24 July 2013

ஏட்டுச்சுரைக்காய் – என் முதல் கணினி அனுபவம்





என்னை இந்தத் தொடர்பதிவில் இணைத்துவைத்த நண்பர் கணேஷூக்கு நன்றி. என்னடா, சிக்கலில் சிக்கவைத்தவருக்கு நன்றி சொல்கிறாளே என்று நினைக்கிறீர்களா? என் ஆரம்பகால கணினி அனுபவங்களையெல்லாம் வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று நினைத்துக்கொண்டிருந்தவளை, அப்படியெல்லாம் நினைக்காதே, பதிவுலகில் இன்று அமர்க்களப்படுத்தும் பலரும் ஆரம்பகாலத்தில் கணினி பற்றி அறியாமலிருந்தவர்கள்தாம் என்ற எண்ணமுண்டாக்கும் வகையில் எழுதி, என்னையும் துணிவுடன் எழுதவைத்த கணேஷுக்கு நன்றி சொல்வது நியாயம்தானே.

நான் படித்தது Diploma in Electronics and communication engineering சுருக்கமாகச் சொன்னால் DECE. இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் பாலிடெக்னிக். பாலிடெக்னிக்கா? அப்படியென்றால்… க்கு கம்ப்யூட்டர் எல்லாம் அத்துப்படியாச்சே என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. அப்போது கம்ப்யூட்டரைக் கண்ணாலும் பார்த்ததே இல்லை. கம்ப்யூட்டர் பிரிவு எடுத்திருக்கிற பிள்ளைகளுக்குதான் அந்த பாக்கியமெல்லாம்

இரண்டாம் வருஷத்தில் Introduction to Computer Programming (ICP) என்றொரு பாடம் இருந்தது. அதில் BASIC, COBOL, FORTRAN என்று கம்ப்யூட்டர் மொழிகள் பலவற்றையும் கற்றுக்கொடுத்ததோடு அதில் சில புரோகிராம் எழுதவும் சொல்லிக்கொடுத்தார்கள். சரி, என்றாவது ஒருநாள் நாமும் கம்ப்யூட்டரோடு இந்த மொழியிலெல்லாம் பேசி ஒரு உறவை வளர்த்துக்கொள்ளப்போகிறோம் என்று மனசுக்குள் ஒரு ப்பாசையை வளர்த்துக்கொண்டதுதான் மிச்சம். ம்ஹூம்கடைசி வரைக்கும் கம்ப்யூட்டரைப் படத்தில் மட்டுமேதான் பார்த்திருந்தோம். இன்னொரு ரகசியம் சொல்லவா? அதுவரை பள்ளியிலும் சரி, பாலிடெக்னிக்கிலும் சரி, முதல் ஐந்து இடங்களில் மதிப்பெண்கள் பெற்றிருந்த எனக்கு தோல்வி என்ற வார்த்தையை  அறிமுகப்படுத்தியதும் அந்தப் பாடம்தான். அத்துடன் கம்ப்யூட்டர் என்றாலே சிக்கல்தான் என்ற நினைப்பு ஆழ்மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டுவிட்டது.

என்னை வேலைக்கு அனுப்பும் எண்ணம் வீட்டில் இல்லை என்பதால் படிப்பு முடித்தபின் சும்மா வீட்டிலிருக்கப் பிடிக்காமல் type writing வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன். ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி அனைத்திலும் பயிற்சி பெற்றுத் தேறினேன். அன்று கற்றுக்கொண்டதுதான் இன்று இத்தனை விரைவாக தட்டச்ச உதவுகிறது. நான் தடதடவென்று தட்டச்சும் வேகத்தில் எங்கே மடிக்கணினியின் விசைகள் பறந்துபோய்விடுமோ என்ற பயத்தில் தனி விசைப்பலகையே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேனே.. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

