2 August 2015

கனவுலக சஞ்சாரி

இரயில், அந்த நிலையத்தில் நின்றிருந்தது. இருளில் மறைந்துநின்ற மரங்களிலிருந்து உதிர்ந்த ஈர இலைகளை சுழற்றிக்கொண்டுவந்த காற்று, அவற்றை இரயில்பெட்டிகளின் மூடிய கதவுகளில் மோதவிட்டுக்கொண்டிருந்தது.

இரயில் நிலையக் காவலன் தனது மங்கிய லாந்தர் விளக்கை பெட்டிகளின் ஒவ்வொரு சன்னலாக உயர்த்திப்பிடித்து, அந்த ஊரின் பெயரை உரக்கக் கூவிக்கொண்டிருந்தான். ஒரே ஒரு பெண் இறங்குவது தெரிந்தது. தொலைதூர நகரங்களிலிருந்து வருபவர்கள் மிகவும் அரிதாகத்தான் இந்த நிலையத்தில் இறங்குவது வழக்கம். அவன் தன் லாந்தர் விளக்கின் ஒளியை பெரிதாய்க் கூட்டி அப்பெண்ணின் பயணச்சீட்டைப் பார்வையிட்டான்.

அவள் அவனைப் பார்த்தாள். ஆனால் யாரென்று பரிச்சயப்படவில்லை. ஒருகாலத்தில் இந்த இரயில் நிலையத்தில் எல்லோரையும் அவளுக்குத் தெரிந்திருந்தது. இப்போது இவன் புதியவனாய்த் தெரிந்தான். அவனுக்கும் இவளைத் தெரிந்திருக்கவில்லை.

அவளுடைய கடிதம் கிடைத்திருந்தால், இந்நேரம் யாராவது கோச்சுவண்டியுடன் வந்து நிலையவாசலில் காத்திருப்பார்கள். அவள் நிலையத்தைக் கடந்து வெளியே சென்றாள். நனைந்து நடுங்கிச் சுருண்டபடி ஒரு மூலையில் படுத்திருக்கும் தெருநாயொன்றைத் தவிர வேறு எதுவும் கண்ணில் தென்படவில்லை.

அவள் வளைந்து வளைந்து ஊருக்குள் செல்லும் ஒழுங்கற்ற பாதையைப் பார்த்தாள். நதிக்கரையோர சவுக்கு மரங்களூடே புகுந்து புறப்பட்ட அசுரக்காற்றின் ஓசையை அலட்சியப்படுத்தியபடி, ஊர் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அதைத்தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அவள் படுத்திருக்கும் நாயைக் கனிவுடன் நோக்கினாள்.

ஒருவேளை நிலையக் காவலனிடம் தனக்கான தகவல் ஏதேனும் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். அவள் மீண்டும் நடைமேடையை நோக்கிச் சென்றாள். அலுவலக அறைக்குள் செல்ல முனைந்த இரயில்நிலையக் காவலன், அவள் தன்னிடம் ஏதோ கேட்க விழைவதைக் கண்டு உள்ளே செல்லாமல் காத்திருந்தான்.  அவள் தயங்கிநின்றாள்.

இன்று நல்ல மழை!” அவன் அவளுடைய தயக்கத்தை உடைக்கும்வண்ணம் பேச்சைத் துவக்கினான். அவள் கேட்க வந்த கேள்வியானது, ‘இப்போது நேரம் என்ன?’ என்ற கேள்வியாக மாறிப்போனது. அப்போதைய நேரத்தை அவள் அறிந்திருந்தபோதும் அவனிடமிருந்து பதிலைப் பெற்றுக்கொண்டு அவசரமாக அங்கிருந்து அகன்றாள்.

அவள் தன்னுடைய நீண்ட குளிரங்கியை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டாள். காற்றின் வேகத்துக்கு அவளுடைய குடையால் ஈடுகொடுக்க முடியவில்லை. காற்றும் மழையும் இருளும் பொதிந்த புதர்க்காட்டுப் பாதையில் மூன்று மைல் தொலைவுக்கப்பால் அவளுடைய அம்மாவின் வீடு இருந்தது. தன் பால்ய காலத்தில் பார்த்திருந்த ஊரின் பாதையின் ஒவ்வொரு அங்குலமும் அவளுக்கு அத்துப்படியாகி இருந்தது.

மழை நசநசவென்று பெய்துகொண்டிருந்தது. உறங்கிக்கிடக்கும் வீதிகளைக் கடந்துசென்றபோது, எங்கும் உயிர்ப்பின் சிறு சலனத்தையும் காணமுடியவில்லை. ஒரு சிறிய கடையின் உள்ளே விளக்கெரிந்து கொண்டிருந்தது. உள்ளே மரமிழைக்கும் சத்தம் கேட்டது. இந்த அகால இரவில் பணிபுரிகிறார்களே என்று நினைத்தாள். அவர்களுடைய திகிலூட்டும் தொழில் நினைவுக்கு வந்தவுடன் யாருக்காக அந்தப் பெட்டியைத் தயாரிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள அரைமனத்துடன் தயங்கி நின்றாள். ஒருவேளை அவளுக்குத் தெரிந்தவர்களாக இருக்குமோ? ஆனால் இருட்டுப்பாதையும் நெடிய பயணமும் அவளை நிற்கவிடாமல் தொடர்ந்துசெல்லுமாறு அவசரப்படுத்தியது.

