17 May 2012

கவிதைக்கொத்து!


பறவையில்லாக்கூடு


பறக்கக் கற்றுக் கொண்டன,
பறவைக் குஞ்சுகள்!
பள்ளி வாழ்வைத் துவங்கிவிட்டனர்,
மழலைப் பிஞ்சுகள்!
வெறுமையாகிப் போயின,
வீடும், கூடும்!

********************** 

பாசம்

விலைபேசி விற்ற பசுவை
தொழுவம் விட்டு வெளியேற்றவிடாமல்
வழிமறித்துக் காவலிருக்கும்
வளர்ப்பு நாய்! 
******************* 
காகிதக் கப்பல்

இந்தப் பெருமழைக்குத்
தாங்குமோ, தாங்காதோ
சிறுமண் குடிசையென்றே
அப்பனும், ஆத்தாவும்
விசனப்படும் விசயமறியாமல்,
ஓடும் நீரில் கப்பல் விட,
காகிதம் கேட்டு
அடம்பிடிக்கின்றனர்,
அவர்தம் அன்புப் பிள்ளைகள்! 
*********************
காத்திருப்புகள்

பொழுது புலர்வதற்காகக்
காத்திருக்கின்றன, பூக்கள்;
பூக்கள் மலர்வதற்காகக்
காத்திருக்கின்றன, தேனீக்கள்;
தேனீக்கள் கொணர்வதற்காகக்
காத்திருக்கிறது, தேனடை;
தேனடை நிறைவதற்காகக்
காத்திருக்கிறான், ஒருவன்;
அவன் வருகைக்காகக்
காத்திருக்கிறது,
அவனது குடும்பம்,
பசித்த வயிறுகளோடு!
****************************
குழந்தையின் தேடல்

ஒவ்வொரு அரிசியிலும்
அதற்கு உண்டானவரின் பெயரிருக்கும்
என்றாள் அம்மா!
தந்தை வாங்கித்தர மறுத்தபின்னும்
தேடுகிறது குழந்தை,
எந்தப் பஞ்சுமிட்டாய்ப் பொட்டலத்தில்
தன் பெயர் இருக்கக்கூடும் என்று!
 *****************************
(படங்கள் தந்துதவிய கூகுளுக்கு நன்றி)

92 comments:

  1. அனைத்தும் உணர்வுபூர்வமான கவிதைகள்.
    பலமணி நேரம் சிந்திக்க வைத்து போகின்றன.
    மனதை படுத்திப் போகும் உங்கள் யதார்த்த வாழ்வின் எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கம் தரும் விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தீபிகா.

      Delete
  2. கொத்தாக அள்ளிக் கொடுத்த அத்தனை கவிதைகளும் அருமை. பாசமும் குழந்தையின் தேடலும் மிகப் பிடித்தன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பிடித்தவற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  3. கவிதை (மலர்) கொத்து கொடுத்திருக்கீங்க கீதா. கொத்திலிருந்த எல்லா மலர்களுமே மணம் வீசுகின்றன. எதையும் விட மனம் வரவில்லை. அருமை. மிக ரசிக்க வைத்த கவிதைகள். அதிலும்... காகிதக் கப்பல் என்கிற மலர்... அதிகமாகவே மணம் வீசுகிறது. பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் பிடித்ததைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் நன்றி கணேஷ்.

      Delete
  4. விலைபேசி விற்ற பசுவை
    தொழுவம் விட்டு வெளியேற்றவிடாமல்
    வழிமறித்துக் காவலிருக்கும்
    வளர்ப்பு நாய்!
    >>
    ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் பாசம், பரிவு நமக்கில்லாமல் போனது ஆச்சர்யமே. பகிவ்வுக்கு நன்றி தோழி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி ராஜி.

