19 March 2016

கூழாங்கற்கள் என் பார்வையில்...





ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து திருச்சி சென்று அங்கிருந்து பாண்டிச்சேரி, பிறகு சென்னை, சிங்கப்பூர் வழியாக சிட்னியை அடைந்து இறுதியாக இப்போது என் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கிறது கனவுப்ரியனின் கூழாங்கற்கள். நட்பின் வரிசையில் நானும். மிகவும் நன்றி இரத்தினவேல் ஐயா.. நன்றி கனவுப்ரியன்.

ஒரு புத்தகத்தின் உள்ளார்ந்த சாரத்தை வாசிக்குமுன் அந்நூலுக்கான அணிந்துரை, வாழ்த்துரைகளின் பக்கம் செல்வதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். வாசிக்கக்கூடாது என்றில்லை.. மற்றவர்களின் கருத்தோட்டம் நம்முடைய கண்ணோட்டத்தைப் பாதித்துவிடக்கூடும் என்ற பயமே காரணம். ஆனால் என்னுரை என்னும் எழுத்தாளரின் தன்னுரை விலக்கு. கூழாங்கற்களில் கனவு ப்ரியனின் தன்னுரையே ஒரு சிறுகதையென எடுத்தவுடனேயே மனம் நெகிழ்விப்பது சிறப்பு. தகப்பன்சாமிகளை வாழும் காலத்தில் கொண்டாடாது தவிர்த்த, அல்லது ஆராதிக்கத் தெரியாத அத்தனை உள்ளங்களையும் ஏங்கச்செய்யும் அற்புதமான உரை.

கனவு ப்ரியனின் கதைகளில் மனம் பாதிக்கும் ஒரு பொதுவான விஷயம், பணிநிமித்தம் தத்தம் சொந்த மண்ணையும், உறவுகளையும் விட்டுப்பிரிந்து அயல்மண்ணில் வாழவேண்டிய சூழலில் சிக்கியிருக்கும் மனிதர்களின் மனப்போக்கு. சின்னதாகவோ.. பெரியதாகவோ.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலட்சியம்.. அதை அடையவேண்டி அவர்கள் ஓடும் ஓட்டம்.. குறுக்கிடும் இன்னல்கள்… தாண்டும் தடைகள்.. சிலருக்கு அவர் லட்சியத்தை அடையுமுன்னரே வாழ்க்கை முடிந்துபோய்விடுகிறது. சிலருக்கோ லட்சியம் தன் உருவை மாற்றிக்கொண்டே இருக்கிறது… வாழ்க்கை இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது.. இன்னும் சிலருக்கோ லட்சியம் எது என்பதே உருத்தெரியாமல்.. கண்டறிய இயலாத லட்சியத்தை காணாப்பெருவெளியில் கண்டறிவதே லட்சியமாய்… எத்தனை விதமான கதாமாந்தர்களை நம் கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார்…

வீடு துறந்தவன், ஊரைத் துறந்தவன், நாடு துறந்தவன், நல்வாழ்க்கை துறந்தவன், உறவு துறந்தவன், உண்மை துறந்தவன், மகிழ்வைத் துறந்தவன், மானத்தைத் துறந்தவன் என்று துறவு சூழ் உலகின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கதைக்குள் தன்னிலையாகவோ, படர்க்கையாகவோ நமக்கு புத்தகம் முழுக்கப் பரிச்சயப்படுத்தியபடியே இருக்கிறார். ஆச்சர்யப்படத்தக்க விதமாய் எந்தச் சிறுகதையுமே அவலச்சுவையூட்டுவதாய் இல்லாது, நிர்பந்திக்கப்பட்ட வாழ்வை நெஞ்சத் துணிவுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதாகவே அமைந்திருப்பது சிறப்பு. ஜைனப் அல் பாக்கர், பிலிப்பைனி பெண் ஜூவானா, சமீமா, வித்யா விஜயராகவன் போன்ற தன்னம்பிக்கைப் பெண்களை வாசிக்கையில் மனம் நிறைவது உண்மை.

