15 July 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (8)



'அம்மாவா இப்படிப் பேசுகிறார்? அன்று பிரபுவையும், சுந்தரியையும் அப்படி உபசரித்து அனுப்பினாரே! அதெல்லாம் வேடமா? என்னைப் பற்றி தன் மனதுக்குள் என்னதான் நினைத்திருக்கிறார்? நான் அவரை விட்டுப்போய்விடுவேன் என்றா? அந்தப் பயமே நாளுக்கு நாள் பல்கிப்பெருகி இன்று பூதாகாரமாய் உருவெடுத்து நிற்கிறதா?

என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் அம்மா இந்தக் தவறான எண்ணத்தை மட்டும் என்னிடமிருந்து எப்படி மறைத்தார்?'

நாகலட்சுமி கேள்விக்கணையைத் தொடுத்துவிட்டு அவன் பதிலுக்காய்க் காத்திருப்பது தெரிந்தது. விரக்தியடைந்த விக்னேஷ் இறுகிய குரலில்,

"கவலைப்படாதீங்க அம்மா! உங்க விருப்பத்துக்கு மாறாய் எந்தப் பெண்ணையும் நான் திருமணம் செய்துக்கமாட்டேன்!" என்றான்.

நாகலட்சுமிக்கு மகன் மேலிருந்த நம்பிக்கை தொய்ந்துவிட்டதால் அவன் வாய்மொழியாய்ச் சொல்வதை மனம் ஏற்கவில்லை.

விக்னேஷ் நிறைந்த கடவுள் நம்பிக்கை உடையவன். தாயிடம் அன்பைவிடவும் பக்தி கொண்டவன். அவனைத் தன் விருப்பத்துக்கு வளைக்க, இதுவே தகுந்த சந்தர்ப்பம் என்பதை நாகலட்சுமி உணர்ந்தார்.

"விக்னேஷ்! நீ இப்ப சொல்லுவே! அப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டு.... எவளையாவது....."

"அடட...ட..டா.....! என்னம்மா இது? திரும்பத் திரும்ப அதையே பேசுறீங்க? என்மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"

"அதில்லைப்பா...வந்து...."

"சரிம்மா! எப்படிதான் உங்க சந்தேகத்தை நான் போக்குறது? சொல்லுங்க!"

"என் கையிலடிச்சு சத்தியம் செய்! நம்பறேன்!"

"அம்மா!"

விக்னேஷின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. பொங்கிய துக்கத்தை மறைத்து எதுவும் பேசாமல் நீட்டிய அவர் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து அழுந்தப் பற்றினான்.  உடைந்த குரலில் சொன்னான்.

"அம்மா! உங்க விருப்பப்படிதான் என் கல்யாணம் நடக்கும். என்னை நம்புங்க!"

அதன் பின் நாகலட்சுமி எதுவும் பேசவில்லை. ஆனால் உள்ளூர மகிழ்வும் உள்ளத்தெளிவும் உண்டானது.

கலங்கிய மனதுடன் அம்மாவின் கைகளில் தண்ணீர் தம்ளரையும், மாத்திரையையும் கொடுத்தவன், அமைதியாய் அந்த அறையை விட்டு வெளியேறி தன்னறைக்குள் தஞ்சமடைந்தான். நடந்த எதையும் மனம் நம்ப மறுத்தது.

பொங்கிவந்த வேதனையின் உச்சகட்டமாய், சத்தம் வெளியில் வராவண்ணம் தலையணையில் முகம் புதைத்துக் குமுறிக் குமுறி அழுதான்.

‘சே! என்மேல் அவநம்பிக்கையா? அம்மா என்ற இந்த ஒரு உறவுக்காக, அந்த ஜீவனின் மகிழ்வுக்காக என் சுகத்தை, கனவுகளை, ஆசைகளை எல்லாம்  துறந்து ஒரு துறவி போல் வாழும் என்னைச் சந்தேகிக்க எப்படியம்மா உங்களுக்கு மனம் வந்தது?