      Delete
  5. கவிதைகொத்து
    ம்ம்ம்... சான்சே இல்லங்க செம கலக்கல்

    புகைப்படமும்
    அதற்காக புனையட்ட
    ஆள அர்த்தங்கள் சொல்லும் வரிகளும்
    ஒன்றை குறிப்பிட்டு சொல்ல மனம் தடுமாறுகிறது

    ஒரு
    கதை
    கவிதை
    கட்டுரை வாசிக்கும்போது
    புதிய சொல், சொல்லாடல், சிந்தனை கோட்பாடுகள் பிறக்கும்
    அது முற்றிலும் உண்மை (உணர்ந்தும் இருக்கிறேன் )

    உங்களைபோன்ற நல் தோழமைகளின் பதிவின் வாசிப்பில்

    கவிதை ம்ம்ம் ...(:

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி செய்தாலி.

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  7. முதல் கவிதை அருமை சகோ ..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பிடித்தக் கவிதையைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் நன்றி

      Delete
  8. விசனப்படும் விசயமறியாமல்,
    ஓடும் நீரில் கப்பல் விட,
    காகிதம் கேட்டு
    அடம்பிடிக்கின்றனர்,//அருமை கீதா வரிகளில் வெளிப்படும் வலிகள் மனதை வலிக்க செய்கிறது அருமையான வார்த்தையாடல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும் மிகவும் நன்றி சரளா.

      Delete
  9. பறவையில்லாக்கூடு அருமை. ஆனால் குழந்தைகள் வீட்டில் செய்யும் சேட்டைகளால் பள்ளி எப்போது திறக்கும் என ஏங்கும் பெற்றோர் அதிகம்.பாசம் என் மனதைத் தொட்ட கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மனந்தொட்டக் கவிதையைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் நன்றி விச்சு.

      Delete
  10. கீதாக்கா கவிதைக்கொத்துக்கு முதலில் இந்த வாழ்த்துக்கொத்தை பிடியுங்கள்......
    கவிதைகள் அனைத்தும் அபாரம்...

    பறக்கக் கற்றுக் கொண்டன,
    பறவைக் குஞ்சுகள்!
    பள்ளி வாழ்வைத் துவங்கிவிட்டனர்,
    மழலைப் பிஞ்சுகள்!
    வெறுமையாகிப் போயின,
    வீடும், கூடும்!


    முதல் கவிதையே முத்தான கவிதை, எல்லா வளர்ச்சிக்கு பின்னும் ஏதோ ஒரு வெறுமை நம்மை நிறைக்க தான் செய்கிறது..... அது சந்தோஷமான ஒன்றாய் இருந்தாலும் கூட :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புடன் இட்டப் பின்னூட்டத்துக்கும் நன்றி ரேவா.

      Delete
  11. விலைபேசி விற்ற பசுவை
    தொழுவம் விட்டு வெளியேற்றவிடாமல்
    வழிமறித்துக் காவலிருக்கும்
    வளர்ப்பு நாய்!

    தன் இருப்பிற்க்காய் இதயமற்று செய்த நிகழ்வுக்கு வாய்யில்லா ஜூவனின் அன்பு நமக்கு கற்றுத்தருகிறது பாசத்தை........... நன்றிக்கு மட்டுமல்ல பாசத்திலும் இனி இதன் பெயர் இருக்குமோ

    ReplyDelete
    Replies
    1. அழகான விமர்சனம் ரேவா. மகிழ்கிறேன். நன்றி.

      Delete
  12. இந்தப் பெருமழைக்குத்
    தாங்குமோ, தாங்காதோ
    சிறுமண் குடிசையென்றே
    அப்பனும், ஆத்தாவும்
    விசனப்படும் விசயமறியாமல்,
    ஓடும் நீரில் கப்பல் விட,
    காகிதம் கேட்டு
    அடம்பிடிக்கின்றனர்,
    அவர்தம் அன்புப் பிள்ளைகள்!

    அவரவர் கவலை அவரவர்க்கு... வாழும் கடவுள்கள் குழந்தைகள் தான் எந்த கவலையும் கிடையாது, எந்த கள்ளமும் புரியாது........

