20 July 2018

வாய் தந்தன கூறுதியோ





கடந்த 15-07-18 அன்று சிட்னியில் நடைபெற்ற கம்பன் கழக விழா நிறைவுநாள் கவியரங்கத்தில் கவிதை வாசிக்க அழைப்பு வந்தபோது, இருக்குமிடம் தெரியாமல் இருந்துகொண்டிருக்கும் எனக்கும் அங்கீகாரம் தேடிவந்து கிடைக்கிறதே என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் தயக்கம் அதை முடக்கியது. கவியரங்கத்தில் கவிதை வாசிப்பது என்றால் எளிதா, என்ன? 

முதலில் கம்பராமாயணம் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும். அடுத்து, கவிதை கைவரவேண்டும்கொஞ்சம் கஷ்டப்பட்டு (?) எழுதிவிட்டாலும் அதை அரங்கில் வாசிக்கத் துணிவு வேண்டும். இரண்டு பேருக்கு மேல் இருந்தாலே அது கூட்டம் எனக்கு. மாபெரும் கூட்டத்தின் முன் மேடையில் வாசிக்கவேண்டுமெனில் எவ்வளவு துணிவு வேண்டும்? அதையும் சமாளித்துவிடலாம் என்றால் கவியரங்கத்தில் வாசிக்கும் கலையை இனிதான் கற்கவேண்டும். குரலில் ஏற்றத்தாழ்வுடன் எதுகை மோனையுடன் பொறுமையாய் நிறுத்தி வாசித்து... அவையினரின் நன்மதிப்பைப் பெறுவது சாத்தியமா?



என்னென்னவோ சால்ஜாப்புகள் சொல்லியும் கம்பன் கழகம் என்னை விடுவதாயில்லை. இறுதியில் கம்பனின் ஐம்பொறிகள் குறித்த கவியரங்கத்தில் 'வாய் தந்தன கூறுதியோ' தலைப்பில் நானும் என் முதல் கவிதையை அரங்கேற்றினேன். வாய்ப்பளித்த திரு.ஜெயராம் அவர்களுக்கு என் நன்றி. அரங்கில் வாசித்த எட்டு நிமிடக் கவிதை என் சேமிப்புக்காகவும் உங்கள் வாசிப்புக்காகவும் இங்கே. 



வாய் தந்தன கூறுதியோ

மகளாய் என்னை மடிதாங்கும்
அன்னைத்தமிழுக்கென் ஆதிவணக்கம்.
இன்னமுதாய்த் தண்டமிழை
இளையோர்க்குப் புகட்டிக்களிக்கும்
கம்பன்புகழ்ப்பாடி கன்னித்தமிழ் வளர்க்கும்
கம்பன் கழகத்தார்க்கு கனிவான வணக்கம்.

சீர்மிகுந்த சான்றோர்க்கும்
சபை நிறைந்த ஆன்றோர்க்கும்
சிட்னிவாழ் தமிழார்வலர்களுக்கும்
சிறியவளின் சிரந்தாழ்ந்த வணக்கம்.

வாய் தந்தன கூறுதியோவென்பது
எனக்கு வாய்க்கப்பெற்றத் தலைப்பு
வாய் தந்தன கூறுவனோ.. அல்லேன்
என் சிந்தை தந்தன செப்ப வந்துளேன்
எந்தாய்த் தமிழை உடனழைத்து.

வேற்றுக்கொடியாள் நெஞ்சை
வில் துளைத்தாலன்றி
வேகந்தணியாதென்ற இளவலின்
சொல் துளைக்கத் தாளாது
ஐய, நின்தன் வாய் தந்தன கூறுதியோவென்று
தாயன்ன பரிவால் தமையன் கடியக்கண்டு
சீற்றம் துறந்தான்
எதிர் நின்று தெரிந்து செப்பும் மாற்றம் துறந்தான்
இளையவன் இலக்குவன்.