இக்கால இளைஞர்களின் ஆசையில் ஒரு கால்பங்காவது எனக்கிருக்காதா? எல்லாவற்றையும் மூடி மறைத்து, உங்கள் விருப்பமொன்றே என் விருப்பம் என்பதுபோல் ஏற்றுக்கொண்டு, அதில் நான் சுகமாய் வாழ்வதாய் பாசாங்கும் செய்துகொண்டு நாளெல்லாம் உங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறேனே, என்னை நம்பவில்லையா? என் இத்தனை வருட வாழ்வு தராத நம்பிக்கையையா, இந்த ஒரு நொடி சத்தியம் தந்துவிடப்போகிறது? 

என் தியாகத்துக்கும், தன்னலமற்ற அன்புக்கும் இதுதான் பிரதிபலனா? உங்கள் முகத்தில் தவழும் மலர்ச்சி ஒன்றே என் வாழ்வின் குறிக்கோள் என்று நினைத்திருந்தேனே, அது நிறைவேறாத கனவாகிப் போய்விட்டதா?

நான் பட்ட பாடெல்லாம் வீண்தானா? இப்படி ஒருநாள் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நானும் ஒரு சராசரி ஆடவனாய் வாழ்ந்திருப்பேனே! என் வாலிபக்கனவுகளை ஏன் பொசுக்கிக்கொண்டிருக்கவேண்டும்?

பள்ளி வயதில் பட்ட அவமானங்கள் வரிசையாய் வந்து நினைவிலாடின.

"டேய், விக்கி! உனக்கு மட்டும் எங்கேர்ந்துடா இப்படி பூப்போட்ட சட்டையெல்லாம் கிடைக்குது? எங்க அப்பாகிட்ட வாங்கித் தரச் சொன்னா நீயென்ன பொம்பளப்புள்ளயாடான்னு கேக்கறாரு!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"ஏன் டா, கிளாஸ் முழுக்க டூர் போறோம்! நீ மட்டும் வரமாட்டேங்கறே! கேட்டா அம்மா வேணாங்கறாங்க அப்படின்னு சொல்றே! ஒவ்வொரு வருஷமும் இதேதான்டா சொல்றே! நாங்க எல்லாரும் வளர்ந்துட்டோம், நீ மட்டும்தான் இன்னமும் அம்மா பொடவையைப் புடிச்சுகிட்டு விரல் சூப்பிகிட்டுத் திரியுறே!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”


பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றில் அடியெடுத்து வைத்த சமயம்,

"டேய், நேத்து நான் விக்கி வீட்டுப் பக்கமா போனேன்டா! அப்ப விக்கி டிரவுசர் போட்டுகிட்டு நின்னுட்டிருந்தான்டா!"


“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"ஏன் டா, உனக்கு கைலி கட்டத் தெரியாதா?"

"டேய்! அவங்க அம்மாதான் டிரவுசர் போட்டுக்க சொன்னங்களாம்!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"சொன்னாங்களா, அவங்களே போட்டுவிட்ட்டாங்களா?"


“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"டேய்! பாத்துடா! என்னைக்காச்சும் உனக்கு ஹக்கீஸ் போட்டு விட்டுடப் போறாங்க!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

அத்தனைப் பேரும் கொல்லென்று சிரிக்க, உண்மையில் இவனைக் கொல்வது போல்தானிருக்கும் அந்த வெடிச்சிரிப்புகள். ஒருவருக்கும் இவன் நிலை புரியவில்லை.

'அம்மா கோண்டு' 'பயந்தாங்கொள்ளி' 'அம்மாகிட்ட இன்னும் பால் குடிக்கிற பாப்பா' என்று என்னென்னவோ பெயர்வைத்தழைத்து நோகடித்தனரே தவிர ஆறுதலாய் எவரும் இல்லை.