வளைந்து நெளிந்து சென்ற இருப்புப்பாதை காரணமா, இரயில் மறுபடியும் அவள் பார்வைக்குத் தென்பட்டு விலகிக் கடந்துசென்றது. காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் ரயிலைப் பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்குப்குப்என்று அது நீராவியால் மூச்சுவிடும் இரைச்சல் அவள் செவிகளை வந்தடைந்தது. அதன் சிவந்த வாய்ப்புறத்தினூடே மழைச்சாரலைப் பார்க்கமுடிந்தது.

அது கடந்துசெல்லும் வேகத்தைக் கண்டவளுக்கு, தன்னுடைய சோர்ந்த நடை கவனத்துக்கு வர, சட்டென்று நடையைத் துரிதப்படுத்தினாள். புயல் வருவதற்கான அறிகுறி போன்றதொரு அமைதி எங்கும் நிலவிக்கொண்டிருந்தது. தலைக்கு மேலே இருந்த மரக்கிளையில் பதற்றமான பறவைக்குஞ்சுகளின் கீச்சுகளும் அவற்றைத் தேற்றும் தாய்க்குருவியின் கீச்சொலியும் கேட்டன. அந்த தாய்ப்பறவையின் கரிசனம், அவளுக்குள் குழந்தைக்கால நினைவுகளைத் தூண்டிவிட்டது

தாயிடம் அழைத்துச் செல்லும் பாதை, எவ்வளவு தனிமையும் இருளுமாக இருந்தாலும் அதனாலென்ன? அவளுடைய பயமும் கவலையும் விலகிப்போக, முன்னால் தெரியும் பாதையை அலட்சியத்துடன் பார்த்தாள். தாயுடன் நிகழவிருக்கும் சந்திப்பை முன்கூட்டியே மனத்தில் ஓடவிட்டுப்பார்த்து சிரித்துக்கொண்டாள்.

“வாடி என் கண்ணே!”

அம்மா!”

அவளைக் கட்டியணைத்துக்கொள்ளும் அம்மாவின் அன்புக்கரங்களையும் ஆதுரமான முத்தத்தையும் அவளால் உணர முடிந்தது. அவள் மிகுந்த உற்சாகத்துடன் பொறுமையற்று வேகநடை போட்டாள். ஆனால் கோபாவேசக்காற்று அவளை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது. உள்ளுக்குள் இருக்கும் குழந்தைமை முதல்முறையாக அவளைக் கலக்கமடையச் செய்தது. தாய்மையின் உள்ளுணர்வு அவளை உசுப்பியது. நிமிர்ந்திருந்த உடல் குறுக, அவள் மண்டியிட்டு கரங்களை உயர்த்தி கடவுளை நோக்கி இறைஞ்சினாள். ஒரு மின்னல் அவளுடைய தலைக்கு மேலே சீறிக்கொண்டு சென்றது. அவளுடைய உற்சாகம் வடிந்துபோனது. வெகு அருகில் எங்கோ இடி விழுந்தது.

கொஞ்சதூரம் நடந்தவள், சட்டென்று நின்றாள். அவள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டு இருக்கிறாளா? பறவைக்கூடு இருந்த இடத்தில் இரண்டு பாதைகள் பிரிந்துசென்றன. ஒன்று வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பாதை, மற்றது பழைய மாட்டுவண்டிப்பாதை. அவள் மாட்டுவண்டிப் பாதையில் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தாள். பாதைகள் பிரியும்போது கவனமாக இருந்திருந்தால் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க அவளால் முடிந்திருக்கும். மறுபடி வந்த வழியே வெகுதூரம் திரும்பிச்செல்லவேண்டும்.

சரியான பாதைக்கான பழைய அடையாளக்குறிகளை நினைவுக்குள் மீட்டெடுத்தாள். முதலில் நினைவுக்கு வந்ததுகோணல் மரம்’. அதைத் தொடர்ந்துஅக்கா தங்கை மரங்கள்’. தெற்கிலிருந்து காற்று வீசும்போது தங்கள் கிளைக்கரங்களைக் கோத்துக்கொண்டு பேசுவதால் அவற்றுக்கு அப்பெயர். சமவெளியைப் பிரிக்கும் ஓடைக்கரையில் வளர்ந்திருக்கும் ஆப்பிள் மரங்கள். அந்தப் பகுதியில் எப்போதும் பசுக்களும் கன்றுகளும் காணப்படும். ஆற்றை ஒட்டிச் செல்லும் தவறான பாதையோரம் சவுக்கு மரங்களும் பைன் மரங்களும் செறிந்து வளர்ந்திருக்கும். மின்னல் ஒளிக்கீற்றின் உதவியால் இடங்கள் பளிச்சென்று தெரிந்தாலும் தொடர்ந்துவந்த இடி முழக்கம் அவளைக் கவனிக்கவிடாமல் திசைதிருப்பியது.  

