8 July 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 9

போர்க்களத்தில் வெற்றியை எதிர்நோக்கியபடி பாசறை அமைத்துத் தங்கியுள்ள   அரசனின் நிலையை அறிவோம் வாருங்கள்!

………………………..மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரள
களிறுகளம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும நுடங்கித்
தெற்குஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் (168- 177)



போர்க்களத்தில் பயமறியாது
தீரத்துடன் திடம் குலையாது
எதிர்த்து வந்த களிறுகளின்
துதிக்கையினைத் துண்டித்து
வீழ்த்திய மாவீரர் பெற்ற
விழுப்புண்ணைக் கண்ணுற்றறிய
பாசமிகு வேந்தனவன்
பாசறைவிட்டு வெளிவந்து....

வாடைக்காற்று வீசுந்தோறும்
ஆடித்தெற்கே மிகுந்து நலியும்
பருத்த சுடர் ஒளிரும் பாண்டிலெனும்
பலகால் விளக்கின் ஒளியில்....

வேப்பந்தழையினைத் தலையிற்தாங்கிய
வேலின் வலியகாம்பினைக் கையிற்தாங்கிய
வீரனொருவன் முன்னே செல்ல
வேந்தனவன் பின்னே செல்ல.....

மணிபுறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப,
புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கண் காளை
கவல்மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ  தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. (178 -188)



சேற்றுத் தெருவில் நிற்கும்
சேணமும் கடிவாளமும்
இன்னமும் களையப்படாத
மின்னலெனப் பாயும் செருக்குமிகு
போர்க்குதிரைகள் தம்மேல்
சிதறிய மழைத்துளிகளை மயிர்
சிலிர்ப்பித் தெறிக்க.....


இடத்தோள் நழுவிய ஆடையை
இடத்திலே பொருத்தி,
வாளேந்திய வல்வீரனின்
தோளேந்தி நின்றபடி
நலிந்த வீரர்களின் புண்களை
மலர்ந்த புன்னகையால் ஆற்றி……

வான் உதிர்த்த முத்துக்களை
வெண்முத்துச் சரங்கொண்ட
வெண்கொற்றக்குடை தடுக்க....
 நள்ளிரவிலும் உறக்கமின்றி,
பள்ளியதன் நினைவுமின்றி,
உற்ற வீரர்தம் நலனன்றி
மற்ற சிந்தனை ஏதுமின்றி
சிலவீரரைத் துணைகொண்டு
உலவுதற்குக் காரணமான....


வேந்தர் பலரோடும்
வேறுபட்ட திறத்தாலும்
மூண்ட பகையாலும்
முரண்பட்ட மனத்தாலும்
நீடிக்கும் போர்த்தன்மையாலே
நீடிக்கும் பாசறைத்தொழிலாம்!

(நெடுநல்வாடை முற்றிற்று)

************************************************* 
என்னோடு பயணித்து நெடுநல்வாடையை நுகர்ந்து மகிழ்ந்த அனைவருக்கும் என் அன்பான நன்றி.



படங்கள் நன்றி: இணையம்


3 July 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 8

தலைவனைப் பிரிந்து தனிமைத் துயரில் வாடும் தலைவியின் துயர் நீக்கவும் துயிலுண்டாக்கவும் தோழியரும் செவிலியரும் படும்பாட்டை எடுத்தியம்பும் வரிகள்...

தளிர்ஏர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென்தோள் முகிழ்முலை
வம்பு  விசித்து யாத்த, வாங்குசாய் நுசுப்பின்
மெல்இயல் மகளிர் நல்அடி வருட;
நரை விராவுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன் துணையோர்’ என
உகத்தவை மொழியவும் (148- 156)



தளிரெனப் பொலிவுடன் மிளிரும் 
தேகமதில் பொலியும் தேமலையும்
ஓங்கிச் செழித்து வளர்ந்த
மூங்கிலெனத் திரண்ட தோள்களையும்
பங்கமிலாக் கச்சையுள் அடங்கிடும்
பங்கய மொட்டுப்போலும் தனங்களையும்
தாங்கி வரும் மெல்லிடையை
ஏந்திவரும் மென்னியல் மகளிர்,
தலைவியின் மென்பாதங்கள் வருடி
துயிலுண்டாக்கப் பெரிதும் முனைய.....

