18 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 7


ஒப்பனை மிகுந்த கட்டிலின்மேலே ஒப்பனையில்லா ஓவியமாய்த் திகழும் தலைவியைக் காண்போம், வாருங்கள். 
 
நெடுநல்வாடைப் பாடல்
மடைமாண் நுண்இழை பொலிய தொடைமாடன்
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பல்மயிர் விரைஇ, வயமான்
வேட்டம் பொறித்து வியன்கண் கானத்து
முல்லைப் பல்போது உறழப் பூரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய்அணை இட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூமடி விரிந்த சேக்கை (124-135)

 

பள்ளியறைக் கட்டிலின் மேலே
துல்லியமாய்ப் பொருத்தப்பட்ட
வல்லிய மூட்டுவாய் மூலம்
மெல்லிய நூலிழை தன்னில்
தேர்ந்தெடுத்த முத்துக்களைக்
கோத்தெடுத்து மாலையாக்கி
பார்த்தோர் வியக்கும்வண்ணம்
பல்வரிசையாய் அலங்கரித்து
சாளரமெனவே சரம்சரமாய்ப்
பேரழகுடனே தொங்கவிட்டு....
 

 
புலியின் வரிகளின் வண்ணம் போன்ற
புதுமலர்களாலான பூந்தட்டைப்போன்று
ஒளிரும்  தகடுகளை ஒருசேரக் கொண்டு
வெளிப்புறம் பதித்த கட்டிலின் மேலே
பல்லுயிர்  உருவிய உரோமம் கொண்டு
பல்வண்ண உருவ விரிப்பு நெய்து
வேட்டையாடும் சிங்கம் போ
வீரமிகு செயல்கள் பலவும் பொறித்து…. 
 

காட்டுமுல்லைப் பூக்களோடு
தோட்டமளித்தப் பூக்களையும்
கட்டிலினின்மேலே இறைத்து,
பட்டினும் மெல்லியதாய்
மென்போர்வை மேலே விரித்து
முன்னிலும் சிறப்புறச் செய்திடவே
 

 
பெண் அன்னப் பேடுதன்னை
பேருவகையோடு புணர்ந்ததான
வெண் அன்னச் சேவலுதிர்த்த
மென்சூட்டு இறகுகளடைத்த
மென் திண்டு மெத்தைகளிரண்டு,
பஞ்சிட்ட தலையணையோடு
பஞ்சுபோலும் பூவிதழ்கள்போலே
கஞ்சிட்டு வெளுத்த விரிப்பு,
பஞ்சணை போர்த்தி நின்று
நெஞ்சத்தை அள்ளும்வண்ணம்
மஞ்சத்தை அலங்கரிக்க..... 

ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி
நெடுநீர் வார்குழை களைந்தென, குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து
வாளைப்  பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்   (136 – 147)
 
தலைவனைப் பிரிந்து வாடும்
தலைவியின் நிலையைப் பாரும்! 


 
முத்தாரமும் இன்னபிறவும்
கொத்தாகத் தழுவியிருந்து
அழகுபடுத்திய அவள் மார்பகத்தே
தாலியொன்றே தனித்துத் தொங்க..... 

கலைந்துவீழும் கேசமும்
கவனிப்பின்றி காற்றிலலைய.... 


அலங்கார நெடுங்கம்மல்
ஆடல்புரிந்திருந்த செவித்துளையில்
அளவிற்சிறிய தாளுருவியெனும்
குறுங்கம்மல் குடியிருக்க..... 

 


பொலிவுறு பொன்வளை போக்கி
வலம்புரி வளையும் காப்பும்
வடிவுடைக்கரத்தை நிறைத்திருக்க.... 
 


வாளைமீன் வாய்பிளந்தாற்போல
வளைந்திருக்கும் நெளிமோதிரத்தை
முன்னர் அணிந்திருந்த சிவந்த விரலில்
சின்னஞ்சிறிய மோதிரம் இருக்க...... 

பூம்பட்டாடையுடுத்தி பூரித்த இடையின்று
நூலாடை தரித்து நூலாய் நைந்திருக்க.... 
 

வண்ணம் தீட்டா வடிவம் போல்
ஒப்பனையில்லா ஓவியம் போல்
ஓய்ந்துகிடந்தாள் தலைவியவள்
ஒப்பனை மிகுந்த கட்டிலின் மேல்!
***********************************
படங்கள் நன்றி: இணையம்
 
 

14 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 6

அரண்மனையின் உள்ளே ஆட்சி செய்த அற்புத எழிலையும் செல்வச் செழிப்பையும் காண்போம் வாரீர்.
 
