30 June 2017

நாமக்கோழி
 
ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த கரிய நிறப் பறவையின் நெற்றியில் வெள்ளைநிறத்தில் நாமம் வரைந்ததைப் போன்ற தோற்றம் இருப்பதால் நாமக்கோழி என்ற காரணப்பெயர் இதற்கு. நாமக்கோழிகள் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் உயிரியல் பெயர் Fulica atra.  ஆங்கிலத்தில் Eurasian coot எனப்படுகிறது.
தரைவாழ் நீர்ப்பறவைகளான இவை, ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளை ஒட்டியும் சதுப்பு நிலங்களிலும் வாழ்கின்றன. இவற்றின் கால்கள் நீளமும் வலிமையும் கொண்டவை. இவற்றின்  விரல்களுக்கிடையில் வாத்தினைப் போல சவ்வு கிடையாது என்றாலும் அபாரமான நீச்சல்காரர்கள்.
நாமக்கோழிகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும். ஆனால் முட்டையிடும் பருவத்தில் ஆண் பெண் இரண்டும் தங்கள் கூட்டினைக் கட்ட ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்வதோடு அதைப் பாதுகாக்க மிகவும் மூர்க்கமாக செயல்படும். காய்ந்த புற்கள், இலைச்சருகுகளாலான கூட்டில் ஒரு ஈட்டுக்கு பத்து முட்டைகள் வரை இடும். பருவகாலம் ஏதுவாக இருந்தால் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஈடுகள் முட்டையிடும். 
நாரை, ஆலா போன்ற நீர்ப்பறவைகளுக்கு பெரும்பாலான நாமக்கோழிக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பத்து நாட்களுக்குள்ளாகவே எளிதில் இரையாகிவிடுவதால் தப்பிப் பிழைப்பவற்றின் விகிதம் குறைவே. நாமக்கோழிக்குஞ்சுகள் பொரிக்கும் சமயத்தில் நாமத்தோற்றம் இருப்பதில்லை.. அவற்றுக்கு முழுமையான நாமத்தோற்றம் உருவாக ஒருவருட காலம் பிடிக்கும்.
நாமக்கோழிக் குஞ்சுகளின் இறப்புக்கு எதிரிகளை விடவும் தாய் தந்தையே முதற்காரணம் எனலாம். உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு என்பது அதிர்ச்சி தரும் தகவல். மேலும் சில நாமக்கோழிகள் தங்கள் முட்டைகளை வேறொரு நாமக்கோழியின் கூட்டில் திருட்டுத்தனமாய் இட்டு தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதும் உண்டு. அமெரிக்க நாமக்கோழிகள் தங்கள் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் எவை.. திருட்டு முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் எவையென்று பிரித்தறியும் அறிவு படைத்தவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.


 


நாமக்கோழிகள் அனைத்துண்ணிகள்.. நீர்த்தாவரங்கள், பழங்கள், கொட்டைகள், இலைகள், பாசி போன்றவற்றோடு பிற பறவைகளின் முட்டைகளையும், மீன், தவளை, எலி போன்ற சிற்றுயிர்களையும் தின்றுவாழும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 5-9 வருடங்கள். படத்தில் நாமக்கோழிக்குப் போட்டியாக நெற்றியில் செந்தூரமிட்டிருப்பது தாழைக்கோழி.  :)))

26 comments:

 1. நாமக்கோழிகள் பற்றிய தகவல்கள் அதிர்ச்சி + ஆச்சரியம்

  ReplyDelete
  Replies
  1. இயற்கையில் இன்னும் பல அதிர்ச்சியும் ஆச்சர்யங்களும் இருக்கின்றன. விரைவில் இதுபோல் இன்னொரு அதிர்ச்சித் தகவலைப் பதிகிறேன். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 2. blogspot.in என்பதை blogspot.com ஆக மாற்றி விடுங்கள்... தமிழ்மண பட்டை வேலை செய்யும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன். மாற்றிவிடுகிறேன்.

   Delete
 3. தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்... +1

  துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன? :-
  http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

  ReplyDelete
  Replies
  1. தளம் துள்ளிக்குதிக்கிறதா.. எனக்கு எதுவும் தெரியவில்லையே..