என் கணவர் தன் அலுவலக வேலைகளுக்காகவென்று ஒரு Desktop computer வாங்கி வீட்டில் இறக்கியபோதுதான், கணினியை முதன்முதலில் அருகில் பார்த்தேன். டிப்ளமா படித்த நான், படித்து முடித்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு வியப்போடு, அட, இதுதான் கம்ப்யூட்டரா என்று கேட்டபோது அவர் என்னை விநோதமாய்ப் பார்த்திருக்கவேண்டும். அவர் அலுவலகம் சென்றிருக்கும் நேரங்களில் என்னைப் பயன்படுத்த அனுமதித்தும் அதைத் தொடவே பயந்தேன். அதில் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. பிறகுதான் இமெயில் அறிமுகமானது. மற்ற நேரங்களில் Encarta வையும்  britannica வையும் புரட்டிக்கொண்டிருந்தேன். இணையப் பத்திரிகைகள் பற்றி அறியவந்தபோது அட, கம்ப்யூட்டரில் தமிழ் எழுத்தும் வருமா என்று இன்னொரு முறை ஆச்சர்யப்பட்டு என்னவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினேன்.

ஊரை, உறவை, உற்றாரைப் பிரிந்து தனிமையில் தவித்தபோது, தவிப்பின் வேதனையைத் தணித்துக்கொண்டிருந்த என் கவிதைகளைத் தாள்களிலிருந்து கணினிக்கு இடம்பெயர்க்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததோடு, பல இணையதளங்களையும் அறிமுகப்படுத்தி என் படைப்புகளை அனுப்பிவைக்க ஊக்கமளித்தவர் என் நாத்தனார். அப்போது அழகி என்னும் மென்பொருளைத் தரவிறக்கி அதன்மூலம் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன்.

கணினி உலகம் என்னும் மாயாஜால உலகம் மெல்ல மெல்ல பரிச்சயமானது. எனக்கே எனக்கென்று ஒரு மடிக்கணினி பரிசளித்து அந்த அதிசய உலகத்தின் உள் நுழையும் வழியைக் காட்டினார் கணவர். மகளோ கைப்பிடித்து அழைத்துப்போனாள். கணினி பற்றித் தான் அறிந்தவற்றையெல்லாம் எனக்குக் கற்றுத்தந்தாள். அவளறியாதவற்றைக் கேட்டபோது தேடிக் கொணர்ந்து உதவினாள். கணினிக்காட்டுக்குள் காணாமல் போய்த் தவித்தபோதெல்லாம் கண்டுபிடித்து மீட்டுவந்தாள். எளிதில் புரியாதவற்றை ஒரு குழந்தைக்குக் கற்றுத்தருவதைப் போல பொறுமையுடன் சொல்லிக்கொடுக்கிறாள். சமீபமாய் மகனும் அவளுடன் சேர்ந்துகொண்டு கணினிப்பாடம் கற்பிக்கிறான் எனக்கு.

சந்தேகம் கேட்கும்போதெல்லாம் எரிச்சலுறாமல், எள்ளி நகையாடாமல், அலுத்துக்கொள்ளாமல், அவசரப்படாமல் நிதானமாகத் தெளிவித்து குடும்பமே எனக்கு உதவுகிறது. கொடுத்துவைத்தவளல்லவா நான்! அவர்கள் கொடுத்த உற்சாகம் தான் இந்த வலைப்பூவை எவர் உதவியுமின்றி என் முயற்சியால் நானே ஆரம்பிக்க உதவியது. எனக்கு எப்போதும் துணைநிற்கும் என் குடும்பத்தினருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லி, இத்தொடர் பதிவில் கணினியுடனான தங்கள் முதல் அனுபவத்தைப் பகிர்வதற்கு ஐந்து பதிவர்களை அழைக்கிறேன்.

இத்தொடரைத் தொடர நான் அழைப்பவர்கள்…

52 comments:

  1. வாவ்... அனுபவம் அருமைங்க...

    ReplyDelete
  2. ரசிக்க வைத்தது கணினி அனுபவம்... இன்றைய குழந்தைகள் தான் அசத்துகிறார்களே... அவர்களிடம் கற்றுக் கொள்வது மிகுந்த சந்தோசம் தான்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. மனம்விட்டு உள்ளதை உள்ளபடி உரைத்துள்ளீர்கள்.

    பெரும்பாலும் எல்லோருக்குமே இதுபோல அனுபவங்கள் தான் இருக்கக்கூடும்.

