![]() |
| 1. தோட்டத்தின் புதுவரவு |
இது என்ன தெரிகிறதா? ஏதேனும் யூகிக்க முடிகிறதா? தோட்டத்தின் புதுவரவான இதைப் பற்றிதான் இந்தப் பதிவு.
| 2. இறந்த உடலில் முட்டையிடும் பச்சை ஈ |
நேற்று காலையில் தோட்டத்துப் பக்கம் போனால் எங்களுடைய குட்டி மாமரத்தின் கீழே நிறைய ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. திடீரென்று எப்படி இவ்வளவு ஈக்கள்? அதுவும் ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றனவே என்று யோசித்தேன். பெரும்பாலும் கறி, மீன் கழுவிய தண்ணீரை மாமரத்துக்கு ஊற்றும் நாளில் இதுபோல் ஈ மொய்ப்பது உண்டு. அண்மையில் அதுபோல் எதையும் ஊற்றவில்லை.
![]() |
| 3. குட்டி மாமரத்தில் பெரிய மாங்காய்கள் |
சரி, என்னவென்று பார்ப்போம் என்று அருகில் போனால், ஒரே துர்நாற்றம். பூனைகள் மறுபடி அட்டகாசத்தைத் தொடங்கிவிட்டனவா என்று ஆயாசமாக இருந்தது.
![]() |
| 4. தோட்டத்துக்கு வரும் கருஞ்சாம்பல் பூனை |
| 5. தோட்டத்துக்கு வரும் பழுப்புப் பூனை |
முன்பெல்லாம் அடிக்கடி பூனைகள் வந்து தோட்டத்தில் ஆய் போய்வைத்துவிடும். நம்ம ஊர் பூனைகள் மாதிரி மண்ணைப் போட்டு மூடுவதெல்லாம் கிடையாது. மண்ணைக் குவித்து அதன் மேல்தான் போயிருக்கும். காலையில் தோட்டத்துக்குள் நுழையும்போதே நாற்றம் குடலைப் பிடுங்கும். சுத்தப்படுத்துவதற்குள் தலைவலியே வந்துவிடும். ஒருவழியாக, அதற்கு தீர்வு கண்டுபிடித்து பூனைகள் தோட்டத்துக்குள் வரக்கூடிய வழிகளையெல்லாம் வலைத்தடுப்பு வைத்துத் தடுத்த பிறகு அந்தப் பிரச்சனையில்லை.
![]() |
| 6. உலர்ந்து அழுகிய பூ மாதிரியான தோற்றம் |
பிறகு எப்படி இப்படியொரு துர்நாற்றம்? சுண்டெலி, பெருச்சாளி ஏதாவது செத்துக் கிடக்கிறதா? என்றும் பார்த்தேன். எதுவும் அகப்படவில்லை. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும்போது வித்தியாசமாக பூ போல ஒன்றைப் பார்த்தேன். அழுகிய பூ மாதிரியும் இருந்தது. பறவையோ வௌவாலோ டிராகன் பழம் போன்ற எதையோ குடைந்து தின்றுவிட்டுத் தோலை வீசியிருப்பது போலவும் இருந்தது.
![]() |
| 7. புனல் போல் நீண்ட காம்புடன் |
எதற்கும் இருக்கட்டும் என்று மொபைலில் படம் பிடித்துக்கொண்டு வந்து கூகுளில் தேடினேன். என்ன ஆச்சர்யம்! இது ஒரு பூஞ்சைக் காளானாம். இதன் அறிவியல் பெயர் Aseroe rubra. லத்தீன் மொழியில் ‘அருவருப்பான செந்நிற திரவம்’ என்று பொருள்.
ஆங்கிலத்தில் Anemone stinkhorn, Sea anemone fungus, Starfish fungus என்று பல பெயர்கள் உண்டு. தோட்டத்தில் வீசிய துர்நாற்றத்துக்கு இதுவே காரணம் என்று தெரிந்தபோது மிகவும் வியப்பாக இருந்தது. இந்தக் காளானின் மேற்பரப்பில் இருக்கும் சளி மாதிரியான கொழகொழப்பான திரவம்தான் அழுகிய இறைச்சி அல்லது மலக்கழிவு போன்ற துர்நாற்றத்தை உருவாக்கி ஈக்களை ஈர்க்கிறதாம். ஈக்கள் மூலம் ஸ்போர்கள் (spores) பரவுகின்றனவாம்.
![]() |
| 8. நீண்ட தண்டின் உச்சியில் விரிந்திருக்கும் காளான் |
இதுவரை பார்த்திராத இந்தக் காளானைப் பற்றி இணையத்தில் தேடியபோது பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. இந்த துர்நாற்றக் காளானின் பூர்வீக நாடுகள் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும். இங்கிருந்து இவை தோட்ட மண் மூலம் அறிந்தோ அறியாமலோ உலகின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருக்கின்றன. நியூசிலாந்தின் பூர்வகுடிகளான மாவோரிகள் இளம் காளான்களை அறுவடை செய்து சமைத்து உண்பார்களாம். ஆனால் இதன் நச்சுத்தன்மையை நீக்கவேண்டும் என்றால் அதிகநேரம் சமைக்க வேண்டுமாம்.
![]() |
| 9. குட்டி முட்டை போல் காளான் மொட்டுகள் |
இன்று காலையில் பார்த்தால் இன்னொன்று புத்தம்புதிதாய்... பழைய காளானின் பக்கத்திலேயே. கூடவே முட்டை முட்டையாக மண்ணுக்குள் இருந்து தலைநீட்டுகின்றன காளான் மொட்டுக்கள்.
இதற்கு முன்பு தோட்டத்தில் இன்னும் சில விசித்திரமான காளான்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பற்றியும் எழுத வேண்டும்.
இன்னும் என்னென்ன அற்புதங்களை உள்ளடக்கியிருக்கிறதோ இந்த இயற்கை!




.jpeg)
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment
என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...
வணக்கம். வருகைக்கு நன்றி.