இது கம்பன் நூற்கும் வாழ்வு நெறி
இளையோர் ஏற்கும் அன்பு நெறி
மறையோர் நோற்கும் துய்ய நெறி
மனத்துயர் தீர்க்கும் உயர்வு நெறி

தாய் தந்தன யாவும் உண்ணுதல் செமிக்கும்
வாய் தந்தன யாவும் உரைத்தல் செமிக்குமோ
விளைந்ததையெல்லாம் அறுவடை செய்ய
இது வயலன்று.. வாயன்றோ

அங்கே அறுத்த பின் தூற்றுவார்...
சாவி பறக்கும்.. நெல்மணி நிலைக்கும்.
இங்கே உரைத்த பின் தூற்றுவார்...
ஆவி பறக்கும்.. அழியாப்பழி நிலைக்கும்.

வாய் தந்தன கூறுவதும்
வாகாய் ரசனை கூட்டும் சின்னேரம்..

மழலைவாய் மிழற்றல் மகிழ்விக்கும்
குதலைவாய்க் குழறல் குளிர்விக்கும்
கவிஞர்வாய் பொழிதல் மொழி காக்கும்

அறிஞர்வாய் சொற்கள் அறம் காக்கும்
சான்றோர்வாய் மொழிதல் சீலம் காக்கும்
ஆன்றோர்வாய் நுவலல் ஞாலம் காக்கும்.

ஒருவாய் இருவாய் சோறுண்ணாய்
மணிவாய் திறவாய் திறவாயென்று
கனிவாய் குழைவாய்க் கையேந்தி
தயவாய் வேண்டும் தாய்ச்சொல் இனிக்கும்.

விழுவாய் எனினும் எழுவாய்
விசனங்கள் எம்மோடு மொழிவாய்
துணிவாய் செல்வாய் வெல்வாயென்னும்  
நட்புவாய்ச் சொல் நலம் பயக்கும்.

பாடுவாய்.. பேசுவாய்.. நகைப்பாய்
பவளவாய் பதித்தொரு முத்தம்
தருவாய் பெறுவாய் வருவாயென்னும்
காதலர்வாய்ச் சொல் மையல் சேர்க்கும்.

வீறுகொண்டெழுவாய் விவேகம் மாறாய்
நேர்பாதை மறவாய் நெஞ்சந்துவளாய்
தலையிது போனாலும் தர்மம் தவறாயென்னும்
தலைவன்வாய்ச்சொல் பெருந்துணிவு தரும்.

வாயுதிரும் சொற்கள் யாவும்
எண்ணுதற்கன்று... எடைபோடுதற்காம்..
சிந்தனையில் அரும்பியதெல்லாம்
செவ்வாயில் மலர்ந்திடல் நன்றன்றாம்.
எவ்வாயினின்று எதுவரினும்
மெய்யறிதலே மானுடர் மாண்பாம்.

திருவாயை முதலீடு செய்து
வருவாய் பார்க்கும் கூட்டமுண்டு.
வாய்க்கு வந்ததெல்லாம் பேசித்திரிந்து
வக்கணையாய் பொய்புரட்டு திரிப்பதுண்டு.

இருப்பதை இல்லையென்றும்
இல்லாததை இருக்கிறதென்றும்
ஏறுக்கு மாறாய் ஏதேதோ சொல்லி
விளம்பரத் தந்திரங்களால் வஞ்சித்து
வாயாற்செழிக்கும் வியாபாரிகளுண்டு.

குற்றவாளிகளை நிரபராதிகளாக்கி
நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கி
சட்டத்தில் துளைகளிட்டு சல்லடையாக்கி
வாதக்கலையில் வென்று வாய்மையழித்து
வாயாற்பிழைக்கும் வழக்குரைஞர்களுண்டு.

மெய்யிறையைக் காட்டுவேனென்றும்
மெய்யன்பன் தான் ஒருவனேயென்றும்
பொய்க்கதைகள் பல புனைந்துப் புனைந்து
மெய்மறந்த மனங்களிடம் முறைதவறும்
வஞ்சகப் போலி ஆன்மீகவாதிகளுண்டு.