நெடுநல்வாடைப் பாடல் ((101- 107)
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்தும் ஐஅகல் நிறைய நெய்சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் 

 

யவனரின் புதுமைக் கலைநயத்தையும்
யாவினும் மேவிய எழில்நலத்தையும்
யாமம் முழுவதும் எடுத்துரைப்பர்
யவ்வனமிகு பாவைப்பதுமையர்! 
 நளினம் நிறைந்த அவர்தம்
வளமான கையேந்திய விக்குகளில்
அளவோடு நெய்யூற்றி அடர்ந்த திரியேற்றி
நிமிர்ந்தெரியும் பொன்சுடர் யாவும்
அணைந்துபோகுமென அறியுந்தோறும்
எண்ணெயிட்டு எரிய ஊக்கியும்
எங்கெங்கும் இருள் நீக்கியும்
மங்கிய இரவு முழுவதும்
மாளிகையை ஒளிரச்செய்தனர்.
 
ந்தப்புறம் இருக்கும் அந்தப்புரம் தன்னில்
அரசனை அல்லாது அந்நிய ஆடவர் செல்லாது
பலத்தக் காவலிருந்தார், வலுத்தக் காவல்வீரர்!
  
வரை கண்டன்ன தோன்றல, வரைசேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி அன்ன விளங்கும் கதைஉரீஇ
மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்
செம்பு இயன்றன்ன செய்வுஉறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்புஇன் நல்இல் (108 – 114)

 

மாமலையென எழுந்தோங்கிய  மாளிகையதனை,
மாமலை சூழ்ந்த வானத்துவில்லென
மாளிகை சூழ்ந்த வண்ணப் பூங்கொடிகள் அசைய... 

பளபளக்கும் வெள்ளிபோல் பலவிடங்கள் பொலிந்தும்
கருகருக்கும் நீலமணிபோல் கரிய தூண்கள் எழுந்தும்
செம்பினாற் செய்தாற்போன்ற பெருஞ்சுவரில் காணும்
கொம்பற்ற கொடியோடு கோடிமலரோவியம் யாவும்
காட்டியதே நல்லதொரு இல்லம் கொண்ட
கவின்மிகு கர்ப்பக்கிரகம் இதுவேயென்று.

 தசநான்கு எய்திய பணைமருள் நோன்காள்
இகல்மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதவல்
பொருதுஒழி நாகம் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர்உளிக் குயின்ற ஈர்இலை இடைஇடுபு
தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்
புரை திரண்டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருந்தி அடிஅமைத்து
பேர்அளவு எய்திய பெரும்பெயர் பாண்டில், (115 – 123)

 



 முரசறையும் பெரும் போர்க்களத்தில்
முரசனைய பெருங்கால்களோடும்
ஏற்றமிகு வரி ஓடும் நெற்றியோடும்
போற்றத்தக்க வெற்றி வேட்கையோடும் 

நாற்பதாண்டு பூரணம் பெற்ற
சீற்றமிக்க வாரணம் ஒன்று
வீழ்த்தப்பட்ட காரணம் கொண்டு
வீழ்ந்துவிட்ட கூர்தந்தம் கொண்டு 

நேரிய கலை பயின்ற சிற்பி
கூரிய உளிகொண்டு செதுக்கிய
ஈரிலைகளின் இடையே....

 



இடைபெருத்த கர்ப்பிணியின்
புடைத்தெழுந்த மார்பையொத்து
கடைந்தெடுத்த மரக்குடத்தை
இடையேந்திய எழிலுடனும்
பூண்டின் வலிய தலைபோன்று
வலிமை பூண்ட கால்களுடனும்
பரந்து விரிந்து திகழ்ந்தது
பாண்டில் என்னும் வட்டக்கட்டில்!
**************************************
படங்கள் நன்றி: இணையம்

10 June 2013

சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!

 
 
சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!
இருள் போர்த்திய இரவின் அமைதியில்
ஆகாயவெளியெங்கும் செவிமடுத்துக்கிடப்பினும்
எண்ணற்ற குரல்வளையினின்று எழும் இன்னிசையை
ஏனோ நம்மால் கேட்கவியலவில்லை.
சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!
 
சொர்க்கத்தில் கேட்டிருக்கலாம்
சொக்கவைக்கும் அவ்வினிய கானம்!
பூமிக்குத் தெரியவேண்டியது இதுதான்
எண்ணிலா பனித்துளியாய் இறங்குவதெல்லாம்
விண்மீன்களின் மௌன அழுகைத்துளிகளே!
சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!
 
