19 February 2015

மயிலே.. மயிலே.. உன் தோகை எங்கே...

மயில்களை ஆஸ்திரேலியாவில் பார்ப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. அதுவும் கூண்டுக்குள் அடைபடாது சுதந்திரமாய் சுற்றித்திரியும் அழகுத்தோகை ஆண்மயில்களும் அவற்றை விடவும் வெகு மெத்தனமாய்த் திரியும் பெண்மயில்களுமாய்.…ஒரு நாளை மிக அழகாக்கிவிட்டன. 

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சார்ந்த பூங்கா அது. ஏராளமான பறவைகளின் சத்தத்தை மீறி ஒலித்த க்காவ்…. க்காவ்.. என்னும் அகவல் ஓசை இப்போதும் கூட காதில் ஒலிக்கும் அற்புதம். 

புதுப்புடவையின் ஓரம் அழுக்காகாதவண்ணம் மெலிதாய் கொசுவத்தைத் தூக்கிப்பிடித்து நடக்கும் பெண்கள் போல ஒரு சமயம் அவ்வளவு நீளத் தோகையை வெகு லாவகமாகத் தூக்கிக்கொண்டு நடக்கும் ஒய்யாரம்… அப்படியே அழுக்கானால்தான் என்ன என்று அலட்சியமாய் தழையத்தழைய நடக்கும் பெண்டிரைப் போல தோகையைத் தரையில் தழையவிட்டு நளினமாய் சிலநேரம்… 

ஆடு மயிலே ஆடு மயிலே என்று கெஞ்சும் அறியாமையை ரசித்தபடி அவை பாட்டுக்குப் போகின்றன வருகின்றன. அங்கே க்ளிக்கியதில் கொஞ்சம் நீங்களும் ரசிக்க… 












15 February 2015

ஒரு கூடு உருவாகிறது


இங்கே பரவலாய்க் காணப்படும் கருங்குருவியிது...
 பக்கத்து வீட்டின் மேற்கூரையோரம் உருவாக்குகிறதொரு கூடு! 


















கலையரசி அவர்களின் ஊஞ்சலில் என்றாவது ஒரு நாள்



ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படும் குழந்தையின் 
உற்சாக உள்ளத்தோடு நான்...




என்றாவது ஒரு நாள் புத்தகத்தில் நன்றியுரையில் இடம்பெற்றிருக்கும் என் மதிப்புக்குரிய மற்றுமொரு தோழமையுறவு கலையரசி அக்கா.  நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ந்து அவர்கள் அளித்துவரும்  ஊக்கமும் உந்துதலும்தான் இன்றென்னை இணையத்தில் ஓரளவுக்கு பரிச்சயப்பட்ட பதிவராய் எழுத்தாளராய் வலம் வரச் செய்திருக்கின்றன. அவர்களுக்கு இவ்வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

என்றாவது ஒரு நாள் நூல் விமர்சனத்தை தன்னுடைய ஊஞ்சல் தளத்தில் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு கதையையும் அவர்கள் சிலாகித்திருக்கும் விதமே கதையை அவர்கள் எந்த அளவு ஊன்றி வாசித்திருக்கிறார்கள் என்பதையும் மூலக்கதைகளின் கருவை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் மிக அழகாகக் காட்டுகின்றன. 










 


10 February 2015

மணிமேகலாவின் அட்சயப்பாத்திரத்தில் என்றாவது ஒரு நாள்!



ஆஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கையை அடிப்படையாய்க் கொண்ட கதைகளின் தொகுப்பான என்றாவது ஒரு நாள் என்னும் என் புத்தகத்தில் நன்றியுரையில் இடம்பெற்றிருக்கும் தோழி மணிமேகலாவை பலர் அவருடைய வலைத்தளமான அக்ஷ்ய பாத்திரம் வழியே அறிந்திருக்கக்கூடும். தமிழ், தமிழர், சமூகம், பெண்கள், வாழ்க்கை போன்ற பல்வேறுபட்ட சிந்தனைக்களம் சார்ந்த அற்புதமான மற்றும் ஆழமான எழுத்துக்களின் சொந்தக்காரியான அவருடைய சிநேகம் கிடைத்த நாளிலிருந்து என்னுடைய இன்னொரு புதிய பரிமாணம் எனக்குப் பரிச்சயமானது எனலாம்.