எவ்வளவு அவமானங்களைத் தாண்டிவிட்டேன்! எல்லாம் யாருக்காக? அம்மாவுக்காக! இந்தக் கேலியும் கிண்டலும் அவர் காதுகளை எட்டிவிடக்கூடாது என்பதில் எத்தனை கவனமாக இருந்தேன்? ஒருநாளாவது என் துக்கத்தை, வேதனையை அவரிடம் வாய்விட்டு முறையிட்டிருப்பேனா? ஏன்? அவர் நிம்மதி குலையக்கூடாது எண்ணத்தால் தானே?

என் போன்ற பிள்ளையின் அன்பை அங்கீகரிக்கும் அழகு இதுதானா? நண்பர்கள் கேலி பேசும்போது வராத துன்பமும், துயரமும் இப்போது வந்து வாட்ட,  ஆற்றாமை அலைக்கழித்தது..

யாரிடமாவது தன் மன உளைச்சலைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. பிரபு ஒருவன் தான் தன் குடும்பசூழல் அறிந்தவன். அவனிடம்தான் சொல்லமுடியும். ஆனால்....

அவன் இப்போதுதான்  பல பிரச்சனைகளைக் கடந்துவந்து தனது காதல் வாழ்க்கையை கனவுகளுடன் துவக்கியிருக்கிறான். அவனிடம் சொல்வதன்மூலம் தன் பாரம் குறையலாம்; ஆனால் அவனுக்கு பாரம் மிகுந்துவிடும். தன் திடீர்த் திருமணம்தான் இந்தப் பிரச்சனைக்கு மூல காரணம் என்று அறிந்தால் மிகவும் கவலைப்படுவான். அதனால் இப்போதைக்கு அவனுக்கு எதுவும் தெரியாமலிருப்பதே நல்லது.

பிரபுவைத் தவிர வேறு நண்பர்களும் இல்லை. இந்தப் பரந்த உலகத்து மனிதர்களை எல்லாம் அம்மாவுக்காக ஒதுக்கி வாழ்ந்ததற்கு தக்க தண்டனை இது என்று புரிந்தது. சே! நண்பர்கள் அற்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை?

அம்மாவுக்குப் பயந்து பயந்து நண்பர் வட்டத்தை நாளடைவில் குறைத்து அது இறுதியில் பிரபு ஒருவனுடன் நின்றுவிட்டது. இவனுடைய தொடர்பையும் அம்மாவின் நடவடிக்கை, கூடிய விரைவில் துண்டித்துவிடலாம்.

ஆறுதல் தேடி அங்குமிங்கும் அலைபாய்ந்த மனது, இறுதியில் வித்யாவின் மடியில் தஞ்சம் புகுந்தது. அவள் அதை ஒரு குழந்தை போல ஏந்திக்கொண்டாள். அதன் கண்ணீர் துடைத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். அதன் முகம் பார்த்துப் புன்னகைத்து, கன்னத்தில் முத்தமிட்டாள். அவளது பூங்கரங்கள் பட்டுப் பரவசமடைந்த மனம், அவள் கைகளிலிருந்து விடுபட்டு,துள்ளிக்குதித்துக் கொண்டு அவனிடம் ஓடிவந்தது.

அம்மாவுக்குப் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால், விக்னேஷின் ஆழ்மனதில் அதுவரை அடைபட்டுக்கிடந்த வித்யா, ஒரு தேவதை போல் எழும்பி  மிதந்து மேலே வரத் துவங்கினாள்.

 தொடரும்...

**********************************************************
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

மு.வ உரை:
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

7 July 2011

அடையாளம் தவிர்ப்பவன்



அடையாளங்களை அப்புறப்படுத்துவதே
அவனது தவிர்க்க இயலா பொழுதுபோக்கு.
பெயரினை விரிக்கிறான், சுருக்குகிறான்,
புதிய பெயர்களால் தன்னை அழைத்துக்கொண்டு
பழகியவர்களை பீதியுறச் செய்கிறான்.

