7 August 2013

ஆசை




பொங்கலு எப்பம்மா வரும்…?”

கொஞ்சநேரத்துக்கு முன்னால் குடிசை மூலையில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தவன் இருந்தாற்போல் இருந்து அழுகையை நிறுத்திவிட்டு மூக்கை உறிஞ்சிகொண்டே வந்து கேட்கவும் மனம் இளகிவிட்டது வசந்திக்கு. ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டு பக்கத்திலிருந்த காய்ந்த முள்ளை படக்கென்று முறித்து அடுப்பில் திணித்தாள். 

குறுணைக்கஞ்சி கொதித்துக்கொண்டிருந்தது. எரியும்போது பட்பட்டென்று கருவேலமுள் வெடித்தெழுப்பிய சத்தம் தவிர வேறு சத்தமில்லை. ஓயாமல் பெய்துகொண்டிருந்த மழை சட்டென்று நின்றுவிட்டதுபோல் செல்வராசுவின் அழுகை நின்றுபோய்விட திடீரென்று ஒரு அமைதி சூழ்ந்துகொண்டது அவளை. அந்த அமைதி அவளுக்கு வேண்டியதாய் இருந்தது.

கொஞ்சநாளாகவே இன்னதென புரியாத ஒரு கலவரம் மனத்தைப் பற்றியிருந்தது. யாரிடமும் பகிரமுடியாத மனோவேதனையால் உழன்றுகொண்டிருந்தவளை இன்னும் வேதனைப்படுத்துவதாய் இருந்தது சற்றுமுன் செல்வராசு செய்த ஆர்ப்பாட்டம். எவ்வளவு எடுத்துச்சொல்லியும் தன்பிடிவாதம் தளர்த்தாதவனை வேறு வழியில்லாமல் முதுகில் நாலு சாத்து சாத்தி மூலையில் உட்காரவைத்தாள்.

அப்படி அடிவாங்கி அழுதுகொண்டிருந்தவன்தான் இப்போது எதுவுமே நடக்காததுபோல் இவளிடம் வந்து பொங்கலு எப்ப வரும்மா?” என்கிறான். வசந்தி அமைதியாய் இருக்கவும் ஒருவேளை அவள் காதில் விழவில்லை என்று நினைத்தோ என்னவோ, கொஞ்சம் அதட்டலாகவே கேட்கிறான்.
அம்மோய்கேக்குறேன்ல.. காது கேக்கலயா? பொங்கலு எப்ப வரும்?”

வசந்தி ஒரு முறைப்புடன் நிமிர்ந்து மகனைப் பார்த்தாள். கண்ணீரும் சளியுமாய் முகம் உழப்பிக் கிடப்பவனைப் பார்க்க கோபம் நீங்கி பச்சாதாபம் எழுந்தது. வெடுக்கென்று அவன் கையைப் பிடித்திழுத்து மடியில் அமர்த்திக்கொண்டாள். முந்தானையால் அவன் முகத்தை முழுவதுமாய் அழுந்தத் துடைத்துவிட்டாள். அம்மாவின் கோபம் மறைந்து கரிசனம் பிறந்துவிட்டதில் பிள்ளைக்கு மகிழ்ச்சி. சிரிக்கிறான். கறை நீங்கிய நிலவு போல பளீரெனப் பிரகாசிக்கிறது அவன் முகம்.

ஒரு நிமிடம் ஆழ்ந்து தன் பிள்ளையின் அழகை ரசித்தவள், தன் இருகைகளாலும் அவன் முகத்தை வழித்து நெற்றிப்பொட்டில் சொடுக்கி நெட்டி முறித்துக்கொண்டாள். இவனுக்கு மட்டும் நல்ல சொக்காய் போட்டு எண்ணெய் தடவி தலை சீவி, பவுடர் பூசிக் கொண்டுபோய் தெருவில் விட்டால் பெரிய இடத்துப்பிள்ளையென்றே சொல்வார்கள். அந்த அளவுக்கு முகலட்சணம்.

