14 November 2018

அம்மாவின் கைவண்ணங்கள்


அம்மாவின் கைவிரல்கள் தனித்துவம் வாய்ந்தவை. அவை நம்முடையவை போல அல்ல, அசாதாரணமானவை. ஆனாலும் பல அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்றவை. அறியா சிசுவாய் இருந்தபோது, சுடர் விடும் தீயைப் பழமென்று பற்ற, பச்சிளம் சிசுவென்றும் பாராது பிஞ்சு விரல்களில் பாதியைத் தின்றுவிட்டதாம் தீ. தின்றது போக எஞ்சிய, அம்மாவின் இடக்கை விரல்கள் முனை கருகிய மலரை எனக்கு நினைவுறுத்தும். ஆனால் கைராசி என்பார்களே, அது அம்மாவின் கைகளுக்கு அபரிமிதமாய் உண்டு. அவர் மண்ணில் ஊன்றிய எதுவும் பலன் தராமல் போனதில்லை.  நடக்கூட வேண்டாம்.  தொட்டுத் தூவினால் கூட விதைகள் அத்தனையும் விழித்துக்கொள்ளும். அம்மா, மரங்களின் மொழி அறிந்தவர். மரங்களுடனான சம்பாஷணைகளால் மனிதப் பார்வைகளில் விநோதமாய்ப் பார்க்கப்படுபவர்.

கோலத்தின் இழைகளை அவ்வளவு அழகாக லாவகமாக இழுப்பார். அம்மாவின் கைவேலைப்பாடுகள் அந்நாளில் அத்தனை பிரசித்தம். ஒயரில் எல்லாரும் கூடை போடும்போது, அவர் நாய்க்குட்டிகள் பின்னினார்.  கூடை, எம்பிராய்டரி, மணிகளாலான பூச்சாடி, சுவர் அலங்காரங்கள், புடவையில் ஜம்க்கி, குஞ்ச வேலைப்பாடு என அவரது கைகள் எதையாவது செய்துகொண்டே இருக்கும். இப்போது நாய்க்குட்டி பின்ன வரவில்லை, எண்ணிக்கை எல்லாம் மறந்துபோயிற்று என்று மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறார்.

நடையில் தடுமாற்றம், விரல்களில் நடுக்கம், பார்வையில் பழுது, இடுப்புவலி, மூட்டுவலி, கழுத்துவலி உள்ளிட்ட உடல் உபாதைகளோடு மன அழுத்தம், முதுமைத் தளர்ச்சி, நினைவுத் தள்ளாட்டம்  யாவும் சேர்ந்துகொள்ள, அம்மா சோர்ந்திருக்கிறார். தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சியிலும் பலமுறை முயன்று தோற்றிருக்கிறார். ஆனாலும் மறுபடி மறுபடி எழுந்து நிற்கும் உத்வேகத்தை ஏதாவதொரு வடிவில் தன்னுள் கண்டு எழுகிறார்.  இதோ.. இப்போதும் அப்படியே..

நடை பழகும் குழந்தை தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எதிர்பார்க்கும் உற்சாகப்பாராட்டு போல அங்கீகாரங்கள் அவரது வாழ்நாள் ஏக்கங்கள். விருப்புகளும் ஆசைகளும் மறுக்கப்பட்ட வாழ்வில், இருப்பும் கேள்விக்குறியாகிப் போன சூழலில், மனோவசிய மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன அம்மாவின் விரல்களும் சாக்லேட் தாள், ரெடிமேட் சட்டை வரும் அட்டை, ஸ்பாஞ்ச், பெயரறியா மரத்தின் இலை, விதை, தொலி என குப்பையில் போகவிருப்பவற்றைக் கைக்கொண்டு மீள்சுழற்சியாய் அவர் கண்டறியும் சில கலைவேலைப்பாடுகளும்.   

கடந்த ஐந்தாண்டுகளில் அவ்வப்போது அவர் செய்த வேலைப்பாடுகள் சில எனக்கானத் தொகுப்பாகவும் அம்மாவுக்கான அங்கீகாரமாகவும்.  













  





18 comments:

  1. அம்மாவின் கைவண்ணம் அசத்துகிறது. கண் கொள்ளா விருந்து போன்று!! வாவ்! முதுமையிலும் இத்தனை பொறுமையுடன் செய்வதற்கு ராயல் சல்யூட் ப்ளஸ் வணக்கங்கள். மிகவும் ரசித்தோம்..
    ஒவ்வொன்றும் எதெதில் செய்யப்பட்டது என்று கொடுத்திருக்கலாமோ...