எந்தவொரு அடையாளத்துடனும்
எவரும் தன்னை அடையாளப்படுத்துவதை
அவன் துரும்பளவும் விரும்பவில்லையென்பதாய்
தன் விநோதச் செயல்களுக்குக் காரணம் சொல்லி
பரிகாசத்தையும் பரிதாபத்தையும்
பரிசிலாய்ப் பெற்றுக்கொள்கிறான்.

சிகை அலங்காரம் முதல்
புகை பிடிக்கும் லாவகம் வரை
தனக்கென்று எதையும் தக்கவைப்பதில்லை.
அபாரம் என்னும் அடைமொழிகளை
அவன் ரசிப்பதுமில்லை,
சகிக்கவில்லையென்னும் முகச்சுளிப்பையும்
அவன் பொருட்படுத்துவதில்லை.

வானளாவிப் பறந்தாலும்,
வட்டமிட்டுக் கரணமடித்தாலும் ,
பக்கமிருக்கும் மரக்கிளையில் சிக்கி,
கிழிபட்டுக் காற்றாடாதபோதும்
காற்றாடியென்றே குறிப்பிடுதல் போல்....

பெயரோ... தொழிலோ...
தோற்றமோ... தோரணையோ... ஏதோவொன்று
அத்தியாவசியமாய் தேவைப்படுகிறது
எல்லோருக்கும் அவனைக் குறிப்பதற்கு.

அடையாளங்களை அடியோடு வெறுத்தவன்,
இப்போது பரவலாக அறியப்படுகிறான்,
தனக்கெனவோர் அடையாளத்தைத்
தக்கவைத்துக்கொள்ளாதவன் என்னும்
நிரந்தர அடையாளக்குறிப்போடு.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (7)



"அம்மா.......அப்பா.......ஆ......வலி தாங்க முடியலையே.....அம்மா....!"

நாகலட்சுமி  மூட்டுவலியால் துடித்துக்கொண்டிருந்தார். இந்த ஆறுமாதத்தில் எவ்வளவோ சிகிச்சை எடுத்தாகிவிட்டது. எலும்புத் தேய்மானத்தின் முன் எதுவும் எடுபடாமல் போயிற்று. உடல் எடையும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் அடுத்தவர் உதவியின்றி எழுவதும் சாத்தியமின்றிப் போனது.

அறுவை சிகிச்சை செய்யலாம் என்றாலோ, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் அடங்காமல் கவலை தந்தது. நாகலட்சுமிக்கு வாயைக் கட்டும் கலை கைவரவில்லை. இனிப்புணவின்மேல் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்.

விக்னேஷ் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், இரண்டு நாள் கடைப்பிடித்தால் அதிகம்! நாளெல்லாம் கூடவே இருந்தா கண்காணிக்க முடியும்?  அவர் உடல்நிலையில் அவர்தானே அக்கறை கொள்ளவேண்டும்? விக்னேஷ் வெறுத்துப்போய் சொல்வதை விட்டுவிட்டான்.

விக்னேஷ், அம்மாவின் உதவிக்கென்று ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தான். அவள் காலை எழு மணிக்கு வந்து வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு மதிய சமையலுக்கான முன்னேற்பாடுகள் செய்து தந்துவிட்டு சென்றுவிடுவாள். மீண்டும் மாலை வந்து மற்ற வேலைகளைப் பார்த்துவிட்டு இரவு உணவுக்கான முன்னேற்பாடுகள் செய்துவிட்டுப் போவாள். அவளிடமே சமையல் பொறுப்பையும் ஒப்படைத்துவிடலாம் என்று விக்னேஷ் சொன்ன யோசனைக்கு அம்மா பலமாக மறுப்பு தெரிவித்தார்.