ஆஸ்திரேலிய காடுறை கதைகளை நூலாகத் தொகுக்கும் முயற்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர் தோழி மணிமேகலா. என் புத்தகம் எப்போது வரும் என்று காத்திருந்து பெற்றுக்கொண்டபோது அவருடைய உற்சாகம் புரிந்தது. ஒரு வார அவகாசத்தில் முழு புத்தகத்தையும் வாசித்துமுடித்து, கையோடு தன் சந்தோஷ உணர்வுக்குவியலைப் பகிர்ந்துகொண்டபோது உள்ளம் கரைந்துபோனது. தேர்ந்தெடுத்த கதைகளையும், தமிழாக்கிய திறத்தையும் சிலாகித்த அவர், அந்தக் கதைகளினூடே தான் அந்தக்காலத்துக்கே சென்றுவிட்ட உணர்வைப் பெற்றதாகவும் அதிலிருந்து மீளமுடியாமல் நிகழுலகு வரவியலாமல் தவிப்பதாகவும் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன்.

இப்போது தன் வலைப்பூவான அக்ஷ்ய பாத்திரத்தில் அமுதென வழங்கியிருக்கிறார் நூலின் மீதான தன் விமர்சனத்தை. எந்த ஒளிவு மறைவுமில்லாமல் குறை நிறைகளோடு கூடிய மனந்திறந்த அவரது விமர்சனம் அடுத்தடுத்தப் படைப்புகளின் மீதான என் சிரத்தையைக் கூட்டுமென்பதில் சந்தேகமில்லை.

தோழி மணிமேகலாவின் விமர்சனத்தை வாசித்திட இங்கு வாருங்கள்


வாசிப்பின் மூலம் மொழிபெயர்ப்பாளரோடு மூல ஆசிரியரின் உணர்வுகளையும் மிக அழகாக உணர்ந்ததோடு அவற்றை அனைவரும் அறியத் தந்துள்ள தோழியின் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வேன், அன்புக்கு பதில் அன்பைத் தருவதைத் தவிர! நன்றி மணிமேகலா.


8 February 2015

மன்னியுங்கள் என்னை...



மன்னியுங்கள் என்னை
இதுவரை எழுதியவற்றுக்காகவும்
எழுதவியலாமற் போனவற்றுக்காகவும்
இப்போது எழுதவிருப்பவற்றுக்காகவும்
இனி ஒருபோதும் என்னால் எழுதப்படாதிருப்பவற்றுக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
பூத்துக்குலுங்கும் மரங்களுக்காகவும்
பூக்கள் வழங்கும் கனிகளுக்காகவும்
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
பொன்னுக்கும் நீருக்கும் ஊற்றுக்குமாய்..

மன்னியுங்கள் என்னை
தேயும் நிலவுக்காகவும்
மறையும் கதிருக்காகவும்
உயிர்களின் சலனத்துக்காகவும்
ஜடங்களின் நிச்சலனத்துக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
வண்ணங்கள் குழைத்த வையத்துக்காகவும்
குருதியில் கூட்டிய செந்நிறத்துக்காகவும்
வனங்கள் நிறைத்த இலைகளுக்காகவும்
வானம் நிறைத்த மழைக்காகவும்
மணல் நிறைத்த விண்மீன்களுக்காகவும்
நீலம் நிறைத்த கனவுகளுக்காகவும்!