முதல் கதையாக இந்த மடம் இல்லைன்னா சந்த மடம் – ஐயப்பன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட கையோடே, கதைத் தலைப்பு நினைவுக்கு வந்து முடிவை யூகிக்க வைத்துவிடுகிறது. ஐயப்பன் போன்ற தன்னலமற்ற, வீரியமிகு குணாதிசய மாந்தர்களை ஒரு இடத்தில் கட்டிப்போட்டு வைப்பது என்பது வெள்ளத்தை அணைபோட்டுத் தடுத்துவைப்பதைப் போன்றதுதான். நாம் வழியுண்டாக்கித் தரவில்லையெனில் என்றாவது ஒருநாள் அதுவே கரையுடைத்துத் தனக்கானப் பாதையில் பயணப்பட்டுவிடும்.

கூழாங்கற்கள் கதையில் ஒரு வெளிநாடு வாழ் தகப்பனின் பிரிவுத்தவிப்பும், பணியிடத்தில் உண்டாகும் சிக்கல்களை ஆற்ற வழியில்லாத வெறுமையும் தனிமையும் மிக அழகாகக் காட்டப்படுகிறது. இறுதிவரை படபடப்போடு வாசிக்கவைத்த கதை. சுபமாய் முடித்ததில் திருப்தி.

களிமண் வீடு கட்டிய அனுபவத்தை நகைச்சுவையோடு சொல்லியிருப்பது நல்ல ரசனை. இறுதிவரை ஏதோவொரு எதிர்பாராத் திருப்பத்தை எதிர்பார்த்தே கதையை நகர்த்திய மனத்துக்கு இறுதியில் நானே ஒரு குட்டுவைத்தேன். நெகிழவைத்தக் கதை குண்டு பாகிஸ்தானி. உருவு கண்டு குறள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வடிவு போன்ற கதாமாந்தர்களை நாமும் நம் வாழ்க்கையில் சில தருணங்களில் எதிர்கொண்டதுண்டு. ஆடுகள் மீது கொண்ட பற்றும் பாசமும் ஆட்களை விட்டு அவளை விலகச்செய்து ஒரு மனநோயாளியாகவும் மாற்றியிருக்கிறதென்றால் அந்த ஆடுகள் அவள் பிரிவை எண்ணிக் கண்ணீர் விடுவதில் ஆச்சர்யம் என்ன?

மேட் இன் சைனா கதையில் வரும் கல்லூரி கால ப்ராஜக்ட் அனுபவம் அப்படியே என்னுடைய பாலிடெக்னிக் ப்ராஜெக்ட் அனுபவத்தைக் கிண்டிக்கிளறி வெளிக்கொணர்ந்து பழையநினைவுகளில் மூழ்கடித்துவிட்டது. நெற்றித்தழும்புக்குப் பின்னாலிருக்கும் கதை சுவாரசியம். வானமும் கடலும் பயணிக்கதான் லாயக்கு. மற்றபடி தரைதான் எப்போதும் சுகம் என்ற வரிகள் ஆழமாய் மனம் தைக்கும் உண்மை!

வரப்போகும் ஒரு பேரிழப்பைத் தடுக்க ஒரு தட்டானால் முடியக்கூடுமானால் இயற்கையின் சின்னச் சின்ன சமிக்ஞைகளும் நமக்குக் கற்றுத்தரும் பாடம் எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை உப்புக்காற்று கதை மூலம் உணர்த்தியிருப்பது சிறப்பு. இனி ஒரு விதி செய்வோம் கதையை, இயற்கையின் மாபெரும் மருத்துவப் பெட்டகம் குறித்த நம் அறியாமையைத் தட்டியெழுப்பும் ஒரு கதையாகப் படைத்துள்ளது அருமை. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி குறித்த நெருடல் ஒரு பக்கம் இருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளி நம்முடைய பாரம்பரியப் பெருமையைப் பேசும் ஒரு அழகிய ஆவணமாக மிளிர்கிறது இச்சிறுகதை.