    மிக மிக அருமை. அம்மாவிற்கு வணக்கங்கள்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அளவிலாத அன்பும் நன்றியும் தோழி. அம்மா சொல்லும் சில பொருட்கள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இவையெல்லாம் அலைபேசி வாயிலாய் அனுப்பப்பட்டவை. நேரில் சந்திக்கும்போது கேட்டுத் தெளிகிறேன்.

      Delete
  2. நடை பழகும் குழந்தை தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எதிர்பார்க்கும் உற்சாகப்பாராட்டு போல அங்கீகாரங்கள் அவரது வாழ்நாள் ஏக்கங்கள்.

    அம்மாவின் கைவண்ணம் என் அம்மாவை நினைவு படுத்துகிறது.
    நீங்கள் சொல்லி இருப்பது போல் அவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தேவை அவை அவர்களை அது உற்சாகப்படுத்தும்
    அவர்கள் உடல் நலத்தோடு இருக்க பிரார்த்த்னைகள்.
    அம்மாவும் எதையும் வீணக்கமாட்டார்கள். எல்லாவற்றையும் கலையாக மாற்றி விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு இப்போது இணையம் இருப்பதால் நம் திறமைகளை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் எண்ணற்றத் திறமைகள் இருந்தும் பெண்கள் குடத்தினுள் இட்ட விளக்காகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்று எண்ணும்போது மிகவும் வருத்தமும் ஆதங்கமுமாக உள்ளது. தங்கள் அம்மாவும் இப்படிதான் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி மேடம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. மிக அழகு.. எனக்கும் இப்படிக் கை வண்ணங்களில் விருப்பம், ஆனா இப்போ நேரம் போதமாட்டேன் என்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி சுறுசுறு தேனீக்கு 24 மணி நேரம் எப்படிப் போதும்? சகலகலைகளிலும் வல்லவராயிற்றே நீங்க? உண்மையில் உங்கள் எழுத்தும் சுறுசுறுப்பும் வேலைப்பாடுகளும் என்னை மிகவும் வியக்கவைக்கும். வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும் அதிரா.

      Delete
  4. அம்மாவின் திறமை அசர வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும் தனபாலன்.

      Delete
  5. wow... என்ன சொல்ல கீதா எவ்வளவு நேர்த்தியா அழகான வேலைப்பாடுகள். அத்தனையும் அவரின் பொறுமையும்,அசாத்திய திறமையையும் ,காட்டுகிறது. அவர் நலமோடும்,தெம்பாகவும் இருக்க என் பிரார்த்தனைகள்.
    எல்லா அம்மாமாரும் எதையும் வீணாக்கமாட்டார்கள் போல. என் அம்மா உட்பட.

    ReplyDelete
    Replies
    1. \\எல்லா அம்மாமாரும் எதையும் வீணாக்கமாட்டார்கள் போல. என் அம்மா உட்பட.\\ நெகிழ்கிறது மனம் ப்ரியா. நாம் கற்றுக்கொள்ள ஏராளமாய் இருக்கின்றன இன்னும். அம்மாவின் வேலைப்பாடுகளை ரசித்தமைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனம் நிறைந்த அன்பும் நன்றியும் ப்ரியா.

      Delete
  6. நுணுக்கமான வேலைப்பாடுகள் ! எக்கச்சக்க பொறுமை தேவைப்பட்டிருக்கும் . வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  7. போற்றுதலுக்கு உரிய திறமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. அம்மாவின் கைவண்ணம் மிக அழகு! பயனுள்ள பொழுதுபோக்கு! பாராட்டுகளை அம்மாவுக்குச் சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. அம்மாவிடம் உங்கள் பாராட்டுகளை சொல்லிவிட்டேன் அக்கா. அவர்களுக்கு அளவிலாத மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும்.

      Delete
  9. இஞ்சை நீங்கள் எழுதினதிலே ஒரு விடயம் எனக்கு பிடிச்சிருக்குது. அம்மாவை மதிப்பாக நினைக்கிறீங்கள். அதை உங்கடை எழுத்திலையும் காட்டுறீங்கள். அம்மா வந்தாள், போனாள் எண்டு அந்தக்காலத்து எழுத்தாளர்கள் மாதிரி எழுதாமல் பின்னினார், எழுகிறார் எண்டு மரியாதைப் படுத்துகிறீங்கள். நெஞ்சு நிறைஞ்ச நன்றியோடை பாராட்டுக்கள் உங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு மகிழ்வளிக்கிறது. பேசும்போது அம்மா சொன்னாங்க, செய்தாங்க என்று சொல்வது வழக்கம். எழுதும்போது சொன்னார், செய்தார் என்று எழுதுகிறேன். ஒரு சிலர் தவிர பலரும் இப்படிதான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.