அவள் எதையும் தீர்மானிக்க இயலாமல் திகைத்து நின்றாள். வரக்கூடிய ஆபத்துகளை எதிர்பார்த்து நின்றிருந்தாள். சஞ்சலம் மேலிட, அடுத்த மின்னலுக்காகக் காத்திருந்தாள். அவள் தவறான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறாள் என்பதை அது உறுதிப்படுத்தியதும் திரும்பி நடந்தாள்

வானத்தில் விரிசலுண்டானதுபோல் மின்னல் வெட்டியது. தடாலென்று இறங்கிய இடி அவளை அதிரச்செய்தது. புயல் பலமாய் வீசத் தொடங்கியது. அவள் பைன் மரங்களுக்குக் கீழே பயத்துடன் நின்றிருந்தாள்.

இன்னதென்று புரியாத அச்சம் அவளைப் பீடித்தது. அவள் இருட்டில் ஒன்றும் புரியாமல், இருகைகளையும் நீட்டிக்கொண்டு வேகமாக நடக்க முயற்சி செய்தாள். ஆனால் எதன்மீதோ மோதிக்கொண்டு வீழ்ந்தாள். கூட்டமாய் மாடுகள் மிரண்டு நிற்பது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது. எழுந்து, விழுந்து தடுமாறி எங்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஆனால் மாடுகளின்மேல் வைத்தப் பார்வையைத் திருப்பாமலேயே ஓடினாள். இலக்கில்லாமல் ஓடியவள், தன்னுணர்வு இல்லாமலேயே பாதையை அடைந்தாள். பாதையைக் கண்டுபிடித்ததும் அவளுக்கு மீண்டும் ஒரு சந்தேகம். இதுதான் சரியான பாதை என்றால் வண்டிகள் போய்வந்த வழித்தடம் இருக்கவேண்டுமே. அதைத் தொடர்ந்தால் ஊருக்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு அவள் மழைநீருக்குள் கைகளால் துழாவினாள். ஆனால் மழையினால் மண்ணிலிருந்த வண்டித்தடங்கள் அழிபட்டிருந்தன.  

அவளை வழிநடத்த அங்கு எதுவுமே இல்லை. இரண்டு பாதைகளும் பிரியுமிடத்தில் பைன் மரங்கள் சிறிய அளவில் கொத்தாய் அடர்ந்து காணப்படும் என்பது நினைவுக்கு வந்தது. சிறுமியாய் இருந்த காலத்தில் அந்த பைன் மரங்களில் படர்ந்து வளரும் பெர்ரிக் கொடியின் பழங்களை சேகரிக்க அவள் அங்கு வந்திருக்கிறாள்.

தான் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று அவள் நம்பினாள், எண்ணினாள், பிரார்த்தித்தாள். அது சரியென்றால் இன்னும் சற்று தூரம் போனால் போதும், கோணல் மரம் வந்துவிடும். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு குதிரை, தன்னை ஓட்டிவந்த குடிகாரனை அந்த கோணல் மரத்தோடு வைத்து நசுக்கிக் கொன்ற சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்த சம்பவத்துக்குப் பின்னால் அந்த கோணல் மரம் திகிலூட்டுவதாகிப் போயிருந்தது. மின்னல் ஒளியில், தூரத்தில் அந்த கோணல் மரம் தென்பட்டது.

அவள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறாள். தொடர்ந்து செல்லவேண்டியதுதான். அவளுடைய பால்யகாலத்து பயம் மறுபடி தலைதூக்கியது. மின்னல் ஒளியில் குதிரையில் யாரோ அதிவேகத்தில் அவளை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அவள் இதயம் வெளியே தெறித்து விழுந்துவிடாதபடி, இரண்டு கைகளாலும் மார்பைப் பற்றியபடி நின்றிருந்தாள். கரிய இருளையும், தலையுரசிப்போகும் காற்றின் ஓலத்தையும் மீறி அலறலும் அதைத் தொடர்ந்து மரத்தில் ஏதோ இடிபடும் சத்தமும் கேட்டது. அவள் எழுப்பிய ஓலம் இடிச்சத்தத்தால் அமுக்கப்பட்டது. அடுத்த மின்னல் ஒளியில் அவள் கண்ணுக்கு மரம் மட்டுமே தட்டுப்பட்டது. “கடவுளே.. என்னைக் காப்பாற்று!” அவள் பிரார்த்தனை செய்தபடியே கனத்த இதயத்தோடு விலகி நடந்தாள்.

பாதை ஓடையில் மூழ்கிபோயிருந்தது. வெள்ள நீர்ப்பெருக்கின் ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக்கொண்டே போனது. எப்போதுமே வறண்டுகிடக்கும் சிற்றோடை கூட நுரைக்கும் வெள்ளத்தால் பூரித்துக் கிடந்தது.

மழை சற்றுக் குறைந்திருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஓடைநீரின் சலசலப்பு பயத்தை ஏற்படுத்தியது. அவளுக்காக அக்கறையில் ஒரு ஜீவன் காத்திருக்கிறதே! சென்றமுறை வந்தபோது இரவு மிகவும் இதமானதாக இருந்தது. அவளை அழைத்துச்செல்ல பக்கத்துவீட்டுக்காரரின் மகன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தான். அம்மா, அவள் வரவுக்காக, கையில் லாந்தர் விளக்குடன் ஓடைக்கரையில் காத்திருந்தாள்அதுபோல் இன்றும் ஏதேனும் விளக்கு வெளிச்சம் தெரிகிறதா என்று எதிர்பார்ப்புடன் கூர்ந்து பார்த்தாள். எதுவுமில்லை.

