27 November 2024

ஆரம்பமே அமர்க்களம்

வசந்தகாலம் விடைபெறுவதற்குள்ளாகவே வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. நேற்று முன்தினம் 34°C வெப்பம். நேற்று 37°C. இன்று நண்பகல் 12 மணியளவில் சிட்னி விமான நிலையத்தில் உச்சபட்சமாக 38.2°C பதிவாகியுள்ளது. அந்நேரத்தில் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல,  உலகத்திலேயே மிக அதிக வெப்பமான பகுதியாக சிட்னி இருந்துள்ளது. 


வெப்ப அலைகளிலிருந்து தப்பிக்க அனைவரும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசிடமிருந்து அறிவுறுத்தல். அதிகம் வெளியில் அலைய வேண்டாம் என்றும் வீடு, அலுவலகம், நூலகம், பேரங்காடி வளாகம் போன்ற மூடிய இடங்களுக்குள் பொழுதைக் கழிக்குமாறும், குளிர்ந்த நீர், மின்விசிறி, ஏசி போன்றவற்றின் உதவியால் உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஏசி, மின்விசிறி போன்ற சாதனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால் இன்றைய தினம் பின்மதியம் மூன்று மணி முதல் இரவு எட்டு மணிவரை வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் போன்ற மற்ற மின்சாதனங்களை இயக்காதிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


வெப்பம் ஒரு பக்கம் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்க, புற ஊதாக் கதிர்வீச்சு இன்னொரு பக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. பொதுவாக புற ஊதாக் கதிர்வீச்சின்  அளவீடு  (1-2) என்பதுதான் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத குறைந்த அளவீடு. (3-5) மிதமானது, (6-7) என்பது அதிகம், (8-10) என்பது மிக அதிகம். 11-க்கு மேல் எனில் தீவிரம். 

இன்றைய புற ஊதாக் கதிர்வீச்சின் உச்ச அளவீடு என்ன தெரியுமா?  11.  நிறைய பேருக்கு புற ஊதா கதிர்வீச்சு பற்றிய சரியான புரிதல் இருப்பதில்லை. கண்ணுக்குத் தெரியும் சூரிய ஒளி போலவோ, உடலால் உணரப்படும்  வெப்பத்தைப் போலவோ புற ஊதா கதிர்வீச்சை நம்மால் உணர முடியாததுதான் காரணம். வானம் மேகமூட்டமாக இருந்தால் புற ஊதா கதிர்வீச்சும் அதன் தாக்கமும் இருக்காது அல்லது குறைவாக இருக்கும் என்பது பலரது நம்பிக்கை. அது தவறு. இதற்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. புற ஊதா கதிர்வீச்சை 'நம் கண்ணுக்குத் தெரியாத எதிரி' என்றே சொல்லலாம். அதுவும் ஆஸ்திரேலியாவில் அதன் பாதிப்பு மிக மிக அதிகம்.  அதனால்தான் வெயிலில் செல்ல நேரும்போது சன்ஸ்கிரீன் கிரீமும், தொப்பியும், குளிர்கண்ணாடியும், கை கால்களை மறைக்கும் வகையிலான ஆடைகளும் அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கொளுத்தும்  வெப்பத்திலிருந்து நம்மால் ஓரளவு தப்பித்துவிட இயலும். ஆனால் இந்தப் பறவைகளும் விலங்குகளும் என்ன செய்யும்? கண் முன்னால் அவை படும் பாடு சொல்லி மாளாது. தோட்டத்தில் வழக்கம் போல காலையும் மாலையும் தண்ணீர் வைக்கிறேன். மைனாக்களும் நாய்சி மைனர்களும், மேக்பைகளும் லாரிகீட்களும் மாறி மாறி வந்து குடித்தும் குளித்தும் செல்கின்றன. ஆவென்று அலகைத் திறந்துவைத்துக்கொண்டு செடிகளின் நிழலில் அவை ஆங்காங்கே இளைப்பாறும் காட்சியைப் பார்த்தாலே பரிதாபமாக உள்ளது. 

























தோட்டத்துத் தண்ணீர்த்தொட்டியைத் தேடி பறவைகள் மட்டுமல்ல, குளவிகளும் தேனீக்களும் கூட வருகின்றன. அதைப் பற்றி முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். என்ன வெயில் அடித்தாலும் கவலைப்படாமல் தண்ணீர்த்தொட்டியை வட்டமிடும் குளவிகளைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. கூடு எங்கே உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று கலக்கமாகவும் உள்ளது. 







 






'அனலில் விழுந்த புழுவாக' என்றொரு சொற்பதம் கேள்விப்பட்டிருக்கிறேன். அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவோ, கறிவேப்பிலை பறிக்கவோ அரை நிமிடம் தோட்டத்துப் பக்கம் சென்றால் போதும், அதை அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ளலாம். அரை நிமிடத்துக்கே இப்படி என்றால் நாள் முழுவதும் வெயிலில் நிற்கும் செடிகொடிகளின்  நிலையை என்னவென்று சொல்வது? இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்றியும் பயனில்லை. இலைகள் வாடி, துளிர்கள் கருகி,  பூக்கள் உதிர்ந்து காய்கள் வெம்பி என தோட்டமே துவண்டுபோய்க் கிடக்கிறது. தோட்டத்துப் பிரதாபம் என்று மாய்ந்து மாய்ந்து எழுதியது போக, இன்று தோட்டத்துப் பரிதாபம் என்று எழுதும் நிலை. 


கோடையின் ஆரம்பமே இப்படி அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்கள் எப்படிப் போகும் என்று தெரியவில்லை. 

மிகப்பெரிய ஆறுதலாக நாளை இரவு முதல் ஒரு வாரத்துக்கு மழை என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. வெப்பநிலையும் ஓரளவு குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.  ஆனால் அதற்கடுத்த வாரங்களில் கோடைக்காலம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். கடந்த வருடங்களில் நல்ல மழை பெய்து யூகலிப்டஸ் காடுகள் செழித்து வளமாக இருப்பதால் பல இடங்களில் காட்டுத்தீ உண்டாவதற்கான வாய்ப்பும் உள்ளது. அப்படி உண்டானால் பாதிப்பு கடுமையாக இருக்கும். 

2 comments:

  1. ஆஸ்திரேலியாவிலும் இப்படி ஒரு நிலையா? பூமி வெப்படைதல் என்பது உலகிற்கே பொதுதானே! நாமோ இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம் அப்போ அது நம்மைப் பழிவாங்கத்தானே செய்யும். பாவம் நம்முடைய சீரழித்தலால் பாருங்க மற்ற உயிரினங்களும் அவதிப்படுகின்றன.

    பரிதாபத்துக்கிடையில் புகைப்படங்களையும் ரசித்தேன் என்றாலும் பாவம் இவை எல்லாமே. குளவியும் கூட நீர் அருகில் வருவது ஆச்சரியம்

    கீதா

    ReplyDelete
  2. மழை வருவது நல்ல விஷயம். ஹப்பா ஒரு ரிலீஃப். ஆ அதன் பின் காட்டுத்தீ வர வாய்ப்புள்ளதா...கவலைக்கிடம் தான்

    கீதா

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.