8 June 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (2)



விக்னேஷின் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது. அம்மாவை இதுவரை எடுத்தெறிந்து பேசியதில்லை.  எப்படி இந்த அளவு கோபம் வந்தது என்றும் தெரியவில்லை. அதுவும் அம்மாவிடம்! போதாதென்று அவர் முகத்தில் அறைவதுபோல் கதவையும் அறைந்து மூடியது மேலும் குற்ற உணர்வை அதிகமாக்கியது. ஆனாலும் அம்மா சொன்னது சரியில்லை என்றே மனம் வாதிட்டது.

பிரபு யார்? என் உயிர் நண்பன்! எனக்காக எதுவும் செய்யக்கூடியவன். அவனுக்காக நான் இதைக்கூட செய்யக்கூடாதா?’

கல்லூரியில் ஒன்றாய்ப் படித்தபோதிலிருந்து ஆரம்பமானது அவர்கள் நட்பு. கல்லூரி முடித்து, இருவரும் இருவேறு போட்டி நிறுவனங்களில் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை வந்த பின்னாலும் அவர்கள் நட்பு தொடர்வதில் எந்தப் பாதகமும் ஏற்படவில்லை. மாதம் ஒருமுறையோ, இருமுறையோ சந்திக்கும் பழக்கத்தைத் தவறாமல் காப்பாற்றி வந்தனர்.

விக்னேஷுக்கு பிரபுவின்மேல் ஒரு சிறிய வருத்தம் இருந்தது. அவன் மட்டும் தன் காதல் விவகாரத்தை முன்பே தெரியப்படுத்தியிருந்தால் திட்டமிட்டு பல முன்னேற்பாடுகள் செய்திருக்கலாம். இப்படி அவசர கதியில் தாலிகட்டியிருந்திருக்கத் தேவையில்லை.

எப்படியோ, இன்னும் பதினைந்து நாள் போனால் போதும், அதன் பிறகு சட்டத்தின் பாதுகாப்பு கிடைத்துவிடும்.  அதற்குள் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக்கூடாதே என்று  பயந்துகொண்டிருக்கும் வேளையில் அம்மா இப்படி சொல்லலாமா? வயதிலும், அனுபவத்திலும் பெரியவரான அவர் வாக்கு பலித்துவிட்டால்......?

இந்தக் கவலைதான் விக்னேஷை வேகம் கொள்ளவைத்துவிட்டது. உண்மையில் அம்மாவைக் காயப்படுத்தும் எண்ணம் துளியும் கிடையாது. ஆனால் அம்மா என்ன நினைத்திருப்பார்? தன் மகன் தன்னைவிட்டு விலகுவதாக எண்ணுவாரோ? அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டால் ஒழிய என் மனம் ஆறாது. அம்மாவின் மனமும் குளிராது. காலையில் எழுந்ததும் அம்மாவிடம்..........'

சிந்தித்துக்கொண்டே உறங்கிப்போனான்.

காலையில் எழுந்ததும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தாலும், நேரடியாய் அவர் முகம் பார்க்கத் தயக்கமாயிருந்தது. காயப்படுத்திவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாய்ப் போய்விடுமா என்று உள்மனம் கெக்கலி செய்தது. அம்மாவை எதிர்கொள்ளும் துணிவற்றவனாய் தலை குனிந்து உணவுமேசையின் முன் அமர்ந்திருந்தான்.

அவனுக்குப் பிடித்த ரவா புட்டு அவன் முன் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்து அவன் நெஞ்சம் விம்மியது. அம்மாவை நோகடித்த பிள்ளைக்கு தன் கையால் அவனுக்கு விருப்பமான உணவைச் செய்து பரிமாறும் தாயுள்ளம் கண்டு கண்கள் கலங்கின.

எழுந்ததில் இருந்து அம்மாவின் முகம் பார்க்காமல் கிளம்பிக்கொண்டிருக்கும் மகனைப் பார்த்தார், நாகலட்சுமி. இவனிடம் இந்த விஷயத்தில் வீம்பு வேலைக்காகாது என்று முடிவெடுத்தவர் போல், அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மகனின் அருகில் நின்று தலை கோதினார்.

அவ்வளவுதான்! அத்தனை நேரமும் இருந்த இறுக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது.

"அம்மா!"

அப்படியே ஆதுரத்துடன் அவர்மேல் தலைசாய்த்துக்கொண்டான்.