பாதை அவளை ஓடைக்கரையில் கொண்டு சேர்த்தது. ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. கரையின் இருபக்கத்திலிருக்கும் வில்லோ மரங்களின் தாழ்வான கிளைகள் சரம் சரமாய் ஓடைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும். அவை எப்போதும் வெள்ளமட்டத்தை விடவும் உயர்ந்தே இருக்கும். இன்று அவையும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டிருப்பது வெள்ளநீரில் கிளைகள் சலம்பும் ஒலியைக் கொண்டு உணரமுடிந்தது. அந்தக் கிளைகளைப் பற்றிக்கொண்டுதான் அவள் அக்கரை சென்றாகவேண்டும்
  
ஒரு சன்ன ஒளிக்கீற்று கூட இல்லாதபடி இருண்டுகிடந்த வானத்தைப் பார்த்தாள். அன்பான கணவனையும் குழந்தைகளையும் நினைத்துப்பார்க்கையில் அவள் உதடுகள் நடுங்கின. ஆனால் அவள் தைரியத்தைக் கைக்கொள்ளத்தான் வேண்டும். மறுகரையில் அவளுடைய வயதான, தலைநரைத்த தாய் அவளுக்காகக் காத்திருப்பாளே! அந்த எண்ணமே இரு கரைகளையும் குறுக்கியது. இவ்வளவு துயரங்களுக்கும் ஆபத்துகளுக்கும் அப்பால் அன்புக்கான உத்திரவாதம் காத்திருக்கிறதுமீண்டும் அவள் வானத்திசை நோக்கினாள். “கடவுளேஆசீர்வதியும், மன்னியும், அரவணையும், வழிநடத்தும், வலிமை தாரும்.” அவளது தாயின் பிரார்த்தனை அது.

வில்லோ மரத்தின் தாழ்ந்திருந்த ஒரு பெரிய கிளையைப் பற்றிக்கொண்டு நீரின் ஆழத்தை ஆராய்ந்தாள். கணுக்கால் வரையிலும் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்தடுத்த அடிகளில் இன்னும் ஆழம் அதிகரித்தது. பயங்கர வேகத்துடன் வீசிய காற்று அவளுடைய மெலிந்த கைகளால் பற்றியிருந்த கிளையைப் பறித்துப்போனது. தண்ணீர் இப்போது முழங்கால் வரையிலும் ஓடிக்கொண்டிருக்க, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பேராபத்துக்குரியதாயிருந்தது.  

அவள் பல்லால் ஒரு மெல்லிய கிளையைக் கவ்விக்கொண்டாள். பேராசை பிடித்த காற்று அவள் தொப்பியைப் பறித்துக்கொண்டு போனது. அணிந்திருந்த நீண்ட மேலங்கி அவளை வேகமாய் முன்னேற விடாமல் அவளுக்கெதிரியாய் மாறியிருந்தது. குளிரில் மரத்து விறைத்துப்போன விரல்கள் அவளுக்கு உதவாமல் போயின.

விரைவிலேயே நீரின் ஆழம் அதிகரிக்கலாம்; மரக்கிளை கைநழுவிப் போகலாம். கிளை அக்கரை வரை வரும் என்றாலும் காற்றின் வேகத்தால் வலுவற்ற நுனிக்கிளை உடைந்துபோகலாம் என்பதால் அதில் நம்பிக்கை வைக்கமுடியவில்லை. இப்போது அவளால் இக்கரைக்கும் திரும்பிப்போகமுடியாது. நுரைத்துக்கொண்டு ஓடும் வெள்ளம் அவளை கிடுகிடுக்க வைக்கையில்... செவியறையும் காற்று அங்குலம் அங்குலமாக அவளைத் தாக்குகையில் திரும்பிப் பார்ப்பது கூட அசாத்தியம்.

வெகுநாட்களுக்கு முன்பே அவள் அம்மாவைப் பார்க்க வந்திருக்கவேண்டும். மனம் செய்யத் தவறிவிட்ட ஒரு செயலுக்கான தண்டனையை இன்று, உடல் அனுபவிக்கிறது. அவள் இதயம் குறுகுறுத்து நகைத்தது.

இப்போது நீரோட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது. ஒருவேளை வெள்ளநீரில் வில்லோ மரக்கிளைகள் அடித்துச்செல்லப்பட்டுவிட்டால், அவள் உடைகள் அவளை மூழ்கவிடாமல் மிதக்கச்செய்யலாம். அவள் மூச்சை உள்ளிழுத்துப் பிடித்து, சிறுமியைப் போல்அம்மா….” என்று உரக்கக் கத்தினாள்

நீரின் ஆழம் அதிகரிக்க சுழலின் வேகமும் அதிகரித்தது. கிளையின் பருமன் குறைந்துகொண்டே வருவதிலிருந்து ஓடையின் மத்தியில் இருப்பது புரிந்தது. வில்லோ மரக்கிளையால் காற்றின் பலத்தை எதிர்கொள்ள இயலவில்லை. அங்குமிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்த எதிர்க்கரையின் வில்லோ மரக்கிளைகளைப் பற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவற்றின் நுனிகளைத் தொடமுடிந்ததே தவிர கைகளால் பற்றிக்கொள்ள இயலவில்லை.