"அது ஒண்ணுதான் நான் செய்யிறேன். அதையும் செய்யலேன்னா..அப்புறம் நான் இருந்து என்ன பயன்? நான் பெத்த பிள்ளைக்கு என் கையால சமைச்சுபோடறதை நான் பாக்கியமா நினைக்கிறேன். அதைப் பறிச்சிடாதேப்பா!" என்று கூறிவிட்டார்.

பக்கத்துவீட்டு மனோகரி அக்கா கூட ஒருநாள் பேச்சுவாக்கில்,

"என்னம்மா, எப்ப உங்க பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப்போறீங்க? மருமகள் வந்துட்டால் இந்தப் பிரச்சனை இருக்காதில்லே?"

என்று கேட்டுவிட்டாள். அம்மாவுக்கு வந்ததே கோபம்.

"ஏண்டியம்மா, நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா, உனக்கு? மருமக வந்து என்னை மூலையில் உக்காத்திவச்சுப் பாக்க ஆசைப்படறே?"

அக்கா, போகும்போது விக்னேஷிடம் ரகசியக்குரலில்,

"விக்கி, உங்கம்மாவுக்கு உனக்குக் கல்யாணம் பண்ணிப் பாக்கிற ஆசையே இல்லை. நீயா யாரையாவது பார்த்துப் பண்ணிகிட்டாதான் உண்டு!" என்று சொல்லிவிட்டுப்போனாள்.

விக்னேஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தன் மகன் காலாகாலத்தில் திருமணம் செய்துகொண்டு சீரும் சிறப்புமாய் வாழவேண்டுமென்பதுதானே எல்லா அம்மாவின் ஆசையாக இருக்கக்கூடும். அம்மாவுக்கு அந்த எண்ணம் இதுவரை தோன்றாமல் போனது ஆச்சர்யம்தானே? வேறு யாராவது இதைப் பற்றிப் பேசினாலும் அவர்கள் மேல் கோபப்படுகிறாரே!

விந்தைதான் இது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே, அம்மாவின் காலில் தைலத்தை தேய்த்து நீவி விட்டுக்கொண்டிருந்தான்.

"அப்பா, விக்னேஷ்! எனக்கொரு உதவி செய்யறியா?"

"சொல்லுங்கம்மா!"

"கருணைக் கொலை கருணைக்கொலைன்னு சொல்றாங்களே....என்மேல் கொஞ்சம் கருணை காட்டி அதைச் செய்யேன்ப்பா!"

"அம்மா! என்ன சொல்றீங்க?"

அதிர்ந்தான் விக்னேஷ்.

"ஏம்மா இப்படியெல்லாம் பேசுறீங்க? உலகத்தில் எவ்வளவோ கொடுமையான நோயெல்லாம் இருக்கு! இருந்தும் மக்கள் அதைத் தாங்கி வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க! ஒரு சாதாரண மூட்டுவலிக்குப் போய்......"

அவன் முடிக்கவில்லை. நாகலட்சுமி அம்மாள் ஆத்திரத்துடன் குறுக்கிட்டார்.

"சாதாரண மூட்டுவலியா? உனக்கு அப்படிதான் டா இருக்கும். சும்மாவா சொன்னாங்க, தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறன்னு! சாதாரண மூட்டு வலியாமில்லே....உயிர் போற வலிடா....உயிர் போற வலி! அந்த வேதனை அதை அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும்...வெளியில இருந்து பாக்கிறவங்களுக்கு என்ன தெரியும்?

அப்பா....சாமி.....ஐயா.....இனிமே நீ எனக்கு எந்த உதவியும் செய்யவேணாம்ப்பா! ஆளவிடு!"

நாகலட்சுமி தலைக்குமேல் கரங்களை உயர்த்தி ஒரு பெரிய கும்பிடாகப் போட்டார்.

"அம்மா.....என்னம்மா......நான் என்ன சொல்லவந்தேன்னா....."