பிரியமான கணவனின்
பிரிவுத் துயர் பொறுக்காத
பிரியமகளின் துயர் பொறுக்காத
நறுமணமிகுந்த நரைமயிர்க்கொண்ட
பொறுமைமிகுந்த வளர்ப்புத்தாய்மார் கூடி
திறம்பட பல உரைத்தும் திரித்தும்
இப்போதே வருவார் அவர் என்றும்
இனிதே அவள் மனம் மகிழப்  பகன்றும்
தேற்றுதல் பல புரிந்தும்
ஆற்றாது கலங்கியவளாய்.....


…………………..ஒல்லாள்,மிகக் கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோன்நிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய கால்திருத்திப்
புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுஉயிரா
மாஇதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சோத்திச் சில தெறியாப்
புலம்பொடு வதியும்  நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல்தந்து
இன்னே முடிகதில் அம்ம (156 – 168)                 

சாதிலிங்கச் சாந்து பூசி
சின்ன மரக்குடங்களேந்தி
திண்மையான கட்டிலோடு
வன்மையாய்ப் பொருந்திய கால்கள்
அழகுபடத் தாங்கிநின்ற
மெழுகுபூசிய மேல்விதானத்தின்
திரைச்சீலைதனிலே திருத்தமாய்
வரையப்பட்ட ஓவியம் கண்டாள்.




மேடராசியோடு மட்டுமல்லாது
மற்றைய ராசிகளோடும் சுற்றித்
திரியும் கதிரவனைப் போலல்லாது
திகழும் சிறப்புடை சந்திரனாம் 
உற்றவன் அவனைப் பிரியாது
உலவும் உரோகிணி போலல்லாது
கொற்றவனைத் தான்பிரிந்திருக்கும்
கொடுநிலை நினையச் சகியாது
தனிமைத் துயராலே தான் வருந்தி
குவளை மலர்போலும் விழியோரம்
கசியும் கண்ணீர்த் துளிகள்தம்மை 
சுண்டித் தெறித்தாள் தன் செவ்விரலாலே.



அன்புநிறை இப்பெண்ணுள்ளம்
இன்னல் களையும் வண்ணம்
மின்னலெனப் போர்முடித்து எம்
மன்னனுக்கு வெற்றியைத் தந்து
மகிழ்விப்பாய் எம்மை இன்றேயென்று
பெற்றவர்க்கு நிகர் செவிலியர்,
பற்றுதல் மிக்கப் பாசத்தோடு
கொற்றவனின் வரவு வேண்டி
கொற்றவையை வேண்டி நின்றார்....

******************************************************
அடுத்த பகுதியுடன் நெடுநல்வாடை நிறைவுறும். 
(படங்கள் உதவி: இணையம்)

27 June 2013

அது ஒரு பொற்காலம்



 கல்லும் உளியும் கணீர் கணீரென்று
காதலால் மோதிக் கலந்திருந்ததொரு காலம்.
தேர்ந்த சிற்பிகள் பலரும் சேர்ந்து நிறைந்திருந்த
சிற்பக்கூடத்தின் சீர்மிகுப் பொற்காலம்!

வளையாத கரங்களுக்கும் வசப்பட்டது
கலையெழில் மிக்க சிலையழகு.
கண்ணால் பார்த்துக் கற்றுக்கொண்டன புதுக்கரங்கள்.
கைப்பிடித்துப் பழக்கிவிட்டன முதுக்கரங்கள்.

வேடிக்கை பார்க்கவந்த வெற்றுக்கரங்கள் சிலவும்
கற்றுக்கொண்டன கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலையை
கண்டுபிடித்து  வெளிக்கொணரும் கலையை!

நுட்பமும் நுணுக்கமும் மேவிய கரங்கள்
படைத்த சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன,
மூளி, முடமென முடக்கப்பட்டவையும்
புனருத்தாரணம் அளிக்கப்பட்டு புதுவாழ்வு பெற்றன.

அயர்ச்சியோ தளர்ச்சியோ….
அளவிலாப் பணிகளின் சுழற்சியோ….
ஒத்திசைத்து ஒலித்திருந்த உளிகள்
அத்தனையும் அதிரடியாய் ஓய்வு கொள்ள...
அரவமற்றக் கூடத்தில் ஆங்காங்கே ஒலிக்கின்றன,
ஒன்றிரண்டு உளிகள்!

இவையும் நாளை ஓய்ந்துபோகலாம்,
இயக்கம் முற்றிலும் நின்றுபோகலாம்.

 உளிகளின் ஓசை நின்றுபோனாலும்
உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்
படைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று
மெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்...