அவள் அவநம்பிக்கையும் அதிர்ச்சியும் அடைந்தாள். ஒரு கையால் தூரத்திலிருந்த ஒன்றை எட்டிப் பிடித்தாள். சற்று அருகில் இழுத்து மறுகையால் சர்வ ஜாக்கிரதையோடு எவ்வளவு கிளைகளைப் பற்றமுடியுமோ அவ்வளவு கிளைகளைப் பற்றினாள். காற்று இரக்கமில்லாமல் அவற்றைப் பறித்துப்போனபோது அவை அவள் முகத்தில் சாட்டைபோல் வீசிச்சென்றன.

மேலும் தங்களுடைய வரிக்கரங்களால் அவளுடைய கழுத்தை வளைத்துப் பிடித்துக் காயப்படுத்தின. அவளுடைய அம்மாதான் இந்த வில்லோ மரங்களை இங்கு நட்டுவைத்தவள். மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வதைக் கண்டு ரசித்தவள் இவள். அவை எப்படி இவளுக்கு விரோதமாய் மாறிப்போகமுடியும்!

அவள் தயங்கும் ஒவ்வொரு நொடியும் வெள்ளத்தின் அபாயம் அதிகரித்துக்கொண்டுதான் போகும். நடுங்கவைக்கும் வெள்ளத்தை விடவும் ஊளையிடும் காற்றுதான் அவளை அதிகமாய் அச்சுறுத்தியது.

எதிர்க்கரை மரங்களின் பலவீனமான கிளைகள் அவள் கைக்கு எட்டியும் எட்டாமலும் வந்துபோய்க்கொண்டிருந்தன. ஏற்கனவே கையில் பிடித்திருக்கும் இக்கரையின் மரக்கிளைகளை விட்டுவிட்டு இரண்டு அடி முன்னே எடுத்துவைத்துவிட்டால் போதும், அக்கரையின் நல்ல வலுவான மரக்கிளை கைக்கு அகப்பட்டுவிடும். “ஆனால் அது உன்னால் முடியுமா?” என்றபடி ஓலமிட்டது காற்று. சட்டென்று வீசிய கடுங்காற்றில் அவள் தூக்கியெறியப்பட்டு சுழலோடு போனாள். அவளுடைய மேலங்கி அவளை பாய்மரம்போல் செலுத்திக்கொண்டு போனது.

உள்ளுணர்வு உந்த வெள்ளத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடினாள். முதலில் அவள் நினைவுக்கு வந்தது, அவளுடைய அன்புக் கணவனுக்காக அவள் இட்டு வந்த கடிதமுத்தம். அதுதான் அவளிடமிருந்து அவனுக்குக் கிடைக்கும் கடைசி முத்தமாக இருக்குமோ? அவள் மிதந்துவந்த ஒரு மரக்கிளையைப் பற்றிக்கொண்டு அதன் போக்கிலேயே போனாள். இரண்டு கரைகளில் ஏதொன்றிலும் சேர்ந்துவிட அவள் செய்த முயற்சிகள் பயனற்றுப்போயின. உதவிகோரி குரலெழுப்ப வாயைத்திறந்தாள். காற்று அவள் வாயையும் தொண்டையையும் புனலெனக் கருதி புனல்நீரை அவள் வாய்க்குள் புகட்டியது. அவள் வலுவற்ற நிலையிலும் போராடினாள். காற்று மீண்டும் மீண்டும் வாய்க்குள் சேற்றுநீரை ஊற்ற அவள் அம்முயற்சியைக் கைவிட்டாள்.

திடீரென்று கோணல் மரத்திடமிருந்து எழுந்த விபரீதக் கதறல் காற்றைத் துளைத்து வந்து அவள் காதைத் துளைத்தது. சற்று நேரத்தில் இதமான குரலொன்று அவள் காதருகில் கிசுகிசுப்பாய் சொன்னது, “என்னிடம் வாடீ சின்னப்பெண்ணே!”

மென்மையான வலுவான கரங்கள் அவளைத்  தாங்கிக்கொண்டன. நண்பர்கள் என்றெண்ணிய வில்லோ மரங்கள் கைவிட்டதையும் எதிரியென்று நினைத்து பயந்து ஒதுக்கிய கோணல்மரம் காப்பாற்றுவதையும் எண்ணி வியந்தாள். அவளுடைய கணிப்புகள் யாவும் தவறாகிப் போய்விட்டன என்ற எண்ணம் அவளை பலவீனப்படுத்தியது.

இப்போது காற்றும் கரகரத்தக் குரலில் தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது. ஆவேசத்துடன் சுழித்தோடிய நீருக்கு மேல் அவளுடைய முகம் அழகாய் எழுந்தது. வேரோடு வீழ்ந்துகிடந்த அந்த பெரிய கோணல் மரம் சொன்னது, “அவ்வளவுதான்.. இன்னும் கொஞ்சம்தான்.” பந்தய வீரனைப் போல் தறிகெட்டு ஓடிய வெள்ளநீர் அவளை அந்த தடுப்பைத் தாண்டி இழுத்துக்கொண்டு ஓட கடுமுயற்சி செய்தது. அங்கிருந்து அவளை மறுபடி தன்னோடு இழுத்துக்கொள்ளப் போராடியது. கூரிய முனைகளைக்கொண்டிருந்த கோணல் மரக்கிளை அவளுடைய மேலங்கியை இறுக்கமாய்ப் பற்றி அவளைத் தன்னோடு சேர்த்துப்பிடித்திருந்தது.    