அயல்நாட்டு வாழ்க்கையில் எப்போதும் காசு காசு என்று பணம்பிடுங்கும் மனைவியோடு எரிச்சலும் சலிப்புமாய் இல்லறம் நடத்துபவரையும் திருமண பந்தம் ஏதுமில்லாமலேயே பந்துக்களுக்கு உதவி செய்து அதில் ஆத்ம திருப்தி காண்பவனையும் ஒரே கதையில் காட்டி வாழ்க்கையின் இருவேறு கோணங்களைக் காட்டும் கதை காட்சிப்பிழை.

மனைவிமக்களைப் பிரிந்து வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவனுக்கு, மனைவியின் பணத்தேவை மற்றும் விளக்கம்தரப்படாத நடத்தைகளின்பால் இயல்பாய் எழும் மனக்குடைச்சல் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது ரபீக் @ ஜிமெயில்.காம் கதையில். இறுதியில் கதாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல பெரிய அசம்பாவிதங்களைத் தடுக்க சில சிறிய விபத்துகள் தேவைதான் என்றாலும் இரண்டிலுமே பாதிக்கப்படுவது சமீமா போன்ற அப்பாவி ஜீவன்களே என்னும்போது வருத்தமெழாமல் இல்லை.

இறுதிவரை மர்மக்கதை போன்ற திகிலுடன் வாசிக்கவைத்த கதை பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா? வியக்கவைக்கும் பல அறிவியல் சங்கதிகளை பல கதைகளிலும் போகிறபோக்கில் அநாயாசமாக அள்ளித்தெளித்துவிட்டுப் போகிறார். வியப்பு மறைய நமக்குதான் நேரமெடுக்கிறது.

அவரு அனில்கும்ளே மாதிரி கதையை வாசிக்கத் துவங்கிய சற்று நேரத்திலேயே எனையறியாது என் இதழோரம் அரும்ப ஆரம்பித்த புன்னகை, அடுத்தடுத்த பத்திகளில் அடக்கமுடியாத சிரிப்பாக விரிய.. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். ‘நீ ஆசை காட்டி என்னை மோசம் செஞ்சிட்டே இந்த டயலாக்கை தாண்டுவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது.

வாழ்வின் பிடிப்பறுந்த நிலையில் முதியோர் இல்லத்தில் வாழும் வயோதிகர்களின் வேதனை தரும் தனிமை ஒரு புறம்… கணவன் மனைவி இருவருமே பணிக்குச் செல்லவேண்டிய சூழலில் குழந்தைகளைப் பரிவுடனும் அக்கறையுடனும் பார்த்துக்கொள்ள இயலாத சூழல் இன்னொரு புறம். இரண்டு பிரச்சனைகளுக்கான தீர்வையும் ஒற்றைப்புள்ளியில் பிணைக்கும் அழகானதொரு கதை பனங்கொட்டை சாமியார்.

மனத்துக்கு நெருக்கமாய் வரும் ரசனையான வரிகள் இதம். உதாரணத்துக்கு மனிதரில் இத்தனை நிறங்களா கதையில் கேம்ப்ரிட்ஜ் பற்றிக் குறிப்பிடும் போது ஊரே பாலுமகேந்திரா படம் போல காட்சியளித்தது. பாலுமகேந்திராவையும் அவருடைய ஒளிப்பதிவையும் அறியாதவர்களாயிருப்பின் இந்த ஒற்றைவரிக்குள் பொதிந்திருக்கும் அழகியலைப் புரிந்துகொள்ள இயலாது.

வீடு என்பது சில இடங்களில் வீடு என்றும் சில இடங்களில் மிடு என்றும் குறிப்பிடப்படும்போது புரிதலில் மெல்லிய குறைபாடு. மிடு என்பது வட்டாரவழக்காக இருக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி வெகு அழகான இயல்பான எழுத்தோட்டம். எழுத்தோட்டத்துடன் கலந்து ஆங்காங்கே இழைந்திருக்கும் நகைச்சுவை சிறப்பு. சில இடங்களில் முறுவல் சில இடங்களில் குபுக்கிடும் சிரிப்பு. கடிநகையோடு சில இடங்களில் நையாண்டியும் வஞ்சப்புகழ்ச்சியும் தலைகாட்டிப்போவதும் சிறப்பு.

