![]() |
| 1. நீல நாக்கு அரணை |
எங்கள் தோட்டத்தில் அடிக்கடி காட்சி தருபவை இந்த நீல நாக்கு அரணைகள். சில சமயங்களில் குட்டிகளையும் பார்த்திருக்கிறேன். வீட்டை ஒட்டி நிறைய இண்டு இடுக்குகள் இருப்பதாலும் வீட்டுக்குப் பின்புறம் உள்ள சிறு வாய்க்கால் முழுவதும் காட்டுச்செடிகள் புதராய் மண்டிக்கிடப்பதாலும் இவற்றுக்கு போதிய இரை கிடைக்கிறது போலும். அதனால்தான் இங்கேயே சுற்றிச் சுற்றி வருகின்றன.
![]() |
| 2. தோட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்போது |
சுமார் இரண்டு அடி நீளத்தில் கட்டைகுட்டையான உருவத்துடனும் பாம்பு போன்ற தோலுடனும் நீட்டி நீட்டி உள்ளிழுக்கும் நீல நிற நாக்குடனும் காணப்படும் இவற்றைப் பார்த்து ஆரம்பத்தில் பயந்திருக்கிறேன். ஆனால் இவற்றால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் மாறாக, நத்தைகளையும் புழு பூச்சிகளையும் தின்பதால் இதன் இருப்பு தோட்ட ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது என்றும் தெரியவந்தபோது நீல நாக்கு அரணை மீதான பயம் விலகி பாசமே வந்துவிட்டது.
![]() |
| 3. இரையின் வாசம் பிடிக்கும் நீல நாக்கு அரணை |
எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே இயற்கை தந்த சிறப்பம்சம்தான் அவற்றின் நீல நாக்கு. நீலம் என்றாலே விஷம் என்று நம் மனதில் பதிந்துபோனதால் இவற்றைப் பார்த்தவுடன் விஷ அரணை என்று நினைத்து பயந்து ஒதுங்கிப் போகிறோம். உண்மை என்னவென்றால் இவற்றுக்கு விஷம் கிடையாது. ஆபத்து நெருங்குவதாய் உணர்ந்தால் தற்காப்புக்கான முயற்சியாக வாயை அதிகபட்சமாகத் திறந்து நீல நிற நாக்கை வெளிக்காட்டும். அது மட்டுமல்ல, பாம்பு போல் தலையை உயர்த்தி, பாம்பு போலவே ஸ்ஸ்ஸ் என்று சத்தமாய் இரையும். அதற்கு மேலும் அங்கு ஏதாவது நிற்குமா அல்லது யாராவது நிற்பார்களா? இவ்வளவு எச்சரிக்கைகளையும் மீறி நெருங்கினால் கூர்மையான பற்களால் கடிதான். நீல நாக்கு அரணைகள் விஷமற்றவை என்பதால் காயம் சில நாட்களில் ஆறிவிடுமாம். நமக்கு ஏன் அந்த விஷப் பரிட்சையெல்லாம்? கோட்டைத் தாண்டி நீயும் வராதே, நானும் வரமாட்டேன் என்று டீல் பேசிவிட்டேனாக்கும்.
![]() |
| 4.சட்டென்று பார்த்தால் பாம்போ என எண்ணத் தோன்றும் உடலமைப்பு |
நீலநாக்கு அரணைகள் பாம்புகளைத் தின்னும் என்பது பலருடைய நம்பிக்கை. மாறாக, இவைதான் பாம்புகளுக்கு இரையாகின்றன. என்னதான் பாம்பைப் போல தலையுயர்த்தி எச்சரித்தாலும் பாம்புகளிடம் இவற்றின் பாச்சா பலிப்பதில்லை. பாம்பு மட்டுமல்ல, நாய், பூனை போன்ற விலங்குகளும் கூக்கபரா, கழுகு போன்ற பறவைகளும் இவற்றை எளிதில் வேட்டையாடித் தின்னும். நான் தினமும் நடக்கும் பாதையோரம் ஒருநாள் இறந்துகிடந்த நீல நாக்கு அரணையைப் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்தினம்தான் ஒரு பூனை அதே இடத்தில் வெகுநேரமாய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.
