14 January 2026

கம்பராமாயணக் காட்சிகள் (Glimpses of Kamba Ramayanam)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 

மற்றும் 

பொங்கல் வாழ்த்துகள்! 

2026-ஆம் ஆண்டின் முதல் பதிவே கன்னல் சுவையினும் இனிய கவிச்சுவையாம் கம்ப ராமாயணம் என்னும் இன்தமிழ்க் காப்பியம் சார்ந்து இருப்பது மகிழ்வளிக்கிறது. சிட்னியில் வசிக்கும் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள் எழுதியுள்ள 'Glimpses of Kamba Ramayanam' நூலுக்கான விமர்சனத்துடன் இவ்வாண்டின் பதிவுகளை இனிதே தொடங்குகிறேன்.



யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை – பாரதி

கம்பராமாயணத்தை இயற்றப் புகுமுன், என்னதான் தன்னை, பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனையாய்த் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும், கம்பனின் கவி மேதைமையையும் தண்ணிகரில்லாத் தமிழ்ப்புலமையையும் ஐயமின்றி ஆராதிப்பவர்கள் நாம். கம்பராமாயணத்தின் காவியத்திறத்தை காலந்தோறும் போற்றிப் புகழ்பவர்கள் நாம்.

பன்மொழி அறிஞரும் தமிழ்த்திறனாய்வாளருமான வ.வே.சு.ஐயர் இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1917-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை’ என்னும் நூலில்,

“நமது முன்னோர் கம்பனுக்கு ‘கவிச்சக்கரவர்த்தி’ என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சி அல்ல: அது உண்மை உரைத்தலே ஆகும். கவிதா லோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான்! மேல் நாட்டாருக்குள் கவிச் சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மொலியேர், கதே ஆகிய இவர்கள், கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதான் இருக்கிறார்களே ஒழிய, அவனை மீறவில்லை. நமது நாட்டிலும் கச்சியப்பர், இளங்கோவடிகள், சாத்தனார், நன்னைய பட்டன், சந்த பட்டன், துளசிதாஸர், காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும், தராசு முனை கம்பன் பக்கம்தான் சாயுமேயொழிய, அவர்கள் பக்கம் சாயாது.” என்கிறார்.


அது மட்டுமா? வியாசனையும் வால்மீகியையும் கூட ஒப்பீட்டுக்கு அழைக்கிறார். “வியாஸ பாரதம் ஒரு சம்ஹிதை (வேத மந்திரங்களின் தொகுப்பு) என்பதால் அதையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல, கவிதாரீதியாக மாத்திரம் ஒப்பிட்டுப் பார்த்தால் கம்ப ராமாயணம் வியாஸ பாரதத்துக்குச் சமமாகவாவது இருக்குமே தவிர எள்ளளவு கூடத் தாழாது” என்றும் “கவிகளில் ஆதியானவரும், ராமாயணத்துக்கே முதல் நூலாசிரியரும், கம்பனாலாயே தன்னால் ஏணி வைத்துப் பார்த்தாலும் எட்டமுடியாதவர் என்று கூறப்பட்டவருமான வால்மீகி முனிவரின் கவிதா சாமர்த்தியத்தை கம்பனுடைய சாமர்த்தியத்தினும் மேலானது என்று சொல்ல வேண்டாமா என்ற கேள்வி பிறக்கும். ஆனால் இரண்டு காவியங்களையும் பாரபட்சமில்லாமல் சிரத்தையொடும் பொறுமையோடும் படித்துப் பார்த்தால் வழி நூலானது முதனூலை வென்றுவிட்டது என்று சொல்லவேண்டியதாய் இருக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்.  

