17 February 2012

அகோரத்தின் அங்கீகாரம்


மனவிகாரங்கள் மறைத்துவைக்கப்பட்ட
மனித முகங்களின் மத்தியில்
முகவிகாரம் மறைக்காத மனமொன்று
சங்கமிக்க முனையும்போதெல்லாம்.
சட்டென அடங்கிடும் சலசலப்பு போல்
சங்கடமுண்டாக்குவது வேறெதுவும் இல்லை.


பரிச்சயமற்ற முகங்களின் ஏற்றிய புருவங்கள்
வேற்றுக்கிரகவாசியென விதிர்த்து,
படபடக்கும் பார்வைகளால்
தங்கள் திடுக்கிடலை வெளிக்காட்டுமுன்
தன்னைப் பரிச்சயப்படுத்திக்கொள்ள விழைகிறது
அம்முகம் தன் நேசக்கரம் நீட்டி.

பிறக்கும்போதே கூடப்பிறந்தவையோ,
பின்னாளில் வந்து ஒட்டிக்கொண்டவையோ,
திராவகமோ, எரிதழலோ, வன்மமோ, வசையோ
உருவமழிக்க முனைந்த வக்கிரத்தின் உக்கிரமோ..

அகோர வடுக்கள் பற்றிய அக்கோர யூகங்கள்
இன்னும் அந்நியப்படுத்துகின்றன
அம்முகத்துக்கான அங்கீகாரத்தை!

மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!

பாராமுகங்கள் தந்திரமாகத் திருப்பப்படும்
கடைசி நொடியின் துல்லியத்தில் வலிந்திழுக்கப்படுகின்றன,
சுயசங்கடமற்றதொரு மென்புன்னகையால்!,
தொடர்ந்து வெளிப்படும் சம்பிரதாய நலம்விசாரிப்புகளோ
தவிர்க்கும் பார்வைகளின் தவிப்பை
தாறுமாறாய் வெளிப்படுத்தும் விதமாகவே

37 comments:

  1. முகத்தின் அழகைவிட மனத்தின் அழகன்றோ சிறந்தது. ஆதங்கமும், அர்த்தமும் செறிந்த கவிதை மனதில் நின்றது தோழி. மிக ரசித்தேன்.,,

    ReplyDelete
  2. பாராமுகங்கள் தந்திரமாகத் திருப்பப்படும்
    கடைசி நொடியின் துல்லியத்தில் வலிந்திழுக்கப்படுகின்றன,
    சுயசங்கடமற்றதொரு மென்புன்னகையால்!,

    மிகச்சிறந்த சொல்லாடல்கள் அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  3. Anonymous17/2/12 19:28

    romba superaa irukku akka

    ReplyDelete
  4. Anonymous17/2/12 20:11

    "உருவமழிக்க முனைந்த வக்கிரத்தின் உக்கிரமோ.."

    அமிலவீச்சினால் துடிதுடிக்க அழகு அழிந்த , வாழ்வு இழந்த ,
    பெண்கள் எத்தனையோ ....... ஏன் 'நிறவெறி'
    சில இல்லங்களிலேத் தலை விரித்து ஆடுகிறதே...
    அழகும் , பணமும் தான் இன்றளவும் உலகைக்
    கோலோச்சுகிறது ......

    மனவிகாரங்களை அழகாக வெளிப்படுத்திய உங்கள் கவிதை
    அபாரம் தோழி.

    ReplyDelete
  5. அக அழகு புற அழகு என்றெல்லாம் பேசுவது எளிது. முதலில் ஒருவரை ஈர்ப்பதோ ,தலை திருப்ப வைப்பதோ புற அழகே. இது நடைமுறை நிதர்சனம். மன விகாரங்கள் என்று சொல்வதை விட மனித இயல்பு என்பதெ சரியாகும்.


    மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
    மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!

    இதுவும் இயல்பே.
    இயல்பாகவே முக விகாரங்கள் விலக்கப் படுகின்றன என்பது ஆதங்கமாக வெளியாகி இருக்கிறது.இம்மாதிரி நேரங்களில் நான் கூறுவது என்னவென்றால் “தவிர்க்கப் பட முடியாதவை அனுபவிக்கப் பட்டே ஆக வேண்டும்” அழகான கவிதை பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. இத்தனை அருமையான தெளிவான கவிதைகள் எப்போதாவதுதாம் படிக்கக் கிடைக்கின்றன. படித்து நெகிழ்ந்தேன். மிகவும் ரசித்த வரி:
    //தொடர்ந்து வெளிப்படும் சம்பிரதாய நலம்விசாரிப்புகளோ
    தவிர்க்கும் பார்வைகளின் தவிப்பை
    தாறுமாறாய் வெளிப்படுத்தும் விதமாகவே…//

    ReplyDelete
  7. அருமையான கவிதை.
    பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. பொருளும்,சொல்லாடலும் மிக்க அருமையான கவிதை

    ReplyDelete
  9. எளிமை அதேசமயம் உணர்வுப்பூர்வமான வரிகள். வரிகளில் கசியும் சொற்கள். சொற்கள் வெளிப்படுததும் அகோரத்தின் அவலக்காட்சி..நிறைவான கவிதை. மனதை நெருடுகிறது. இதுபோன்ற இரு காட்சிக்கொடுமைகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். சிலமணிநேரங்கள் துடிக்கத்துடிக்கப் பார்த்த துயரமும் இன்னும் கண்களில் உளள்த்தில் இருக்கின்றது.

    ReplyDelete
  10. நயமாகச் சொன்னீர்கள்..
    நன்று..