காயங்களும் அரைமயக்கமுமான நிலையில் அவள் அந்த கோணல்மரத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டாள். வெள்ளநீர் வேறு வழியில்லாமல் அந்த எதிரியின் கீழே மண்டியிட்டு ஓடிக்கொண்டிருந்தது. நம்பிக்கை அவள் இதயத்தைத் தட்டி உசுப்பியது. அந்த சிநேகமரத்தின் முதுகு மேல் ஊர்ந்து அதன் வேர்களைக் கடந்து கரைக்கு வந்தாள். அது சரியாக அவளுடைய அம்மாவின் வீடு இருக்கும் இடம் என்பதை அறிந்து வியந்தாள்.

அவள் மேட்டுநிலத்தில் ஏறிநின்றாள். கடந்துவந்த துயரத்தையும் வேதனையையும் மறக்கச்செய்யும்வண்ணம் அங்கே அவளுடைய அம்மாவின் வீடு காட்சியளித்தது. வீட்டுக்குள் எரிந்துகொண்டிருந்த விளக்கொளி அவளை வரவேற்றது.

அவள் நடையைத் துரிதப்படுத்தினாள். மழை மீண்டும் பெய்யத்தொடங்கியது. காற்று மறுபடியும் வீசத்தொடங்கியது. மூச்சுவிடவும் சிரமமான நிலையில் அவள் வேகமாய் நடந்தாள்வீட்டிற்குள் தெரிந்த விளக்கு வெளிச்சம் அவளுடைய அர்த்தமற்ற பயங்களை விலக்கியிருந்தது.

பயங்கரமான அந்த புயலின் நடுவில் அம்மாவின் குரலைக் கேட்டேன் என்று சொன்னால் அம்மா சிரிப்பாள். சிரித்துவிட்டு அவளுடைய ஈரமான தலைமயிரைக் கோதிக்கொண்டேஅடி என் சின்னப்பெண்ணேஎல்லாம் கனவுதான். வேறொன்றுமில்லை. நீ கனவு கண்டிருக்கிறாய்என்பாள். ஆனால் அம்மாவும் ஒரு கனவுலக சஞ்சாரிதான்.

வெளிக்கதவு மழையால் இறுகிப்போய் திறக்க கடினமாக இருந்தது. சென்ற முறை அம்மாதான் திறந்துவிட்டாள். துரதிஷ்டவசமாக இம்முறை அவளுடைய கடிதம் அம்மாவை வந்துசேர்ந்திருக்கவில்லை போலும். இந்த மோசமான பருவநிலைதான் அஞ்சல் தாமதத்துக்குக் காரணமாக இருக்கும்.

நாயின் குரைப்பைக் கேட்டும் எவரும் வெளியில் வராதது கண்டு அவளுக்கு கலக்கமேற்படவில்லை. பக்கத்தில் எங்கோ பெரும் இரைச்சலுடன் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. அந்த சத்தத்தில் நாயின் குரைப்பு உள்ளே கேட்காமல் போயிருக்கலாம். எங்கிருந்து சத்தம் வருகிறது என்று யோசித்தாள். குழாய் மூலம் தண்ணீர்த்தொட்டி நிரம்பி வழிந்து தோட்டம், நடைபாதை இவற்றை நிறைத்து ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர்க்குழாயை அடுத்தத் தொட்டிக்கு மாற்றிவிடாமல் அம்மா என்ன செய்துகொண்டிருக்கிறாள்? 

ஏதோ ஒரு நிச்சயமற்றத் தன்மை அவளை உறுத்தியது. பல வருடங்களுக்கு முன் அவள் அம்மா மழைநீரை சேகரித்து வறண்ட கோடைக்காலங்களில் உபயோகப்படுத்திக்கொள்ள இந்தக் குழாய்களைப் பதித்தது நினைவுக்கு வந்தது. ஓடையிலிருந்து மெனக்கெட்டு கொண்டுவரும் நீரை இப்படி பொறுப்பில்லாமல் ஓடவிடுவது நிச்சயம் அம்மாவாய் இருக்கமுடியாது.

சட்டென்று அவள் இதயம் குளிர்ந்து நடுங்கத்தொடங்கியது. அம்மாவைக் கண்ணால் பார்த்தபிறகுதான் அது சரியாகும் என்று தோன்றியது. ஆனால் அவளால் காத்திருக்க இயலவில்லைகதவை மெதுவாகத் தட்டியபடி குரல் கொடுத்தாள், “அம்மா…”

காத்திருக்கையில் நாயோடு சிநேகம் கொள்ள முயற்சி செய்தாள். நாய் அவள் குரலை மறந்துபோகும்வண்ணம், அவள் தாய்வீட்டுக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டிருக்கிறது என்று நினைவுறுத்தி இதயம் அவளை உலுக்கியது. பற்கள் கிடுகிடுக்க மறுபடியும் மெதுவாகத் தட்டினாள்.