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி. இறந்தகாலமும் பாதிப்பதில்லை. எதிர்காலக்கவலையுமில்லை. நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம் அவர்களுக்கு. நாமும் கற்றுக்கொள்ளவேண்டும் அவர்களிடமிருந்து. நன்றி ரேவா.

      Delete
  13. ஒருவரின் இழப்பு தான் இன்னொருவருக்கான பிழைப்பு என்பதை அழகாய் சொல்கிறது இந்த காத்திருப்பு கவிதை

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்து நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டங்கள் பெரும் ஊக்கம் தருகின்றன. மிகவும் நன்றி ரேவா.

      Delete
  14. குழந்தையின் தேடல்

    விடை தெரியா கேள்விகளை தனக்குள்ளே ஒளித்துக்கொண்டு நமக்கு புரியாத விஷயங்களை அதன் விஷமங்களால் புரியவைக்கும் இந்த தேடலும் சுகம் தான்....

    எப்போதும் போலவே அழகானதொரு பதிவு அக்கா வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த ஊக்கங்களுக்கும் அழகிய விமர்சனங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ரேவா.

      Delete
  15. ஒவ்வொரு கவிதையும் அருமை அழகு .
    இன்னமும் அப்பு கதையில் இருந்தே நான் வெளி வரவில்லை
    இப்ப கட்டிபோட்டது விசுவாசமுள்ள அந்த நாய் பற்றிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. அப்பு கதையை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்களா? வியக்கிறேன் ஏஞ்சலின்.. உங்கள் பின்னூட்டம் பெரும் ஊக்கமளிக்கிறது. நன்றி ஏஞ்சலின்.

      Delete
  16. பறவையில்லா கூடு //கப்பல் விட ஆசைபடும் பிள்ளைகள் /மீட்டையில் பேர் தேடும் சிறுமி !!!!!!!!!!!!!!!!!!!!!!
    என்று வாழ்வின் நிதர்சனத்தை அடித்து சொல்லும் கவிதைகள் .

    வாழ்த்துக்கள் கீதா

    ReplyDelete
    Replies
    1. மிட்டாயில்/// ஸ்பெல்லிங் மிஸ்டேக் ..சாரி

      Delete
    2. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி ஏஞ்சலின்.

      Delete
  17. அனைத்துக் கவிதைகளும் அழகோ அழகு.

    சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த சொல்லாடல்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    [இன்றைய வலைச்சரத்தில் தங்களின் “பொன்மலை” பற்றிய படைப்பு அடையாளம் காட்டப்பட்டுள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    தங்களின் மறுமொழியில் என்னையும் குறிப்பிட்டு எழுதியுள்ளதற்கு என் நன்றியோ நன்றிகள்.]

    அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி வை.கோ.சார்.

      திருச்சியின் பெருமைகளை உங்களை விடவும் வேறு யாரும் அத்தனை அழகாய் ஆழமாய் சொன்னதில்லையென்றே நினைக்கிறேன். தங்களுக்கே என் நன்றியும் பாராட்டும் உரித்தாகும்.

      Delete
  18. கீதா....படத்தை எடுத்து வைத்துக்கொண்டு கற்பனை உலகில் சஞ்சரித்த கவிதைகள் இது.ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணம்.வாசனை வாசனை !

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை சிறுமாற்றம் ஹேமா. படத்துக்கு கவிதை இல்லை. கவிதைகளுக்கே படங்கள். வாசனையோடு ரசித்தமைக்கு நன்றி ஹேமா.

      Delete
  19. கவிதைகள் ஐந்தும் அருமை
    உள்ளோடிய மனித நேயம் உள்ளம் கவர்ந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ் மண வாக்கிட்டுத் தரும் ஊக்கத்துக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

      Delete
  20. Anonymous17/5/12 23:35

    எல்லாமே சூப்பர் அக்கா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை.

      Delete
  21. காத்திருப்புகள் -சொல் கோர்வை அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி பூங்குழலி.