இங்ஙனம் உலக மகாக் கவிஞர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தமிழன்னையின் தவப்புதல்வனாம் கவிச்சக்கரவர்த்தி கம்பனை தமிழென்னும் மொழி வரையறைக்குள் வைத்து நமக்கு நாமே சிலாகித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

தமிழ் அறியாதோரிடத்தும் கம்பனின் காவியத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்திடும் முகமாகவும், அயல்மொழி அறிந்தோரும் கம்பராமாயணம் என்னும் அருந்தமிழ்க் காப்பியத்தின் சுவையைக் குறைவிலாது ரசித்து இன்புறும் வண்ணமும், ஆங்கிலவழிக் கல்வி பயின்ற தமிழ் மக்களின் அடுத்தச் சந்ததியினர் கம்பனின் ஆழ்ந்த தமிழ்ப்புலமை கண்டு அதிசயித்துக் கொண்டாடும் பொருட்டும் ஆவன செய்திருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள். பிரத்தியேகச் சிரத்தை எடுத்து ஆங்கிலம் வழியே தமிழ்ப் பாக்களை எளிதாய்ப் புரிந்துகொள்ள வழி செய்துள்ள நூலாசிரியர் இந்நூலை எழுதியதன் மூலம் அந்த சீரிய பணியைச் சிறப்புறச் செய்து முடித்திருக்கிறார். கம்ப ராமாயணப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதுமாறு அவரை ஊக்குவித்த அவருடைய பிள்ளைகட்கு நமது நன்றி என்றென்றும் உரித்தாகுக!

கம்பராமாயணத்தின் செய்யுட் பாடல்களைப் புரிந்து ரசிக்க எல்லாராலும் இயல்வதில்லை. ஆர்வம் மேலிட, பயில முனைந்தாலும் காலம் கைகூடுவதில்லை. ஓய்ந்து உட்காரவும் நேரமின்றி துரிதகதியில் ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் முழு காவியத்தையும் வாசித்து ஆய்ந்து விளங்கிக்கொள்வதற்கான நேரமோ பொறுமையோ பலருக்கும் அமைவதில்லை. தமிழின்பால் தாளாத மையலுடனும் கம்பராமாயணத்தை வாசித்து இன்புற இயலவில்லையே என்னும் ஆதங்கத்துடனும் எட்ட நின்று ஏங்கியவர்களைக் கைப்பிடித்து அழைத்துவந்து அற்புதமான காப்பிய விருந்து படைத்திருக்கிறார் முனைவர் அவர்கள்.

கரும்பு தின்னக் கூலியா? என்பார்கள். இவரோ கரும்பை மென்று துப்பும் வேலையைக்கூட வாசகர்க்குத் தரவில்லை. கரும்பினைப் பிழிந்து சாறெடுத்து, வடிகட்டி, அவ்வினிய சாற்றைக் குவளையில் ஊற்றி, கையில் கொடுத்துள்ளார். ரசித்து ருசித்து பருகுவதொன்றே வாசகர் பணி.

Glimpses of Kamba Ramayanam நூலை மொழிபெயர்ப்பு நூல் எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட இயலாது. இது மொழிபெயர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மொழிப்புலமை பெற்றவர்களால் சிறுகதைகளையும் புதினங்களையும் எளிதாக மொழிபெயர்த்துவிட இயலும். கவிதைகளையும் கட்டுரைகளையும் கூட மொழிபெயர்த்துவிட முடியும். ஆனால் காப்பியங்களை? அதுவும் அவற்றின் கவிதையழகு கெட்டுவிடாமல்?

Poetry is what gets lost in translation - Robert Frost

மூல மொழியில் இருப்பவற்றைத் துல்லியமாக மொழிமாற்றம் செய்வதால் மாத்திரம் ஒரு மொழிபெயர்ப்புப் படைப்பின் நோக்கம் நிறைவு பெறாது. படைப்பும் முழுமை அடையாது. மொழியோடு அம்மொழி பேசும் மண் சார்ந்த மக்களின் இயல்பும் வாழ்வியலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும். அவர்களுடைய கலாச்சாரம், பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிவழியாய்த் தொடரும் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் யாவும் உரிய விளக்கத்தோடு மொழிபெயர்க்கப்படல் வேண்டும். காவியத்தின் அழகும் கவித்திறமும் சந்த நயமும் கோடிட்டேனும் காண்பிக்கப்படல் வேண்டும். ஒரு நிலத்தின் மொழியை அதன் பண்பாடும் கலாச்சாரமும் சிதையாமல், அதே சமயம் அவற்றைப் பற்றி சற்றும் அறிந்திராத வேறொரு நிலத்தின் மொழிக்குக் கடத்துதல் பெரும் சவாலான விஷயம். அந்தச் சவாலை மிக அநாயாசமாகக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள்.

