Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

14 May 2026

அப்பா!


சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுக் காப்பாற்றப்பட்ட பிறகு அப்பாவின் வாழ்க்கைமுறையில் முதன்முறையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 18 வயது முதல் 78 வயது வரை கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக பாக்கெட் பாக்கெட்டாக ஊதித் தள்ளிய சிகரெட்டை இனி அறவே தொடக்கூடாது என்றபோது கூட அவர் அவ்வளவு அதிர்ச்சி அடையவில்லை. அசைவ உணவு முக்கியமாக ஆட்டிறைச்சி கூடாது, எண்ணெய்ப் பண்டம் கூடாது, நெய், சர்க்கரை சேர்த்த இனிப்புகள் கூடாது (நீரிழிவு நோயும் இருந்தது) என உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடுகளைச் சேர்த்தபோதுதான் அப்பா மொத்தமும் அதிர்ந்து போனார். எதெது கூடாது என்று மருத்துவர் குறிப்பிட்டாரோ அதையெல்லாம் கேட்டு அடம்பிடித்தார். கிடைக்காவிட்டால் கோபம், உண்ணாவிரதம், மௌன விரதம் என்று குழந்தையைப் போல அடம்பிடித்த அவரைத் தேற்றுவதெல்லாம் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர் என்பதால் மாதாமாதம் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் இறுமாப்பு வேறு. 

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் உடல்நலச் சீர்குலைவுக்குப் பிறகு அப்பா படுத்தப் படுக்கையாகிப் போனார். வயோதிகம் தன் பிடியை இறுக்கி மூச்சுத் திணறச் செய்து அந்திமத்தின் வாயிலில் அப்பாவை அசைவற்றுக் கிடத்தியிருந்த போதும் வாழ்வின் மீதான பிடிப்பு உணவு ரூபத்தில் அவர் வாயில் எச்சில் ஊறவைத்துக்கொண்டே இருந்தது. அது வேண்டும் இது வேண்டும் என்று ஆகாதவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒருவேளை அதுவே அவரது கடைசி ஆசையாக இருக்கக்கூடுமோ என்று பயந்து பயந்து அவர் கேட்டதெல்லாம் உடனுக்குடன் தரப்பட்டன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஒரு கட்டத்தில் ஆசை மட்டுமே எஞ்சியது. வாயும் வயிறும் ஒத்துழைக்க மறுத்தன. உணவின் மீதான பிடிப்பு குறைந்த பிறகு உயிர்மூச்சும் மெல்ல மெல்லக் குறைந்து கடந்த 6-ஆம் தேதி (6-5-26) இந்த உலக பந்தத்திலிருந்து விடைபெற்றுவிட்டார் அப்பா! 

எங்கள் அப்பாவிடம் எத்தனையோ விமர்சிக்கத்தக்க குணங்கள் இருந்தாலும் அடிப்படையில் நேர்மை தவறாதவர். எந்த இடத்திலும் சுய மரியாதையை விட்டுக்கொடுக்காதவர். தவறு கண்டால் பொறுக்கமாட்டார். துணிச்சலோடு தட்டிக் கேட்பார். முன்கோபத்தாலும் யார் என்ன என்று பாராமல் சட்டென்று கை ஓங்குதலாலும் பணியிடத்தில் பதவி உயர்வுகளையும் பல நல்ல வாய்ப்புகளையும் இழந்தவர். பிற்காலத்தில் தன் தவறுணர்ந்து ‘முன்கோபம் கூடாது’ என பேரப் பிள்ளைகளுக்குப் போதித்தவர். 

மிகக் குறைந்த வருமானத்தோடும், குடும்பக் கடன்களோடும் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான நிலையிலிருந்த எங்கள் குடும்பத்தை அப்பா தன்னுடைய அயராத உழைப்பினால் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார். என்னையும் தம்பியையும் படிக்கவைத்தார். சொந்தமாக வீடு கட்டினார். 

எங்கள் பரம்பரையில் முதன்முதலில் வெளிநாடு சென்ற பெருமை அப்பாவுக்குதான் உண்டு. பணி நிமித்தம் ஜிம்பாப்வேக்குச் சென்று அவர் பணியாற்றிய நான்காண்டு கால அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட வாய் வலிக்காமல் பேசிப் பேசி பீடு கொள்வார். எங்கள் குடும்பங்களில் முதன்முதலில் ஸ்கூட்டர் வாங்கிய பெருமையும் கார் வாங்கிய பெருமையும் அப்பாவைச் சேரும். தானே கார் ஓட்டவும் கற்றுக்கொண்டு சில காலம் ஓட்டி மகிழ்ந்தார். 

அப்பாவுக்கு இறுதிவரை உடல்நலப் பிரச்சனை தவிர்த்து வேறெந்த பிரச்சனையும் இல்லை. கடைசிவரை அவரது குரல் கணீரென்று ஒலித்தது. எலும்பும் தோலுமாகப் படுக்கையில் கிடந்த அப்பாவை, அவருக்கு உடன்பாடு இல்லாதபோதும் அவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்த மனைவி, அழைத்த குரலுக்கு ஓடோடிச்சென்று அவருக்குத் தேவையானவற்றைச் செய்தும், கேட்டவற்றையெல்லாம் உடனுக்குடன் வாங்கித்தந்தும் பார்த்துக்கொண்ட மகன், ஆசைப்பட்டுக் கேட்கும் உணவு எதுவானாலும் அலுப்பின்றி சமைத்து அக்கறையோடு பரிமாறிய மருமகள், பாசமான பேரப்பிள்ளைகள், அன்பான மகள், உடன்பிறந்தோர், சுற்றம், நட்பு என நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்! 

ஒரு மகாராஜாவைப் போலவே இராஜ உபச்சாரங்களோடு இறுதிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார் அப்பா என்று ஆறுதல் கொள்வதைத் தவிர எம்மைத் தேற்றும் வழி வேறில்லை. 😔😔