சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் என்ற
தலைப்பைப் பார்த்தவுடனேயே இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
போடுகிறாள் என்று தோன்றும். முடிச்செல்லாம் போடவில்லை. என்னை மிரளவைத்த, ரசிக்கவைத்த, வியக்கவைத்த இவ்விரண்டு மொழிகளையும் பற்றி சும்மா ஒரு அலசல் பகிர்வு. அவ்வளவுதான்.
இன்னாபா, நல்லாக்கீறியா?
(என்னப்பா, நலமாக இருக்கிறாயா?)
இன்னாமே, நாஷ்டா துன்னியா?
(என்னம்மா காலைச்சிற்றுண்டி தின்றாயா?)
அவனை இட்டாரேன்.
(அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன்)
அல்லாம் படா பேஜாரா கீதுபா
(எல்லாம் பெரும்பிரச்சனையாய் இருக்கிறதப்பா)
இஸ்துக்கினு கெடந்து பூட்டான்
(இழுத்துக்கொண்டு கிடந்து போய்விட்டான்)
இன்னாத்துக்கு கூவினுகீற?
(எதற்கு கூவிக்கொண்டு இருக்கிறாய்?)
ஜல்ப்பு புச்சிச்சு
(ஜலதோஷம் பிடித்துக்கொண்டது)
இப்படி ஒரு புதிய பாணியிலான தமிழை
சென்னைவாசிகள் பலரும் கேட்டுப் பழகிப்போயிருப்போம். புதிதாக சென்னை வருபவர்கள்
ஆரம்பத்தில் ஏதோ மொழி தெரியாத ஊருக்கு வந்துவிட்டதைப் போலத்தான் உணர்வார்கள்.
ஆனால் போகப்போகப் பாஷை பழகிவிடும். சென்னையிலேயே பிறந்துவளர்ந்தவர்கள் இப்படி
சரளமாகப் பேசும் தமிழை சென்னைத்தமிழ் என்று பெயரிட்டு பெருமைப்படுத்துகிறோம்.
சென்னை சார்ந்த என் பழைய நினைவுகளை மீள
ஓடவிட்டுப் பார்க்கிறேன். திருச்சியில் பிறந்து வளர்ந்த நான் திருமணமாகி
சென்னைக்கு வந்த புதிதில் சென்னைத்தமிழைக் கேட்டு அரண்டுபோயிருக்கிறேன்.
திருச்சியில் எல்லோரும்
எல்லோரையும் மரியாதையுடன் பேசிப் பழகிக் கேட்டிருந்த எனக்கு ‘இந்தாம்மா, ஒத்து’ என்ற ஒற்றைச்சொல் போதும், உடலும் உள்ளமும் அவமானத்தால் குறுகிப்
போய்விடும். சென்னையில் எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்ணை ‘நீங்க, வாங்க, போங்க’ என்று நான் பேச, அவரோ என்னை ‘நீ, வா, போ’ என்று
பேசி அதிரவைத்தார்.
வேளச்சேரியில் குடியிருந்த சமயம்.
எதிர் வீட்டில் ‘To Let’ போர்டு போட்டிருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டில் அவ்வளவு வசதி
போதாது என்பதால் எங்கே நாங்கள் எதிர்வீட்டுக்கு மாறிவிடப்போகிறோமோ என்ற பதைப்புடன்
எங்கள் வீட்டுக்காரம்மா (வீட்டு உரிமையாளர்) என்னிடம் சொன்னார், ‘அந்தாள் வூட்டுக்கு குட்த்தனம் போனா குப்பை கொட்றது ரொம்ப கஷ்டம்’. உடனே நான் கேட்டேன், ‘அப்போ
அவங்கெல்லாம் எங்க குப்பை கொட்டுவாங்க?’
நான் கேலி செய்வதாக நினைத்தாரோ என்னவோ, அந்தம்மா என்னை
மேலும் கீழுமாகப் பார்த்தார். நான் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டிருப்பதைப்
பார்த்து, உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறேன் என்று உணர்ந்தவராய், ‘அட, அந்தாள் வூட்ல குடியிருக்குறது கஷ்டம்ங்கறேன், நொய்யி நொய்யின்னு சொம்மா எதனா சொல்லி உயிர எட்துனே
இருப்பாரு’ என்றார். என் பொது அறிவு அந்த
அளவில்தான் அப்போது இருந்தது. சில புதிய வார்த்தைகளைப் புரிந்துகொள்ள நான் பட்ட
பாடு… இப்போது நினைத்தாலும் சிரிப்புதான்.
ஒருநாள் மணி கோர்க்கும் நரம்பு வாங்க ஒரு
ஃபேன்சி ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். கடைக்காரர் அங்கு வேலை செய்யும் பையனிடம், ‘இவங்களுக்கு தங்கூசி குடுப்பா’ என்றார். நான்
உடனே, ‘ஊசி வேண்டாங்க, நரம்பு மட்டும் போதும்’ என்றேன். அவர் ‘சரிம்மா, தர சொல்றேன்’ என்று
சொல்லிவிட்டு மீண்டும் பையனிடம்,
‘எப்பா, தங்கூசி எடுத்துக்குடுன்னு சொல்றேன்ல?’ என்றார். நான்
குழப்பத்துடன் ‘என்னடா இது, நான் நரம்பு கேக்கறேன், இவர் ஊசி ஊசிங்கறாரே…’ என்று மறுபடி, ‘இல்லைங்க, ஊசி வேண்டாங்க’ என்றதும், ‘நீங்க சொல்ற
நரம்புக்குதான் தங்கூசின்னு பேரு’
என்றார் கடுப்புடன். பிறகென்ன, அசடு வழிய
வாங்கிக்கொண்டு வந்தேன்.