நினைக்கும்போதே மனம் துயருற்றது. ஏன் இப்போது மட்டும் என்ன? இவனும் பெரிய இடத்துப்பிள்ளைதான். ஏதோ போறாத காலம் இப்படி இந்த ஓலைக்குடிசையில் என்னோடு போராட வேண்டியுள்ளது? நான் வாயைத் திறந்து ஒருவார்த்தை சொன்னால் போதுமேஇவன் வாழ்க்கை மட்டுமல்ல, என் வாழ்க்கையும் தலைகீழாய் மாறிவிடாதா…. ஆனால்தேவையில்லைஅப்படி ஒரு பிச்சைக்கார வாழ்க்கை எனக்கும் தேவையில்லை.. என் பிள்ளைக்கும் தேவையில்லைசாகும்வரை பிறத்தியார் கையை எதிர்பாராமல் இருந்து காட்டுகிறேன். வாழவேண்டும். வாழ்ந்துகாட்டவேண்டும் என்பதற்காகத் தானே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இத்தனை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் சகித்துக்கொண்டிருக்கிறேன்.

நினைவைக் கலைப்பது போல் செல்வராசு மறுபடியும் கேட்டான்.கேட்டான் என்பதை விடவும் கத்தினான் என்றால் சரியாக இருக்கும்.
ந்தேபொங்கலு எப்ப வரும் எப்ப வரும்னு கேட்டுட்டே இருக்கேன்.. கேக்கலையா உனக்கு.. செவுடா நீசொல்லுந்தேபொங்கலு எப்பந்தே வரும்…?”

செல்வராசு அடுத்த ஆட்டத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் தயாராவது அவன் பேச்சிலிருந்தே தெரிந்தது. செல்வராசுவுக்கு கோபம் வந்தால் அது சாதாரணமாய் இருக்காது. ஆங்காரமாகத்தான் இருக்கும். சாமிக்கு அருள் வந்து ஆடுவது போல் அவன் ஆடும் ஆட்டம் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாய் இருக்கும். இதற்காகவே அவனைச் சீண்டி ஆடவிடும் சின்ன பெரிய மனிதர்கள் அநேகர் அங்கே உண்டு. இப்பேர்ப்பட்ட மனிதர்கள் மத்தியில் புத்தியில்லாப் பிள்ளை இவனை எப்படித்தான் வளர்த்து ஆளாக்கப்போகிறோமோ என்று கவலையோடு ஆயாசமும் வந்தது.

இந்த மாசி வந்தால் பயலுக்கு எட்டு முடிந்து ஒன்பது ஆரம்பிக்கிறது. வருஷம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறதுஇவனுக்கும் வயசு கூடுகிறது. ஆள் வளர்கிறானே தவிர புத்தி வளரக்காணோம். பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று முரண்டு பண்ணுபவனை வேப்பங்குச்சியும் கையுமாய் தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் விட்டாலும் வாத்தியார் அசந்த நேரம் பார்த்து ஓடிவந்துவிடுகிறான். போகிற இடமெல்லாம் இவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு திரிகிறான். இவளும் என்ன செய்யமுடியும்? ஒற்றை மனுஷி. அவனை விட்டால் அணைக்கவோ பிடிக்கவோ வேறு நாதியற்றவள். 

கோபக்குமுறலோடு தன் முகத்தைப் பார்த்தபடி நிற்கும் பிள்ளையின் கேள்விக்கு ஒருபாடாய் பதில் சொல்கிறாள்.

வரும்யா வரும்.. அது வரப்போ வரும்அம்மாவின் அமைதியான பதில் கேட்டு செல்வராசுவுக்கு ஒரே ஆச்சர்யம்.

செல்வராசுவின் கோபத்துக்கு வசந்தியிடம் இருவேறு விதமான எதிர்வினைகள் இருக்கும். ஏனென்றால் வசந்திக்கு இருவேறு மனநிலைகள்தான் பழக்கம். ஒன்று மகிழ்ச்சி, இல்லையென்றால் துக்கம். இந்த இரண்டுமில்லாத மத்திம மனநிலையில் அவளைப் பார்ப்பது அரிது. செல்வராசுவின் கோபம் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பாள் அல்லது இழுத்துப்போட்டு அடிப்பாள். இன்றைக்கு இப்படி பட்டும் படாமல் பதில் சொல்லும் அம்மா செல்வராசுவுக்குப் புதியவளாய் இருந்தாள்.