"அம்மா!  என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்களிடம் அப்படி கடுமையாய் நடந்திருக்கக்கூடாது. அதுக்காக உங்ககிட்ட மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்டுக்கறேன். ஆனாலும், நீங்க அப்படி சொல்லியிருக்கக் கூடாது! அவனும் உங்க பிள்ளை மாதிரிதானே? நீங்க ஒரு தடவை அந்தப் பெண்னைப் பார்த்தால்...உங்க எண்ணத்தை மாத்திக்குவீங்க!"

"சரியப்பா! தப்புதான், ஒத்துக்கறேன்! இனி சொல்லலை. போதுமா?

மகனின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியைக் கண்டு மனம் தடுமாறியது. தன் விருப்பப்படி பெண் தேர்ந்தெடுத்து மணமுடிக்கும் ஆசையில் மண்ணள்ளிப் போட்டு விடுவானோ?

"அம்மா!"

சிந்தனை கலைந்தது.

"என்னப்பா?"

"ஒருநாள், அவங்க ரெண்டுபேரையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வரவா?"

நாகலட்சுமிக்குள் மகிழ்ச்சி பெருகியது. இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்? ‘அந்த உலக அழகியைப் பார்க்க எனக்கும் ஆசைதான்! அழைத்துவா’ என்று சொல்ல வாய் துடித்தது.

"அவங்க வந்தால், ஒருவேளையாவது விருந்து செய்யணுமே! என்னால் முடியுமான்னு தெரியலையே!"

கொஞ்சம் பிகு தான். இருந்தாலும் பரவாயில்லை.

"பக்கத்து வீட்டு மனோகரி அக்காவைக் கூப்பிட்டுக்கலாம், அம்மா! அவங்க நிச்சயம் செய்வாங்க! அவங்களும் காதல் கல்யாணம் செய்துகிட்டவங்கதானே! ஒரு காதலர் தம்பதிக்கு விருந்து வைக்க உதவமாட்டாங்களா, என்ன?"

"சரிப்பா! கேட்டுப்பாக்கறேன். என்னைக்கு வரச் சொல்றது?"

"வர ஞாயிற்றுக்கிழமை? அதுதான் மனோகரி அக்காவுக்கும் வசதியாயிருக்கும்! முதலில் அவங்களைக் கேட்டுக்கோங்க! அவங்க சரின்னு சொன்னபிறகு பிரபு கிட்ட சொல்லிக்கலாம்!"

"சரிப்பா!"

நாகலட்சுமியின் மனம் ஞாயிற்றுக்கிழமையின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கியது.

அன்றைய விருந்து மிகுந்த தடபுடலாய் இருந்தது. கத்தரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்,தக்காளி சூப், பட்டாணி, உருளைக்கிழங்கு வறுவல், கேரட் பொரியல், கோஸ் கூட்டு, வெல்ல மாங்காய்ப் பச்சடி, அப்பளம் இவற்றுடன் மசால் வடை, ஜவ்வரிசி பாயசம் என்று வகைக்கு ஒன்றாகச் செய்து அசத்திவிட்டாள் மனோகரி அக்கா! அக்காவின் வீட்டுக்காரர் கொடுத்துவைத்தவர் என்று விக்னேஷ் நினைத்துக்கொண்டான்.

பிரபுவும், சுந்தரியும் காலையிலேயே வந்துவிட்டனர். வந்ததுமே நாகலட்சுமியின் கால்களில் விழுந்து வணங்கினர். நாகலட்சுமி, சுந்தரியைப் பார்த்தப் பார்வையில் அத்தனை சிநேகம் இல்லை.

"தீர்க்காயுசா இருப்பா! மகராசியாய் தீர்க்க சுமங்கலியாய் இரும்மா!"

வாய் மட்டும் வாழ்த்தியது. மனம் எதையோ கணக்குப் போட்டது. அவரது கற்பனைக்கு எதிரான தோற்றம் கொண்டிருந்தாள், சுந்தரி. பரவாயில்லை என்று சொல்லுமளவுதான் இருந்தது அவள் அழகு. வெடுவெடுவென்று ஒட்டிய உடல்வாகு. கறுத்த தேகம். கவர்ந்திழுக்கும் பேச்சோ, நளினமோ இல்லை. கைகொடுத்தது களையான முகம் மட்டுமே!  இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறதென்று பிரபு இவளைத் திருமணம் செய்துகொண்டான்?