நூலை வாசித்து முடிக்கையில், வளைகுடா நாடுகளில் நாமே பயணித்துவந்ததைப் போன்ற உணர்வைத் தருவதோடு, அங்கு வாழும் மாந்தரின் மனவியல்புகளை, சின்னச்சின்ன மகிழ்வுகளை, எதிர்கொள்ளும் சங்கடங்களை, வேதனைகளை, தனிமைத்துயரை, ஏக்கத்தை, ஆதங்கத்தை என அனைத்து உணர்வுகளையும் மிக அற்புதமாய் பதிவுசெய்து நம்மை அச்சூழலில் இருத்தியிருப்பது போல் உணரச்செய்வதே இந்நூலின் வெற்றி.

கண்களை ஈர்க்கும்வண்ணத்தில் அட்டைப்பட ஓவியமும், வாசிக்கத் தோதான இடைவெளிவிட்டு, கண்ணை உறுத்தாத எழுத்துவடிவமும் பார்த்தவுடனேயே வாசிக்கத்தூண்டும் அழகு. குறுக்கிடும் சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்துப் பார்த்தால் குறையென்று சொல்ல எதுவுமில்லை.  மனமார்ந்த வாழ்த்துகள் கனவு ப்ரியன்.

&&&&&&

15 March 2016

ஆறுகாலிகளும் எட்டுக்காலிகளும்..


இப்பூவுலகில் பூச்சிகள் இல்லாத இடமே இல்லை. வெப்பம் தகிக்கும் பாலைநிலம் முதல் கடுங்குளிர்ப்பிரதேசமான அண்டார்ட்டிகா வரை அனைத்து இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள உயிரினம் பூச்சியினம். உலகமுழுவதுமுள்ள பூச்சியினங்களில் இதுவரை அறியப்பட்டுள்ளவை சுமார் ஒரு மில்லியன்தானாம். இன்னும் பத்து மில்லியன் பூச்சியினங்கள் அறியப்படாமல் இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் வாழ்நாளில் அனைத்தையும் கண்டறிவது சாத்தியமில்லை எனினும் என் பார்வைக்குத் தென்பட்ட சில பூச்சிகளை இங்கு உங்கள் பார்வைக்கும் வழங்குவதில் சிறுமகிழ்ச்சி.  


தேனீ (honey bee)

fiery skimmer dragonfly female


குதிரை ஈ (horse fly)


நீலவால் ஊசித்தட்டான் (common bluetail damselfly)

பொன்வலை சிலந்தி - வயிற்றுப்பக்கம்  (golden orb weaver)

இலைப் பாச்சை (green bush cricket)

தோட்டச்சிலந்தி  (garden orb weaver)

நீள்கால் பூச்சி (long legged fly)

கொள்ளைக்கார ஈ (robber fly)

பொன்வலை சிலந்தி (golden orb weaver)

பச்சை ஈ (green bottle fly)

ஈ (house fly)

பூ ஈ (hoverfly)

பெல்லா அந்துப்பூச்சி (bella moth)

மற்றப் பூச்சிகளின் லார்வா மற்றும் கூட்டுப்புழுக்களின் உடலில்
முட்டையிட்டு இனம்பெருக்கும் ஒருவகைக் குளவி
(black-tipped orange ichneumon wasp)

26 February 2016

ஓவியக்கிறுக்(கு)கல்


என் பதின்ம வயதிலும் திருமணமான துவக்க வருடங்களிலும் நான் கிறுக்கிய சில ஓவியக்கிறுக்கல்கள்  இவை.  படம் வரைவதில் ஆர்வம் உண்டு என்றாலும் முகங்கள் தவிர வேறெதுவும் தன்னிச்சையாய் வரையத்தெரியாது. இங்கிருக்கும் எல்லாவற்றையும் எதையோ பார்த்துதான் வரைந்திருக்கிறேன். இந்தியாவை விட்டு வரும்போது உடன்கொண்டுவரமுடியாத பொக்கிஷங்களை பாதி பிறந்தவீட்டிலும் பாதி புகுந்தவீட்டிலுமாய் பத்திரப்படுத்தி வந்தேன். இப்போது நானே அவற்றை மறந்த நிலையில் என்னை வந்து சேர்ந்திருக்கிறது புகுந்த வீட்டில் பத்திரப்படுத்திய பொக்கிஷங்களுள் ஒன்று.  வரையப்பட்ட தாள்கள் மக்கிக்கொண்டிருக்கும் நிலையில் அவற்றை ஆவணப்படுத்தும் பொருட்டும், என் மகிழ்தருணங்களை உங்களோடும் பகிரவேண்டியும் .. இங்கு கொஞ்சம். 


அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் 
ஏர் இந்தியா மகாராஜா..




துஷ்யந்தனின் வரவுக்காகக் காத்திருக்கும் 
சகுந்தலை என்று நினைவு.. 



அந்நாளைய பொங்கல் வாழ்த்து அட்டையிலிருந்து... 



 ஓவியர் ம.செ. அவர்களின் கையொப்பத்தை மட்டும்
விட்டுவைத்திருக்கிறேன் போலும். 



வளையல், தோடு மட்டுமல்லாது, 
கொண்டையிலும் தன் பெயரை நாட்டிய அந்நாளையத் தாரகை.  



புடவை விளம்பரமாக இருக்கலாம்... 



மணிமேகலையா.. 
அல்லது வேறேதும் சரித்திரக் கதாபாத்திரமா 
சரியாக நினைவில்லை. 



இந்தப்பாப்பாவை பலரும் அறிந்திருப்பீர்கள்.. 
நிர்மா விளம்பரத்தில் வருமே.. 
அந்தப் பாப்பாவைப் பார்த்துதான் வரைந்தேன். ஆனால் என்ன...  குண்டுப்பாப்பாவை ஒல்லிப்பாப்பா ஆக்கிவிட்டேன். 
(அந்த நிறுவன உரிமையாளரின் மகளும் நிர்மாவின் விளம்பர மாடலுமான நிருபமா இளவயதிலேயே மறைந்துவிட்டார் என்றறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது)



இந்த கோபிகையைக் கண்டெடுத்த புத்தகம் கோகுலம். 



வண்ணம் உதிர்ந்துகொண்டிருக்கும் நிலையிலும் 
நடையில் என்னவொரு ஒய்யாரம்.



இந்தப்பாப்பாவை எத்தனை முறை வரைந்திருப்பேன் என்று 
எனக்கே தெரியாது. மிகவும் பிடித்த படம். ஒரிஜினல் படம் 
பிரமாதமாக இருக்கும். முகத்தைக் காட்ட மறுக்கிறாளே 
என்று இவள்மேல் செல்லக்கோபம் வருவதுண்டு. 



காமதேனு.. இதுவும் கோகுலம் புத்தகத்தில் பார்த்து 
வரைந்தது என்று நினைவு. 



என்ன, எல்லாவற்றையும் ரசித்தீர்களா? 
 விடைகொடுக்க வந்திருக்கிறார் ஏர் இந்தியா மகாராஜா.. 
(இப்போது மாற்றிவிட்டார்களாமே இவரை.. 
யுவராஜாவிடத்தில் அவ்வளவாக ஈர்ப்பில்லை.. 
மகாராஜாவிடம் இருக்கும் பணிவு + கம்பீரம் அவரிடம் துளியும்  இல்லை) 



இந்தப் பொக்கிஷங்களைப் பத்திரமாய்ப் பாதுகாத்து ஒப்படைத்த 
கலையரசி அக்காவுக்கு என் கனிவான நன்றி. 




20 February 2016

ஆடும் குதிரை அழகுக்குதிரை..



ஆடும் மரக்குதிரைகளை அறியாதவருண்டா? பணக்கார வீடுகளில் இருக்கும் அல்லது பரம்பரை பரம்பரையாய் சில வீடுகளில் இருக்கும். அதிலாடும் பாக்கியம் பெற்றோர் நம்மில் சிலரே உண்டு. அந்நாளைய திரைப்படங்களிலும் இந்த ஆடும் குதிரைகள் இடம்பெற்றதுண்டு.