18 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 7


ஒப்பனை மிகுந்த கட்டிலின்மேலே ஒப்பனையில்லா ஓவியமாய்த் திகழும் தலைவியைக் காண்போம், வாருங்கள். 
 
நெடுநல்வாடைப் பாடல்
மடைமாண் நுண்இழை பொலிய தொடைமாடன்
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பல்மயிர் விரைஇ, வயமான்
வேட்டம் பொறித்து வியன்கண் கானத்து
முல்லைப் பல்போது உறழப் பூரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய்அணை இட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூமடி விரிந்த சேக்கை (124-135)

 

பள்ளியறைக் கட்டிலின் மேலே
துல்லியமாய்ப் பொருத்தப்பட்ட
வல்லிய மூட்டுவாய் மூலம்
மெல்லிய நூலிழை தன்னில்
தேர்ந்தெடுத்த முத்துக்களைக்
கோத்தெடுத்து மாலையாக்கி
பார்த்தோர் வியக்கும்வண்ணம்
பல்வரிசையாய் அலங்கரித்து
சாளரமெனவே சரம்சரமாய்ப்
பேரழகுடனே தொங்கவிட்டு....
 

 
புலியின் வரிகளின் வண்ணம் போன்ற
புதுமலர்களாலான பூந்தட்டைப்போன்று
ஒளிரும்  தகடுகளை ஒருசேரக் கொண்டு
வெளிப்புறம் பதித்த கட்டிலின் மேலே
பல்லுயிர்  உருவிய உரோமம் கொண்டு
பல்வண்ண உருவ விரிப்பு நெய்து
வேட்டையாடும் சிங்கம் போ
வீரமிகு செயல்கள் பலவும் பொறித்து…. 
 

காட்டுமுல்லைப் பூக்களோடு
தோட்டமளித்தப் பூக்களையும்
கட்டிலினின்மேலே இறைத்து,
பட்டினும் மெல்லியதாய்
மென்போர்வை மேலே விரித்து
முன்னிலும் சிறப்புறச் செய்திடவே
 

 
பெண் அன்னப் பேடுதன்னை
பேருவகையோடு புணர்ந்ததான
வெண் அன்னச் சேவலுதிர்த்த
மென்சூட்டு இறகுகளடைத்த
மென் திண்டு மெத்தைகளிரண்டு,
பஞ்சிட்ட தலையணையோடு
பஞ்சுபோலும் பூவிதழ்கள்போலே
கஞ்சிட்டு வெளுத்த விரிப்பு,
பஞ்சணை போர்த்தி நின்று
நெஞ்சத்தை அள்ளும்வண்ணம்
மஞ்சத்தை அலங்கரிக்க..... 

ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி
நெடுநீர் வார்குழை களைந்தென, குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து
வாளைப்  பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்   (136 – 147)
 
தலைவனைப் பிரிந்து வாடும்
தலைவியின் நிலையைப் பாரும்! 


 
முத்தாரமும் இன்னபிறவும்
கொத்தாகத் தழுவியிருந்து
அழகுபடுத்திய அவள் மார்பகத்தே
தாலியொன்றே தனித்துத் தொங்க..... 

கலைந்துவீழும் கேசமும்
கவனிப்பின்றி காற்றிலலைய.... 


அலங்கார நெடுங்கம்மல்
ஆடல்புரிந்திருந்த செவித்துளையில்
அளவிற்சிறிய தாளுருவியெனும்
குறுங்கம்மல் குடியிருக்க..... 

 


பொலிவுறு பொன்வளை போக்கி
வலம்புரி வளையும் காப்பும்
வடிவுடைக்கரத்தை நிறைத்திருக்க.... 
 


வாளைமீன் வாய்பிளந்தாற்போல
வளைந்திருக்கும் நெளிமோதிரத்தை
முன்னர் அணிந்திருந்த சிவந்த விரலில்
சின்னஞ்சிறிய மோதிரம் இருக்க...... 

பூம்பட்டாடையுடுத்தி பூரித்த இடையின்று
நூலாடை தரித்து நூலாய் நைந்திருக்க.... 
 

வண்ணம் தீட்டா வடிவம் போல்
ஒப்பனையில்லா ஓவியம் போல்
ஓய்ந்துகிடந்தாள் தலைவியவள்
ஒப்பனை மிகுந்த கட்டிலின் மேல்!
***********************************
படங்கள் நன்றி: இணையம்