மகிழ்வாய் இருந்திருந்தால் இப்பத்தான் தீவாளி போச்சி. ஊர்ப்பலகாரம் தின்னு முடிச்சு செரிக்க நேரமில்லஅதுக்குள்ள எங்க ஐயாவுக்கு பொங்க திங்க ஆசை வந்திடுச்சோ?” என்று பரிகாசம் பண்ணியிருப்பாள். மாற்றமாயிருந்தால், “கோவணத்துக்கு வழியைக் காணுமாம். தலைக்கு தலைப்பா இல்லையேன்னு ஏங்குனானாம் ஒருத்தன். போடா வேலையத்தவனேஎன்று விளக்குமாற்றைத் தூக்கினால் இந்நேரம் காத தூரம் ஓடியிருப்பான் பயல்.

செல்வராசுவுக்கு சதா சாப்பாட்டு நினைப்புதான். தின்பதைத் தவிர வேறு பேச்சே கிடையாது அவனுக்கு. இப்போது அடிவாங்கி அழுதுகொண்டிருப்பதும் சாப்பாட்டைப் பற்றிப் பேசித்தான். சாதாரண சாப்பாடு இல்லை.. கல்யாண சாப்பாடுநீ எக்கேடோ கெட்டுப்போஎனக்கு சோறு கிடைத்தால் போதுமென்று நினைக்கும் பிள்ளையை என்ன சொல்வது? கிடக்கிறது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை என்கிற கதையாக

ஆமாம், இங்கே அதுதான் நடக்கிறது. காசிருந்தால் போதும்கிழவனையும்  மனையில் இருத்தக் காத்திருக்கிறது உலகம். கிழவர் ராமலிங்கத்துக்கு கல்யாணமாம். ஊரெல்லாம் இதே பேச்சு. வசந்திக்கும் காற்றுவாக்கில் சேதி வந்தது. இந்தமுறை எப்படி அழைத்தாலும் ராமலிங்கத்தின் கல்யாண காரியத்துக்குப் போகப்போவதில்லை என்று மனத்துக்குள் முடிவு செய்துகொண்டாள். பத்திரிகை வைத்து அழைக்கும் அளவுக்கு ஊரில்  அவள் பெரியமனுஷி இல்லைதான் என்றாலும் தனக்கு அந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை என்பது போல் உள்ளத்துக்குள் ஒரு முறுக்கேற்றியிருந்தாள். அந்த முறுக்கைத் தளர்த்துவதுபோல் இந்தப் பயல் கல்யாணத்துக்குப் போகவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கிறான்.

சாதாரணமாகவே ஊரில் நடக்கும் எல்லா விசேஷத்திலும் வசந்தியின் பங்கு கட்டாயம் இருக்கும். கல்யாணம் என்றால் மருதாணி இலை பறித்துவந்து அரைத்துத் தருவது முதல் கடைசிப் பந்தியின் கடைசி எச்சில் இலை எடுப்பது வரை வசந்தி தேவைப்பட்டாள். இழவு வீட்டில் இறுதியாய் வீடு வாசல் கழுவி சுத்தம் செய்ய வசந்தி வரவேண்டும். வேலையென்று வந்துவிட்டால் வசந்தி பம்பரமாய்த்தான் சுழல்வாள். அவளுடைய தேவை அந்த ஊரில் பலருக்கும் தேவைப்பட்டது. அதனாலேயே அவளுடைய மகனின் பிறப்பு பற்றிய அவதூற்றுப்பேச்சுகள் அவ்வப்போது மறக்கப்பட்டது.