"போதும்ப்பா, போதும்! எப்போ உன் மனசில நான் சாதாரண வலியைப் பெரிசு பண்ணி ஆர்ப்பாட்டம் பண்றதா ஒரு நினைப்பு வந்திடுச்சோ, இனிமேல் நான் என்ன சொன்னாலும் அதெல்லாம் நடிப்பாத்தான் தோணும். நீ முதலில் இங்கேயிருந்து கிளம்பு! என் வேலையை நானே பாத்துக்கறேன்!"

அம்மா கட்டிலிலிருந்து தடுமாறி எழ முற்பட, விக்னேஷ் வலிந்து அவரைத் தடுத்து அமர்த்தினான்.

"அம்மா! தயவுசெய்து கோபிக்காமல் நான் சொல்றதை கொஞ்சம் காதுகொடுத்துதான் கேளுங்களேன். அம்மா...ப்ளீஸ்!"

அம்மாவின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்து விக்னேஷின் கண்களும் நீரைச் சொரிந்தன.

அம்மாவின் அருகில் அமர்ந்து அவரை மெல்ல அணைத்துக்கொண்டான். அவர் சற்றே ஆசுவாசமடைந்ததுபோல் தோன்றியது.

"அம்மா! எனக்கு உங்களை விட்டால் இந்த உலகத்தில் வேற யார் இருக்கிறா, சொல்லுங்க? மூட்டுவலியைக் காரணமா வச்சி, என்னைக் கொலை பண்ணிடுன்னு மகன்கிட்ட ஒரு தாய் சொன்னால்,அவன் மனம் என்ன பாடுபடும்னு உங்களுக்குத் தெரியாதா? எனக்கு உங்க மனநிலையை மாத்த என்ன செய்யிறதுன்னு தெரியலைம்மா!

சின்ன வயசில் தாத்தா சொல்வார், நமக்கு ஒரு கஷ்டம் வந்தால், நம்மைவிடவும் கஷ்டப்படுறவங்களைப் பார்த்து, நம்ம கஷ்டம் அதைவிடவும் சின்னதுதானேன்னு நினைச்சு மனசைத் தேத்திக்கணும்னு! அதைத்தாம்மா நான் சொல்லவந்தேன். அதுக்குள்ள நீங்க என்னென்னமோ பேசிட்டீங்க!"

ஆனாலும் நாகலட்சுமிக்கு சமாதானம் உண்டாகவில்லை.

"இருந்தாலும் என் வலியை சாதாரணம்னு நீ சொல்லியிருக்கக்கூடாது! ஒருவேளை....உனக்கு அது சாதாரணமாகவும் இருக்கலாம்....."

"என்னம்மா, நீங்க! திரும்பவும்...."

"என்னப்பா செய்யறது? அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து வாழுற நிலையிலிருக்கும் எல்லாருக்குமே, தான் மத்தவங்களுக்கு பாரம்கிற நினைப்பு வரத்தான் செய்யும். அதைத் தடுக்க முடியாது! நீயே இப்படிப் பேசினால், நாளைக்கு வரப்போற மருமகள் எப்படிப் பேசுவாள்? அதை நினைச்சேன், கோபம் வந்துட்டுது!"

"ஆமாம்! நாளைக்கே வரப்போறாளாக்கும்? அவள் எப்ப வருவாளோ? அதுக்குள்ளே நீங்க எழுந்து நடமாட ஆரம்பிச்சிடுவீங்க”

“சொல்ல முடியாதுப்பா! இதோ, இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துகிட்டு ஒரு வேலைக்காரக்குட்டியை இழுத்துகிட்டு வந்திருக்கானே, பிரபு...அவனைமாதிரி நீயும் எவளையாவது இழுத்துகிட்டு வரமாட்டேன்னு என்ன நிச்சயம்?"

விக்னேஷ் அதிர்ந்துபோய் அம்மாவை ஏறிட்டான். அம்மாவா இப்படி......?

தொடரும்...
*****************************************************************


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

மு.வ உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
------------------------------------

தொடர்ந்து வாசிக்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (8)

முந்தைய பதிவு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (6)