14 March 2026

டிங்கோ கொலைகள் (1)

டிங்கோ கொலைகள் என்று மொட்டையாய்ச் சொன்னால் என்ன புரியும்? டிங்கோக்கள் கொல்கின்றனவா அல்லது கொல்லப்படுகின்றனவா? பதிவின் சாரம் இரண்டுக்கும் பொருந்துவதால் இத்தலைப்பு.

பரிதாப மரணமடைந்த பைப்பர் ஜேம்ஸ் (படம்- இணையம்)

இரண்டு மாதங்களுக்கு முன்பு 19-01-2026 அன்று , ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த (G)கர்ரி தீவில் (முந்தைய பெயர் ஃப்ரேஸர் தீவு) டிங்கோ கூட்டத்தால் சூழப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்னும் 19 வயதே ஆன இளம்பெண்ணின் துர்மரணம் ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நண்பர்களிடம் கடலில் நீந்தப் போவதாகச் சொல்லிச் சென்ற பெண்ணை ஆறரை மணி வாக்கில், கடற்கரையில் பிரேதமாக, பத்துப் பன்னிரண்டு டிங்கோக்களுக்கு மத்தியில் குதறப்பட்டக் காயங்களுடன் காண நேர்வது எவ்வளவு கொடுமை!

ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்க்கும் பெருத்த ஆர்வத்தோடும் வாழ்நாள் கனவோடும் ‘Working Holiday Visa’ எனப்படும் ஒரு வருட கால,  பணி மற்றும் சுற்றுலாவுக்கான நுழைவாணை பெற்று கனடாவிலிருந்து (G)கர்ரி தீவுக்கு வந்த இளம்பெண்தான் பைப்பர் ஜேம்ஸ். ஆஸ்திரேலியாவின் அழகிய தீவான (G)கர்ரிக்கு வந்து ஆறு வாரங்களே பணியாற்றிய நிலையில் இப்படியொரு துர்மரணம் சம்பவித்தது அனைவரையுமே இன்றுவரை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பைப்பர் ஜேம்ஸின் மரணத்துக்கு டிங்கோக்கள் காரணமா? வேறு யாரும் காரணமா? இயற்கை மரணமா? என பல கோணங்களிலிருந்தும் துப்பு துலக்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது மரணத்துக்கு மனிதர் யாரும் காரணமில்லை என்பது மட்டுமல்ல, டிங்கோக்களே காரணம் என்பதும் பிரேதப் பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. 

டிங்கோ

ஆறு வார கால விசாரணையின் இறுதியில் சென்ற வாரம் மரண விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறிக்கையில் டிங்கோக்கள் தாக்கியதாலோ அல்லது டிங்கோக்களிடமிருந்து தப்பிக்கமுயன்றோ காயமுற்ற பைப்பர் ஜேம்ஸ் நீந்த இயலாமல் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்று மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கர்ரி தீவு டிங்கோக்களின் வேட்டை உத்திகளுள் ஒன்று, இரையைச் சுற்றி வளைத்து, தப்பிவிடாமல் இருக்க, கடலை நோக்கித் தள்ளிய பிறகு, கூட்டமாய் சூழ்ந்து வேட்டையாடுவது. அதுவே பைப்பர் ஜேம்ஸ் விஷயத்திலும் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பைப்பர் ஜேம்ஸ் மரணத்துக்கு டிங்கோக்களே காரணம் என்ற முதல் கட்ட விசாரணையின் முடிவில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி, பைப்பர் ஜேம்ஸைத் தாக்கிய டிங்கோ கூட்டத்தை ஒட்டுமொத்தமாக (கருணைக்)கொலை செய்ய அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டு மறு வாரமே பத்து டிங்கோக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டுவிட்டன.  

உண்மையிலேயே டிங்கோக்கள்தான் பைப்பர் ஜேம்ஸ் மரணத்துக்குக் காரணமா என்பது உறுதி செய்யப்படாத நிலையில், பத்து டிங்கோக்களைக் கொல்ல அரசு உத்தரவிட்டதும் உடனடியாக எட்டு டிங்கோக்கள் கொல்லப்பட்டிருப்பதும் பலருக்கும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. பைப்பர் ஜேம்ஸ் மரணம் நேர்வதற்கு மூன்று நாட்கள் முன்பும் (16-1-26) ஒரு டிங்கோ சுற்றுலா பயணிகளை மூர்க்கமாகத் தாக்குவதாகச் சொல்லி கொல்லப்பட்டது.

