23 March 2026

டிங்கோ கொலைகள் (2)

டிங்கோக்கள் தங்களை விட உருவில் பெரிய விலங்குகளை வேட்டையாடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனிதர்களைக் கொல்லுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. பூர்வகுடி மக்களை டிங்கோக்கள் தாக்கியதாக இதுவரை எங்குமே பதிவாகவில்லை. காரணம் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையும் டிங்கோக்களின் வாழ்க்கையும் இணைகோடுகளாகவே பயணித்தனவே தவிர எந்தப் புள்ளியிலும் ஒன்றோடொன்று குறுக்கிடவில்லை.  

1. (G)கர்ரி தீவின் டிங்கோக்கள்

ஐரோப்பியக் குடியேற்றத்திற்குப் பிறகுதான் டிங்கோக்கள் மனிதர்களைத் தாக்கிய சம்பவங்கள் அங்கும் இங்குமாக அரங்கேறத் தொடங்கின. ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைமுறையும் டிங்கோக்களை அவர்கள் அணுகிய விதமும்தான் முக்கியக் காரணங்கள் எனலாம். 

டிங்கோக்களின் வாழ் எல்லைக்குள் அவர்களை அறியாமலேயே மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை விரிவுபடுத்தினார்கள் அல்லது உணவு எளிதாகக் கிடைப்பதால் டிங்கோக்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவத் தொடங்கின அல்லது இரண்டுமே எனலாம். 

ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் ஒன்றறக் கலந்தவை trekking, hiking, sailing போன்ற வெளிப்புற நடவடிக்கைகள். தனியாகவோ, இணையாகவோ, குழுவாகவோ, குடும்பமாகவோ  காடு, மலை, கடற்கரை, சமவெளி என ஏதாவதொரு இயற்கையான சூழலில் கூடாரம் அமைத்து முகாமிட்டு (Camping)  சில நாட்கள் தங்கியிருந்து தங்களைப் புதுப்பித்துத் திரும்புவது அவர்களது வழக்கம். முன்னேற்பாடாக அவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களைக் கையோடு கொண்டுசெல்வதும், அந்தப் பகுதியில், இயற்கைச்சூழலில்  வசிக்கும் டிங்கோக்களை நட்பாக்கிக் கொள்ள அவற்றுக்கு உணவளிப்பதும் டிங்கோக்களின் குணத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கின.

2001-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறைக்காலத்தின்போது (G)கர்ரி தீவைத் தெரிவு செய்து மகிழ்வோடு சுற்றுலா சென்றிருந்தது குவீன்ஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம். ஒன்பது வயது சிறுவன் க்ளின்டன் கேஜூம் அவனுடைய ஏழு வயது தம்பியும் தாங்கள் முகாமிட்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் கடற்கரையோர மணல் மேடுகளில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு டிங்கோக்கள் சிறுவர்களைத் தாக்கத் தொடங்கின. 

2. டிங்கோவால் உயிரிழந்த சிறுவன் க்ளின்டன் கேஜ்

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டுப் பெற்றோர் ஓடிவந்து காப்பாற்றுவதற்குள் க்ளின்டன் கேஜ் இரத்தவெள்ளத்தில் கிடந்தான். அவனைக் காப்பாற்றுவது சாத்தியமற்றுப் போனது. கை கால்களில் பலத்த கடிவாங்கியிருந்த அவனது தம்பி ஹெலிகாப்டர் மூலம் குவீன்ஸ்லாந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டான். அந்த இரண்டு டிங்கோக்களும் அரசு உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டன.

(G)கர்ரி தீவில் டிங்கோக்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடைபெற்றாலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவனின் மரணம்தான் டிங்கோக்களால் ஏற்பட்ட கடைசி மரணமாக இருந்தது, பைப்பர் ஜேம்ஸின் மரணம் வரையிலும். 

3. டிங்கோ, செந்நாய் & ஓநாய் ஒப்பீடு

டிங்கோக்களும் ஓநாய்களையும் செந்நாய்களையும் போன்ற காட்டு விலங்குகளே. செந்நாய்களையும் ஓநாய்களையும் பார்த்தால் எப்படி மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருப்போமோஅப்படிதான் டிங்கோக்களிடமும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டும். நாய்தானே என்ற அலட்சியத்தினாலேதான் பல ஆபத்துகள் நிகழ்கின்றன. 