சட்டென்று கதவு திறந்து வெளிச்சம் பரவ, யாரோ புதியவள் அவள்முன் நின்றாள். வள் சுவரில் சாய்ந்து தன்னை நிதானித்துக்கொண்டு, விரிந்த விழிகளை உள்ளே ஓட்டினாள். மற்றொரு புதியவள் கணப்படுப்பின் அருகில் நின்றிருக்க, குழந்தையொன்று படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாய் குழந்தையை அள்ளிக் கொள்ள, அந்தப் படுக்கையில் இப்போது மூச்சிறைத்துக்கொண்டிருக்கும் வள் படுக்கவைக்கப்பட்டாள்

ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. இரு பெண்மணிகளின் செய்கைகளும் தூங்குபவரை எழுப்பிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுணர்வுடன் இருந்தன. ஏதோ வெதுவெதுப்பான திரவம் அவள் வாயில் புகட்டப்பட்டது. அதுவரையில்தான் அவள் சுயநினைவுடன் இருந்தாள். அவர்களுடைய கண்களில் வெளிப்பட்ட திகைப்பின் கேள்விக்கு இவளுடைய கண்களில் உறைந்திருந்த திகிலே பதிலானது.

விளக்கு வெளிச்சத்தில் நாய் அவளை அடையாளங்கண்டுகொண்டு வாலைக்குழைத்து வரவேற்றது. அவள் கண்விழித்து எழுந்து அமர்ந்தாள். கணப்படுப்பில் விறகு எரிந்து பிளப்பதையும், குழந்தை இவளது நெற்றிக்காயத்தை சுட்டி அதன் தாயிடத்தில் ஏதோ சொல்வதையும், அப்பெண் மெழுகுவர்த்தியை  நெருப்பிலிருந்து பற்றவைப்பதையும் கவனித்தபடி இருந்தாள். 

மெழுகுவர்த்தியை ஏந்திய பெண் இவளை தன் பின்னே வரச்சொல்லி சைகை காட்டி அமைதியாக முன்னே நடந்தாள். இவள் அனிச்சையாய்த் தொடர்ந்தாள். அம்மாவின் அறைக்குச் சென்றதும் அவள் மெழுகுவர்த்தியை உயர்த்திப் பிடித்து இவளைத் திரும்பிப் பார்த்தாள். உறங்குபவளின் முகத்தை மூடியிருந்த துணியை விலக்க, தாயின் முகம் வெளிச்சத்தில் துலங்கியது. கனவுலக சஞ்சாரியான அவள் அம்மா நேற்றிரவு முதல் கனவு காண்பதை நிறுத்திவிட்டிருந்தாள்.

&&&&&&&&

மூலக்கதை: A dreamer by Barbara Baynton

தமிழில் – கீதா மதிவாணன்
பங்குனி, சித்திரை 2015 காற்றுவெளி இதழில் வெளியானது.
(பட உதவி: இணையம்)

32 comments:

 1. அசாத்தியமான வர்ணனைகள் கொண்டது அனைத்தும் கனவு என்று முடிப்பீர்களென்று பார்த்தால் அவளது தாய் கனவு காண்பதை நிறுத்தி விட்டிருந்தாளென்று முடித்திருக்கிறீர்கள். வரும் வழியில் அகால நேரத்தில் மரவேலைக்கான சப்தம் ஓரள்வு யூகிக்க வைத்தது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. மரவேலைக்கான சத்தம் ஓரளவு யூகிக்கவைத்துவிடும் என்றாலும் அதை அங்கு தவிர்க்க முடியவில்லை. மூலக்கதையின் பலமே அந்த பயங்கரமான சூழலின் வர்ணனைகள்தாம். மூலம் கெடாமல் அவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதை தங்கள் கருத்துரை மூலம் அறியமுடிகிறது. நன்றி ஐயா.

   Delete
 2. மிக அருமையான கதை! வர்ணணைகள் காட்சியை கண் முன்னே கொண்டுவந்தன! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கதையை வாசித்துப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.

   Delete
 3. வர்ணனைகள் காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன சகோதரியாரே
  அருமை
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஐயா.

   Delete
 4. வணக்கம்,
  அருமையான நகர்வு, காட்சிப்படுத்திய விதம் அருமை, நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி.

   Delete
 5. உடன் நானும் நடந்தேன்
  அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை வாசித்ததற்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ரமணி சார்.

   Delete
 6. கனவுலக சஞ்சாரியான அவள் அம்மா நேற்றிரவு முதல் கனவு காண்பதை நிறுத்திவிட்டிருந்தாள்.//

  கனத்து போனது நெஞ்சம், இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும் தாயைப் பார்க்க முடியவில்லை என்பதைப் படித்ததும்.

  “அடி என் சின்னப்பெண்ணே…//
  என்று அழைத்து மகளை வாரி அணைக்க மாட்டாளா? என்று தவித்து போனது மனது.

  ReplyDelete
  Replies
  1. பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாய்வீடு செல்வது என்பது எவ்வளவு மகிழ்வைத் தரக்கூடியது. ஆனால் அந்த அனுபவம் இக்கதையில் வரும் பெண்ணுக்கு எவ்வளவு துயர் தருவதாய் அமைந்திருக்கிறது. என் மனத்தை நெகிழ்த்தியதாலேயே இதை மொழிபெயர்த்தேன். வாசித்துக் கருத்திட்டதற்கு நன்றி கோமதி மேடம்.

   Delete
 7. காட்சி விரிவாக்கம் சிறப்பு..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கதையை வாசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி மதுமதி சார்.