   Delete
  2. தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. வெள்ளை நாமக் கோழிகள் + சிகப்பு நாம தாழைக்கோழி ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்தேன்.

  அவற்றைப்பற்றிய விசித்திரமான செய்திகள் யாவும் மிக அருமை.

  //உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு என்பது அதிர்ச்சி தரும் தகவல்.//

  அடப்பாவமே !

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. survival of the fittest என்னும் தத்துவத்தின் சான்றுகளுள் இதுவும் ஒன்று கோபு சார். பின்னொரு பதிவில் இன்னொரு அதிர்ச்சி மிக்கத் தகவலைப் பகிர்வேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 5. தன் குட்டியை தேள்தான் இப்படி சாப்பிடும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்த பறவையுமா?!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது எனக்குப் புதிய தகவல் ராஜி.. வலிமையுள்ளவன் வாழ்வான் என்ற விதிக்கு இயற்கையில் எல்லா உயிரினங்களும் பொருந்திப்போகின்றன என்பது உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

   Delete
 6. கொலைகாரப் பறவை!

  சுவாரஸ்யமான தகவல்கள். தம +1

  ReplyDelete
  Replies
  1. ஹூம்.. அப்படி மொத்தமாகச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.. வலிமையுள்ளது வாழ்கிறது.. மற்றது அழிகிறது. இயற்கையின் தத்துவம் இது அல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. இந்தப் பறவையின் பெயர் நாமக்கோழி என்பதை இப்போதுதான் அறிகிறேன். தகவல்களும் முன் அறியாதவை. தாழைக்கோழியும் பார்க்க அழகாக உள்ளது. படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தமிழில் பறவைப்பெயர்கள் என்ற கையேட்டில் பார்த்து அறிந்துகொண்டதுதான்பா. நாமக்கோழி, தாழைக்கோழி எல்லாமே நம்ம ஊர்ப் பறவைகள்.. அவற்றை இங்கும் காணமுடிவதில் மிகவும் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 8. ஆச்சரியமான தகவல்கள்!! இதிலும் அமெரிக்க நாமக்கோழிதான் புத்திசாலி என்ற பெயர் பெற்றுவிட்டதா...ஹஹஹஹஹ்...அழகுதான் படங்கள். இயற்கையே அழகுதானே...நிழல் தெரியும் நாமக்கோழி படம் அருமையோ அருமை.....

  தன் குழந்தையையே கொத்திக் கொல்லுவது ஆச்சரியம்தான்....

  எத்தனை வியப்பு!! அருமையான பதிவு

  துளசி, கீதா

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் பரிணாம வளர்ச்சியும் சூழலுக்கேற்ற வாழும் சாமர்த்தியமும்தான்.. :)) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.

   Delete
 9. பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் இந்த நாமக் கோழிகள் பறக்க முடியுமா

  ReplyDelete
  Replies
  1. நாமக்கோழிகள் அதிகதூரமோ.. உயரமோ பறப்பதில்லை. கோழிகளைப் போலவே குறைந்த தூரம் பறக்கின்றன.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 10. அதிசயமான தகவல்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஐயா.

   Delete
 11. நாமக்கோழி..பேரே அழகா இருக்கு...

  அனைத்து செய்திகளும் சிறப்பு...

  ஆனால்..
  ...-உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு...

  இதுதான் கொஞ்சம் நெருடுகிறது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா.

   \\.-உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு...

   இதுதான் கொஞ்சம் நெருடுகிறது...\\ இயற்கையின் விநோதங்களுள் இதுவும் ஒன்று.

   Delete
 12. நாமக்கோழி பற்றி ஒன்றுமே அறியாதிருந்தேன் ; நிறையத் தெரிந்துகொண்டேன் ; நன்றி .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கும் இந்தியாவில் இருந்தவரை இத்தகு பறவைகளைக் காணவோ.. இவற்றைப் பற்றி அறியவோ வாய்ப்பில்லாது இருந்தது. இங்கே இவை கோழிகளைப் போல வெகு எளிதாகக் காணக்கிடைக்கின்றன.

   Delete
 13. பதுவும் படமும் நன்று! நலமா சகோதரி!

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.