மன்னியுங்கள் என்னை
அர்த்தங்களைப் பொதித்த வார்த்தைகளுக்காகவும்
அந்நாட்களைப் பொதித்த வரலாற்றுக்காகவும்
நேற்றில் ஒளிந்திருந்த இன்றைக்காகவும்
இன்றில் ஒளிந்திருக்கும் நாளைக்காகவும்
அபிநயங்களால் பரதத்தையும்
அடையாளங்களால் பிரபஞ்சத்தையும் நிறைத்த
பரம்பொருளைப் படைத்தமைக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
நிலம் பிளக்கும் பூகம்பத்துக்காகவும்
சுழன்றடிக்கும் சூறைக்காற்றுக்காகவும்
பற்றியெரியும் காட்டுத்தீக்காகவும்
கொந்தளித்து சீறும் பெருங்கடலுக்காகவும்.

இப்பூமியொரு பழுதடைந்த எந்திரம்!
அதை சீராக்க வந்தவனல்லன் நான்!
நானொரு நாடிழந்த மன்னன்
ஆயுதமிழந்த கடவுள்
நாவிழந்த வாழ்வு

உங்கள் தலையைக் காவுகேளாத
கடவுளைக் கண்டுபிடியுங்கள்.
பயந்தொலைத்த மனிதனைக் கண்டுபிடியுங்கள்
அகரந்துவங்கியொரு அருமொழியைக் கண்டுபிடியுங்கள்.

*********************

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு பிரபல மலையாளக்கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்கள் சமர்ப்பித்துள்ள மலையாளக் கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தைப் (மொழியாக்கம்: கே.சச்சிதானந்தன்) பகிர்ந்துகொண்ட முகநூல் தோழி கவின்மலர் அவர்களுக்கும் அதைத் தமிழாக்கத் தூண்டிய நண்பர் பேனா மனோகரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஆங்கிலக் கவிதை கீழே…

PARDON
------------
- K. Satchidanandan

Pardon me
for what I have written,
for what I could not write,
what I am likely to write
and what I may never write.

Pardon me for the trees’ flowering,
for the flowers’ fruiting,
for having hoarded so much of
gold and water and spring
inside the earth.

Pardon me for the waning moon,
for the setting sun,
the movement of the living,
the stillness of the non-living.

Pardon me for filling earth
with so much of colour,
blood with so much red,
leaf with forest,
rain with sky,
sand with star
and ink with dreams.

Pardon me for filling words
with so much meaning,
dates with so much of history,

for having hidden today inside yesterday
and tomorrow inside today,
for creating the Creator
who fills gestures with dance
and nature with symbols.

Pardon for the earthquake
and the tempest,
the wild fire and the raging sea.

Earth is a damaged machine.
I am not the one to repair it.
I am the king without a country,1
the god without a weapon,2
life without a tongue.

Invent a god
that doesn’t ask for your head.
Invent the fearless man.

Invent
language,
alphabet.


1 February 2015

மண்ணாசையோடீ...




நெஞ்சுக்குழிக்கும் தொண்டைக்குழிக்குமாய்
ஊசலாடும் அந்திம சுவாசத்தின் மர்மத்திறவுகோல் பற்றி
அங்கு எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
குற்றவுணர்வில்லாமல் கொலை செய்வதெப்படியென
கற்றுத்தேர்ந்தவர்களையழைத்து கலந்தாலோசித்தார்கள்…

அறுபட விரும்பாது அலையும் அவ்வான்மாவின்
அறுதி இழையின் ரகசியப்பற்று குறித்து
ரகசியமாய்க் கூடி விவாதித்தார்கள்.
பதினேழு பெற்று பத்தைப் பறிகொடுத்து
மிச்சத்தின் மூலம் வம்சத்தின் எச்சம் வளர்த்தவளுக்கு
மற்றென்ன ஆசையிருக்கமுடியுமென்று
மாய்ந்து மாய்ந்தொரு முடிவுக்கு வந்தார்கள்.

பொன்னைக் கரைத்தூற்றியும் போகாத உயிரை வியந்து
மண்ணைக் கரைத்தூற்றி மரணம் தருவித்தார்கள்.
நா நுனியில் காத்திருந்த ஒப்பாரியோடு
நடுநிசியில் மாரடித்து அழுகிறார்கள்.