    ReplyDelete
  11. துவக்கத்தில் கோர முகம் பார்த்து முகம் சுளிப்பவர்கள் தாம் அதிகம். நிறமும் அழகும் பார்த்தவுடன் நம்மைக் கவருகிறது. ஆனால் பழகிய பின்னர் நாம் கண்டுணரும் அகஅழகு தான் நட்புக்கும் பாசத்துக்கும் அடிப்படையாயிருக்கிறது. பழகிய பிறகு ஒருவர் முகத்திலிருக்கும் குறை நமக்குப் பெரிதாய்த் தெரிவதில்லை.
    ”அகோர வடுக்கள் பற்றிய அக்கோர யூகங்கள்
    இன்னும் அந்நியப்படுத்துகின்றன
    அம்முகத்துக்கான அங்கீகாரத்தை!” என்ற வரிகள் என்னை ஈர்த்தன. உணர்வு பூர்வமான கவிதைக்குப் பாராட்டு கீதா!

    ReplyDelete
  12. முகம் எத்தனை விதமாய் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.

    ReplyDelete
  13. பசப்பு நாடங்கள் காட்டும் சாகச முகங்களின் வடிவங்கள் உங்கள் கவிதைக்குள்ளும் முகம் காட்டுகின்றன.தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அற்புதம் கீதா !

    ReplyDelete
  14. @ கணேஷ்,

    தங்கள் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  15. @ தனசேகரன்,

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  16. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கலை.

    ReplyDelete
  17. @ ஸ்ரவாணி,

    வருகைக்கும் நெகிழ்த்தும் கருத்துரைக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  18. @ G.M Balasubramaniam ஐயா,

    தங்கள் வயதும் அனுபவமும் வாழ்க்கைபற்றிய நிதர்சனத்தை அழகாகக் கற்றுத்தருகின்றன. தங்கள் கருத்துரையில் பொதிந்திருக்கும் உண்மையை மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  19. @ கே. பி. ஜனா

    மனந்திறந்தப் பாராட்டுக்கும் ரசித்த வரிகளைக் குறிப்பிட்டதற்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  20. @ வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  21. @ ஆச்சி,

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹரணி சார். வடுக்களைப் பார்த்ததற்கே வெளிறிப்போய்விட்டேன். காட்சிக்கொடுமையை நினைத்தே பார்க்கமுடியவில்லை. பகீரென்கிறது.

    ReplyDelete
  23. @ guna thamizh

    தங்கள் வருகையும் கருத்துரையும் பெரும் ஊக்கமளிக்கிறது. நன்றி முனைவரே.

    ReplyDelete
  24. @ கலையரசி,

    உண்மைதான். பழகியபின் விகாரங்கள் பெரிதாய்த் தெரிவதில்லை. ஆனால் பழகத் துணிபவர் எத்தனைப் பேர்? நீட்டப்படும் நேசக்கரங்களை உதாசீனப்படுத்தும் உலகையே இக்கவிதையில் காட்ட விழைந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

    ReplyDelete
  25. @ விச்சு,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விச்சு.

    ReplyDelete
  26. @ ஹேமா,

    உங்கள் ரசனைமிகுப் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். நன்றி ஹேமா.

    ReplyDelete
  27. உண்மையை சாட்டையாய் உரைக்கும் கவிதை.
    இம்முகங்களின் நடுவே, நமது முகமும்.... ஏதோ ஒரு மூடியை அணிந்து கொண்டு...ஹ்ம்ம்...

    ReplyDelete
  28. அபுதமானக் கவிதை..

    ///பிறக்கும்போதே கூடப்பிறந்தவையோ,
    பின்னாளில் வந்து ஒட்டிக்கொண்டவையோ,
    திராவகமோ, எரிதழலோ, வன்மமோ, வசையோ…
    உருவமழிக்க முனைந்த வக்கிரத்தின் உக்கிரமோ..///

    எரிமலையா! கடும்பாறை வெடிப்புக் குமுரளா!
    தீப்பிழம்பா! தீதறு வீரனின் கொடுவாளா!
    கவிதையா! கனலா மனதில்பூத்த நெருப்புப்பூவா!

    அற்புதம் சகோதிரியாரே!

    ReplyDelete
  29. மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
    மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!

    யதார்த்தம் இழையோடும் அர்த்தமுள்ள வரிகள் அருமை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  30. @ Shakthiprabha

    தங்கள் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  31. @ தமிழ் விரும்பி ஆலாசியம்

    தங்கள் வருகைக்கும் விரிவானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  32. @ இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  33. வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
    ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

    அன்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  34. "உருவமழிக்க முனைந்த வக்கிரத்தின் உக்கிரமோ.. "

    எதார்த்தத்தின் முள் வெளிகளில் சிக்கித்தவிக்கும் ஒரு வார்த்தை தனக்கான விடுதலை தேடும் வேகம் உங்கள் வரிகளில் இழையோடுகிறது தொடருங்கள் தோழி உங்கள் எழுத்து பயணத்தை
    நேரம் இருப்பின் வலைத்தளம் வாருங்கள்
    பெண் என்னும் புதுமைkovaimusaraladevi.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகிய விமர்சனத்துக்கும் மிகவும் நன்றி. உங்களுடைய வலைப்பூவுக்கு வந்தேனே. அனைத்துப் பரிமாணங்களிலும் வியக்கவைக்கும் படைப்புகள். தொடர்ந்து வருவேன்.

      Delete
  35. @ சம்பத் குமார்,

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தொடர்ந்து எழுதும் ஊக்கம் பெறுகிறேன் உங்கள் வார்த்தைகளால்.

    ReplyDelete
  36. வலைச்சர அறிமுகத்துக்கு என் மனமார்ந்த நன்றி பைங்கிளி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.