      Delete
  22. வணக்கம் சகோதரி...
    கொத்துகொத்தாய் பூத்திருக்கும்
    அழகிய கவிப் பூங்கொத்துக்கள்...
    விளைந்திட்ட பூக்களாய் தெரியவில்லை..
    விதைத்திட்ட விதைகளாகவே எனக்கு
    தெரிகிறது....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகிய விமர்சனத்துக்கும் நன்றி மகேந்திரன்.

      Delete
  23. முதல் முறையாக தங்களது தளம் வந்தேன்.
    ஒவ்வொன்றும் அருமை. முதல் கவிதையை பார்த்தபோது நான் எழுதியது ஞாபகம் வந்தது.

    பட்டாம் பூச்சிகள்
    பள்ளி செல்கின்றன
    சிறகுகள் உதிர்க்க

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
    Replies
    1. மூன்றே வரிகளில் பெருஞ்சுமை சுமக்கும் கவிதை கண்டேன். பிரமாதம். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  24. நெசத்துக்குமே வலிக்குது தோழர்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் மனம் நெகிழ்வான கருத்தும் கண்டு மகிழ்கிறேன். நன்றி தோழர்.

      Delete
  25. அருமைங்க கீதமஞ்சரி!
    வாழ்த்தி வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் நன்றி அருணா செல்வம்.

      Delete
  26. ஆஹாஆஆஆஆ! எல்லாக் கவிதைகளும் படிச்சதுமே மனசை மயக்கிடுச்சு கீதாக்கா. நாயோட பாசமும், மிட்டாய்ல தேடற குழந்தையும் ரசிச்சு கை தட்ட வெச்சிடுச்சு என்னை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான ரசிப்புக்கும் நன்றி நிரஞ்சனா.

      Delete
  27. பறக்கக் கற்றுக் கொண்டன,
    பறவைக் குஞ்சுகள்!
    பள்ளி வாழ்வைத் துவங்கிவிட்டனர்,
    மழலைப் பிஞ்சுகள்!
    வெறுமையாகிப் போயின,
    வீடும், கூடும்!

    கூடவே மனதும் !!!!1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான ரசிப்புக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  28. ஆஆஆஆஆஆஆஆஆஆகாகாகாகாாக மிக அருமையான
    கவி கொத்துக்கள்
    கீதா அக்கா.
    பறவையில்லா கூடு
    என் நெஞ்ஞம் தொட்ட கவி அக்கா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனையுடனான பின்னூட்டத்துக்கும் நன்றி எஸ்தர்.

      Delete
  29. எல்லாக்கவிதைகளும் அருமை. அதிலும் பறவையில்லாக் கூடும் காகிதக் கப்பலும் சூப்பர்! பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானப் பின்னூட்டப் பாராட்டுக்கும் நன்றி அக்கா.

      Delete
  30. நான் மேய்வதற்கு நிலத்தை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன் தோழி. யாரும் பார்க்கப் போவதில்லை என நான் நினைத்திருக்க, கவனித்துக் கேட்ட அக்கறைக்கு ஒரு சல்யூட் முதலில். இம்மாத இறுதியிலிருந்து தொடர்ந்து எழுத ஆரம்பித்து விடுவேன். அதற்கு முன்னோட்டப் பதிவொன்றை திங்களன்று வெளியிடுகிறேன். அவசியம் பார்த்து கருத்துச் சொல்லுங்கள் கீதா! மிகமிகமிக மகிழ்வுடன், நெகிழ்வுடன் என் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மேய்ச்சல் மைதானம் வந்தேன், ரசித்தேன், கருத்திட்டேன். உங்கள் அருமையான முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள் கணேஷ்.

      Delete
  31. அனைத்தும் அருமை.
    அதிலும் காகிதக் கப்பல்களும், காத்திருப்பும் --- சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவகுமாரன்.