சில வருடங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு இயந்திரக் குதிரை பொம்மைகளைப் பரிசாக அளித்ததைப் பார்த்தபோது அட, அந்த ஆடும் மரக்குதிரைகள் இப்படி மறு உருவாக்கம் பெற்றுவிட்டதா என்று எண்ணி வியந்தேன். அதன்பிறகு இங்கு ஆஸியிலும் ஷாப்பிங் மால்களில் திடீரென இந்தப் பொம்மைக்கடைகள் முளைத்து குழந்தைகள் மாடு, குதிரைகளில் உற்சாகத்துடன் வலம்வருவதைப் பார்த்தேன். 



புதிய கண்டுபிடிப்பு என்றுதான் நினைத்திருந்தேன் இந்தப் பாடலை சமீபத்தில் பார்க்கும்வரை… 1962-லேயே தென்னிந்திய திரைப்படமொன்றில் இடம்பெற்றிருக்கிறதே ஆடும் மரக்குதிரையும் உந்தியோடும் இயந்திரக்குதிரையும். இரண்டும் போதாதாம் அந்தச் சின்னக்குட்டிக்கு.. மாமன் முதுகில் ஆனை ஊர்வலமும் அழகு.



கம்பீரத்துக்கும் பாய்ச்சலுக்கும் பெயர் போன குதிரைகள், வீரத்திற்கும் சவாலுக்கும் அடையாளமாய் படைகளில் உயிரோடும், அழகுக்கும் ஒய்யாரத்துக்கும் அடையாளமாய் பொய்க்கால் குதிரையாட்டம் என கலைத்துறையில் உணர்வோடும் காலங்காலமாக இடம்பெறுவது சிறப்பென்றால் விளையாட்டுக்கும் ஏதுவாக குழந்தைகளுக்குதான் எவ்வளவு விதவிதமானக் குதிரைப்பொம்மைகள்.. பார்த்து ரசிக்கலாம் வாங்க. 
















(படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே)

11 February 2016

வணக்கமும் வாழ்த்தும்


இன்று எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் நல்லாசானும் வழிகாட்டியுமான எங்கள் மாமனார் திரு.சொ.ஞானசம்பந்தன் அவர்களுடைய 90-ஆவது பிறந்தநாள். இறகுப்பேனா காலம் தொட்டு இன்றைய கணினிக்காலம் வரை எழுத்தோடு இணக்கமாயிருப்பவர். வாசிப்பின்றி நகராது அவரது நாள் ஒவ்வொன்றும். அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரைப்பற்றிய சிறப்பான தகவல்களை இங்கு அனைவரோடும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.



11-02-1926-ல் புதுச்சேரியின் காரைக்காலில் பிறந்தவர். பிரெஞ்சு மொழிவழி மேனிலை வரை பயின்று, அரசு தொடக்கப்பள்ளியில் பிரெஞ்சு ஆசிரியராய்ப் பணியாற்றியவர். பணியாற்றும்போதே தமிழைக் கற்று, புலவர் பட்டமும் பெற்று அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளல், ஓய்வுக்குப் பிறகான உளச்சோர்வை விரட்டும் உத்திகளுள் ஒன்று என்று அறிந்த அவர், புதிதாய் இந்திமொழியைக் கற்றுத்தேர்ந்ததோடு சமஸ்கிருத மொழிபற்றிய அறிமுக வகுப்புகளுக்கும் ஆர்வமாய் சென்றுவந்தார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ந்த ஞானம் கொண்ட அவர், தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?, லத்தீன் இலக்கிய வரலாறு, பிரெஞ்சு இலக்கிய வரலாறு, மாப்பசான் சிறுகதைகள், சிங்க வேட்டை, மறைந்த நாகரிகங்கள் என இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்குமுன் நன்கு திட்டமிடலும் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து தெளிதலும் அவசியம் என்பதை அறிவுறுத்தியவர். வரவுசெலவுகளைத் துல்லியமாய்க் கணக்கிட்டு வரவைக் கூட்டி செலவைக் குறைக்கும் உத்தியைக் கற்றுத்தந்தவர். சேமிப்பும் சிக்கனமும் சில்லறைகளுக்கு மட்டுமல்ல.. மின்சாரம், தண்ணீர், காகிதம் என்று நாம் புழங்கும் ஒவ்வொன்றுக்கும் தேவை என்பதை செயலால் உணர்த்தியவர். விஷச்செடிகளான பார்த்தீனியத்தை அழிக்க சவக்கார நீர் உதவும் என்று அறிந்த நாள்முதலாய், துணி ஊறவைத்த சோப்புநீரை வீணாக்காமல் வாளியில் சுமந்துகொண்டுசென்று தெருவோரம் மண்டிக்கிடக்கும் பார்த்தீனியச்செடிகளின் மேல் ஊற்றிவருவார்.