    பாராட்டுக்கள். பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. எல்லோரும் முதலில் இப்படி பயப்படுவது உண்டுதான்! எனக்கும் முதலில் கணிணி என்றாலே கொஞ்சம் பயம் தான்! சொந்தமாக கணிணி வாங்கியும் ஒரு ஆறுமாதம் சரியாக யூஸ் பண்ணவில்லை நான்! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  5. சந்தேகம் கேட்கும்போதெல்லாம் எரிச்சலுறாமல், எள்ளி நகையாடாமல், அலுத்துக்கொள்ளாமல், அவசரப்படாமல் நிதானமாகத் தெளிவித்து குடும்பமே எனக்கு உதவுகிறது. கொடுத்துவைத்தவளல்லவா நான்! அவர்கள் கொடுத்த உற்சாகம் தான் இந்த வலைப்பூவை எவர் உதவியுமின்றி என் முயற்சியால் நானே ஆரம்பிக்க உதவியது. எனக்கு எப்போதும் துணைநிற்கும் என் குடும்பத்தினருக்கு இந்நேரத்தில் நன்றி //
    ஆம், உண்மைதான் கீதமஞ்சரி. நீங்கள் சொல்வது போல் குடும்பமே உதவியதால் தான் நானும் வலைப்பூ ஆரம்பித்து எழுத முடிந்தது.
    அருமையாக இருக்கிறது உங்கள் கணினி அனுபவம்.

    ReplyDelete

  6. அன்பு கீதமஞ்சரி. தொடர்பதிவு அழைப்பு கண்டேன். .உண்மையைச் சொல்லட்டுமா. கணினி விற்பன்னர்கள் மத்தியில் என் கணினி அனுபவம் கூற வெட்கமாயிருக்கிறது. இருந்தாலும் நானும் ஒரு எழுத்தாளன்தானே.எழுதுகிறேன். என் மீதுள்ள நம்பிக்கைக்கு நன்றி..

    ReplyDelete
  7. தலைப்பும் பகிர்வும் மிக மிக அருமை
    எனக்கு கணினி விஷயத்தில் அப்படிச்
    சொல்லிக்கொள்ளும்படியான சுவாரஸ்யமான
    அனுபவம் ஏதும் இல்லை
    ஆயினும் தங்கள் அழைப்பை ஏற்று எழுத முயல்கிறேன்
    அழைப்புக்கு நன்றி

    ReplyDelete
  8. ஏட்டுச் சுரைக்காய் எனச்சொல்லி என்னிதயக்
    கூட்டுக்குள் நின்றீர் குளிர்ந்து.

    அனுபவப் பதிவு அருமை கீதமஞ்சரி அக்கா.

    ReplyDelete
  9. நல்ல அனுபவப் பகிர்வு. முதலில் அனைவருக்கும் பயம் தான்..அதையெல்லாம் தாண்டி இன்று கலக்குகிறீர்களே, வாழ்த்துகள் கீதமஞ்சரி!

    ReplyDelete
  10. Anonymous24/7/13 21:53

    மிகவும் உண்மையான அனுபவ பகிர்வு. இப்போது எல்லாம் பிறந்த குழந்தைகள் எல்லாம் கணனியில் புகுந்து விளையாடுகின்றன. ஆனால் நாம் முதல் முதலில் கணனியை பழகிய அனுபவங்கள் சுவையானவை. இவற்றை எல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்டால் கூட காலப்பெட்டகத்தின் ஓரங்கமாய் இடம்பெறச் செய்யலாம்.

    ReplyDelete
  11. மீ டூ ஸேம் ப்ளட்!! நானும் இப்படித்தான்... என்னையும் எழுதச் சொல்லிட்டாங்களேன்னு கூச்சம இருந்துச்சு. நீங்க கொடுத்த தைரியம் நானும் எழுதிடறேன்.

    ReplyDelete
  12. உங்களின் கணினி அனுபவம் அருமை. குடும்பத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அது தங்களுக்கு கிடைத்துள்ளது பாக்கியம் தான். என்னை அழைப்பு விடுத்ததற்கு நன்றி. விரைவில் பகிருகிறேன்.