வசந்திக்கும் இதுபோன்ற விசேஷ வீட்டுவேலைகள் தேவையாயிருந்தது. கூலி ஒரு பக்கம் என்றாலும் அங்கு கிடைக்கும் உதிரிப் பலகாரம்தான் முதற்காரணம். செல்வராசுவின் தின்பண்ட ஆசையை அவ்வப்போது பூர்த்தி செய்யப் போதுமானதாய் இருந்தன சில உடைந்த முறுக்குகளும், உதிர்ந்த லட்டுகளும், தூள் மைசூர்பாக்கும், துளி பாயசமும். 
கொஞ்சநாளாகவே ஊரில் விசேஷம் எதுவுமில்லாததால் விசேஷப்பலகார நினைப்பின்றி இவனும் சும்மாதான் இருந்தான். அந்தக் கிழவன் வந்து கிளப்பிவிட்ட பூதம்தான் இன்று இவனைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.

போனவாரத்தில் ஒருநாள் பொழுது சாயும் வேளை, எப்போதும் போல் வயற்காட்டு வேலையை முடித்துக்கொண்டு வாய்க்காலில் குளித்துவிட்டு செல்வராசுவையும் குளிக்கவைத்து ஈரத்துணியுடன் வரப்புமேட்டில் வந்துகொண்டிருந்தாள். அப்போது பார்த்தா எதிரே அந்த ஆள் வரவேண்டும்? சட்டென்று வரப்பிலிருந்து இறங்கி நின்று மகனையும் கீழே இழுத்துக்கொண்டாள்.

என்ன வசந்திஎப்படியிருக்கே…?” இளிப்போடு கேட்ட அந்தப் பெரியமனிதனின் கண்கள் அவள் உடலை மேய்வது கண்டு மேலாக்கை இன்னும் இழுத்துப் போர்த்தினாள்.

தே.. என்ன ரொம்பத்தான் பண்றே.. எல்லாம் நான் பார்க்காததா?”
எச்சில் ஒழுகக் கேட்டபோது கையிலிருக்கும் கருக்கரிவாளால் அப்படியே அவர் கழுத்தை செதுக்கினால் என்ன என்று தோன்றியது. ஒன்றும் பேசாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

என்னடா பயலேஎப்படியிருக்கே?”

அடுத்து பார்வை செல்வராசுவின் மேல் பாய்ந்தது. அவனையும் ஒரு பெரியமனுஷனாய் நினைத்து கேள்வி கேட்கிறாரே என்று அவனுக்கு ஒரேயடியாய் வெட்கம் வந்துவிட்டது. அம்மாவின் சேலையால் முகத்தை மூடிக்கொண்டான்.

என்னடா ரொம்பத்தான் வெக்கப்படுறேஅன்னைக்கு பக்கோடா கடையில மிச்சருக்குக் கையேந்தும்போது வராத வெக்கம்
வசந்தி சுரீரென்று அடிபட்டதுபோல் நிமிர்ந்தாள். அவள் கண்களில் நெருப்பு.

என்னை ஏன் பார்க்குறேஅவனைக் கேளுபிச்சைக்காரப்பய மாதிரி கையேந்திட்டு நிக்கிறான். அந்தப்பக்கம் போன நான்தான் பய பாவம்னுட்டு ஒரு காராசேவுப் பொட்டலம் வாங்கிக்குடுத்தேன். உண்டா இல்லையான்னு அவனையே கேளு..”  ராமலிங்கம் சிரித்துக்கொண்டே சொல்லும்போது ஏளனம் ஏராளமாய் எட்டிப்பார்த்தது.

வசந்தி பார்வையின் தகிப்பு மாறாமல் செல்வராசுவைப் பார்க்க அவன் நடுங்கிப்போனான். ஒன்றும் பேசாமல் மளமளவென்று மகனை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தவளை அதட்டி நிறுத்தினார் கிழவர்.

வசந்தி.. தே.. கொஞ்சம் நில்லு. சேதியை முழுசா கேக்காமப் போறியேகல்யாண சேதி கேள்விப்பட்டிருப்பியேஅடுத்தவாரம் கல்யாணம். பயலை அழைச்சிட்டு வந்திடு. கல்யாணம் முடிஞ்சதும் பலகாரமெல்லாம் வாங்கிட்டுப் போவலாம். பொண்ணு வீட்டுல நல்ல வசதி.. பலகாரக்குடமே பதினஞ்சி வருமாம். உனக்கு வேணுங்கிறதை எடுத்துட்டுப்போபயலும் காஞ்சிபோய்க் கெடக்கிறான்.. ஆசை தீர திங்கட்டும் பாவம்…”