      Delete
  32. அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன்
    நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கும் விருதுப் பகிர்வுக்கும் நன்றி செய்தாலி. மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete
  33. பறக்கக் கற்றுக் கொண்டன,
    பறவைக் குஞ்சுகள்!
    பள்ளி வாழ்வைத் துவங்கிவிட்டனர்,
    மழலைப் பிஞ்சுகள்!
    வெறுமையாகிப் போயின,
    வீடும், கூடும்!

    சிந்தனை துளிகள் சேர்ந்திட ஒன்றாய்
    வந்தன நற்றமிழ் கவிகள்-இங்கே
    எந்தனை கவர்ந்தன எழில்மிகு வரிகள்
    இதய ஏட்டில் எழுதிய வரிகள்

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகான கவிப்பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  34. மனம் கவர்ந்த இனிய கவிதைகள்.இதை விட வேறென்ன வேண்டும்?வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி விமலன்.

      Delete
  35. அன்புள்ள கீதமஞ்சரி...

    வாழ்வின் எதார்த்தங்களை அப்படியே இயற்கை பூத்ததுபோல மலரச் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் ஒரு பறவையின் பறத்தலின் நேர்த்தியைப் போல மனவானில் சிறகடிக்கிறது. கவிதையின் சொற்களிலும்...பொருண்மையிலும்...வெளிப்பாட்டிலும்... படைப்பாளுமையிலும் என எல்லாவற்றிலும் எளிமை கொஞ்சுகிறது. எளிமையாய் எதனையும் சொல்லுதல் அத்தனை எளிமையல்ல. அனுபவிக்கவும் அனுபவித்து மறக்காதிருக்கவும் இக்கவிதைகள் பயனானவை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான ரசனையான மனந்தொடும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹரணி சார்.

      Delete
  36. வலைச் சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளேன்
    நேரம் இருப்பின் வாருங்கள் (வலைச்சரத்திற்கு )

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றி செய்தாலி. குயில் பாட்டில் கீதமஞ்சரியும் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.

      Delete
  37. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அருள்.

      Delete
  38. கவிதை கொத்துக்கள் அப்படியே நெஞ்சுக்குள் விழுதுகள்...
    எளிய சொற்களை கொண்டு இன்றைய நிதர்சனம் கூறும் அழகிய படைப்புக்கள்...
    நெடுநேரம் ரசித்தேன் ...அக்கா ... அன்பு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் அன்பு வாழ்த்துக்கும் நன்றி அரசன்.

      Delete
  39. அன்புத் தோழி... இன்று முதல் மேய்ச்சல். இனி வாரம் ஒன்றாகத் தொடரும். நன்றி.

    http://horsethought.blogspot.in/2012/05/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. மேய்ச்சல் மைதானம் திறந்துவிடப்பட்டதில் மெத்த மகிழ்ச்சி கணேஷ். வாழ்த்துக்கள்.

      Delete
  40. வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்துள்ளேன் பாருங்கோ

    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_22.html

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அழைப்புக்கு மிகவும் நன்றி செய்தாலி. கொஞ்சம் வேலைப்பளுவால் உடனே வர இயலவில்லை. இப்போது வந்து எல்லாப் பதிவுகளையும் பார்த்தேன். உங்கள் தொகுப்புகள் யாவும் ரசனையுடன் உள்ளன. பாராட்டுகள்.

      Delete
  41. கவிதைகள் அனைத்தும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ராஜா.

      Delete
  42. அத்தனை கவிதைகளுமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ரிஷபன் சார்.

      Delete
  43. அனைத்துக் கவிதைகளும் அருமை!
    -காரஞ்சன்((சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி காரஞ்சன்.

      Delete
  44. அத்தனை கவிகளும் படங்களும் அர்த்தமுடன். நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.

      Delete
  45. கவிதைகளும் படங்களும் அருமை. மிகவும் இரசித்தேன்
    ---------------------------------------------
    நந்தினி மருதம், நியூயாரக், 2012-07-01

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி நந்தினி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.