8 July 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 9

போர்க்களத்தில் வெற்றியை எதிர்நோக்கியபடி பாசறை அமைத்துத் தங்கியுள்ள   அரசனின் நிலையை அறிவோம் வாருங்கள்!

………………………..மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரள
களிறுகளம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும நுடங்கித்
தெற்குஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் (168- 177)



போர்க்களத்தில் பயமறியாது
தீரத்துடன் திடம் குலையாது
எதிர்த்து வந்த களிறுகளின்
துதிக்கையினைத் துண்டித்து
வீழ்த்திய மாவீரர் பெற்ற
விழுப்புண்ணைக் கண்ணுற்றறிய
பாசமிகு வேந்தனவன்
பாசறைவிட்டு வெளிவந்து....

வாடைக்காற்று வீசுந்தோறும்
ஆடித்தெற்கே மிகுந்து நலியும்
பருத்த சுடர் ஒளிரும் பாண்டிலெனும்
பலகால் விளக்கின் ஒளியில்....

வேப்பந்தழையினைத் தலையிற்தாங்கிய
வேலின் வலியகாம்பினைக் கையிற்தாங்கிய
வீரனொருவன் முன்னே செல்ல
வேந்தனவன் பின்னே செல்ல.....

மணிபுறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப,
புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கண் காளை
கவல்மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ  தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. (178 -188)



சேற்றுத் தெருவில் நிற்கும்
சேணமும் கடிவாளமும்
இன்னமும் களையப்படாத
மின்னலெனப் பாயும் செருக்குமிகு
போர்க்குதிரைகள் தம்மேல்
சிதறிய மழைத்துளிகளை மயிர்
சிலிர்ப்பித் தெறிக்க.....


இடத்தோள் நழுவிய ஆடையை
இடத்திலே பொருத்தி,
வாளேந்திய வல்வீரனின்
தோளேந்தி நின்றபடி
நலிந்த வீரர்களின் புண்களை
மலர்ந்த புன்னகையால் ஆற்றி……

வான் உதிர்த்த முத்துக்களை
வெண்முத்துச் சரங்கொண்ட
வெண்கொற்றக்குடை தடுக்க....
 நள்ளிரவிலும் உறக்கமின்றி,
பள்ளியதன் நினைவுமின்றி,
உற்ற வீரர்தம் நலனன்றி
மற்ற சிந்தனை ஏதுமின்றி
சிலவீரரைத் துணைகொண்டு
உலவுதற்குக் காரணமான....


வேந்தர் பலரோடும்
வேறுபட்ட திறத்தாலும்
மூண்ட பகையாலும்
முரண்பட்ட மனத்தாலும்
நீடிக்கும் போர்த்தன்மையாலே
நீடிக்கும் பாசறைத்தொழிலாம்!

(நெடுநல்வாடை முற்றிற்று)

************************************************* 
என்னோடு பயணித்து நெடுநல்வாடையை நுகர்ந்து மகிழ்ந்த அனைவருக்கும் என் அன்பான நன்றி.



படங்கள் நன்றி: இணையம்


34 comments:

  1. தோழியின் பணி போற்றுதல்குரியது பாசறைகள் குறித்த விளக்கங்கள் எளிதாய் புரிந்துகொள்ள உதவுகிறது இன்றைய தலைமுறைக்கு ..........இதை தொகுத்து ஒரு புத்தகம் போடுங்கள் மாணவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் ..இன்னும் தொடர்ந்து நம் இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்றபடி விளக்கி கூற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //இடத்தோள் நழுவிய ஆடையை இடத்திலே பொருத்தி,
    வாளேந்திய வல்வீரனின் தோளேந்தி நின்றபடி நலிந்த வீரர்களின் புண்களை மலர்ந்த புன்னகையால் ஆற்றி……//

    ;))))) அருமையான காட்சிகள் ;)))))

    உங்களால் நாங்களும் இந்த இலக்கியத்தை மிகச்சுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. தொடர் முழுவதையும் படித்து முடித்தவுடன் ஒரு இலக்கிய நுகர்வு பெற்ற திருப்தி.

    ஒரு தகவலுக்காக. – நெடுநல்வாடையினை மையமாக வைத்து, கவிஞர் கண்ணதாசன் ” அவன் போருக்குப் போனான். நான் போர்க்களம் ஆனேன் “ என்று தொடங்கும் பாடலை எழுதியதாக நினைவு.

