8 January 2017

ஆயிரம் இருந்தும்...
அவள் ஒரு பிச்சைக்காரி.. நான்கு பேர் முன்னால் ஆடிப்பாடி பிச்சையெடுத்து பிழைப்பு நடத்துபவள். அன்றையப் பொழுது அன்றோடு. ஆனாக்கா அந்த மடம்.. ஆகாட்டினா சந்தமடம்.. அதுவும் கூட இல்லாங்காட்டி ப்ளாட்டுபாரம் சொந்த இடம் என்று எந்தக் கவலையுமின்றி, எதிர்காலத் திட்டங்கள் ஏதுமின்றி தனக்கான வாழ்க்கையை மிக இலகுவாக வாழ்ந்துகொண்டிருப்பவள்.. அவளுக்கு ஒரு குட்டித்தங்கை.. 

வாழ்ந்துகெட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆடவன் ஒருவன். அவனுக்கு ஒரு குருட்டுத் தம்பி. தானும் வாழத்தெரியாமல் தம்பியையும் வாழ்விக்கும் வழி தெரியாமல் தவிக்கிறான்மீதமிருக்கும் வாழ்க்கை பூதாகரமாய்த் தெரிகிறது.. சாக முடிவெடுக்கிறான்அதுவும் கைகூடாமல் போய்விடுகிறது சர்க்கஸ் நடனப்பெண்ணொருத்தியால். வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில் என்பவளின் கருத்தை ஏற்று பல்பொடி வியாபாரம் செய்கிறான். பிச்சைக்காரியின் அறிமுகம் கிடைக்கிறது.  முதலில் அவள் குடிசையில் அடைக்கலமாகிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனத்திலும் அடைக்கலமாகிவிடுகிறான்.


ஆடவன் மேல் சர்க்கஸ் நடனப் பெண்மணிக்கும் ஈர்ப்பு.. காதல்.. இவனோ அவளைத் தேடிவரும் பெரும் புள்ளிகளைக் கொண்டு அவளுடைய நடத்தையை தவறாகவே கணிக்கிறான். அவளுடைய தூய அன்பினை இவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. சர்க்கஸ் முதலாளியிடமும் அந்த ஊர் பெரிய மனிதரிடமும் அவள் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறாள். அவளிடம் அந்தப் பெரிய மனிதரால் அன்பளிப்பாய் தரப்படுகின்றன இருபது ஆயிரம் ரூபாய் நோட்டுகள். ஆத்திரத்துடன் அவற்றை அறைக்குள் விசிறியடிக்கிறாள். மாடியறை சன்னல் வழியே ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும் காற்றில் பறந்துவந்து தரையிறங்குகிறது.
தரையிறங்கிய அந்த ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு அபயமான இடம் பிச்சைக்காரியின் கரம். யாருக்கும் தெரியாமல் அவள் அதைப் பத்திரப்படுத்துகிறாள். அதுவரை அமைதியான நீரோட்டமாய் அன்றாடப் பிச்சையிலே ஆனந்தமாய் இருந்த அவளுடைய வாழ்வை  காட்டாற்றுவெள்ளமெனப் புரட்டிப்போடப்போகிறது என்பதை அவள் அப்போது அறியவில்லை.

ஐந்து காசுக்கும் பத்து காசுக்கும் பிச்சை எடுப்பவளிடம் வந்து சேர்ந்த ஆயிரம் ரூபாயைக் கொண்டு அவள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்றிக்கொள்ள முடியும்.. கற்பனை இனிக்கிறது. ஆனால் யதார்த்தம்படுத்தவுடன் குறட்டை விடும் அவளது தூக்கம் முதலில் பறிபோகிறது. களங்கமற்ற மனத்தில் கள்ளம் குடிகொள்கிறது. நாளைய கவலையற்று வாழ்ந்தவளுக்கு நாளுக்குநாள் பயமும் படபடப்பும் வந்துசேருகிறது. மறைக்கும் முயற்சியில் காதலனின் சந்தேகத்துக்காளாகி காதலனைப் பிரிகிறாள். பத்திரப்படுத்தும் முயற்சியில் தங்கையை உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளிவிடுகிறாள். தவறுணர்ந்து தங்கையின் உயிரைக் காக்கப் போராடும் போராட்டமும் தோல்வியில் முடிகிறது. போகுமிடமெல்லாம் அவள் நம்பிக்கையில் இடி விழுகிறது.  
பிச்சைக்காரியின் கையில் ஆயிரம் ரூபாய்த்தாளைக் கண்டால் இந்த பாழாய்ப்போன சமுதாயம் சும்மா இருக்குமா? சந்தேகப்படாது? வயிற்றெரிச்சல் படாது? திருடி என்கிறது.. மூர்க்கத்துடன் அடித்துத்துரத்துறது..  முகத்தில் வெந்நீரை வீசுகிறது..