![]() |
| 5. நீல நாக்கு அரணை |
நீல நாக்கு அரணைகளும் பாம்பு, உடும்பு போன்றவற்றைப் போல் தங்கள் நாக்கை நீட்டி நீட்டி உள்ளிழுக்கும். காரணம் என்ன தெரியுமா? காற்றில் கலந்திருக்கும் வாசனை மூலக்கூறுகளை சேகரித்து வாய்க்குள் இருக்கும் உணர் உறுப்புக்குச் செலுத்துவதன் மூலம் தங்கள் இரை இருக்குமிடத்தைக் கண்டறிகின்றன. நீல நாக்கு அரணை ஒரு அனைத்துண்ணி. பூச்சி, நத்தை, தவளை, சிறிய பறவைகள், மற்ற சிறிய ஊர்வன, இறந்துபோன விலங்குகள், பழங்கள், இலைகள் என அனைத்தையும் தின்னும். பகல் முழுவதும் இரைதேடும். இரவில் தூங்கி ஓய்வெடுக்கும்.
![]() |
| 6. தொட்டிச் செடிகளுக்கு மத்தியில் |
நீல நாக்கு அரணைகள் ஆஸ்திரேலியாவிலும் இந்தோனேஷியா, பப்புவா நியூகினி தீவுகளிலும் காணப்படும் தனித்துவமிக்க ஊர்வனவாகும். ஆஸ்திரேலியாவில் ஏழு வகையான நீல நாக்கு அரணைகள் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியர்கள் இவற்றைச் செல்லமாய் Blueys என்கிறார்கள். எங்கள் தோட்டத்தில் வளைய வருபவை கிழக்குப்பகுதி நீலநாக்கு அரணைகள் (Eastern blue-tongue lizards/ Eastern blue-tongue skinks)
| 7. தண்ணீர்த்தொட்டிக்கும் சுவருக்கும் இடையில் |
நீல நாக்கு அரணைகள் கூச்ச சுபாவிகள் என்பதால் அவ்வளவு எளிதில் நம் முன் வாரா. எனினும் தோட்டத்துக்குப் போகும்போது பெரும்பாலும் கையில் மொபைல் இருப்பதால் சட்டென்று இவற்றைப் படம்பிடிக்க முடிகிறது. கேமராவில் ஒரு நல்ல ஒளிப்படம் என்றாவது சிக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.
| 8. நீல நாக்கு அரணைக் குட்டி வெயில் காய்கிறது |
நீல நாக்கு அரணை முட்டையிடாது. குட்டிதான் போடும். ஒரு ஈட்டுக்கு 20 குட்டிகள் வரை போடும். நீல நாக்கு அரணை இனத்திலேயே அதிக குட்டிகள் போடுவது கிழக்குப்பகுதி நீல நாக்கு அரணைதான். இவற்றின் ஆயுட்காலம் 20 முதல் 30 வருடங்கள். நன்கு வளர்ந்த நீல நாக்கு அரணையின் எடை சுமார் ஒரு கிலோ வரை இருக்குமாம்.
நீல நாக்கு அரணைகள் பலவும் அவற்றின் வித்தியாசமான உடல் அமைப்பாலும் நீல நாக்கின் வசீகரத்தாலும் சில நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவுக்குள் இவற்றை வளர்ப்பதற்கு முறையான உரிமம் பெற்றிருத்தல் அவசியம். கள்ளச்சந்தையில் ஒரு நீல நாக்கு அரணையின் மதிப்பு சுமார் நான்காயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் இரண்டேகால் லட்ச ரூபாய்) என்பதால் இவை ஆஸ்திரேலியாவிலிருந்து பிற நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. பல முயற்சிகள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன என்றபோதும் கடத்தல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது வருத்தமளிக்கும் தகவல்.
| 9. நீல நாக்கு அரணைக்குட்டி |




