முட்டிய அழுகையை அடக்கிக்கொண்டு விடுவிடுவென வீடு வந்தாள். பின்னால் ராமலிங்கம் ஓஹோவெனப் பெரிதாய் சிரிப்பதுபோல் இருந்ததுபிரம்மையாகவும் இருக்கலாம். ஆனால் அந்த ஏளனச்சிரிப்பு அவளைக் கேளாமல் கேட்ட சேதி இதுதான். “என்ன வசந்தி, இதுதான் நீ பிள்ளை வளர்க்கிற லட்சணமா? மானம், ரோசம், மயிரு மட்டைன்னு பேசினதெல்லாம் அவ்வளவுதானா..?”

நினைக்க நினைக்க வயிறு பற்றியெரிந்தது. பக்கோடாக்கடையில் கையேந்தினான் செல்வராசு என்பதைவிடவும் அதை ராமலிங்கம் பார்த்துவிட்டார் என்பதும் அவர் கையால் இவன் வாங்கித்தின்றான் என்பதும்தான் பெருத்த வேதனையைத் தந்தது. அப்படியென்ன ஆவலாதி இந்த சனியனுக்கு என்று எரிச்சல் வந்தது.

நேருக்கு நேராய் அந்தக் ஆளைப் பார்த்து  அடப்பாவிநெஞ்சைத்தொட்டு சொல்லு…. இதில் உன் மானமும் அடக்கமில்லையா…? என்று கேட்டு உலுக்கவேண்டும்போல் வெறி பிறந்தது. வசந்தியின் மனத்தின் ஆழத்தில் உள்ள ஆறாரணத்தை மறுபடி மறுபடி கீறிவிட்டு ஒழுகும் குருதியை நக்கிக்குடிக்கும் அந்த ஓநாயின் கழுத்தை தன் கைகளால் நெறித்துக்கொள்ளவேண்டும் என்று குரூரம் கிளர்ந்தது. ஆனால் செல்வராசுவின் எதிர்காலத்தை நினைத்து எதையும் செய்யமுடியாதவளாய் அமைதிகாத்தாள். ஆனாலும் உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தது மனம்.

சும்மாவே ஆடுமாம் சாமி. இதில் தாரை தப்பட்டை சேர்ந்தால் கேட்கவா வேண்டும்ஆடத் தொடங்கிவிட்டான் செல்வராசு. சாப்பாட்டுப் பிரியனான செல்வராசுவுக்கு ராமலிங்கத்தின் அந்த அழைப்பே பாக்குவெற்றிலை வைத்து அழைத்த அழைப்புக்கு சமானமாயிற்று. கல்யாணத்துக்குப் போகவேண்டுமென்ற ஆசை ஆழ வேர்விட்டுவிட்டது. என்னென்ன பலகாரம் கிடைக்கும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டான்.
நாளைக்கு கல்யாணம். இன்று காலையிலிருந்தே அரித்தெடுக்கிறான் இவன். “அம்மா கெளம்புமா.. நேரமாச்சி கெளம்புமாபாட்டு போட்டாங்க கெளம்புமாஎன்று உயிரை வாங்கிக்கொண்டிருக்கிறான்.

அம்மாவுக்கு முடியலடாஇன்னொருநாள் வேற விசேசத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்என்று சொன்னதுதான் தாமதம்கீழே விழுந்து புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.

அழட்டும் என்று இவள் விட்டுவிட்டாலும் அவன் அதோடு விடுவதாய் இல்லை.. வாய் கொள்ளாத வசவைத் தொடங்கிவிட்டான். வசந்தி கடுப்போடு அவன் வாயிலேயே ஒரு அடி போட, வசந்தியின் கையை நறுக்கெனக் கடித்துவைத்தான் அவன். அவ்வளவுதான்.. உள்ளுக்குள் இருந்த கோபம் அனைத்தையும் சேர்த்து அவனைக் கண்மண் தெரியாமல் அடித்துவிட்டாள்.

