5 September 2013

மறதிவாவென்றழைத்த கணமே
வந்தென் வாய்குவியும் வார்த்தைகளும்
மனங்குவியும் மொழிகளும்
அடம்பிடித்தோடும் குழந்தைகளாய்
இன்றென் வசப்பட மறுக்கின்றன!

நிகழ்வுகளைக் கொட்டிக் கொட்டி
நிறைத்துவைத்த நினைவுக்கிடங்கும்
ஆடிமுடிந்த மைதானமென
ஆளரவமற்றுக் காட்சியளிக்கிறது!

எதிரிலிருப்பவனின் அகன்ற நெற்றியும்,
புருவஞ்சுழித்தப் பார்வையும்
எவரையோ நினைவுறுத்த,
எஞ்சியிருக்கும் என் ஞாபகப்பொதியிலிருந்து
எத்தனையோ பக்கங்களைப் புரட்டிப்பார்த்தும்,
பிறர் சொல்லாமல் அறிய இயலவில்லை,
அவனென் அன்புமகனென்று!

ஆழ்ந்த பெருமூச்சுடன்
அலுத்துக்கொள்கிறான் அவனும்,
இது ஆயிரமாவது அறிமுகப்படலம் என்று! 
சிறுபிள்ளைகள் கட்டிய மணல்வீடென
சிறுகச் சிறுகச் சரிகிறது என் நினைவுக்கோட்டை!

முழுதும் சரிந்து மண்ணாகுமுன்னே
எழுதிட நினைத்தேன் எவ்வளவோ! 
சட்டெனத் தோன்றியத் தயக்கமொன்றால்
தடுமாறி நிற்கிறது, பேனா!

எனக்கென்று ஒரு பெயர்
இருந்திருக்கவேண்டுமே,
எவரேனும் அறிவீரோ அதை?

42 comments:

 1. சட்டெனத் தோன்றியத் தயக்கமொன்றால்
  தடுமாறி நிற்கிறது, பேனா!

  எனக்கென்று ஒரு பெயர்
  இருந்திருக்கவேண்டுமே,
  எவரேனும் அறிவீரோ அதை?

  அடம்பிடிக்கும் குழந்தையாய்
  பெயரையும் மறந்த சோகம் ..கஷ்டம் தான் ..!

  ReplyDelete
 2. சிறுகச் சிறுகச் சரிகிறது என் நினைவுக்கோட்டை...

  தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

  ReplyDelete
 3. மறக்க நினைப்பதெல்லாம்
  மறவாது முன்னே நிற்பதும்
  மறக்க கூடாது என்பதெல்லாம்
  மறந்து போவதும்

  மனித வாழ்வின்
  மாலையின் அதி
  காலையாம்

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 4. //சிறுபிள்ளைகள் கட்டிய மணல்வீடென
  சிறுகச் சிறுகச் சரிகிறது என் நினைவுக்கோட்டை!//

  சோக கீதம் மனதை வாட்டுகிறது.

  எனினும் அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. ஆழ்ந்த பெருமூச்சுடன்
  அலுத்துக்கொள்கிறான் அவனும்,
  இது ஆயிரமாவது அறிமுகப்படலம் என்று!
  சிறுபிள்ளைகள் கட்டிய மணல்வீடென
  சிறுகச் சிறுகச் சரிகிறது என் நினைவுக்கோட்டை!//

  அருமையான உவமை
  குவிக்கக் குவிக்கச் சரியும் நினைவினை
  இதைவிட அருமையாய்ச் சொல்வது அரிதே
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

 6. மறதி என்று சொல்லிச் சென்று விடக் கூடியதல்ல இது. அதனினும் கொடியது. நினைவலைகள் தடைபட்டால் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்.பார்க்க gmbat1649,blogspot.in/2011/08/blog-post_04.html இந்த நோயால் அவதியுறும் பலருக்கான காப்பகம் ஒன்று அமைக்கப் போய் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒருவரையும் தெரியும். இதல்லாமல் மறதி என்று சொல்லக் கூடிய வேறொரு பிணியும் இருக்கிறது. அதை AAADD என்று அழைக்கிறார்கள். இது குறித்தும் இந்த வருடம் மே மாதம் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். உங்கள் கவிதை சிறப்பாக இருக்கிறது இதைத் தன்னிலையில் எழுதி இருக்கிறீர்கள், இதனால் பாதிக்கப் பட்டவருக்கு இந்நோய் இருப்பதே தெரியுமா என்பது சந்தேகமே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அடம்பிடித்தோடும் குழந்தைகளாய்
  இன்றென் வசப்பட மறுக்கின்றன!
  >>
  நல்ல உதாரணம். சில சமயம் எனக்கும் இப்படி நேர்ந்ததுண்டு.