    ReplyDelete
  4. அருமையாக நுகரத்தந்தீர்கள். இன்புற்றோம்.மிக்க நன்றி.

    ReplyDelete
  5. தொடர் அனைத்தும் ஒரு pdf-யாக மாற்றலாம்... பகிரலாம்... பலருக்கும் உதவும்... வாழ்த்துக்கள்...

    நன்றிகள் பல...

    ReplyDelete
  6. என்னங்க கீதா இது? நீங்க நன்றி சொல்றீங்க? அழகான தமிழ்ல எளிமையா எங்களை நெடுநல்வாடைப் பயணத்துக்கு அழைச்சுட்டுப் போன உங்களுக்கு நாங்கல்ல நனறி சொல்லணும்!மிகமிக நன்றி! என் மனதில் ஓடிய அதே எண்ணம் கோவை சரளா மற்றும் டி.டி.யின் மனதிலும் ஓடியிருக்கிறது. இதை ஒரு புத்தகமாக்கினால் மிக நன்றாக இருக்கும். வரும் ஞாயிறன்று நான் இதை லேஅவுட் செய்து புத்தகமாக்கி உங்களுக்கு அனுப்ப முயல்கிறேன். மிக்க நன்றி!

    ReplyDelete
  7. @கோவை மு சரளா

    உடனடி வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் அன்பான நன்றி சரளா. புத்தகமாக்க நண்பர் கணேஷ் தானே முன்வந்து உதவத் தயாராயுள்ளார். மிக்க நன்றி சரளா.

    ReplyDelete
  8. @வை.கோபாலகிருஷ்ணன்

    தொடர்ந்து வருகை புரிந்து நெடுநல்வாடைப் பாடலை ரசித்து மகிழ்த்து கருத்திட்ட தங்களுக்கு என் அன்பான நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  9. @தி.தமிழ் இளங்கோ

    கண்ணதாசன் அவர்களின் வரிகளை மேற்கோளிட்டுக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா. இரண்டுவரிகளிலேயே நெடுநல்வாடையின் சிறப்பை விளக்கிவிட்டார் கவிஞர். இந்தப் பாடலை நான் அறிந்திருக்கவில்லை. வாசித்து மகிழக் காத்திருக்கிறேன்.
    தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  10. @மாதேவி

    வருகைக்கும் நெடுநல்வாடைப் பாடலை ரசித்து மகிழ்ந்தமைக்கும் இனிய நன்றி மாதேவி.

    ReplyDelete
  11. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் இனியதொரு ஆலோசனைக்கும் அன்பான நன்றி தனபாலன்.

    ReplyDelete
  12. @பால கணேஷ்

    உங்கள் அன்பால் என்னைத் திக்குமுக்காட வைக்கிறீர்கள் கணேஷ். தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்துவதோடு, இந்தப் பதிவுகளைப் புத்தகமாக்க மேற்கொள்ளும் முயற்சியை என்னவென்று சொல்வேன்? நன்றிக்கடன் பட்டவளாகிறேன் கணேஷ். தங்கள் அன்புக்கும் நட்புக்கும் அளவிலா நன்றி.

    ReplyDelete
  13. புலவர்க்கு அன்றி மற்றவர்க்குப் புரியாத சங்க இலக்கியத்தை யாவரும் எளிதில் அறியத் தருவது ஒரு பாராட்டுக்கு உரிய சிறந்த முயற்சி . நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது . பலரும் பயனடைந்துள்ளமை கருத்துரைகளால் விளங்குகிறது .தொடர்க !

    ReplyDelete
  14. அருமையான பகிர்வு. நன்றிகள் பல...

    விரைவில் புத்தக வடிவில் வர வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. படித்தேனோ கண்முன் பார்த்தேனோ எனும்படியாக அழகாகப் படைத்தீர்கள் தோழி..மிகவும் அருமை..வாழ்த்துகள் கீதமஞ்சரி!

    ReplyDelete

  16. நிறைவான பணிக்கு பாராட்டுக்கள் கீத மஞ்சரி. முறையாக தமிழ் கற்றவரே தொடத்தயங்கும் சங்க இலக்கியத்தை தமிழ்படிக்கத் தெரிந்தவரும் புரிந்து கொள்ளும்படி எழுதி நிறைவு செய்தமைக்கு மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

    ReplyDelete
  17. உற்ற வீரர்தம் நலனன்றி
    மற்ற சிந்தனை ஏதுமின்றி//

    மூண்ட பகையாலும்
    முரண்பட்ட மனத்தாலும்//

    வரிகளை சுற்றிச் சுழல்கிறது மனசு. வாழ்த்துக்கள் தோழி... எடுத்த காரியம் முடிக்கும் மனத்திட்பத்துக்கு.