    ReplyDelete
  13. தகவல் சொன்ன திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. அம்மாதான் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவாங்க. உங்களுக்கு உங்க மகளா?! ஆனா, இந்த காலத்து பிள்ளைகள் நம்மைவிட நூறு மடங்கு புத்திசாலிகள். அல்லதொரு அனுபவம்.

    ReplyDelete
  15. வணக்கம் கீதமஞ்சரி.

    உங்கள் அனுபவங்களை ரொம்பவும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    எனக்கும் உங்களைப் போல குடும்பத்தவர்கள் தான் கணணி சொல்லிக் கொடுத்தார்கள். குறிப்பாக என் மகன். இப்போது மருமகளிடமும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

    நம் குழந்தைகள் எத்தனை புத்திசாலி என்று வியக்கவும் வைக்கிறார்கள், இல்லையா?
    நம் சாதனைகளை பாராட்டும்போது, நமது திறமையும் அவர்களுக்குத் தெரிகிறது. Mutual Admiration!

    ReplyDelete
  16. சுவைபடத் தொகுத்துக்கூறிய அனுபவப் பகிர்வு அருமை!
    குடும்ப உறுப்பினர்கள் உதவி கணினிக்கு மட்டுமல்ல அனைத்துத் துறைகளுக்கும் வேண்டும்.

    நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் தோழி!

    த ம.3

    ReplyDelete
  17. Anonymous25/7/13 06:12

    சுவை. அனுபவப் பகிர்வு அருமை!.
    நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் தோழி!
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  18. உங்களின் கணினி அனுபவத்தை சுவைபட சொல்லி சென்றவிதம் அருமை..


    இங்கு எல்லோரும் தங்கள் குழந்தைகள் தம்மைவிட மிக புத்திசாலியாக இருப்பதாக சொல்லிக் கொண்டனர். அவர்கள் எல்லா விஷயங்களிலும் புத்திசாலியா என்றால் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். நம் குழந்தைகள் இந்த கால எலக்ட் ரானிக் சாதனங்களை எளிதாக கையாள்வதாலும் அதைப் பற்றி நமக்கு சொல்லி தருவதாலும் அவர்களை நாம் ஆஹா ஒகோ என்று அளவுக்கு மீறி புகழ்ந்து பேசிகிறோம் காரணம் நாம் அதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பதால்தான் இந்த வேறுபாட்டிற்கு காரணம் நம்மை வளர்த்த பெற்றோர்கள் பொருட்களைப் பற்றி முதலில் நஙன் கு கற்றுக் கொள்ளஸ் செய்து அதன் பிறகுதான் அந்த பொருளை வாங்கி தந்து உபயோகம் செய்ய சொல்லுவார்கள் ஆனால் நாம் இந்த கால குழந்தைகளுக்கு முதலில் பொருளை வாங்கி கொடுத்து அதன் மூலம் கற்று கொள்ளஸ் செய்கிறோம் அதனால் அவர்கள் நன் கு கற்று தேர்ந்து புத்திசாலியாக் தெரிகிறார்கள். அவர்கள் புத்திசாலியாக ஆவதற்கு நாமும்தான் காரணம்.

    இன்னும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் இந்த காலப் பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகள் எலக்ட்ரானிக் சாதனங்களை கையாலுவதால் நாம் அவர்களை மிக புத்திசாலி என்று கூறும் போது ஒன்றை நாம் நினைவு கூற மறக்கிறோம் இந்த கால குழந்தைகள் எலக்ட் ரானிக் சாதனங்களை அறிந்த அளவிற்கு வாழ்க்கையின் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது சமுக பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றி தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.

    ReplyDelete
  19. சுவையான அனுபவங்கள்.... கணினியுடன் உங்களுடைய அனுபவங்களை படித்தேன்.

    தொடரில் எனது துணைவியையும் அழைத்ததற்கு நன்றி! :)
    எனன எழுதப் போறாங்க! நானும் காத்திருக்கிறேன் படிக்க!