   Delete
 8. மரவேலை சத்தம் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.. இடையில் கொஞ்சம் திகில், இறுதியில் துக்கம்.
  உங்கள் மொழிபெயர்ப்பு மிக அருமை கீதமஞ்சரி. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அந்த அகாலவேளையில் ஒலிக்கும் மரவேலை சத்தத்தைக் கொண்டு ஓரளவு யூகிக்கமுடிந்துவிடுகிறது. வருகைக்கும் கதையை வாசித்துப் பாராட்டியதற்கும் நன்றி கிரேஸ்.

   Delete
 9. அருமையான ஒரு மொழிபெயர்ப்பு கதை....ப‌கிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி புத்தன்.

   Delete
 10. அருமையான ஒரு மொழிபெயர்ப்பு கதை....ப‌கிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 11. அருமையான ஒரு மொழிபெயர்ப்பு கதை....ப‌கிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 12. வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதைப் பற்றிய வர்ணனைகள் திகிலை ஏற்படுத்தின. தாயே தான் கோணல் மரமாக வந்து அவளைக் காப்பாற்றினாளோ! இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும் தாயைப் பார்கக் முடியவில்லை எனும் போது துக்கம் தான். அருமையான கதை. மொழிபெயர்ப்பு என்று தெரியாத நடை. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கதையில் எனக்குப் பிடித்த இடம் அந்த கோணல் மரம் வேரோடு வீழ்ந்தும் அவளைக் காப்பாற்றுவதுதான். தாயின் கையால் வைத்து வளர்க்கப்பட்ட, தோழமையுடன் அவள் நேசித்த வில்லோ மரங்கள் அவளைக் கைவிட்டுவிட, பார்த்துப் பார்த்து பயந்துகொண்டிருந்த அந்த கோணல் மரம் அவளைக் காப்பாற்றியதே.. அவள் தாய் அதற்கும் துளி நீரூற்றியிருந்திருப்பாளோ அது துளிர்க்கும் நாளில்? தங்கள் வருகைக்கும் கதை பற்றிய கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்கா.

   Delete
 13. Anonymous8/8/15 23:25

  மிகவும் அருமையான மொழிபெயர்ப்பு கீதா... வர்ணனைகளின் ஓட்டம்தான் கதையின் நாடித்துடிப்பு, அதில் நேற்றே நாடித்துடிப்பு அடங்கியவர் பற்றிய விசாலமான விவரணங்கள் அவர் மகள் மூலமாக.

  மூலக்கதை பற்றி தெரியவில்லை. ஆனால், உங்களின் மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது உங்கள் தமிழ்ப்பற்றை...

  என்றென்றும் அன்புடன்,

  ஜெயசங்கர்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. மூலத்தில் இருப்பதை அப்படியே நேரடியாக மொழிபெயர்த்துள்ளேன். இதன்மூலம் மூல ஆசிரியரின் எழுத்துநடையும் நமக்குப் பரிச்சயமாகிறதே.. தங்கள் பாராட்டுக்கும்மிகுந்த நன்றி.

   Delete
 14. வணக்கம் சகோ.

  மூல வடிவத்தைப் படிக்கவில்லை.

  சில வரிகள் கடந்தபோதே மொழிபெயர்ப்போ என எண்ணத்தோன்றியது.

  தொடர் அமைப்புகள் மொழிபெயர்ப்பென்பதன் தனித்த அடையாளத்துடன் இருக்கின்றவோ என்று யோசித்தேன்.

  மொழியாக்கம் என்று இருக்கிறது.

  நீங்கள் முன்பு ஒரு கதையை அப்படி முயன்றிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

  வர்ணனைகள் அபாரம்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜி சார். ஆஸ்திரேலியாவின் ஆரம்பகால எழுத்தாளர்கள் சிலருடைய கதைகளை மொழிபெயர்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த எழுத்துநடை இருப்பதால் அந்த நடை மாறாமல் அப்படியே தமிழுக்குக் கொணர்வதையே விரும்புகிறேன். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய சிறுகதை மன்னர் ஹென்றி லாசனின் சிறுகதைகள் சிலவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன். புத்தகமாக அது வெளிவந்துள்ளது. அதிலிருந்து நான்கைந்து கதைகளை இந்த வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன். அவற்றை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

   Delete

 15. ஐயா வணக்கம்!

  இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர அறிமுகத்துக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 16. வணக்கம் தோழி!

  விபரிக்க முடியா வர்ணனையுடன்
  அருமையாகக் கதை சென்றது!
  அழகிய சொற்பிரயோகங்கள்!

  மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இளமதி. நலமா? வெகுநாட்களுக்குப் பிறகான தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. கதையை வாசித்துக் கருத்திட்டதற்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி தோழி.

   Delete
 17. அருமையான கதை வர்ணனைகள் அபாரம்.

  ReplyDelete
 18. காட்சிகள் மனக்கண்களில் விரிந்து கலங்க வைத்தன...மறைந்த அன்னையை கண்ட போது மகளின் நெஞ்சம் என்ன பாடு பட்டிருக்கும் என்பது நமது நெஞ்சம் கனமாகுவதில் இருந்து உணரக் கூடியதாக இருந்தது. மிகவும் அருமையான ஆக்கம்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.