்விமுறையில் மாற்றம் வரத் தாமதமானாலும், ஆசிரியர்களின் அணுகுமுறையில் நல்லதொரு மாற்றம் வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் அடுத்தப் பதிவை பதிக்கிறேன்.

    @ ஹேமா,

    கருத்துரைக்கு நன்றி ஹேமா. அங்கு சீருடை இல்லையென்பது வியப்பான செய்தி. ஒரு வகையில் சீருடை என்பது இருப்பவர், இல்லாதவர் என்னும் பாகுபாட்டை பிள்ளைகளிடம் வளர்க்காதிருப்பதால் நான் அதை வரவேற்கவே செய்கிறேன்.

    @ அரசன் சே

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. @ baleno

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஹேமாவுக்கு சொன்னது போல் சீருடை விஷயத்தில் நான் அதை வரவேற்கவே செய்கிறேன்.

    @ ராஜி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. ஊர்கூடி வடமிழுத்தால் அசையாத தேரும் நகராதோ? முயற்சி செய்வோம். என்றேனும் கைகூடும்.

    @ கணேஷ்

    தங்கள் வரவுக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி கணேஷ் சார். தொடர்ந்து வாங்க.

    @ ஹூஸைனம்மா,

    அவங்க வாழ்க்கை முறையே அப்படித்தானே இருக்கு. இதில் நாம் செய்வதற்கு எதுவுமே இல்லை. அவர்களைப் பார்த்து நம் பிள்ளைகள் மாறிவிடுவார்களோ என்றுதான் மற்றக் கலாச்சார மக்களுக்கு கவலை. இங்கேயே பிறந்துவளர்ந்த பிள்ளைகள் என்றால் அதையும் சொல்வதற்கில்லை.

    ஆஸ்திரேலியப் பள்ளிகளில் சீருடை உண்டு. கனடா போன்ற நாடுகளில் இல்லையென்பதை நானும் இப்போதுதான் அறிகிறேன்.

    @ ஸ்ரவாணி,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரவாணி. அடுத்தப் பதிவை இன்னும் ஓரிரு நாட்களில் பதிகிறேன்.

    ReplyDelete
  15. அன்புத் தோழி கீதா,


    உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள அபிமானத்துக்கு சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன்.

    சுட்டி கீழே:

    http://minminipoochchigal.blogspot.in/2012/02/blog-post_06.html

    ReplyDelete
  16. உங்கள் கட்டுரை மிகுந்த மன நிறைவைத் தருகிறது.எழுபது நாட்கள் மெல்பர்னில்,மகள் வீட்டில் தங்கியிருந்து பேரன்,பேத்தியை பள்ளிகளில் சேர்த்து விட்டு வந்து சேர்ந்தேன்.அந்த என் நினைவுகளை "கேடில் விழுச் செல்வம் கல்வி",என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளேன் என்னுடைய பேரன் துபாயில் படித்து, பின் பெங்களுர்,அப்புறம் சிங்கப்பூர், இப்போது மெல்பர்னில்.துபாயில் ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு.இந்தியா வந்தவுடன் இவன் வயது ஒத்த குழந்தைகள்,ஒரு வகுப்பு மேலே. இப்போது ஏழாவது இன்னும் முடிக்கவில்லை.எட்டாவது வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.மற்றவை விவரமாய் பகிர்ந்துள்ளேன்.தங்களுக்கு நேரம் கிடைத்த போது,படித்து கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் ..அன்புடன்(http://senbagadasan.blogspot.com)

    ReplyDelete
  17. @ Shakthiprabha

    தங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பதற்காக மிகவும் மகிழ்கிறேன் ஷக்தி. மனமார்ந்த நன்றிகள் பல உங்களுக்கு.

    ReplyDelete
  18. @ Kalidoss Murugaiya

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    தங்கள் தளத்தில் ஆஸ்திரேலியாவைப் பற்றி பல செய்திகளை சுவையாகப் பகிர்ந்துள்ளீர்கள். படித்தேன். ரசித்தேன். அடிக்கடி வருவேன். மிகவும் நன்றி சார்.

    ReplyDelete
  19. வியப்பாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது.இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் வழக்கம் அதிகமாகவே இருக்குமே.
    சமீப செய்தி அறிந்தீர்களா?மார்க் குறைவால் மாணவன் ஆசிரியை கொலை செய்துள்ளான்.

    ReplyDelete
  20. teaching methods and teachers way of controlling differs from india but its good

    ReplyDelete
  21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி. அடுத்தப்பதிவில் நீங்கள் சொன்ன செய்தியைப் பற்றியும் பகிர உள்ளேன்.

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருள்.

    ReplyDelete
  23. அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
    இதுபோன்ற கல்விச் சூழல் இந்தியாவில் தோன்றச்
    சாத்தியம் இருப்பதாகவேபடவில்லை
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.