  ReplyDelete
 8. //எதிரிலிருப்பவனின் அகன்ற நெற்றியும்,
  புருவஞ்சுழித்தப் பார்வையும்
  எவரையோ நினைவுறுத்த,
  எஞ்சியிருக்கும் என் ஞாபகப்பொதியிலிருந்து
  எத்தனையோ பக்கங்களைப் புரட்டிப்பார்த்தும்,
  பிறர் சொல்லாமல் அறிய இயலவில்லை,
  அவனென் அன்புமகனென்று!//

  படிக்கும்போது நெஞ்சுக்குள் என்னவோ செய்கிறது... டிமென்ஷியா வந்துவிட்டால்ல்ல்.. எல்லாமே மாறிவிடும்... அது யாருக்கு எப்போ வரும் ... சொல்லிக்கொண்டா எல்லாம் வருகிறது.

  நல்ல ஒரு கற்பனை, ஆழமான நியாயத்தைப் பிரதிபலிக்கும் சிந்தனை.

  ReplyDelete
 9. // எனக்கென்று ஒரு பெயர்
  இருந்திருக்கவேண்டுமே,
  எவரேனும் அறிவீரோ அதை?//

  தாய்மை. தியாகம்.

  ReplyDelete
 10. /எனக்கென்று ஒரு பெயர்
  இருந்திருக்கவேண்டுமே,/

  சரிகின்ற நினைவுகளை அவசரமாகத் தாங்கி நிறுத்தி ஒரு தேடல். கவிதை அருமை. ஸ்ரீராமின் பதிலும்.

  ReplyDelete
 11. மனதைப் பிசைகின்றதே வரிகள்!
  கனமான கற்பனை! கற்பனைதான் எனச் சொல்லிவிடுங்கள்!..

  இக் கொடிய நிலை யாருக்கும் வரக்கூடாது.
  உங்கள் கவிதைத் திறமை அளப்பரியது கீதமஞ்சரி!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. முதுமையின் முதல்மொழி... மறதி. அதுவே நோயானால்... அப்பப்பா... நினைக்கவே வலிக்கிறது.

  ReplyDelete
 13. Anonymous6/9/13 02:28

  ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் ஆ ?
  எல்லோருக்கும் இது அடிக்கடி வந்து போகும் !

  ReplyDelete
 14. எஞ்சியிருக்கும் என் ஞாபகப்பொதியிலிருந்து
  எத்தனையோ பக்கங்களைப் புரட்டிப்பார்த்தும்,
  பிறர் சொல்லாமல் அறிய இயலவில்லை,
  அவனென் அன்புமகனென்று!//

  பெற்றவர்களுக்கு தன் மகனை அடையாள சொல்ல பிறர் துணை என்று படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது.
  விரோதிக்குகூட இந்நிலை வரவேண்டாம்.
  கடைசிவரை தன் நினைவுடன் இருக்க இறைவனை வேண்ட வேண்டும்.

  ReplyDelete
 15. முழுதும் சரிந்து மண்ணாகுமுன்னே
  எழுதிட நினைத்தேன் எவ்வளவோ!
  சட்டெனத் தோன்றியத் தயக்கமொன்றால்
  தடுமாறி நிற்கிறது, பேனா!

  மிக அழகாக மறதியையும் கவிதையாக தந்துவிட்டீர்கள் தோழி.. என்ன ஒற்றுமை தென்றலில் இன்று பதிந்து விட்டு இங்கு வந்து பார்த்தால் ...
  நம்இருவருக்கும் ஒரே சிந்தனை தலைப்பு தான் மாறுபட்டிருக்கிறது.

  ReplyDelete
 16. வார்த்தைகள் நன்றாக வசப்பட்டிருக்கின்றன உங்களுக்கு இந்தக் கவிதையில்....பிரமாதம்!

  ReplyDelete
 17. நிகழ்வுகளைக் கொட்டிக் கொட்டி
  நிறைத்துவைத்த நினைவுக்கிடங்கும்
  ஆடிமுடிந்த மைதானமென
  ஆளரவமற்றுக் காட்சியளிக்கிறது!

  மிக அருமையான உதாரணம்... மிக அருமையான கவி...

  ReplyDelete
 18. Anonymous7/9/13 06:45

  வயது முதிர்ச்சியும், மறதியும் எவ்வளவு ஓரு வேதனை நிலையென்பது அழகாக எடுத்தாளப் பட்டுள்ளது. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 19. வினாவில் கூட ஒரு வித ஏக்கம் தெரிகிறது .அடர்ந்த காட்டில் துலைந்து போன குழந்தை போல் மறதியும் மனிதர்களைப் பாடாய் படுத்துவது தான்
  உண்மை ! சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
 20. //எனக்கென்று ஒரு பெயர்
  இருந்திருக்கவேண்டுமே,
  எவரேனும் அறிவீரோ அதை?// இறுதி வரிகள் மீண்டும் தலைப்பிற்கு இழுத்துச் செல்வது மிக அருமை. அனைத்தும் அருமை. சோக நிழலாடுகிறது அதை படிப்பவர்கள் உணர்வது தங்கள் படைப்பிற்கான வெற்றி. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
 21. மனதை ஆழமாக பாதிததது கவிதை..