கம்பராமாயணத்தின் 118 படலங்கள் உள்ளடக்கிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து மிகுந்த சிரத்தையோடு 108 பாடல்களை மட்டும் தெரிவு செய்து கம்பராமாயணத்தின் ரசம் துளியும் கெடாது சுருக்கி சிறப்பு செய்துள்ளார். 

‘பானைச்சோற்றுக்கு பருக்கைச்சோறு பதமாக’ என்னும் சொற்பதம் இங்கு பயன்படாது. ஏனெனில் படலங்கள் உள்ளடக்கிய பாடல்கள் ஒவ்வொன்றிலும் கவியின் திறமும் காட்சி நயமும் எதுகை மோனைகளும் எழிற் சந்தங்களும், அழகு வர்ணனைகளும், அணி இலக்கணங்களும், பொருண்மையும், பொருத்தமான உவமைகளும், கற்பனை வளமும், காவிய மாந்தரின் உணர்வெழுச்சியும் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கும்போது ஒன்றை மாத்திரம் தெரிவு செய்தல் எவ்வளவு கடினம்?

50 பாடல்கள் கொண்ட பரசுராமப் படலத்தை இரண்டே பாடல்களால் மிக அழகாக விளக்கிவிட்டார். பரசுராமரை ஏன் கொல்லவேண்டும் என்றும் ஏன் கொல்லக்கூடாது என்றும் இராமன் குறிப்பிட்டு, நாணேற்றப்பட்ட இராம பாணத்துக்கு இலக்காக எதைக் கொள்ள எனக் கேட்கும் பாடலையும் அதற்கு பரசுராமர் விடை பகரும் பாடலையும் தெரிவு செய்துள்ளதன் மூலம் பரசுராமப் படலம் வாசகர்க்கு எளிதில் விளங்கவைக்கப்படுகிறது.

காவியத்தின் முழுமையான புரிதல் வேண்டி, இந்நூலில் ஒவ்வொரு காண்டத்தைத் துவங்கும் முன்பும் ரத்தினச் சுருக்கமாக அக்காண்டம் பற்றிய விளக்கம் ஆங்கிலத்தில் மிக இலகுவான வடிவில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு படலத்திலிருந்தும் தெரிவு செய்த பாடலோடு கூடவே அதன் ஆங்கிலக் கவிதை வடிவமும் தரப்பட்டுள்ளது. அடுத்து அப்பாடலுக்கான பொருள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளது. தமிழை எழுதவும் படிக்கவும் சிரமப்படுவோர் எளிதில் வாசிக்க, அப்பாடலை ஆங்கிலம் வழியாக தமிழில் உச்சரித்து (transliteration) மகிழவும் கூடுதல் வகை செய்யப்பட்டுள்ளது.

அயல்மொழிகட்குப் பரிச்சயமற்ற தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான விளக்கங்களும் எளிதில் விளங்கக்கூடிய வண்ணம் தரப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சில.

வேள்வி – Fire sacrifice ritual, sacrificial fire; ஊழி deluge; புஷ்பக விமானம் – gemstone-decorated aircraft; அமுதம் – remedial nectar; கவரி – yak-hair fan; வெண்கொற்றக் குடை – white umbrella of royalty; சூடாமணி – The hair ornament

கவரி என்பதை ‘flywhisk’ என்று பொதுவாகக் குறிப்பிடாமல் ‘Yak-hair fan’ என்று துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் நூலாசிரியர் எடுத்துக்கொண்ட சிரத்தை தெளிவாகத் தெரிகிறது.

தாரை வார்த்தல் என்பதை Pouring the holy water என்கிறார். எவ்வளவு எளிமையான விளக்கம்! இது ஒரு திருமணச் சடங்கு என்பதைக் குறிப்பிடும் வண்ணம் அடுத்த வரியில் he followed the sacred rituals என்று கூடுதல் விளக்கமளிக்கிறார்.