    ReplyDelete
  18. மிக அற்புதமான சிந்தனை தோழி. வியக்கவைக்கிறது. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள். வருவேன் மீண்டும் வந்து படிக்க....

    ReplyDelete
  19. நீங்கள் பிறப்பிக்கும் தமிழின்அழகை என்ன சொல்வது கீதா?

    புத்தகம் படிக்கக் காத்திருக்கிறேன்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  20. சகோதரி அவர்களுக்கு ” கவிஞர் கண்ணதாசன் பாடலும் நெடுநல்வாடையும் “ ( http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_938.html ) என்ற தலைப்பில் இன்று ஒரு (14.07.2013) பதிவு எழுதியுள்ளேன். அதில் உங்களின் இந்த தொடரை மேற்கோள் காட்டி உள்ளேன். நன்றி!

    ReplyDelete
  21. @சொ.ஞானசம்பந்தன்

    தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் பாராட்டைத் தலைவணங்கி ஏற்கிறேன். மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  22. @கோவை2தில்லி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ஆதி.

    ReplyDelete
  23. @கிரேஸ்

    ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  24. @G.M Balasubramaniam

    தங்கள் பாராட்டினைப் பணிவோடு ஏற்கிறேன். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  25. @நிலாமகள்

    வருகைக்கும் ஊக்கமிகுக் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  26. @Sasi Kala

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்ததோடு மீண்டும் வந்து படிக்க விருப்பம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சசிகலா.

    ReplyDelete
  27. @மணிமேகலா

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  28. @தி.தமிழ் இளங்கோ

    வாசித்து மகிழ்ந்தேன் ஐயா. தங்கள் பதிவில் இத்தொடரைக் குறிப்பிட்டமைக்கு மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  29. திரு இளங்கோ அவர்களின் பதிவைப் பார்த்து இங்கு வந்தேன்.
    இனம் அறியா இன்பம் என் இதயம் பெற்றதென சொல்லவும்
    வார்த்தைகள் இல்லை.


    நெடுநல் வாடை கவிதையின் ஒவ்வொரு சொல்லும் ஒரு முத்தோ பவழமோ மாணிக்கமோ என வியக்க வைத்த ஒரு நிலை.

    ஆழ்கடலின் அடியிலே கிடக்கும் சங்குகள், சிப்பிகள், முத்துக்கள் போல, தங்கள் தளமும் ஒரு சுரங்கம்.

    தங்கச் சுரங்கம்.

    தங்கி இங்கே படித்து மகிழ்ந்தால் இதல்லவா சுவர்க்கம் .

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  30. @sury Siva

    தங்கள் மேலான வருகையும் உற்சாகமூட்டும் கருத்துரையும் கண்டு மகிழ்வும் நெகிழ்வும். நன்றி சுப்பு தாத்தா.

    ReplyDelete
  31. அந்த கால போர் எப்படி இருக்கும் என்று கதைகளில் படித்திருக்கிறேன். இந்த வரிகளை படிக்கும் போது பிரமிப்பு மேலிடுகிறது. தோழி. வாழ்த்துக்கள் தங்களுக்கு. இது போன்ற இலக்கிய பகிர்வுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  32. @Sasi Kala

    வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் மிக்க நன்றி சசிகலா.

    ReplyDelete
  33. வேந்தர் பலரோடும்
    வேறுபட்ட திறத்தாலும்
    மூண்ட பகையாலும்
    முரண்பட்ட மனத்தாலும்
    நீடிக்கும் போர்த்தன்மையாலே…
    நீடிக்கும் பாசறைத்தொழிலாம்!//

    கீதமஞ்சரி, அழகாய் போர் நடக்கும் காரணம் போர் தளவாடங்கள் செய்வது ஓயாமல் நடை பெறும் என்பதை எல்லாம் அழகாய் சொல்லியது அருமை.

    ReplyDelete
  34. நெடுநல்வாடை எல்லாம் நெடுநாள் ஆன வடைப்போல் இருக்குமென்ற என் எண்ணத்தை மாற்றியது உங்கள் பதிவு ..அருமை !

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.