  வாழ்த்துகள்..!

  எனது வலைத்தளத்தில்: குறைந்த விலை பிராண்டட் செல்போன்களின் பட்டியல்

  வாசித்துப் பயன்பெறுங்கள்..

  ReplyDelete
 22. அருமையான கவிதை கீதா..

  ReplyDelete
 23. @இராஜராஜேஸ்வரி

  உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 24. @திண்டுக்கல் தனபாலன்

  வருகைக்கும் கவிதைப்போட்டி அழைப்புக்கும் மிக்க நன்றி தனபாலன். கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 25. @sury Siva

  மிகச்சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சுப்பு தாத்தா.

  ReplyDelete
 26. @வை.கோபாலகிருஷ்ணன்

  முதுமையில் வரக்கூடிய அல்ஜைமர் நோயின் தாக்கத்தை வார்த்தைகளில் வடிக்க நினைத்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 27. @Ramani S

  தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டக்கருத்துரைக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 28. @G.M Balasubramaniam

  இக்கவிதையில் மறதிநோயால் பீடிக்கப்பட்ட ஒருவர் தன் நினைவு மங்கிப்போகும் தருவாயில், முற்றிலும் மறைவதற்கு முன் தன்னைப் பற்றிச் சொல்வதைப் போல் எழுதியுள்ளேன். நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் ஒரு மாற்றுக்கண்ணோட்டமாய்க் கொள்ளலாம் அல்லவா?

  தங்கள் வருகைக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 29. @ராஜி

  எல்லோருக்குமே ஏதோவொரு சமயத்தில் மறதி இயல்புதான் ராஜி. ஆனால் தன் பெயர், தான் பெற்ற குழந்தைகளின் முகம் இவையே மறந்துபோகும் அளவுக்கு மறதிநோயின் தாக்கம் மிகவும் கொடியது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

  ReplyDelete
 30. @athira

  முதுமையில் தள்ளாமையோடு இதுபோன்று மறதிநோயும் வந்துவிட்டால் அவர்கள் பாடு மட்டுமல்ல, உடனிருப்பவர்கள் பாடும் வேதனைக்குரியது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா.

  ReplyDelete
 31. @ஸ்ரீராம்.

  அழகாகச் சொன்னீர்கள். முதுமையில் மறதியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தாய்மையும் தியாகமும் இப்போதெல்லாம் கவனிப்பாரின்றி முதியோர் இல்லங்களில் கொண்டுவிடப்படுவது உச்சகட்ட வருத்தம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 32. @ராமலக்ஷ்மி

  வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 33. சி­று­கச் ­சி­று­கச் ­ச­ரி­கி­ற­து ­என் ­நி­னை­வுக்­கோட்­டை! இந்­த ­வ­ரி ­வெ­கு ­பி­ர­மா­தம். ­மு­து­மை­யி­னால் ­வ­ரும் ­ம­ற­தி­யி­­னால் ­ப­க­திக்­கப்­ப­டும் ­ம­ன­நி­லை­யை ­எனக்­குள்­ளும் ­க­வி­தை ­இ­றக்கி ­விட்­ட­து.­ சூப்­பர்ப்!

  ReplyDelete
 34. Anonymous24/9/13 17:11

  ''..சிறுபிள்ளைகள் கட்டிய மணல்வீடென

  சிறுகச் சிறுகச் சரிகிறது என் நினைவுக்கோட்டை..''
  ஆம் மாபெரும் இழப்பு ஞாபகச் சரிவு.
  அருமை. அருமை. அழுகாக பதியப் பட்டுள்ளது.
  மொழி ஆளுமை மிக நன்றுடா!
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 35. நிகழ்வுகளைக் கொட்டிக் கொட்டி
  நிறைத்துவைத்த நினைவுக்கிடங்கும்
  ஆடிமுடிந்த மைதானமென
  ஆளரவமற்றுக் காட்சியளிக்கிறது

  அருமையான உவமை!!

  ReplyDelete
 36. @பால கணேஷ்

  தவறாத வருகைக்கும் ஆழமான மறுமொழிக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ்.

  ReplyDelete
 37. @kovaikkavi

  தங்கள் வருகைக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 38. @புலவர் இராமாநுசம்

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பான நன்றி ஐயா.

  ReplyDelete
 39. ஐயோ! இந்நிலை யாருக்கும் வரக்கூடாது தோழி! என் பாட்டியின் நிலை அதுவாகத்தான் இருந்தது. என் தாத்தாவையும் என் அப்பாவையும் யாரென்று நிமிடத்திற்கொரு முறை கேட்டுக்கொண்டிருந்தார்.

  ReplyDelete
 40. @கிரேஸ்
  முதியவர்களுக்கு வரும் மறதி நோய் மிகவும் கொடியது.நெருங்கிய உறவுகளே நினைவிலிருந்து நீங்கிவிடும் வேதனையை நமக்கு நினைவிருக்கும் வரை மறக்க இயலாதது. வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி கிரேஸ்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.