ஆயிரம் ரூபாய்த்தாளின் மீதான மோகத்தால், கண்ணுக்குக் கண்ணான தங்கையை இழந்து, சித்தமிழந்து, கண் நிறைந்த காதலனை இழந்துஇனி தன்னிடம் இருப்பது உயிர்மட்டும்தானே என்று அதையும் இழக்கத் துணிந்தவளைத் தடுத்துநிறுத்தி வாழ்வின் மீதான பிடிப்பை உண்டாக்குகிறது சூழல். இதோ ஒரு பிஞ்சை வாழவைக்க அவள் மறுபடி பிச்சைப்பாத்திரத்தை ஏந்திவிட்டாள். தூரத்தில் ஒலிக்கிறது அவள் குரல்.. ஆனாக்கா அந்த மடம்.. ஆகாட்டினா சந்தமடம்1964-இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சாவித்ரி, ஜெமினி கணேசன், ராகினி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்து வெளிவந்த ஆயிரம் ரூபாய் என்னும் இத்திரைப்படத்தை இரண்டொரு மாதங்களுக்கு முன்பு பார்த்தவுடன் எழுதிய பதிவு இது. ஏனோ அப்போது பதியத் தோன்றவில்லை.. இப்போது இருக்கும் சூழலோடு ஒப்பிடுகையில் முடவனின் எதிரிலிருக்கும் கொம்புத்தேனைப் போல கையில் பணமிருந்தும் செலவழிக்க இயலாமல் அந்தப் பிச்சைக்காரியின் நிலைமைதானே பலருக்கும் இப்போது..  

திரைப்படத்தை காண விரும்புவோர்க்கு youtube இணைப்பு இதோ..
(படங்கள் உதவி - இணையம்)

14 comments:

 1. நல்லதொரு விமர்சனம். நன்றி.

  ReplyDelete
 2. படம் பார்த்த உணர்வு குட்.

  ReplyDelete
 3. இன்றைய நடைமுறை வாழ்க்கையின் இயல்புடன் ஒப்பிட்டு மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள்.

  இந்தப்படம் வந்த காலத்தில் எனக்கு 14 வயதே ஆனதால், KSG யின் இந்தப் படம் பார்க்க அன்று எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

  இப்போது அதே படத்தினைப்பார்க்க விரும்புவோருக்காக இணைப்பும் கொடுத்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிகவும் நன்றி கோபு சார். திரையரங்கு சென்றால் மட்டுமே திரைப்படம் பார்க்கமுடியும் என்ற அன்றைய சூழலில் பல திரைப்படங்களைப் பார்த்திருப்பதற்கான வாய்ப்பு குறைவே.. இப்போது பல சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பல திரைப்படங்களைப் பார்க்கமுடிவதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. தீமையை ஒதுக்கி நன்மையை மட்டுமே பார்ப்பது ஒரு சவால்தான். தற்செயலாகவே இத்திரைப்படத்தை நான் காண நேரிட்டது. மனத்தை வெகுவாகப் பாதித்தால் உடனேயே அதைப் பற்றி பதிவெழுதிவைத்துவிட்டேன்.

   Delete
 4. அருமையான விமர்சனம்

  ReplyDelete
 5. கீதா நலமோ? நீண்ட நாட்களின் பின்னர் வெளியே வந்திருக்கிறேன், நீங்கள் தொடர்ந்து புளொக்கை கலகலப்பாக வைத்திருப்பது பார்க்க மிக்க மகிழ்ச்சி.

  அருமையான விமர்சனம்... இன்றே படம் பார்த்து விடப்போகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நலமே அதிரா.. நீங்க நலம்தானே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. படத்தைப் பாருங்கள்.. அதன் தாக்கம் பல நாள் நீடிக்கும்.

   Delete
 6. அருமையான திரைக்காவியம்...

  ReplyDelete
  Replies
  1. ஆம். நன்றி தனபாலன்.

   Delete
 7. நல்ல பதிவு. நானும் பழைய திரைப்படங்களின் ரசிகன் தான். பழைய திரைப்படங்களில் இருக்கும் கலை நயம் இப்போதைய படங்களில் ஏனோ இல்லை. மீண்டும் வாழ்த்துக்கள்.நமது வலைத்தளம் : சிகரம்

  ReplyDelete
  Replies
  1. ரசனைகள் மாறிக்கொண்டே வருகின்றன அல்லவா... நம்முடைய ரசனைக்கு இப்போது படங்கள் வருவதில்லை என்பது உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.