அப்படி அடிவாங்கி அழுதுகொண்டிருந்தவன்தான் அழுகையை நிறுத்திவிட்டுக் கேட்கிறான் பொங்கல் எப்போது வருமென்று. அது மட்டுமா? யார் யார் வீட்டுப் பொங்கல் எப்படி ருசிக்கும் என்று மனப்பாடமாய் பட்டியல் வாசிக்கிறான். எந்த வீட்டுப் பொங்கலில் நெய் மிதக்கும், எதில் முந்திரி திராட்சை அதிகமாய்க் கிடக்கும் என்றுகூட  அறிந்துவைத்திருக்கிறான். நாவில் சப்புக்கொட்டி அவன் மனக்கண்ணில் பொங்கல் தின்னும் காட்சியைப் பார்த்து பெற்ற மனம் குமுறியது.

ஐங்காயமிட்டு அரைத்தாலும் பேய்ச்சுரையின் நாற்றம் போகாது என்பது போல் இவனை எவ்வளவு அடித்தாலும் உதைத்தாலும் தின்பண்டத்தின் மீதான ஆசையை மாற்றமுடியாது என்பதை அறிந்தாள். வயதானாலும் ஆசை விட்டுப்போகாமல் அத்துமீறிய கிழத்துக்குப் பிறந்தவன் இவன்இவனுடைய ஆசையை மட்டும் அடக்கிவைக்கவா முடியும் என்று எண்ணியவளாய் வைராக்கியத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு செல்வராசுவைக் கையில் பிடித்தபடி கல்யாணவீட்டை நோக்கி நடக்கலானாள் வசந்தி.   
 --------------------------------------------------------------------------------------------------------------
(அதீதம் இதழில் வெளியானது)
படம்: நன்றி இணையம்

31 comments:

  1. மிகவும் அருமையான படைப்பு. மிகவும் ரஸித்துப்படித்தேன்.

    ஏழைகளுக்குத்தான் எத்தனை எத்தனை கஷ்டங்கள் + மனப்போராட்டங்கள்.

    என்னதான் அவர்கள் ரோஷப்பட்டாலும் கடைசியில் ஜெயிப்பது அவர்களின் வயிறு மட்டுமே என்பதை சுவைபட பொங்கலாகச் சொல்லிவிட்டீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //(அதீதம் இதழில் வெளியானது)//

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Anonymous7/8/13 18:41

    யதார்த்தமான நடை கவர்கிறது .
    அருமை !

    ReplyDelete
  4. நல்லதொரு படைப்பு. ஏழ்மை முகத்தில் அறைந்தது

    ReplyDelete

  5. யதார்த்தமான கதை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கதைகளும் இதுதானா உலகம் என்று எண்ண வைக்கக் கூடாது என்பது என் எண்ணம். சரளமான நடைக்குப் பாராட்டுக்கள். .

    ReplyDelete
  6. வணக்கம்

    தமிழ்மணம் 1

    ஆற்று நடையில் அளித்த கதைபடித்னேன்
    ஊற்றென ஊறும் உணா்வு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  7. கறை நீங்கிய நிலவு போல பளீரெனப் பிரகாசிக்கிறது அவன் முகம்.

    ஒரு நிமிடம் ஆழ்ந்து தன் பிள்ளையின் அழகை ரசித்தவள், தன் இருகைகளாலும் அவன் முகத்தை வழித்து நெற்றிப்பொட்டில் சொடுக்கி நெட்டி முறித்துக்கொண்டாள். //

    தாய்மையின் பெருமிதம் அழகாய் தெரிகிறது.

    கதையை அழகாய் மிக சரளமாய் சொல்கிறீர்கள்.
    கதை முடிவில் மனது கனத்து போனது

    ReplyDelete
  8. எதார்த்தமான படைப்பு...

    ReplyDelete
  9. ஏழைத்தாயின் மனக்கொந்தளிப்பு, பணக்கார ஆளுமை ... நல்ல படைப்பு. வசந்திக்காக மனம் கனக்கிறது ..

    ReplyDelete
  10. ஐங்காயமிட்டு அரைத்தாலும் பேய்ச்சுரையின் நாற்றம் போகாது

    கனக்கவைக்கும் கதை ..!