மனோகரி, சுந்தரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது,

"மாகஸின் படிக்கிற பழக்கமுண்டா?" என்ற கேள்விக்கு,

"என்னாக்கா, என்ன சொல்றீங்க? எனக்கு இங்கிலீஷ் தெரியாதே!" என்று பட்டென்று சொன்ன பதிலிலிருந்து படிப்பறிவில்லை என்பது தெரிந்தது.

புடவையைக் கணுக்கால் தெரியுமளவு உயர்த்திக் கட்டியிருந்ததில் இருந்து நாகரிகம் தெரியவில்லை என்பது புரிந்தது.

விருந்துக்கு வந்த இடத்தில் நாசுக்காய் நடந்துகொள்ளத் தெரியாமல், சாப்பாடு முடிந்ததும், புடவையை இழுத்துச் செருக்கிகொண்டு பாத்திரங்களை அலம்ப முற்பட்டதில் அவளது பத்தாம்பசலித்தனம் தெரிந்தது.

நாகலட்சுமிக்கு, பிரபு, சுந்தரியை எப்படிக் காதலித்தான் என்று இன்னமும் வியப்பாகவே இருந்தது. அதைவிடவும், பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்ததோடு, நண்பனின் தாயிடம் ஆசி வாங்குபவனது துணிவும், சாமர்த்தியமும் வியக்கவைத்தது.

நாளை....விக்னேஷும் இதுபோல் எவளையாவது கட்டிக்கொண்டு எந்த நண்பனின் தாயிடமாவது ஆசி வாங்குவானோ? சேச்சே! இவன் அம்மா பிள்ளை! நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டான். இருந்தாலும் தான் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று உள்மனம் அறிவுறுத்தியது.

"அம்மா!"

உலுக்கினான் விக்னேஷ்.

"ம்! என்னப்பா?"

"அவங்க கிளம்புறாங்க!"

"இதோ, வரேன்!"

நாகலட்சுமி உள்ளே சென்று வெற்றிலை, பூ, பழம், மஞ்சள் இத்யாதிகளுடன் ஒரு புடவையும், ரவிக்கைத் துணியும் வைத்து மனோகரியிடம் கொடுத்து, சுந்தரியிடம் கொடுக்கச்சொன்னார்.

"அம்மா! அதை உங்க கையாலேயே கொடுங்க!"

பிரபு வற்புறுத்த, நாகலட்சுமி, வேறுவழியின்றி மனோகரியிடமிருந்து வாங்கி சுந்தரியிடம் தந்தார். அம்மா எப்போது, எப்படி இந்த ஏற்பாடெல்லாம் செய்தார் என்று வியந்தான்.விக்னேஷ், அம்மாவை எண்ணிப் பெருமிதப்பட்டான், அவர் மனதில் புதிதாய்க் குடிகொண்ட போராட்டத்தை அறியாமல்!

*********************************************************************

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

மு. உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
***********
தொடர்ந்து வாசிக்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (3)

முந்தைய பதிவு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (1)


7 comments:

  1. Anonymous9/6/11 01:58

    Interesting =))

    ReplyDelete
  2. பிள்ளைகள் விசயத்தில் ஒப்பீடு ஒவ்வொரு தாய்க்கும் இருக்கும். நம் பிள்ளையும் நாளை... இந்த எண்ணம்தான் பலமாக மாறும். புதிய பார்வைகள் உறவை சீர்திருத்தும். இயல்பான் கதை ஓட்டம் நன்று.

    ReplyDelete
  3. நன்றி அனாமிகா,

    நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  4. தொடர் மிகவும் அருமை,கற்ப்பனை வளம் நன்றாக இருக்கிறது.கீப்பிட்டப் .பாரட்டுக்கள் வாழ்க வளமுடன் மென் மேலும் நல்ல கற்ப்பனை வளத்துடன் சிறந்துவளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தொடரும் என்று போடவில்லை.
    தொடரும்தானே கீதா?இடக்குமுடக்கா என்னமோ செய்யப்போறாவோ அம்மா !

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி இன்பம் துன்பம்.

    கருத்துக்கு நன்றி ஹேமா. தொடரும் போட மறந்திட்டேன், ஹேமா. :)

    வருகைக்கு நன்றி சுபத்ரா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.