குழந்தைகளோடு விளையாடும்போது குழந்தையாகவே மாறிவிடுவார். பேரப்பிள்ளைகளுக்கு நிகராக… சொல்லப் போனால் இன்னும் சிலபடிகள் இறங்கி விளையாடுவார். 1+1 எவ்வளவு என்பாள் பேத்தி. 11 என்பார் தாத்தா. ஐயோ தாத்தா உங்களுக்கு கணக்கே தெரியல.. இருங்க நான் சொல்லித்தரேன் என்று கணக்கு சொல்லிக்கொடுப்பாள். பேரப்பிள்ளைகளிடத்தில் பயில்வதற்காகவே தன்னை ஏதுமறியாப் பேதையாக்கிக் கொள்ளும் பெருமைமிகு தாத்தா அவர்.

நேற்று என்ன குழம்பு என்று என்னைக் கேட்டாலே பெரிதாய் யோசிப்பேன். ஆனால் பல வருடங்களுக்கு முன் தன் பால்யத்தில் நிகழ்ந்தவற்றைக்கூடத் துல்லியமாய் நினைவில் வைத்திருந்து குறிப்பிடும் எங்கள் மாமனாரின் நினைவாற்றலை வியக்காமல் இருக்கமுடியவில்லை. எங்களோடு பகிர்ந்தவை யாவும் பாழாய்ப்போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அவருடைய சம்மதத்துடன் நானும் என் கணவரும் அவருக்கென ஒரு வலைப்பூவைத் துவக்கினோம். ஆரம்பத்தில் தாளில் அவர் எழுதித்தர நான் தட்டச்சு செய்து பதிந்தேன். நாளடைவில் தானே தட்டச்சு செய்து பதிவை வெளியிடக் கற்றுக்கொண்டுவிட்டார். இப்போது வாரந்தவறினாலும் வலையில் அவருடைய பதிவுகள் வரத்தவறுவதில்லை.

வியட்நாம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றிய அனுபவங்கள், ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மேற்கொண்ட பயண அனுபவங்கள், அந்நாளைய கப்பல் பயணம் முதல் மாட்டுவண்டிப் பயணம் வரையிலான அனுபவங்கள், அந்தக்கால வாழ்க்கை முறை, அந்நாளைய விளையாட்டுகள், அந்நாளைய திருமண முறை, தேர்தல் முறை, அந்நாளைய பழமொழிகள் இவை தவிர கதைகள், நகைச்சுவைப் பதிவுகள், தமிழ் இலக்கியப் பகிர்வுகள், ரசிக்கவைக்கும் பல சுவையான பிரஞ்சு ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என பல்சுவைப் பதிவுகளால் நிரம்பியது இவரது தளமான இலக்கியச்சாரல் 

எழுத்தயர்வு எனக்கேற்படும்போதெல்லாம் மாமாவை எண்ணிக் கொள்வேன். இந்த வயதிலும் அவர்கள் எழுதுவதையும் வாசிப்பதையும் தொய்வின்றித் தொடர்வதை நினைத்த மாத்திரத்திலேயே என் சோர்வெலாம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடும். நல்லாரோக்கியத்துடனும் நெஞ்சம்நிறை மகிழ்வுடனும் அவர் இன்னும் பலகாலம் நம்மோடு இனிதே வாழவேண்டும் என்ற பேராவலோடு என் மனம்நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.