    ReplyDelete
  20. @Avargal Unmaigal
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.
    நம் காலத்தில் நமக்கு ஏதாவது ஒன்று வேண்டுமென்றால் சுலபத்தில் வாங்கிக் கொடுத்துவிட மாட்டார்கள்.

    பென்சில், ரப்பர் இவைகளும் கூட தொலைந்து போனால் தான் இன்னொன்று.

    இப்போது எங்கள் உறவினர் ஒருவரின் பேத்திகள் (எட்டு வயது, மூன்று வயது)இரண்டுபேருக்கும் தனித்தனி ipad மற்றும் tab!

    சுலபமாக, கேட்காமலே கிடைத்து விடுவதால் பொருட்களின் அருமை தெரிவதில்லை. விலையுயர்ந்த பொருட்கள் கேட்பாரற்றுக் கிடப்பதைப் பார்க்கும் போது எனக்கு மனம் பதறும். பெரியவர்கள், அந்தக் குழந்தைகள் உட்பட யாரும் கண்டுக்கவே மாட்டார்கள்.

    இந்த சாதனங்களைப் போலவே வாழ்க்கையையும் நினைக்கிறார்களோ?

    'அவர்கள்' சொல்வது 'உண்மையே'!

    ReplyDelete
  21. @சங்கவி

    முதல் வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சங்கவி.

    ReplyDelete
  22. @திண்டுக்கல் தனபாலன்

    கற்றுத்தருகிறார்கள் என்பதை விடவும் பொறுமையாய் சிடுசிடுக்காமல் கற்றுத்தருவதுதான் சிறப்பு. வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  23. @வை.கோபாலகிருஷ்ணன்

    உண்மைதான் சார். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  24. @s suresh

    பெரும்பாலானோரது அனுபவம் இப்படித்தான் என்றறிய வியப்பு. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  25. @கோமதி அரசு

    தங்களுடைய குடும்பமும் தங்களுக்கு உதவியிருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  26. @G.M Balasubramaniam

    தங்கள் எழுத்தின்மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை தங்களுடைய இந்தப் பின்னூட்டம் அழகாக ஆமோதிக்கிறதே.. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  27. @Ramani S

    வருகைக்கும் ரசித்தமைக்கும் என் அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கும் அன்பான நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  28. @அருணா செல்வம்

    ஏட்டுச்சுரைக்காயையும் இனிதே ரசித்துப் பாட்டால் பாராட்டியமைக்கு அன்பான நன்றி அருணாசெல்வம்.

    ReplyDelete
  29. @கிரேஸ்

    வருகைக்கும் இனியதொரு பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  30. @நிரஞ்சன் தம்பி

    ரசிக்கத்தக்க அனுபவங்கள்தாம் எல்லாமே. தொகுத்தால் சிறக்கும். வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் அன்பான நன்றி நிரஞ்சன் தம்பி.

    ReplyDelete
  31. @ஹுஸைனம்மா

    எழுதுங்க... எழுதுங்க... படிக்க ஆவலாய்க் காத்திருக்கிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

    ReplyDelete
  32. @கோவை2தில்லி

    நல்லது ஆதி. உங்கள் முதல் கணினி அனுபவப் பகிர்வை ஆவலுடன் பார்த்திருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி.

    ReplyDelete
  33. @ராஜி

    குழந்தைகள் புத்திசாலிகளாய் இருப்பது நமக்குப் பெருமைதானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

    ReplyDelete
  34. @Ranjani Narayanan

    Mutual Admiration என்று அழகாகச் சொல்லிவிட்டீர்கள். தங்கள் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ரஞ்சனி மேடம்.

    ReplyDelete
  35. @இளமதி

    ஆமாம் இளமதி. குடும்பத்தின் அனுசரணை இருந்தால் எந்தவொரு துன்பத்தையும் எளிதில் கடந்துவிடலாம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி.

    ReplyDelete
  36. @kovaikkavi

    தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  37. ரசிக்கவைத்த அனுபவப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  38. @Avargal Unmaigal

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

    நீங்கள் பொதுவாகச் சொல்லியிருக்கும் கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இங்கே என் விஷயத்தில் நான் உங்கள் கருத்திலிருந்து சற்று மாறுபடுகிறேன்.