(G)கர்ரி தீவின் ஒட்டுமொத்த டிங்கோக்களின் எண்ணிக்கை சுமார் 200 மட்டுமே என்றும் சுமார் 20-30 குழுக்களாக அவை வசிக்கின்றன என்றும் அறியப்படுகிறது. (G)கர்ரி தீவின் மிக முக்கிய உயிரினமாக அறியப்படும் டிங்கோக்களைக் கொன்ற அரசின் செயலுக்கு, அத்தீவின் பாரம்பரிய உரிமையாளர்களான ‘பட்சல்லா’ பூர்வகுடியினர் பெரும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். தங்களைச் சற்றும் கலந்தாலோசிக்காமல் குவீன்ஸ்லாந்து அரசு எடுத்த இந்த அவசர நடவடிக்கை, கடைசி நிமிடத்தில்தான் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதில் தங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்றும் பட்சல்லா பூர்வகுடி தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

(G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் மூலம் குவீன்ஸ்லாந்து மாநில அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் மில்லியன் கணக்கான வருவாயை, டிங்கோக்கள் காரணமாக அவ்வளவு எளிதில் இழக்க விரும்புமா என்ன? 2024-ஆம் ஆண்டில் (G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் மூலம் ஈட்டிய வருமானம் சுமார் 876 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஐயாயிரத்து அறுநூறு கோடி) என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

டிங்கோ - கேள்விப்படாத பெயராக இருக்கிறதே. அப்படி என்றால் என்ன என்று கேட்பீர்கள். டிங்கோ என்பவை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெகு மூர்க்கமான காட்டு நாயினம். பார்ப்பதற்கு சாதாரண வளர்ப்பு நாய்கள் போலத் தெரிந்தாலும் அவற்றின் குணம் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண நாய்களைப் போல இவற்றைப் பழக்க இயலாது. ஓநாய்களைப் போலவும், செந்நாய்களைப் போலவும் கூட்டம் கூட்டமாக இரையைத் துரத்தி, சாதுர்யமாக வளைத்து வேட்டையாடும் இயல்புடையவை.

டிங்கோக்களின் வசிப்பிடங்கள் (படம் - இணையம்)

ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்த்து பெரும்பாலான பகுதியிலும், முக்கியமாக பிரிஸ்பேனுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ. தூரத்தில் உள்ள (G)கர்ரி தீவிலும் காணப்படுகின்றன. வசிக்கும் இடத்தின் பூர்வகுடி மொழியைப் பொறுத்து Boolomo, Dwer-da, Joogoong, Kal, Kurpany, Maliki, Mirigung, Noggum, Papa-inura, Wantibirri என பல்வேறு பூர்வகுடிப் பெயர்கள் உள்ளன. (G)கர்ரி தீவில் அதன் பெயர் வோங்காரி (Wongari).  ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியின் பூர்வகுடி மொழியான தாருக் மொழியில் குறிப்பிடப்படும் ‘டிங்கோ’ (Dingo) என்ற சொல்லே ஐரோப்பியக் குடியேறிகளால் பொதுச்சொல்லாகப் புழங்கப்பட்டு, ஆங்கிலத்திலும் ஏற்கப்பட்டுள்ளது. Canis lupus dingo என்பது இதன் அறிவியல் பெயர்.

வாம்பேட், கொவாலா, கங்காரூ & க்வோக்கா

கங்காரூ, வாம்பேட், கோவாலா போன்ற பூர்வீக விலங்குகளைப் போல டிங்கோக்களுக்கு ஆஸ்திரேலியாவில் பன்னெடுங்கால வரலாறு கிடையாது. டிங்கோக்கள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்புக்கு அறிமுகமாகி சுமார் ஐயாயிரம் வருடங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் குறைந்தது மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாவது இருக்கலாம் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. அது என்ன கணக்கு? மூவாயிரத்து ஐநூறு? ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான டிங்கோ எலும்புப் படிமத்தின் வயது மூவாயிரத்து ஐநூறு. எனவே மூவாயிரத்து ஐநூறு என்பது உறுதியான கணக்கு. அதற்கு முந்தைய டிங்கோ காலம் பற்றித் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை.


டிங்கோக்கள்

ஆஸ்திரேலியாவின் கானுயிர் சமன்பாட்டுக்கு உதவக்கூடிய கொன்றுண்ணிகளுள் தற்போது பெரிய அளவில் பங்கு வகிப்பவை என்றால் அவை டிங்கோதான். ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில், மக்கள் வசிக்காத பொட்டல்களிலும், புதர்க்காடுகளிலும்வளர்ப்பாரற்றுத் திரியும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, மான், முயல் போன்ற அந்நிய விலங்குகளின் எண்ணிக்கை, டிங்கோக்களால்தான் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம், ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்திருந்த மிகப்பெரிய கொன்றுண்ணி இனங்களான தைலாஸினும், டாஸ்மேனிய டெவிலும் (ஐரோப்பியர் குடியேறியபோது இவ்விலங்கினம் டாஸ்மேனியா தீவில் மட்டுமே காணப்பட்டதால் ‘டாஸ்மேனிய டெவில்’ என்ற பெயர் இடப்பட்டது.) ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் முற்றிலுமாக அழிந்துபோனதற்கு முக்கியக் காரணம் டிங்கோக்கள் என்ற மறுக்கமுடியாத உண்மையும் உள்ளது.

டாஸ்மேனிய டெவில்
தொடரும்...