அறம் மறந்து ஆற்றல் மறந்து
தொழில்தர்மம் மறந்து தொலைந்து
கட்டுக்கதைகளை அவிழ்த்துக் கொட்டி
காசுக்கு விலையாகி கற்பனை வளர்த்து
ஊரை ஏய்க்கும் ஊடக விற்பன்னர்களுண்டு.

தேனாறும் பாலாறும் தெங்கிளநீரும்
தெருவெல்லாம் பாயச்செய்வோமென்னும்
அற்ப வாக்குறுதிகளை அள்ளித்தெளித்து
அரியணை ஏறியதும் அகப்பட்டதைச் சுரண்டி
பாமர வயிற்றிலடித்து பகட்டில் புரண்டு
வாயாற்கொழிக்கும் அரசியல்வாதிகளுண்டு.

சீர்கெட்ட இம்மாந்தரை சிலரேனும்
நேருக்கு நேர் நின்று கூர்பார்வை கொண்டு
ஐய, நின்தன் வாய் தந்தன கூறுதியோவென்று
உறைக்கும்வண்ணம் கேட்பாருமிலர்.
கேட்பினும் அவர்தம் புத்தியிலது
உறைக்காதென்பதை அறியாருமிலர்.

கம்பனின்று வந்திதைக் கேட்டாலும்
வம்பனென்று பேர் சூட்டப்படுவான்,
கருணையற்றுக் கைவிலங்கிடப்பட்டு
காராகிருகத்தில் பூட்டப்படுவான்.
  
வாயொரு வன்கோட்டை.
முப்பத்திரண்டு பல்லால் ஆன வெண்கோட்டை.
ஆக்கவும் அழிக்கவுமான நாவென்னும்
அதிபயங்கர ஆயுதங்காக்கும் வெங்கோட்டை.
 சாணை பிடிக்கத் தேவையிலாது
சாகும்வரை கூர் மழுங்கா ஆயுதமது.

உறைக்குள்ளிருந்தபடியே
உயிர் மாய்க்கும் கத்தி அது.
அறைக்குள்ளிருந்தபடியே
அபாயந்தருவிக்கும் சக்தி அது.

சிறைக்குள்ளிருந்தபடியே
சீர்திருத்தும் புத்தியும் அது.
திரைக்குள்ளிருந்தபடியே
தளை தகர்க்கும் உத்தியும் அது.

செதுக்கிய கற்கள் சிலையாகும்
செதுக்கிய சொற்கள் கலையாகும்.
  
அடித்துப்புரளும் உணர்வுப்பொழுதில்
துடித்துத்திரளும் சொற்களாய்ந்து
கசடுகளை கழித்துக்கட்டி
துச்சமானவற்றைத் தூக்கியெறிந்து….

அர்த்தமற்றவற்றை அகற்றிவிட்டு
பயனற்றவற்றைப் புறமொதுக்கி
வகையற்றவற்றை வடிகட்டி
ஒழுங்கற்றவற்றை ஓரந்தள்ளி….

தெளிவற்றவற்றை திருத்தியெடுத்து
வன்சொற்களை விரட்டியடித்து
மனமுடைப்பவற்றை மறுபரிசீலனை செய்து
நொடிப் பொழுதில் எடிட் செய்து….
 நுட்பமாய் மட்டுமல்ல..
மனத்திட்பமாயும் பேசுதல் கலை.

வாயென்பது வடிவம் அன்று.
வாய் தரும் சொற்களின் படிவம் அது.
கலத்தின் வடிவே நீரின் வடிவாம்.
சொற்களின் வடிவே வாயின் வடிவாம்.

வாயென்பது அரிக்கஞ்சட்டியல்ல.
அடுத்தவரை அரித்தெடுப்பதற்கு
வாயென்பது வடைச்சட்டியுமல்ல
வார்த்தைகளால் வறுத்தெடுப்பதற்கு..