    ReplyDelete
  11. வசந்தி எனும் கதை நாயகியை நினைத்து வருத்தம் மேலோங்கியது. நிஜத்திலும் இப்படி பலர்......

    ReplyDelete
  12. ஏழ்மையின் கோர தாண்டவத்தை படித்து மனம் கலங்கியது....இப்படியும் பலர் இருக்கவே செய்கின்றார்கள்...:((

    சரளமான நடை. அதீதத்தில் வெளியானதற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  13. பணக்கார வர்க்கத்தின் ஆளுமையும் ஏழைகளின் இயலாத் தன்மையும் இடையில் வாழ்க்கைப் போராட்டமாய் வெந்தழியும் கதை.

    மனதை கனக்கவைத்துவிட்டது தோழி!

    கற்பனையில் காட்சியை விரிக்கும் கதைநடை அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. கதை சொல்லிச் சென்றவிதம்
    காட்சியாய் உள்ளே விரிந்து கொண்டே போனது
    யதார்த்த முடிவு கதைக்கு கூடுதல் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அவளின் ஊழியத்துக்காக அவ்வப்போது அவள் மகன் பிறப்பை மறக்கும் ஊருக்கும் வயோதிகம் வந்தும் புதுமாப்பிள்ளையான ராமலிங்கத்துக்கும் நடுவில் சிரிப்பாய் சிரிக்கும் வசந்தியின் பிழைப்பு, தாய்மையின் நெகிழ்வில் எல்லா ஏளனங்களையும் விழுங்கி நகர்வதாகிறது.

    கதையோட்டம் பிரமாதம். 'அதீதம்' வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் கதையை ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மகிழ்வான நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  17. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு சார்.

    ReplyDelete
  18. @ஸ்ரவாணி

    வருகைக்கும் ரசித்தமைக்கும் அன்பான நன்றி ஸ்ரவாணி.

    ReplyDelete
  19. @ராஜி

    வருகைக்கும் ரசித்து இட்ட மறுமொழிக்கும் மிக்க நன்றி ராஜி.

    ReplyDelete
  20. @G.M Balasubramaniam

    மனத்தை பாதிக்கும் சில சம்பவங்கள் கதையாகவோ கவிதையாகவோ வடிவம் பெற்றுவிடுகின்றன. சில யதார்த்தமாகவும் சில யதார்த்தம் மீறியும். இந்தக்கதை யதார்த்தமாய் இருப்பதாய் அனைவரும் நினைப்பதே அதன் வெற்றியென்று நான் நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  21. @கி. பாரதிதாசன் கவிஞா்

    தங்கள் வருகைக்கும் பாவில் நல்கிய பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  22. @கோமதி அரசு

    தங்கள் வருகைக்கும் கதையை ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் அன்பான நன்றி மேடம்.

    ReplyDelete
  23. @சங்கவி

    தங்கள் வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சங்கவி.

    ReplyDelete
  24. @கிரேஸ்

    வருகைக்கும் கதையை ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  25. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் கதை பற்றியத் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  26. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் நிஜத்தோடு ஒப்பிட்டு இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  27. @கோவை2தில்லி

    வருகைக்கும் கதைபற்றியக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆதி.

    ReplyDelete
  28. @இளமதி

    வருகைக்கும் கதையை விமர்சித்து இட்டக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி.

    ReplyDelete
  29. @Ramani S

    தங்கள் வருகைக்கும் கதைபற்றியக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்கிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் அன்பான நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  30. @நிலாமகள்

    வருகைக்கும் கதையைக் கருத்தூன்றி வாசித்து இட்ட விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  31. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
    திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
    வலைத்தளம்: கீதமஞ்சரி
    http://geethamanjari.blogspot.in/2013/08/blog-post_7.html
    ஆசை
    http://geethamanjari.blogspot.in/2015/04/blog-post_19.html
    அழைப்புமணி
    http://geethamanjari.blogspot.in/2013/04/blog-post.html
    பெரிய மனுஷியாகிவிட்டாளாம்
    http://geethamanjari.blogspot.in/2011/08/blog-post_20.htm
    சிவப்பி
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.