23 March 2011

தனித்துவிடப்பட்ட நட்பொன்று...



காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்புபற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு அகோரவிபத்துக்கொப்பான
அதிரடிப் பின்விளைவுகளைத்தாங்கி,
அகாலமரணமடைந்தவர்களின்
ஆவியைப் போன்றே
அலையத்தொடங்கிவிடுகிறது.

ஆரம்ப நாட்களில்…..
திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தைபோல
அழுதுத் திரிந்துகொண்டிருந்த அதற்கு,
அப்படி அந்நியப்படுத்தப்பட்டதற்கான காரணம்
எதுவும்  அறிவிக்கப்படவில்லை,
அந்தர்தியானமான நட்பின் தரப்பிலிருந்து
யாதொரு கருணையும் காட்டப்படவில்லை.

அதன் பழைய நண்பர்கள் என அறியப்பட்டவர்கள்
தற்போது புதிய நண்பர்களாய் அறிமுகப்படுத்திக்கொண்டு
இன்னொரு வட்டத்துக்குள் இணைந்திருக்கலாம்.

பதமவியூகத்தைப் போன்றே நட்பின் வியூகங்களும்
நுழைதற்கு வெகு எளிது.
அவ்வியூகத்தை உடைத்து வெளியேறுவதென்பது
அசாதாரண நிகழ்வென்று அறிந்தபோதும்
அவ்வித்தை அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதால்
இதுபோல் இன்னும்பலவற்றில்
இணைந்துவெளியேறக்கூடும்.

பழகிய நட்புகளையிழந்து
பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,
கொஞ்சங்கொஞ்சமாய் சுயமுணர்ந்துகொண்டது.

தற்போதெல்லாம்…….
நேர்ந்துவிடப்பட்ட கிடாவினைப்போன்று
இலேசான மமதையுடன்
இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலேயே
இன்புறத் தொடங்கிவிட்டது அது!

7 comments:

  1. >>காரணம் சொல்லப்படாமல்
    கழற்றிவிடப்படும் நட்புபற்றி
    என்ன நினைக்கிறீர்கள்?

    ஒரு நண்பனின் மரணத்தை விட நம்மை அதிகம் பாதிப்பது ஒரு நட்பின் மரணம்

    ReplyDelete
  2. இந்த கவிதை மட்டும் ஏன் சின்ன லெட்டர்ல இருக்கு?

    ReplyDelete
  3. சி.பி.செந்தில்குமார் said...
    >>காரணம் சொல்லப்படாமல்
    கழற்றிவிடப்படும் நட்புபற்றி
    என்ன நினைக்கிறீர்கள்?

    //ஒரு நண்பனின் மரணத்தை விட நம்மை அதிகம் பாதிப்பது ஒரு நட்பின் மரணம்//
    எல்லாப் பதிவுகளையும் படித்துக் கருத்திட்டதற்கு நன்றி செந்தில்குமார்.

    //இந்த கவிதை மட்டும் ஏன் சின்ன லெட்டர்ல இருக்கு?//

    கவனிக்கவில்லை. மாத்திடறேன்.

    ReplyDelete
  4. வார்த்தை வண்ணமாய் மிளிருகிறது
    அதில் புதைந்து இருக்கும் ஈரத்தை இனம் காண முடிகிறது..........
    வலியின் பிரிவில் மனம் முறியும் போது ஏற்படும் சலனம் இது ...........அருமை ........

    ReplyDelete
    Replies
    1. முறிந்த மனத்தை ஒட்டவைக்கும் கவிதைக் கோந்து இதுவே. வருகைக்கும் அழகிய பின்னூட்டத்துக்கும் நன்றி சரளா.

      Delete
  5. உண்மைதான் நட்பின் பிரிவு தரும் வலி தாங்கவியலா ஒன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்து இடப்பட்ட பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி தோழி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.