மேலே தேவர்கள்கீழே மனிதர்கள்
நடுவிருக்கும் ஆகாயத்தில்தான் நடக்கிறது
கானமும் கரையலும்!
கானம் எப்போதும் உயரே சென்றிட,
கண்ணீர் மட்டும் பொழிகிறது கீழே!
சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!

 ********************************

(மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் எழுதிய kehthe hain tharee gathe hain என்னும் இந்திக் கவிதை. அதீதத்தில் வெளியானது.)

 

2 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 5

அரசனின் அரண்மனையைத் தேர்ந்த அனுபவமும் தொழிலறிவும் வாய்ந்த கலைஞர்கள் அமைத்த விதத்தை அழகுபட விவரிக்கும் வரிகள்...

நெடுநல்வாடைப் பாடல் (72-81)

……………………………………மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து
ஒருங்குஉடன் வளைஇ, ஓங்குநிலை வரைப்பின்
பருஇரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி, இணைமாண்டு


விரிந்த கதிர் பரப்பும் கதிரவன்
மேற்கு நோக்கி மேற்செல்கையில்
ஒருபக்கம் நிழல் சாரா வேளையில்
இருகோலினை நிலத்தில் ஊன்றி
வருநிழல் மாறாதிருக்கும்
நல் உச்சிப்பொழுதொன்றில்
நூல் படித்த அறிஞர்கள்
நூல் பிடித்து திசை குறித்து
திசை குறிக்கும் தெய்வந்தொழுது
தெய்வநிகர் மன்னனுக்கு
மனையும் வாயிலும் மண்டபமும் வகுத்து
வகுத்ததனைத்தையும் மதிலால் வளைத்து
வளைத்த மதிலின் மத்தியில்
அரக்கு வண்ணம் கொண்டு
பருத்தக் கதவுகள் இரண்டு
இரும்பாணிகள் கொண்டு நிலையாய்
இணைத்துப் பொருத்தினர் நிலையோடு!

நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்து
போதுஅவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றுஎழு கொடியொடு வேழம் சென்றுபுக
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில் (82-88) 
 
உத்தம நட்சத்திரமாம்
உத்திரத்தின் பெயர்கொண்ட
உத்திரப் பெருமரத்தாலான
அக்கதவுகளின் இருமருங்கிலும்
மொக்கவிழும் குவளைப்பூப்போலும்
பிடிகளை  அழகுபடப் பொருத்தி
வளியோ உளியோ நுழையாவண்ணம்
துளியிடைவெளியின்றி முடுக்கினர்,
தேர்ந்த தொழிலறி தச்சர்!  
உயவுக்காய் கடுகின் நெய்தடவி
உயர்ந்திருந்த நிலைகளினூடே
வெற்றிக்கொடியேந்தியபடி
வேழங்கள் நடைபோடும்படி
மலைவாயில் போலே
மதில்வாயில் அமைத்தனர்.
 

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை
பணைநிலை முனைஇய பல்உளைப் புரவி
புல்உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிந்துவீழ் அருவிப் பாடுவிறந்து,அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல்இயல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்இசை
நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் (89-100)

திருமகள் உறைந்தாற்போல்
தீதேதும் அணுகாத,
குறுவெண்மணல் பரப்பிய
குறைவிலா முற்றத்தில்
நீள்வெண்மயிர் கொண்டு
ஆண் கவரிமான் ஒன்று
குறுநடை பயிலும் அன்னம் துரத்தி
குறும்பாய்த் தாவித்திரியும்
அரண்மனை முன்வாயில்!
 


கொட்டிலின் தனிமை வெறுத்து
எட்டிய புல்லும் தவிர்த்து
பிடரிமயிர்நிறைப் புரவியொன்று
கதறித் துயர்மிகக் கனைக்க.... 




நிலாவோடு கொற்றவனும்
உலாவரும் முற்றமதில்
வாய்பிளந்த மீன்குழாய் வழியே
வான் பிளந்த மழைநீர் வழிய... 




அருவியென அதை அதிசயித்தபடி
அருகிலே செருக்கோடு திரியும்
தோகைமயிலின் அகவல் கேட்போர்
ஊதுகொம்பின்னிசையென்றே மருள...
 
ஆர்ப்பரிக்கும் மழையின் பேரொலியால்
ஆரவாரிக்கும் மலையின் எதிரொலிபோல்
ஆரவாரித்தது கோவில்,
அரசனெனும் கோவின் இல்!

************************************************

படங்கள்: நன்றி இணையம்