வாயென்பது ஓட்டைசால் அல்ல
உள்ளதெல்லாம் உளறிக்கொட்டுதற்கு.
வாயென்பது வானொலிப்பெட்டியல்ல
கேட்பாரற்றுப் பேசித் திரிதற்கு

வாயென்பது எரிமலையல்ல
வெறுப்பெனும் நெருப்பைக் கக்குதற்கு.
வாயென்பது இருள்குகையல்ல
அருளின்றி மருளச் செய்வதற்கு.

வாயென்பது தம்பட்டம் அல்ல
பொல்லாப் பெருமை பிதற்றுதற்கு.
வாயென்பது மயானமுமல்ல..
பொழுதெலாம் மௌனம் காப்பதற்கு.

 @@@@@


14 comments:

  1. அருமை... காணொளி இணைப்பு இருக்கிறதா...?

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். விழாவில் எடுத்த முறையான காணொளி இன்னும் கைக்கு வரவில்லை. என் தோழி எடுத்த ஒன்றிரண்டு நிமிட காணொளிதான் இருக்கிறது. முழுவதும் வந்தபின் பதிவேற்றுகிறேன்.

      Delete
  2. அருமையான பகிர்வு அயல் நாடுகளில் சந்தர்ப்பங்கள அதிகமோஒரு வேண்டுகோள் பதிவினோடு பதவுரைபொழிப்புரைஎல்லாம் தேவ்சைப்படுமொ கவிதை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கேட்பது புரியவில்லை ஐயா. எந்த மாதிரியான சந்தர்ப்பங்கள்? இலக்கிய நிகழ்வுகள் எனில் நிச்சயம் தமிழ்நாட்டை விடவும் குறைவாக இருக்கவே வாய்ப்புகள் உண்டு. இந்தக் கவிதை மிகவும் எளிய வரிகளால்தானே இருக்கிறது? ரசித்தேன் என்றிருக்கிறீர்கள். பிறகு எதற்கு பதவுரையும் பொழிப்புரையும் தேவைப்படுகிறது? இதுவும் எனக்குப் புரியவில்லை.

      Delete
  3. வீடியோ லிங்க் கொடுங்க கீதாக்கா.

    ReplyDelete
    Replies
    1. விழாக்குழுவினர் எடுத்த காணொளி கைக்கு வந்ததும் பதிவேற்றுகிறேன். நன்றி ராஜி.

      Delete
  4. நான் பள்ளிக்கூடம் சென்று இவ்வளவு படித்ததில்லை
    ஆனால் இந்தப்பதிவில் முழுவதும் படித்து விட்டேன்...

    அருமை... அருமை...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  5. ஆஹா ஆஹா அற்புதம் தோழி!
    வயலையும் வாயையும் ஒப்புமைப் படுத்திய போதே வீறு கொண்டு எழுகிறது கவியழகு.
    //வாயொரு வன்கோட்டை.
    முப்பத்திரண்டு பல்லால் ஆன வெண்கோட்டை.
    ஆக்கவும் அழிக்கவுமான நாவென்னும்
    அதிபயங்கர ஆயுதங்காக்கும் வெங்கோட்டை.
    சாணை பிடிக்கத் தேவையிலாது
    சாகும்வரை கூர் மழுங்கா ஆயுதமது.//

    அருமை அருமை!!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் நிலாமகள். முதல்முறை என்பதால் மிகுந்த தயக்கத்துடன்தான் கலந்துகொண்டேன். உங்கள் பாராட்டு பெரும் உற்சாகம் தருகிறது.

      Delete
  6. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    சிறப்பான கவிதை. ஏற்ற இறக்கதோடு வாசிக்கையில் இன்னும் இனிதாக இருந்திருக்கும். காணொளியில் கேட்க நானும் ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி. முதல்முறை மேடையேறி வாசித்ததால் சற்றுத் தயக்கத்துடன்தான் வாசித்தேன். காணொளி கிட்டியதும் பதிவேற்றுகிறேன்.

      Delete
  7. Thank God ... It's very nice .. happy to read .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கவிதை வரிகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.