காற்று வந்து அசைத்தலும் – இந்த வரிகளை அப்படியே மொழிமாற்றம் செய்யாது, ‘சஞ்சீவி மலையின் காற்று அசைந்து வந்து படவும்’ என்று தமிழிலும் ‘The medicinal air from the Herbal Mountain touched’ என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடுவதன் மூலம் பாடலின் உட்கருத்தை வாசிப்போர் ஐயமின்றி விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறார்.

ஆங்கிலவழிக் கவிதை விளக்கங்கள் பல பாடல்களில் ‘அட’ என்று எண்ண வைக்கின்றன. உதாரணத்துக்கு இரண்டு பாடல்கள்.

(1)    இராமன் காட்டுக்குச் சென்ற செய்தி அறிந்த பரதன், கோசலையில் பாதங்களில் வீழ்ந்து கதறுகிறான்.

தாய் பசி உழந்து உயிர் தளரத் தான் தனிப்

பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்

நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அத்

தீ எரி நரகத்துக் கடிது செல்க யான் (பள்ளிபடைப் படலம்)

 

Bharata who had fallen at Kosalai’s feet, started to list that,

‘The sinner, who takes care of his hunger while his mother starves to death,

Who witnesses the death of his King in the war front but saves his own life,

Would all go to the burning hell, but let I should reach hell before them’

 

(2)    அசோகவனத்தில் கவலையே உருவான சீதை, நிலவைப் பார்த்துக் கூறுகிறாள்

கல்லா மதியே கதிர்வாள் நிலவே

செல்லா இரவே சிறுகா இருளே

எல்லாம் எனையே முனிவீர் நினையா

வில்லாளனை யாதும் விளித்திலீரோ (உருக்காட்டுப் படலம்)

 

Never learnt and just shine reflecting the Sunlight, Oh Moon!

Unending and intensifying darkness, Oh Night!

All of you infuriate towards lonely me,

But not Raman with bow, who never think of me!

எவ்வளவு அழகான தெளிவான விளக்கப் பாடல்கள்!

இந்நூலில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம் கம்ப ராமாயணத்தின் கதை மாந்தர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது Rama, Bharatha, Sita, Lakshmana, Hanuman, Ravana, Vibhishana, Kumbhkarna என்று இல்லாமல் Raman (ராமன்), Bharathan (பரதன்), Seethai (சீதை), Lakshmanan (லக்ஷ்மணன்), Anuman (அனுமன்), Ravanan (ராவணன்), Vibeeshanan (விபீஷணன்), Kumbhakarnan (கும்பகர்ணன்) என தமிழில் உச்சரிப்பது போன்றே குறிப்பிட்டிருப்பது.

Glimpses of Kamba Ramayanam என்னும் இந்நூல், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்களின் தீவிரத் தமிழ்ப்பற்றுக்கும், நாடு, மொழி, மதம், இனம் மற்றும் தலைமுறைகள் கடந்து தமிழின் காப்பியச் சிறப்பைக் கொண்டுச்செல்ல விழையும் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கும் பெரும் சான்று.

எண்ணற்ற விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கும், ஏராளமான பொறுப்புகளை நிர்வகிக்கும் அன்னாரது உழைப்பினாலும் சீரிய முயற்சியினாலும் உருவாக்கப்பட்ட இந்நூல் எப்பேதமும் அற்று உலக மக்கள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும், தமிழின் சிறப்பு பாரெங்கும் ஓங்க வேண்டும், கம்பனின் காவியத்திறம் மொழி கடந்தும் விதந்தோதப்பட வேண்டும் என்னும் பேரவா எழுகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்

பாரதியின் இவ்வாக்கினை மெய்ப்பிக்கும் முகமாக இந்நூல் உலகம் முழுவதும் சென்றடைந்து, இப்படைப்பின் நோக்கத்தை முழுமையுறச் செய்ய வேண்டுமாய் வாழ்த்தி மகிழ்கிறேன்.

*****