    நான் என் குழந்தைகள் புத்திசாலிகள் என்று மட்டும் சொல்லவில்லை. அன்பானவர்கள், அக்கறையானவர்கள், அம்மா அறியாதவள் என்று கேலி செய்யாதவர்கள், அழைக்கும்போதெல்லாம் அலுத்துக்கொள்ளாமல் வந்து உதவுபவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் அவர்களைப் பற்றி உயர்த்திச் சொல்வதில் எனக்குப் பெருமையே. தோழமையுணர்வுடன் பழகும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுள் நானும் ஒருத்தி என்று மீண்டும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  39. @வெங்கட் நாகராஜ்

    உங்களுக்கே தெரியாதவையா? அப்படியென்றால் சுவாரசியமாக இருக்கும். காத்திருக்கிறேன் நானும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

    ReplyDelete
  40. நல்லதொரு குடும்பம். அழகான பகிர்வு.

    ReplyDelete
  41. Anonymous25/7/13 23:15

    சுவைபட தொகுத்துத் தந்து இருக்கிறீர்கள் தோழி.
    மிக ரசித்தேன் .
    எனக்குக் கணினியில் பெரிதாக அனுபவங்கள் ஏதும்
    கிடையாது . தெரியாது. அதனால் தொடர்பதிவில்
    நான் பங்கு கொள்வதென்பது கடினமே .
    மன்னிக்கவும். எனினும் அழைப்பிற்கு நன்றி !

    ReplyDelete
  42. Anonymous25/7/13 23:16

    தொடர் பதிவு பற்றிய அழைப்பைச் சொன்ன DD
    சாருக்கும் என் நன்றிகள் !

    ReplyDelete
  43. கன நாளுக்குப்பிறகு இணையப் பக்கங்களொடு கீதா நான்.சுகம்தானே.அழகான அனுபவத்தைத் தொகுத்திருக்கிறீங்க.வாழ்த்துகள்.கணணி உண்மையில் எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் உதவுகிறதுதானே.அதுவே மகிழ்ச்சி !

    ReplyDelete
  44. தங்களின் அழைப்பின் பேரில் தொடர்பதிவு எழுதியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்.

    http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html

    ReplyDelete
  45. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  46. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  47. @ஸ்ரவாணி

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஸ்ரவாணி.

    தொடர்பதிவைத் தொடரமுடியாவிடினும் தகவல் தெரிவித்தமைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  48. @ஹேமா

    சுகமே ஹேமா.. நீங்களும் சுகம்தானே? நெடுநாளைக்குப் பிறகான வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஹேமா.

    ReplyDelete
  49. @கோவை2தில்லி

    நன்றி ஆதி. வந்தேன், வாசித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  50. மிகவே வித்தியாசமாக இருக்கிறது உங்கள் அனுபவம். கணினியைப் பார்க்காமலேயே படித்து விட்டு, பின்னாளில் ப்ராக்டிகல் அனுபவம் பெற்றமையை விவரித்தது நன்று கீதா. அதிலும் குழந்தைகள் .உங்களுக்கு உதவியதாகச் சொன்னது மிக மகிழ்ச்சி தந்தது. பெற்றோருடன் அன்யோன்யமாகப் பழகி வருகிற குழந்தைகள்கூட இந்நாளில் அரிதாகி வருகின்றனரே...! (நெட் இணைப்பு ப்ராப்ளம் மற்றும் அலுவல் டூர் காரணமாக ஒரு வாரமாக இணையப் பக்கம் வர முடியலை. அதான் இந்த தாமத கவனிப்பும், வாசிப்பும்!)

    ReplyDelete
  51. @பால கணேஷ்

    தாமத வருகைக்கு இணைய இணைப்பும் அலுவல் டூரும்தான் காரணமா? காதல் கடிதங்கள் வாசிப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்? தாமதமாய் வந்தாலும் தவறாமல் வாசித்துக் கருத்திட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அன்புக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
  52. Anonymous3/8/13 12:50

    sensational article to browse i hanging firing bookmark it too

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.