4. கர்ரி தீவின் எச்சரிக்கை அறிவிப்பு
இயல் வாழிடத்தில் காட்டு விலங்குகளுக்கே உரிய மூர்க்கத்தோடும் வேட்டையாடும் இயல்போடும் வாழும் டிங்கோக்களிடமிருந்து எச்சரிக்கையாக விலகியே இருக்குமாறும் டிங்கோக்களை ஈர்க்கும் எந்தச் செயலிலும் ஈடுபடாதிருக்குமாறும் (G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் எப்போதும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

  • தனியாகப் போகாதீர்கள்.  குழுவாகச் செல்லுங்கள்.  தற்காப்புக்காக எப்போதும் கையில் ஒரு குச்சியை வைத்திருங்கள். 

  • குழந்தைகளை எப்போதும் கையெட்டும் தொலைவிலேயே வைத்திருங்கள். ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தைகளை எல்லா நேரமும் கண்காணித்துக்கொண்டே இருங்கள்.

  • டிங்கோக்களுக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ  உணவளிக்காதீர்கள். 

  • ஓடாதீர்கள் (உடற்பயிற்சிக்காக என்றாலுமே). ஓடுவது டிங்கோக்களின் கவனத்தை ஈர்த்து அவை துரத்த ஆரம்பிக்கலாம். ஓடினால் துரத்துவது என்பது பொதுவாகவே நாய்களின் இயல்பு. கூட்டமாய் வேட்டையாடும் காட்டுநாய்களுக்குச் சொல்ல வேண்டுமா?
  •    
  • கம்பிவேலியிடப்பட்ட பகுதிக்குள்ளேயே முகாம் இடுங்கள்.  உணவு உண்ணுங்கள். மிச்சமீதி உணவுகளை அப்படியே விட்டுச் செல்லாதீர்கள். 

  • கம்பிவேலிக்கு வெளியில் கூடாரம் அமைத்து முகாமிட்டிருப்பவர்கள் தாங்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களைக் கண்ட இடத்தில் போட்டுவைக்காமல், அவற்றின் வாசம் பரவாமல் தகுந்த பாத்திரங்களில் அல்லது பாதுகாப்பான உணவுப் பெட்டியில் பத்திரப்படுத்துங்கள். 

  • உண்ட பிறகான உணவுமீதங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள்.  


தூண்டிலிட்டு மீன்பிடிப்பவர்கள் கூட ஒருவராகச் செல்லாமல் இருவராகச் செல்வதே அத்தீவின் வழக்கம். காரணம், ஒருவர் தூண்டிலில் கவனத்தைக் குவித்திருக்கும்போது, ஏற்கனவே பிடித்துவைத்திருக்கும் மீன்களை டிங்கோக்கள் திருட்டுத்தனமாகவோ, முரட்டுத்தனமாகவோ கவ்விக்கொண்டு செல்வது அங்கு வழக்கமான நடக்கும் விஷயம் என்கிறார்கள்.

5. டிங்கோ 

டிங்கோக்களுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் அவற்றால் உண்ணக்கூடிய எல்லாமே உணவுதான். முக்கியமாக காட்டுவிலங்குகள். அவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் பழக்கப்படாதவை. எந்த ஆணைகளுக்கும் உடன்படாதவை. 

உணவுக்காக டிங்கோக்கள் மனிதர்களின் முகாம்களைச் சுற்றிவரத் தொடங்கின.  உணவு கிடைக்காதபோது மனிதர்களைத் தாக்கவும் துணிந்தன.  கூடாரங்களைத் தங்களுடைய கூரிய பற்களால் கிழித்து உள்ளே புகுந்து கிடைப்பதைக் கவ்விச் செல்லவும் அவை தயங்குவதில்லை, அது பச்சிளம்சிசுவாக இருந்தாலும். ஆம். அப்படியொரு சம்பவம் 1980-ஆம் ஆண்டு நடைபெற்றது. டிங்கோக்களை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்திய அதிபயங்கர சம்பவம் அது.  

நினைத்தாலே நெஞ்சு பதறும் அச்சம்பவம் பற்றி விரிவாக அடுத்தப் பதிவில்.

தொடரும்...

(படங்கள் உதவி Pixabay)


No comments:

Post a Comment

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.