அடியம்மா… மண்ணுக்குப் போகும் வயதில்
மண்ணாசையோடீ உன்னைப் பிடித்து நிறுத்தியது என்று
மூக்கைச்சிந்தி முந்தானையில் துடைக்கிறார்கள்.

&&&&

(படம் : நன்றி இணையம்)

15 January 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய நூல்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். 

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழா முடிவடைய இன்னும் ஆறு நாட்களே உள்ளன.  என்னுடைய முதல் நூலான 'என்றாவது ஒரு நாள்' என்னும் மொழிபெயர்ப்பு நூல் அகநாழிகை பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது என்பதையும் புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் மற்ற நூல்களோடு இதுவும் கிடைக்கிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அகநாழிகை பதிப்பகத்தின் அரங்கு எண் 304. 







அகநாழிகைப் பதிப்பகத்தின் வெளியீடுகள் - 
2013, 2014 மற்றும் - ஜனவரி 2015

கவிதைகள் 
விரல் முனைக் கடவுள் - ஷான் (ரூ.80)
சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர் (ரூ.70)
மௌன அழுகை - மு.கோபி சரபோஜி (ரூ.70)
மலைகளின் பறத்தல் - மாதங்கி (ரூ.80)
ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - க.இராமசாமி (ரூ.60)
என் வானிலே - நிம்மி சிவா (ரூ.50)
யுகமழை - இன்பா சுப்ரமணியன் (ரூ.70)
கவிதையின் கால்தடங்கள் (50 கவிஞர்களின் 400 கவிதைகள்) - தொகுப்பாசிரியர் : செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.230)
அன்ன பட்சி - தேனம்மை லட்சுமணன் (ரூ.80)
சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன் (ரூ.80)
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி (ரூ.80)
தனியள் - தி.பரமேசுவரி (ரூ.100)
அவளதிகாரம் - வசந்த் தங்கசாமி (ரூ.200)
சிவப்பு பச்சை மஞ்சள் வௌ¢ளை - செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.70)
மணல் மீது வாழும் கடல் - குமரகுரு அன்பு (ரூ.70)
ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - உமா மோகன் (ரூ.70)
அக்காவின் தோழிகள் - நீரை. மகேந்திரன் (ரூ.60)
தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ் ஞானியார் (ரூ.90)

சிறுகதைகள்
சுனை நீர் - ராகவன் ஸாம்யேல் (ரூ.110)
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - இராய. செல்லப்பா (ரூ.120)
அடை மழை - ராமலக்ஷ்மி (ரூ.100)
குறுக்கு மறுக்கு - சிவக்குமார் அசோகன் (ரூ.70)
முப்பத்தி நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) - தமிழில் : புல்வெளி காமராசன் (ரூ.120)
சக்கர வியூகம் - ஐயப்பன் கிருஷ்ணன் (ரூ.80)
வற்றா நதி - கார்த்திக் புகழேந்தி (ரூ.120)
அம்மாவின் தேன்குழல் - மாதவன் இளங்கோ (ரூ.130)
என்றாவது ஒரு நாள் (ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள்) - ஹென்றி லாசன் - தமிழில் : கீதா மதிவாணன் (ரூ.150)

கட்டுரைகள்
வெயில் புராணம் - உமா மோகன் (ரூ.25)
கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து ஜோ டி குரூஸ் படைப்புலகம்) தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி (ரூ.240)
யாருக்கானது பூமி? - (சூழலியல் - காட்டுயிர் பாதுகாப்பு - பறவையியல் கட்டுரைகள்) பா.சதீஸ் முத்து கோபால் (ரூ.140)
பேயாய் உழலும் சிறுமனமே - இளங்கோ டிசே (ரூ.150)

நாவல்
நுனிப்புல் - வெ.இராதாகிருஷ்ணன் (ரூ.130)

**********************************************

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய ஐரோப்பியக் குடியேறிகளின் அன்றைய மாறுபட்ட வாழ்க்கைச்சூழலை மையமாய்க் கொண்டு புனையப்பட்ட ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் என் முயற்சிக்கு ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். நன்றி.


அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்.