வட்டார மொழியோ வழக்குமொழியோ, பழகாமல் அவற்றை
எதிர்கொள்வதென்பது மிகுந்த சவாலான விஷயம். ஏழாவது
படிக்கும்போது, எனக்கும் என்னைவிட ஒன்றிரண்டு வயது மூத்த அக்காவுக்கும் (பெரியம்மா
பெண்) எதைப் பற்றியோ வாக்குவாதம். நான் சொல்வதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள்
சொல்வது எனக்கு ஏற்புடையதாயில்லை. அவள் கிராமத்துப்பெண். பள்ளிக்கூடம் பக்கமே
போகாதவள். என்னால் அவளுக்கு புரியவைக்க முடியாமல் முடிவில் ‘சரி, அவள் போக்குக்கே
போவோம்’ என்று நினைத்து, ‘சரிக்கா, உங்க அகராதியில் அதுதான் அர்த்தம் என்றால் அப்படியே வச்சுக்குவோம்’ என்றேன்.
‘டிக்ஷனரி’ என்று சொல்ல நினைத்து அப்படி சொன்னால் அவளுக்குப் புரியாது என்பதால் கஷ்டப்பட்டு யோசித்து தமிழில் ‘அகராதி’ என்று சொன்னேன்.
அவ்வளவுதான். அக்காவுக்கு வந்ததே கோபம். ‘சித்தி, உங்க மவ என்னை அகராதி புடிச்சவள்ன்னு சொல்லிட்டா’ என்று பெரிய ஆர்ப்பாட்டமே
பண்ணிவிட்டாள். மீண்டும் விளக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
கிராமப்புறங்களில் ‘அகராதி’ என்றால் ‘திமிர் பிடித்தவள்/ன்’
என்று அர்த்தமாம். அகராதி போல் எல்லாம்
தனக்குத் தெரியும் என்று நினைக்கும் மனப்பான்மையால் இப்பட்டம் வந்திருக்கும் போலும். அகராதிக்கு அப்படியொரு அர்த்தமிருப்பது அன்றுதான் தெரிந்தது.
சில வருடங்களுக்கு
முன்பு கண் பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றிருந்தேன். அது இது என்று ஏகப்பட்ட பரிசோதனைகள். இரண்டாவது முறை கண்ணில்
மருந்துவிட்டதும் ‘எரிச்சலா இருக்கு, டாக்டர்’ என்றேன். அவர் சுபாவமே கடுகடு. இதில் நான் இப்படிச் சொல்லவும், ‘ஐ டெஸ்ட்னு
வந்துட்டா இப்படித்தான் இருக்கும்,
நான் என் வேலையத்தான் பார்க்கறேன். உங்களை
எரிச்சல்படுத்துறது என் வேலையில்ல.’
என்று அவர் படபடவென்று எரிந்துவிழுந்ததும்தான் தவறு புரிந்தது. ச்சே… எரிச்சல்
கண்ணில் என்பதை அல்லவா குறிப்பிட்டிருக்கவேண்டும். அவரிடம் மன்னிப்பு கேட்டு
விளக்கிய பின்னும் முகத்தின்
கடுகடுப்பு மாறவே இல்லை. ஹூம்…
பழகிய மொழியிலேயே இவ்வளவு பிரச்சனைகள்
என்றால் புதிய இடத்தில் புதிய மொழியில் பழகுமுன் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருக்கும்? என்னுடைய
கேரளத்தோழி சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவள் கணவருக்கும்
ஆட்டோக்காரருக்கும் வீட்டு வாசலில் வாக்குவாதம். ஆட்டோக்காரர்களின் சுபாவப்படி
ஏறும்போது சொன்னதை விடவும் இறக்கிவிட்டதும் அதிகமாக கேட்டிருக்கிறார். வாக்குவாதம்
வலுத்துவிட, அவள் கணவர் சொன்னாராம், ‘நீங்க செய்யறது நியாயம் இல்லே, உங்களுடே சம்சாரம்
சரியில்லே’. போதுமே.. இது போதுமே..
ஆட்டோக்காரர் எகிறிவிட்டாராம். ‘யோவ், நீ யாருய்யா, என்
சம்சாரத்தைப் பத்திப் பேசுறதுக்கு,
உன் சம்சாரம் யோக்கியமா? நீ யோக்கியமா?’ கட்டணம் பற்றிய
சண்டை இப்போது கட்டியவளை நோக்கிக் குறிவைக்க, நிலைமை புரிந்த அக்கம்பக்கத்தவர் முன்வந்து
இருவரிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தார்களாம். மலையாளத்தில் ‘சம்சாரம்’ என்றால் ‘பேச்சு’ என்று எவ்வளவோ
எடுத்துச் சொன்னாலும் ஆட்டோக்காரர் நம்பாமல் திட்டிக்கொண்டேதான் போனாராம். இது
எப்படி இருக்கு? இந்தப் பதிவு நீண்டுவிட்டதால், ஆஸி ஆங்கிலத்தின்
சுவாரசியம் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேனே.
(தொடர்வேன்)
(படங்கள் உதவி: இணையம்)
தொடர்ந்து வாசிக்க
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 2
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4
தொடர்ந்து வாசிக்க
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 2
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4

















.jpg)




